MGR

 

News Sense 

தமிழ்நாடு

எம்.ஜி.ஆர் எனும் முன்ஜாக்கிரதை முத்தண்ணா ! - MGR குறித்து அதிகம் அறியப்படாத தகவல்கள்

Niyasahamed M

மறைந்த ஒருவரின் புகழைக் குறிப்பிட 'மறைந்தும் மறையாது வாழும்…' என்ற சொலவடையை பயன்படுத்துவார்கள். இந்த வார்த்தைக்கு பொருத்தமான ஒருவர் எம்.ஜி.ஆர். மறைந்து 34 ஆண்டுகள் ஆனபின்னும் இனம், மொழி, கட்சி வேறுபாடின்றி தமிழக மக்களால் கொண்டாடப்படுவதும், அவருக்கென இன்னமும் பல வார, மாத இதழ்கள், நூல்கள் வெளிவந்துகொண்டிருப்பதுமே அதற்கு சாட்சி.

மகத்தான அந்த மனிதரைப் பற்றி நாளுக்கு நாள் புதுப்புது செய்திகள் வெளிவந்த வண்ணமிருக்கின்றன. அத்தனையும் அவரது பிம்பத்தை பிரமாண்டமாக்குகிறது என்பதுதான் ஆச்சர்யம்.

MGR

துரைமுருகனை மடியில் கிடத்திய எம்.ஜி,ஆர்!

திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் சட்டம் பயின்றபோது அவரது மதிப்பெண் பட்டியலில் கார்டியனாக கையொப்பமிட்டவர் எம்.ஜி.ஆர். வளர்ப்புப் பிள்ளை போலவே தன்னால் வளர்க்கப்பட்ட துரைமுருகன், தான் தனிக்கட்சி தொடங்கியபோது உடன்வரவில்லை என்கிற வருத்தம் இருந்தாலும்கூட, அதே பாசத்தோடு நேசித்தார் எம்.ஜி.ஆர். ஆனால், சென்னைப் பல்கலைக்கழகம் எம்.ஜி.ஆருக்கு டாக்டர் பட்டம் அளித்தபோது கருணாநிதிக்கும் ஒருபடி மேலாகக் கடுமையாக அதை எதிர்த்தவர் துரைமுருகன். ஒருநாள் சட்டமன்றத்தில் அதுகுறித்து ஆவேசமாக பேசிக்கொண்டிருந்த துரைமுருகன் யாரும் எதிர்பாராதவிதமாக மயங்கி விழ, தான் ஒரு முதல்வர் என்பதையும் மறந்து பதறி ஓடி அவரைத் தாங்கிப் பிடித்தார் எம்.ஜி.ஆர். துரைமுருகனைத் தன் மடியில் கிடத்தி, அவரது முகத்தில் தண்ணீரை தெளித்ததுடன் அவர் வாயில் ஒழுகிய எச்சிலைத் தன் கர்ச்சீப்பால் துடைத்த அவரது மனிதநேயம் கண்டு திமுகவினரே நெகிழ்ந்துபோனார்கள்.

மயக்கம் தெளிந்து தன் செயலுக்கு வருத்தம் தெரிவித்த துரைமுருகனிடம், “நீ இவ்வளவு நேரம் விமர்சித்ததில் எனக்கு துளிவருத்தமும் இல்லை. மாறாக பெருமைப்பட்டேன். என்னால் வளர்க்கப்பட்ட நீ, ’அமைச்சர் பதவி தருகிறேன்’ என நான் அழைத்தும் என் கட்சிக்கு வராமல் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து சொந்தக்கட்சிக்கு இத்தனை விசுவாசமாக இருக்கிறாயே, எப்படிப்பட்ட தம்பியை நாம் பெற்றிருந்திருக்கிறேன் என உன் தகப்பன் ஸ்தானத்தில் புளங்காகிதம் அடைந்துகொண்டிருந்தேன்” எனச் சொன்னபோது, இருவரது கண்களும் கலங்கியிருந்தன.

மாலையில் துரைமுருகனை நலம் விசாரிக்கச் சென்ற கருணாநிதி. “எம்.ஜி.ஆரை எதிர்க்க நமக்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். ஆனால், அவரது வள்ளல் குணத்தினை யாரும் மறுக்க முடியாது. அந்த ஒரு விஷயத்துக்காகவே அவர் டாக்டர் பட்டம் பெற தகுதியானவர்தான் என்றவர், ‘அப்படியே அதை எதிர்க்க நியாயமான காரணம் இருந்தாலும் அதை நீ செய்யக் கூடாது” எனக் கடிந்துகொண்டார்.

MGR

வாசிப்பை நேசித்தவர்!

எம்.ஜி.ஆருக்கு வரலாற்று விஷயங்கள் யாவும் அத்துப்படி. தீவிர படிப்பாளியான அவர், தனது வீட்டில் பெரிய நூலகத்தை நிறுவி, அதில் உள்ளுர் முதல் உலக அளவிலான அரிய நூல்களை சேமித்து வைத்திருந்தார்.

அதிகாரிகள் அறியாத அரிய விஷயம்!

ஒருமுறை தஞ்சை அரண்மனைக்கு சென்றிருந்த முதல்வர் எம்.ஜி.ஆர், அங்கு சுரங்கப்பாதை ஏதேனும் உள்ளதா என அதிகாரிகளிடம் வினவினார். இல்லை என உறுதியாக தெரிவித்தனர் அவர்கள். தர்பார் ஹால் அருகே சுரங்கப்பாதை உள்ளதென தெரிவித்த எம்.ஜி.ஆர், அந்த இடத்தைத் தோண்டும்படி உத்தரவிட்டார். “என்னடா இது….. சினிமாக்காரங்க அதிகாரத்துக்கு வந்துட்டு நம்ம உசிரை வாங்குறாங்க” என என வேண்டாவெறுப்போடு அந்த இடம் தோண்டப்பட்டபோது ஒட்டுமொத்த அதிகாரிகளும் ஆச்சரியத்தில் வாய்பிளந்து நின்றனர். ஆம்... எம்.ஜி.ஆர் குறிப்பிட்டபடி அங்கு ஒரு சுரங்கப்பாதை இருந்தது. தொல்பொருள்துறையினருக்கே தெரியாத ஒரு வரலாற்று விஷயம் முதல்வருக்கு எப்படி தெரிந்தது என அதிர்ந்து நின்றனர் அனைவரும்.

MGR

வெற்றுக் காகித மோசடி!

எம்.ஜி.ஆருக்கு ஜாக்கிரதை உணர்வு அதிகம். ’நாடோடி மன்னன்’ படப்பிடிப்பு தொடங்கிய வேளை. எம்.ஜி.ஆருக்கு ஒரு பதிவுத்தபால் வர பிரித்துப் பார்த்தவருக்கு பெரும் அதிர்ச்சி. காரணம் அதில் இருந்தவை வெற்றுக் காகிதங்கள்! ‘யாரோ கிறுக்கன் போல’ என அதை மறந்துவிட்டுப் படவேலைகளில் மூழ்கிவிட்டார். திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த ஒருநாள் எம்.ஜி.ஆருக்கு ஒரு வக்கீல் நோட்டீஸ் வந்தது. அனுப்பியவர் வேறு யாருமல்ல; வெற்றுக் காகிதங்களை அனுப்பிய அதே பிரகஸ்பதிதான். அதில், “நாடோடிமன்னன் கதை என்னுடையது. பல மாதங்களுக்கு முன்பே அதை உங்களுக்கு அனுப்பிவைத்தேன். ஆனால், படத்தில் என் பெயர் இல்லை. அதனால் அதற்கு எனக்குரிய நஷ்ட ஈட்டை தரவேண்டும். இல்லையேல் நீதிமன்றம் செல்வேன்” என எழுதப்பட்டிருந்தது.

“இப்படியெல்லாம் கூடவா செய்வார்கள்" என அதிர்ச்சியின் உச்சிக்கே போய் விட்டார் எம்.ஜி.ஆர். சட்டப்படி அந்த மோசடிப் பேர்வழிக்கு தகுந்த பாடம் கற்பித்துவிட்டாலும், அதன்பிறகு விலாசமற்ற, அறிமுகமற்ற பெயர்களில் வரும் பதிவுத்தபால்களை அவர் பெற்றதில்லை.

யாராலும் கணிக்க முடியாத மனிதர்!

எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த நேரம்... அப்போதைய தமிழக கவர்னர் குளியலறையில் வழுக்கிவிழுந்துவிட்டதாக முதல்வர் அலுவலகத்துக்கு தகவல் வந்தது. கவர்னரைப் பார்க்க கிளம்பியவர் என்ன நினைத்தாரோ, அவருக்கு நெருக்கமான ஓர் இயக்குநரின் படத்தின் பிரிவியூ காட்சிக்கு சென்றுவிட்டார். அதிர்ச்சியாகி நின்றனர் அதிகாரிகள். அதுதான் எம்.ஜி.ஆர்!

MGR

இணைப்பை சட்டென நிறுத்தினார்!

80-களில் எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த வேளை... தி.மு.க - அ.தி.மு.க இணைப்பு முயற்சி ஒடிசா முதல்வர் பிஜூ பட்நாயக் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது. முதற்கட்ட பேச்சுவார்த்தை திருப்திகரமாக முடிந்து மதிய உணவுக்காக தி.நகர் அலுவலகம் வந்த எம்.ஜி,ஆர். மாலையில் இந்த முயற்சியை கைவிடுவதாக அறிவித்து அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்துவிட்டார்.

உணவை முடித்துக்கொண்டு பேச்சுவார்த்தைக்கு கிளம்பிய போது, அவரின் தாய் சத்யா படத்துக்கு அணிவித்திருந்த மாலை கழன்று விழுந்ததை அபசகுணமாக கருதியதே அவர் முடிவுக்கு காரணம் என பின்னர் தெரியவந்தது.

இவர்தான் எடிட்டர்!

திரையுலகில் அஷ்டாவதானி என்ற பெயர் எம்.ஜி.ஆருக்கு மிகவும் பொருந்தும். நடிப்பு மட்டுமின்றி நடனம், ஸ்டண்ட், ஒளிப்பதிவு, எடிட்டிங், இயக்கம் என சினிமாவில் அவருக்கு தெரியாத விஷயங்களே இல்லை. வெளிநாடுகளில் படம்பிடிக்கப்பட்ட ’உலகம் சுற்றும் வாலிபன்’ திரைப்படத்தின் மொத்த காட்சிகளையும் எடிட்டிங் அறையில் போட்டுப் பார்த்த எடிட்டர்கள் கோர்வையின்றி இருந்த காட்சிகளைப் பார்த்து குழம்பி நின்றனர். படத்தைப் பற்றிய பயம் வந்தது அவர்களுக்கு. விஷயமறிந்து வந்த எம்.ஜி.ஆர், காட்சிகளை திரையில் ஓடவிட்டு ’இதை எடுங்க, அதைச் சேருங்க, இதை நீக்குங்க’ என விறுவிறுவென ஒரு மணிநேரத்தில் படத்துக்கான எடிட்டிங்கை முடித்துவிட்டார். திரையிட்டுப் பார்த்தபோது படம் அத்தனை விறுவிறுப்பாக எந்த தொய்வுமின்றி எடிட் செய்யப்பட்டிருந்தது. அயர்ந்து நின்றனர் எடிட்டர்கள்.

MGR

கேமரா பிரியர்!

எம்.ஜி.ஆர் தேர்ந்த புகைப்படக் கலைஞர் மட்டுமல்ல... கேமரா பிரியர் என்பது பலரும் அறியாத தகவல். வெளிநாடுகளுக்கு செல்லும்போது அவர் விரும்பிவாங்கும் பொருட்களின் பட்டியலில் நிச்சயம் கேமரா இடம்பெற்றிருக்கும். அப்படி சேர்த்த பல நூறு கேமராக்களை தன் இறுதிக்காலத்தில் நண்பர்களுக்குப் பரிசாக தந்து மகிழ்ந்தார். அப்போது உலகிலேயே அதிகமாக புகைப்படம் எடுக்கப்பட்ட நபர் என்று எம்.ஜி.ஆரைச் சொல்லலாம். ஆனாலும், அத்தனை எளிதில் நாம் விரும்பிய கோணத்தில் அவரை படம் எடுத்துவிடமுடியாது. புகைப்படக்காரர் தன்னை எந்தக் கோணத்தில் படம் பிடிக்கிறார், ரிசல்ட் எப்படி வரும் என்பதைக் கணிப்பதில் வல்லவரான அவர், புகைப்படத்தில் அநாகரிகமாகவோ கண்ணியமின்றியோ போஸ் தரமாட்டார். அவரது அனுமதியின்றி அவரை புகைப்படம் எடுத்துவிடவும் முடியாது.

முன்ஜாக்கிரதை முத்தண்ணா !

தனக்கு மாலை அணிவிக்கும்போது மாலை தன் முகத்தை மறைத்துவிடாதபடியும், அதேநேரம் மாலையினால் தன் தொப்பி கழன்றுவிடக்கூடாது என்பதிலும் கவனமாக இருப்பார். மாலை கழுத்தில் விழுந்த அடுத்த நொடி அணிவித்தவரின் கையை அழுந்தப் பிடித்துக்கொள்வார். புகைப்படம் எடுத்து முடித்தபின்னரே அவரது கையை விடுவிப்பார். இந்த விஷயத்தில் முன்ஜாக்கிரதை முத்தண்ணா அவர்!

கருத்தில் கவனம்!

பத்திரிகையாளர்கள், பேட்டி பிரசுரமாவதற்கு முன் தன்னிடம் காட்டி அனுமதி பெறவேண்டும் என்ற நிபந்தனையை ஏற்றால் மட்டுமே பேட்டி அளிப்பார். தன் கருத்து மாற்றப்பட்டுவிடக்கூடாது என்பதற்கான முன்னெச்சரிக்கை அது. அந்தளவுக்கு தன் இமேஜை ஜாக்கிரதையாகக் கையாண்டார் எம்.ஜி.ஆர்.

சந்திரபாபுவை அழித்தாரா, எம்.ஜி.ஆர்?

இன்றைய அரசியல்வாதிகள் சமூக வலைத்தள விமர்சனங்களுக்கு ’தம்’ கட்டி பதில் சொல்லிக்கொண்டிருக்கின்றனர். ஆனால், தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு அவசியமின்றி பதில் அளிக்கமாட்டார் எம்.ஜி.ஆர். ’தனக்கு சரிவராததால் சந்திரபாபுவை அழித்தார்’ என அன்றும் இன்றும் மேம்போக்காக பேசுபவர்கள் உண்டு. அதில் தன் தரப்பு விளக்கத்தை இறுதிக்காலம் வரை அவர் பொதுவில் வைக்கவில்லை. அதற்கு அவரது உள்ளமே காரணம்.

சந்திரபாபு இயக்கத்தில் எம்.ஜி.ஆர் நடித்த ’மாடி வீட்டு ஏழை’ என்கிற திரைப்படம் உருவாகிக்கொண்டிருந்த நேரத்தில் படக்குழுவைச் சேர்ந்த ஒரு பெரிய மனிதரின் குடும்பத்தில் சந்திரபாபுவினால் குழப்பம் உருவானதாக புகார் வந்தது. சந்திரபாபுவிடம் அதுபற்றி விசாரித்தபோது, “இது என் தனிப்பட்ட விஷயம். நீங்கள் தலையிடாதீர்” என எம்.ஜி.ஆரிடம் சொன்னதோடு. அந்தத் தவற்றைத் தொடர்ந்தார் சந்திரபாபு. விளைவு படம் நின்றது. தன் ஒழுக்கக்கேட்டினால் தன் விதியைத் தேடிக்கொண்ட சந்திரபாபுவின் வீழ்ச்சிக்கு எம்.ஜி.ஆர் மீது பழி சுமத்தப்பட்டது. ஆனாலும், எம்.ஜி.ஆர் அதற்கு எதிர்வினை செய்ததில்லை. பிற்காலத்தில் நெருங்கிய நண்பர் ஒருவரின் வற்புறுத்தலினால் சந்திரபாபு விவகாரத்தில் தன் மனதைத் திறந்தார். “சந்திரபாபுவின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்து ஒரு குடும்பப் பெண்ணின் எதிர்காலத்தை பாழாக்க விரும்பவில்லை” என்று. எம்.ஜி.ஆரின் நல்ல உள்ளத்தை எண்ணி நெகிழ்ந்தார் நண்பர்.

சத்தியத்தை மீறிய சரளா!

எம்.ஜி.ஆர் ஆயிரக்கணக்கான ஏழைக் குழந்தைகளை படிக்கவைத்திருக்கிறார் என்பது வெளியுலகம் அறியாதது. ஒருமுறை கோவையில் ஒரு பொதுக்கூட்டத்தில் சுட்டித்தனமாக பேசி நடித்த ஒரு சிறுமியை எம்.ஜி.ஆருக்கு பிடித்துப்போனது. சிறுமியின் ஏழ்மைநிலையை விசாரித்தறிந்த அவர், தன் சொந்தச் செலவிலேயே படிக்க வைத்தார். பல வருடங்களுக்குப் பின் ஒரு திரைப்படத்தின் வெற்றிவிழாவில் அதில் நடித்த கலைஞர்களுக்கு ஷீல்டுகளை வழங்கிக்கொண்டிருந்த முதல்வர் எம்.ஜி.ஆர், விருதுபெறவந்த ஒரு நடிகையை உற்றுப்பார்த்து முகம் சிவந்தார். பின்னர் மேடையிலேயே அவரைத் திட்ட ஆரம்பித்தார். முதல்வர் ஒரு துணை நடிகையை திட்டவேண்டிய காரணம் என்னவென்று புரியாமல் எல்லோரும் குழம்பினர். ’சினிமா, அரசியலுக்கு வரமாட்டேன்’ என தன்னிடம் சத்தியம் செய்து கொடுத்த கோவை சிறுமிதான் அந்த நடிகை என்பதை கண்டுகொண்டதே எம்.ஜி.ஆரின் கோபத்துக்கு காரணம் என்பது பின்புதான் தெரிந்தது. அந்த நடிகை வேறு யாருமல்ல; கோவை சரளா!!!

எம்.ஜி.ஆர் ஆக மாறிய ராம்சந்தர்!

எம்.ஜி.ஆர் என பிற்காலத்தில் புகழ்பெற்றாலும் அவரது ஆரம்ப காலப்பெயர் எம்.ஜி.ராம்சந்தர் என்பதே. திரையுலகில் டி.கே.ராமச்சந்திரன் டி.ஆர்.ராமச்சந்திரன் உள்பட பல ராமச்சந்திரன்கள் நடித்துவந்ததால் தன்னை தனித்துக்காட்ட ’ராம்சந்தர்’ என தன் பெயரை சுருக்கிக்கொண்டார். அண்ணாவுடன் தொடர்பு உருவானபின் அவரது வற்புறுத்தலால் ராம்சந்தர், ராமச்சந்திரன் ஆனார். .

முதல் பொன்னியின் செல்வன்!

கல்கியின் புகழ்பெற்ற புதினமான பொன்னியின் செல்வனை திரைப்படமாக்கும் முயற்சியில் முதன்முதலில் ஈடுபட்டது எம்.ஜி.ஆர்தான். தான் வந்தியத்தேவனாகவும், கதாநாயகியாக குந்தவி கேரக்டரில் பிரபல டைரக்டர் சுப்ரமணியத்தின் மகளும் நாட்டியக்கலைஞருமான பத்மா சுப்ரமணியத்தை நடிக்க வைக்கவும் திட்டமிட்டார். பத்மா சுப்ரமணியம் சினிமாவில் நடிப்பதில்லை என உறுதியாக நின்றால் பொன்னியின் செல்வனும் நின்றது. பொன்னியின் செல்வனை திரைப்படமாக்க முடியாத ஏமாற்றம் இறுதிவரை அவர் மனிதில் இருந்தது.

தயாரிப்பாளர்களை உருவாக்கிய தங்கம்!

’திரையுலகில் தயாரிப்பாளர்களை பாடாகப் படுத்துவார்’ என்பது காலம்காலமாக அவர் மீது சொல்லப்பட்ட குற்றச்சாட்டு. உண்மை அதற்கு நேர்மாறானது. பல முன்னணி நடிகர்கள் பெரும் முதலாளிகள், பெரும் தயாரிப்பாளர்கள் படங்களில் நடித்த காலத்தில் சிறிய தயாரிப்பாளர்களின் படங்களில் நடித்து திரைத்துறையில் பல தயாரிப்பாளர்களை உருவாக்கியவர் எம்.ஜி.ஆர். புகழின் உச்சியில் இருந்த அவர், பெரிய தயாரிப்பு நிறுவனங்களான ஜெமினி, விஜயா, வாஹினி ஏ.வி.எம் ஆகிய நிறுவனங்களில் தலா ஒரு படத்தில் மட்டுமே நடித்திருக்கிறார் என்பது ஆச்சரியமான செய்தி (ஜெமினிக்கு, 'ஒளிவிளக்கு'; ஏ.வி.எம்முக்கு, 'அன்பே வா'; விஜயா வாஹினிக்கு, 'எங்க வீட்டுப்பிள்ளை').

மீன் மீது விருப்பம்!

எம்.ஜி.ஆர்., ஓர் அசைவப்பிரியர். குறிப்பாக மீன் அவரது விருப்பமான உணவு. அவரது மதிய உணவில் கண்டிப்பாக மீன் இடம்பெறும்.

உடலை உறுதி செய்வார்!

எம்.ஜி.ஆரிடம் இறுதிவரை தொடர்ந்த பழக்கம் உடற்பயிற்சி. படப்பிடிப்பு முடிந்து நள்ளிரவு எத்தனை மணிக்கு வீடு திரும்பினாலும் விடியற்காலை 5 மணிக்கு எழுந்து உடற்பயிற்சி செய்யத் தொடங்கிவிடுவார். படப்பிடிப்புக்காக வெளியிடங்களுக்குச் செல்லும்போதும் தவறாமல் உடற்பயிற்சிக் கருவிகளை எடுத்துச்செல்வார்.

துணிந்த பின் துயரமில்லை!

துணிந்துவிட்டால் யாருக்கும் அஞ்சாத குணம் அவருடையது. இந்தி எதிர்ப்புப் போராட்டம் உக்கிரமாக மாறிய நேரத்தில் மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக, மத்திய அரசு தனக்களித்த பத்மஸ்ரீ விருதை துணிச்சலாகத் திருப்பியளித்தவர் எம்.ஜி.ஆர். திமுகவிலிருந்து அவர் பிரிந்த நேரத்தில் அவரது திறமையை கொச்சைப்படுத்தும் விதமாக தங்களால்தான் எம்.ஜி.ஆருக்கு ’பாரத் விருது’ கிடைத்ததாக திமுக தலைவர்கள் மேடையில் பேசினர். இந்தப் பேச்சில் வெகுண்ட எம்.ஜி.ஆர், மத்திய அரசுக்கு உடனே அதை திருப்பி அனுப்பப்போவதாக அறிவித்தார். எதிர்பார்த்ததுபோலவே பிரதமரிடம் இருந்து கருணாநிதிக்கு கண்டனம் வர, சங்கடப்பட்ட கருணாநிதி “இல்லை. அது எம்.ஜி.ஆரின் திறமைக்கு கிடைத்த விருது” என அறிவிக்கவேண்டியதானது. இப்படிப்பட்ட மதியுகி எம்.ஜி.ஆர்!

MGR

போஸ் தந்த ஆர்வம்!

எம்.ஜி.ஆரின் அரசியல் குரு அண்ணா என்பார்கள். உண்மையில் எம்.ஜி.ஆருக்கு அரசியல் ஆர்வத்தை ஏற்படுத்தியவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். இளமையில் காங்கிரஸ் கட்சியின் காலணா உறுப்பினர் என்பதும் நேதாஜியின் படையில் இணைய அவர் விருப்பம் கொண்டிருந்தார் என்பதும் ஆச்சர்யமான தகவல்.

உலகளவில் முதல்வரே!

உலகளவில் ஏழைகளுக்கு இலவச மருத்துவமனை கட்டிய முதலும் கடைசியுமான நடிகர் எம்.ஜி.ஆர் எத்தனை பேருக்குத் தெரியும்?

பத்திரிகையாளர் எம்.ஜி.ஆர்!

எம்.ஜி.ஆர் ஒரு பத்திரிகையாளரும் கூட. 'சமநீதி' என்ற பத்திரிகையின் பொறுப்பாசிரியராக பல ஆண்டுகாலம் ஒரு இதழை நடத்தியிருக்கிறார்.

எதிரிக்கும் மரியாதை!

அரசியலில் பரம வைரியாக மாறியபின்னரும்கூட கருணாநிதியை சீனியர்களைத் தவிர மற்றவர்கள் கருணாநிதி என்று பெயர் சொல்லி அழைப்பதை விரும்பமாட்டார் எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆருக்கு இதெல்லாம் பிடிக்காது!

குதிரையேற்றமும் விமானப் பயணமும் அவருக்கு பிடிக்காத இரண்டு விஷயங்கள். இவற்றால் தனக்கு ஆபத்து உள்ளதாக அவர் உள்மனது நம்பியதே அதற்கு காரணம். தவிர்க்கமுடியாமல்தான் குதிரை மீது அமர்ந்து சில படங்களில் நடித்திருப்பார். விமானப் பயணமும் அப்படியே. ஒருமுறை டெல்லி செல்ல சென்னை விமான நிலையம் வந்த எம்.ஜி.ஆர், திடீரென தன் பயணத்தை ரத்துசெய்துவிட்டு வீடு திரும்பினார். காரணமும் தெரிவிக்கவில்லை. டெல்லி கிளம்பிய அந்த விமானம் வழியிலேயே வெடித்துச் சிதறியது.

பாசிட்டிவ் மனிதர்!

தனது திரைப்படங்களுக்கு 'திருடாதே', 'தாய் சொல்லை தட்டாதே' என பாசிட்டிவ் தலைப்புகளையே சூட்டுவார். “பல ஆயிரங்கள் செலவில் ஊர் முழுக்க ஒட்டப்படுகிற போஸ்டரை திரும்பத் திரும்பப் படிக்கும்போது தவறானவர்களைத் திருத்துமே” என்பார்.

அரசு பணத்தைத் திருப்பிக் கொடுத்தவர்!

1984-ம் ஆண்டு அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் அவர் சிகிச்சை பெற்றதற்காக முழுச் செலவையும் அரசே ஏற்றுக்கொண்டது. உயிர் மீண்டு வந்தவர், மக்களின் உழைப்பான வரிப்பணம் தனி ஒருவனுக்கு பயன்படக்கூடாது என்று தன் சொந்தப்பணத்திலிருந்து அதை அடைத்தார்.

இமேஜ் இமயம்!

இமேஜை கட்டிக்காப்பதில் எம்.ஜி.ஆரைப்போன்று இன்னொருவரை சொல்லிவிடமுடியாது. தனக்கு உடல்நிலை சரியில்லாத தகவலை யாரிடமும் சொல்லமாட்டார். தேவைப்பட்டாலொழிய மருத்துவமனைக்குச் செல்லமாட்டார். பெரும்பாலும் தன் வீட்டிலேயே மருத்துவக்குழுவை வரவழைத்து சிகிச்சை பெற்றுக்கொள்வார். ஒரு முறை காட்ராக்ட் ஆபரேஷன் செய்ய ஒரு மருத்துவமனையையே தன் வீட்டில் நிர்மாணித்தார் என்பார்கள்.

சாலையில் பிறந்த சத்துணவுத் திட்டம்!

சத்துணவுத் திட்டம் பிறந்த இடம் ஒரு சாலை என்றால் நம்புவதற்கு சிரமமாகத்தான் இருக்கும். ஆனால், அதுதான் உண்மையு. ஒருமுறை சிவகாசியிலிருந்து சென்னைக்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது தூத்துக்குடி அருகே அவரது காரை அடையாளம் கண்டுகொண்டு பெண்கள் சூழந்தனர். அவர்களுடைய கைகளில் கைக்குழந்தைகள். ''காலையில் சாப்பிட்டீர்களா'' என்றார். “காலையில் சமைக்க நேரமில்லை. அதுதான் மாலையில் சென்று ஒரே வேளையாக சமைத்துச் சாப்பிடுவோம்” என்றனர். அதிர்ந்தார் எம்.ஜி.ஆர்.

சென்னை திரும்பியதும் அன்றே தலைமைச்செயலாளர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். சத்துணவுத் திட்டம் பிறந்தது. பெண்கள் தங்கள் குழந்தைகளைப் பட்டினி போடாமல் உண்ண வழிவகுத்தது. கூடவே பள்ளி செல்லும் குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகரித்தது.

இதயக்கனியை விரும்பாத பெண்கள்!

எம்.ஜி.ஆரின் படங்களில் பெண்களின் எதிர்ப்பைச் சம்பாதித்த ஒரே படம் 'இதயக்கனி'.

சீட்டில் தோற்றால் என்ன செய்யணும் தெரியுமா?

எம்.ஜி.ஆருக்குப் பிடித்த விளையாட்டு சீட்டு. நெருக்கமானவர்களுடன் விளையாடுவது வழக்கம். தோற்பவர்கள் தங்கள் முகத்தை தலையணையால் கொஞ்ச நேரம் பொத்திக்கொள்ள வேண்டும். இதுதான் அவரது பந்தயம்!

மனைவிக்காக விரதம்

இரண்டாவது மனைவி சதானந்தவதியின் நினைவுநாள் அன்று எம்.ஜி.ஆர் விரதம் மேற்கொள்வார்.

கிரிக்கெட் ரசிகர் எம்.ஜி,ஆர்!

தீவிர கிரிக்கெட் ஆர்வலரான எம்.ஜி.ஆர் முக்கியப் போட்டிகள் நடக்கும்போது நேரில் டிக்கட் வாங்கிச் சென்று பார்ப்பார். செல்ல முடியாதபோது டிரான்சிஸ்டரில் ரன்னிங் கமென்ட்ரி கேட்பது வழக்கம்.

எல்லோருக்கும் நல்ல உணவு!

படப்பிடிப்பின்போது உணவுவகைகள் தனக்குக் கொடுக்கப்பட்டதுபோலவே யூனிட்டின் கடைநிலை ஊழியர்களுக்கும் ஒரே மாதிரியாக இருக்கவேண்டும் என்று தயாரிப்பாளர்களிடம் வற்புறுத்துவார். முதல்வரான பின் நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது உதவியாளர்கள், டிரைவர்கள் சாப்பிட்டதை உறுதி செய்தபின்னரே கிளம்புவார். சந்தேகம் ஏற்பட்டால் டிரைவர்களின் கையை முகர்ந்து பார்ப்பார்!

கலைஞரின் புகழ் பாடும் எம்.ஜி.ஆரின் வரிகள்!

'எங்கள் தங்கம்' படத்தில் இடம்பெற்ற 'நான் அளவோடு ரசிப்பவன்' என்ற பாடலில் அடுத்த வரிக்காக காத்திருந்த கவிஞர் வாலிக்கு, 'எதையும் அளவின்றி கொடுப்பவன்' என அடுத்த வரியை எடுத்துக் கொடுத்தவர் கருணாநிதி. அதே படத்தில் 'நான் செத்துப்பிழைச்சவன்டா' பாடலில் கருணாநிதியின் கல்லக்குடி போராட்டம் இடம்பெறும்வகையில், “ஓடும் ரயிலை இடைமறித்து அதன் பாதையில் தனது தலைவைத்து உயிரையும் துரும்பாய் தான் மதித்து தமிழ் பெயரை காத்த கூட்டம் இது“ என்ற கலைஞரின் புகழ்பாடும் வரிகளை இடம்பெறச் செய்தார் எம்.ஜி.ஆர்.

மேலே ஒரு சக்தி!

நாத்திக கட்சியான தி.மு.க-வில், இருந்தபோதும் எம்.ஜி.ஆர் தன்னை நாத்திகவாதியாக காட்டிக்கொண்டவரில்லை. அதற்காக தீவிர ஆத்திகரும் அல்ல. தனக்கு மேலே ஒரு சக்தி ஒன்று உண்டு என்பதில் அவர் திடமாக நம்பிக்கை கொண்டிருந்தார்.

பச்சை குத்தும் திட்டம்!

1980-ம் ஆண்டில் அதிமுக ஆட்சி கவிழ்ந்தபோது முக்கிய பிரமுகர்கள் பலர் திமுகவில் சேர்ந்தனர். இதை தடுக்கும் விதமாக, ''தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை கையில் கட்சியின் சின்னத்தை பச்சை குத்திக்கொள்ள வேண்டும்'' என்று உத்தரவிட்டதோடு, முதல் நபராக தானும் குத்திக்கொண்டார். ஆனால், கட்சியின் மூத்த நிர்வாகிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தவே, அதை கைவிட்டார் எம்.ஜி.ஆர்.

விலங்கு ஆர்வலர் எம்.ஜி.ஆர்!

சினிமாவில் சிங்கம் புலிகளோடு சண்டை போட்ட எம்.ஜி.ஆர் நிஜத்தில் விலங்கு ஆர்வலர். தன் ராமாவரம் தோட்டத்தில் கரடி, சிங்கம் உள்ளிட்ட பல விலங்குகளை வளர்த்தார் என்ற தகவல் திகில் தரக்கூடியது.

வனவிலங்கு ஆர்வலர்கள் பிரச்னை எழுப்பியதால் அவற்றை வனவிலங்கு சரணாலயத்துக்குக் கொடுத்துவிட்டார். ஆனால், ஒரு சிங்கம் வயதாகி இறந்தபின் மத்திய அரசின் அனுமதியுடன் அதை திரும்பப்பெற்று தன் வீட்டில் பாடம் செய்து பாதுகாத்தார். இன்றும் அது தி.நகர் நினைவு இல்லத்தில் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது!

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?