மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் விஜய் ரசிகர் மன்றம் திமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபடும் எனவும் தூத்துக்குடி மாவட்ட விஜய் ரசிகர் மன்ற தலைவரும், தென் மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் ஒருங்கிணைப்பாளருமான பில்லா ஜெகன் அறிவித்துள்ளார்.
விஜயும், அரசியலும்
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 19ம் தேதி நடைபெறுகிறது.
21 மாநகராட்சிகளுக்கு உட்பட்ட 1,374 வார்டு உறுப்பினர் பதவியிடங்களும், 138 நகராட்சிகளுக்கு உட்பட்ட 3,843 வார்டு உறுப்பினர் பதவியிடங்களும், 490 பேரூராட்சிகளுக்கு உட்பட்ட 7,621 வார்டு உறுப்பினர் பதவியிடங்களும் என மொத்தம் 12,838 பதவியிடங்களுக்கான நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் நேரடி தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
வேட்பு மனு தாக்கல் நேற்று வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்த நிலையில், வரும்7ம் தேதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
விஜய் மக்கள் இயக்கம்
கடந்த ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் பல இடங்களில் சுயேச்சையாக போட்டியிட்டனர். மொத்தம் 169 பேர் போட்டியிட்ட நிலையில், இதில் 129 பேர் வெற்றி பெற்றனர்.
வெற்றி பெற்றவர்களை நடிகர் விஜய் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து புகைப்படம் எடுத்துகொண்டார்.
இதனை தொடர்ந்து நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிட சுயேட்சையாக மனு தாக்கல் செய்துள்ளனர்.
இப்படியான சூழலில், தூத்துக்குடியில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் விஜய் மக்கள் இயக்கத்தினர் திமுக மற்றும் திமுக கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்வார்கள் என்று தூத்துக்குடி மாவட்ட விஜய் ரசிகர் மன்ற தலைவரும், தென் மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் ஒருங்கிணைப்பாளருமான பில்லா ஜெகன் கூறி உள்ளார்.
திமுகவை ஆதரித்து பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி தேர்தலில் இன்று முதல் பிரச்சாரம் செய்ய உள்ளோம்.
விஜய் மக்கள் இயக்கத்தின் தலைமைக்கு தெரிவித்துவிட்டே திமுகவுக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் பில்லா ஜெகன் கூறியுள்ளார்.