காக்கைகள் என்ன செய்யும் கால நேரம் தெரியாமல் கரையும், அமாவாசையில் செத்துப்போன பாட்டியாக வந்து கைப்பிடி சப்பாட்டை தின்னும், புது சட்டையுடன் வெளியில் கிளம்பும் போது சரியாக வந்து எச்சமிடும். ஆனால் சுவீடன் நாட்டில் காக்கைகள் ஊரைச் சுத்தமாக வைத்துக்கொள்ள உதவுகின்றன என்றால் நம்ப முடிகிறதா?
ஒவ்வொரு ஆண்டும் பல கோடி சிகரெட் பஞ்சுகள் தூக்கி எறியப்படுகின்றன. இந்தியாவில் மட்டும் 26000 டன் குப்பைகளை இந்த சிகரெட் பஞ்சுகள் உருவாக்குகின்றன. ஐரோப்பிய நாடுகளில் சிகரெட் புகைக்கும் பழக்கம் மக்களுக்கு இன்னும் அதிகமாக இருக்கும். சிகரெட் பஞ்சுகள் சிறியதாக இருந்தாலும் அவை அமைதியாக அதிக குப்பைகளை ஏற்படுத்தி விடுகிறது என எண்ணிய ஒரு நிறுவனம் காக்கைகளுக்கு சிகரெட் பஞ்சுகளை எடுக்கப் பயிற்சி அளித்து அதன் மூலம் சிகரெட் குப்பைகளைக் குறைக்கும் நடவடிக்கையில் இறங்கியிருக்கிறது.
ஒரு சிகரெட் பஞ்சை எடுத்துக்கொண்டு போட்டால் உணவு வழங்கும் உணவு வழங்கும் இயந்திரம் ஒன்றை வடிவமைத்து அதன் மூலம் காக்கைகளுக்குப் பயிற்சி கொடுத்து வருகிறது கார்விட் கிளீனிங் என்ற நிறுவனம். இந்த பயிற்சிகள் படிப்படியாக வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. முதல் தொகுதி காக்கைகள் சுவீடனின் சோடெடல்ஜி (Södertälje) எனும் நகரில் சோதனை செய்யப்பட்டு வருகின்றது.
காக்கைகளுக்கு உணவு வழங்கி அதனை சிகரெட் பஞ்சு பொறுக்க வைப்பதனை “வெகுமதி அடிப்பையிலான பயிற்சி” என்கின்றனர் நிறுவனத்தின் உரிமையாளர்கள் கிறிஸ்டியன் குந்தர் மற்றும் ஹான்சென். “காக்கைகளை சிகரெட் பஞ்சு எடுக்க வைப்பதன் மூலம் 75 சிகரெட் பஞ்சுகளுக்கு 1 சென்ட் மட்டுமே செலவாகும். இதனால் அரசு நிர்வாகத்திற்கு பணம் மிச்சப்படும்” எனவும் கூறியுள்ளனர்.
சிகரெட் பஞ்சை எடுக்கும் காகம்
சிகரெட் உடல் நலத்திற்கு மட்டுமல்ல சுற்றுச் சூழலுக்கும் கேடு விளைவிக்கக்கூடியது. இதன் பஞ்சு மக்கும் தன்மை கொண்டது என நினைத்துக்கொண்டிருந்தால் அது மிகத் தவறு. அடிப்படையில் சிகரெட் பஞ்சு பிளாஸ்டிக்கால் ஆனது. மேலும் இதில் கொடிய ரசானயங்களும் கலக்கப்பட்டிருக்கும்.
காக்கைகளுக்கு ஒரு செயலை பயிற்றுவிப்பது மிக எளிது. அத்துடன் ஒரு காக்கையிலிருந்து மற்ற காக்கைகள் மிக எளிதாகக் கற்றுக்கொள்ளும். இதனால் இம்மாதிரியான செயல்களுக்குக் காக்கைகளைப் பயன்படுத்துகின்றனர்.
இதற்கு முன்,2018 ஆம் ஆண்டில், பிரெஞ்சு வரலாற்று தீம் பூங்காவில் சிகரெட் முனைகள் மற்றும் குப்பைகளை எடுக்க ஆறு காகங்களுக்குச் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது.
தகவல்களை அனுப்பப் புறாக்கள், போரில் குதிரைகள், யானைகள், காவல்துறையில் நாய்கள் என ஆதி முதலே விலங்குகளை அன்றாட மனித வாழ்வில் பயன்படுத்தி வருகிறோம். ஆனால், மக்கள் புகைபிடிக்கும் போது பஞ்சைக் குப்பையில் போட வேண்டியது அவர்களின் கடமை அதனை காக்கைகளைச் செய்ய வைக்கக் கூடாது என சில எதிர்ப்புகளும் வந்துள்ளன. அத்துடன் இது சுதந்திரமாகப் பறந்து திரியும் காக்கைகளை நம் சுயநலத்திற்காக அடிமைப்படுத்தும் நடவடிக்கை என்றும் சிலர் கூறுகின்றனர்.
இயற்கையாகவே காக்கைகள் எச்சத்தின் மூலம் மரம் நட்டு சுற்றுச்சூழலுக்கு உதவும் தன்மையைக் கொண்டிருக்கின்றன. என்பதை மறந்து விட வேண்டாம்!