மாலத்தீவு Pexels
உலகம்

மாலத்தீவு : இந்த தீவு தேசத்திற்கு செல்வதை ஏன் மிஸ் பண்ணக்கூடாது? - தெரியாத 7 விஷயங்கள்

NewsSense Editorial Team

கோடை விடுமுறை நெருங்குகிறது.வழக்கமாக கோடை விடுமுறையிலோ அல்லது வேறு ஏதாவது தொடர் விடுமுறையிலோ ஜாலி டூர் அடிப்பவர்களை முடக்கிப் போட்டுவிட்டது கொரோனா. 2 ஆண்டுகளுக்குப் பின்னர், இந்த ஆண்டுதான் கொரோனா கெடுபிடிகள் குறைந்து, 'டூரிஸ்ட ஸ்பாட்டுகள்' மீண்டும் களைகட்டத் தொடங்கி உள்ளன.

கோடை விடுமுறைக்கான மே மாதம் தொடங்க இன்னும் 3 வாரங்களே உள்ள நிலையில், இந்த முறை எங்காவது அருகிலுள்ள ஏதாவது தீவு நாட்டுக்குச் சென்று வரலாம் எனத் திட்டமிடுபவர்களுக்கு, அருகிலுள்ள மாலத்தீவு, நிச்சயம் சரியான 'சாய்ஸ்' ஆக இருக்கும்.

உலகின் மிக அழகான கடற்கரைகளைக் கொண்ட மாலத்தீவு, உலகம் முழுவதிலுமிருந்தும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் ஒரு வெப்பமண்டல சொர்க்க பூமி. ஆச்சரியங்கள் நிறைந்த கடற்கரைகள் மற்றும் பல்வேறு கடல்வாழ் உயிரினங்களின் தாயகமாகவும் திகழ்கிறது இந்தத் தீவு தேசம். இந்தியப் பெருங்கடலில் தொங்கும் ஒரு அழகான நகைப் போல காட்சியளிக்கும் இந்த குட்டி நாடு, தனித்துவமான வரலாறு, அழகிய கலாச்சாரம் மற்றும் அன்பான மக்களைக் கொண்டதாக உள்ளது.

இதோ... மாலத்தீவுகளைப் பற்றி அதிகம் அறியப்படாத சில சுவாரஸ்யமான உண்மைகள் இங்கே!

பூமத்திய ரேகை அருகில்

மாலத்தீவுக்குப் போறதெல்லாம் சரிதான். ஆனால் அங்கே அடிக்கிற வெயிலைச் சமாளிக்க சில முன்னேற்பாடுகளுடன் செல்வது நல்லது. இந்தத் தீவு தேசம், பூமத்திய ரேகைக்கு அருகில் இருப்பதால், கிட்டத்தட்ட 90 டிகிரி கோணத்தில் சூரிய ஒளியைப் பெறுகிறது. எனவே சூரிய ஒளி பாதிப்பிலிருந்து, உங்கள் சருமத்தைப் பாதுகாக்கும் வகையில், SPF 50+ சன்ஸ்கிரீனை எடுத்துச் செல்ல மறக்காதீர்கள்.

நீங்கள் வாங்கும் சன்ஸ்கிரீனில் எஸ்.பி.எஃப் (SPF - Sun Protection Factor) என்ற அளவு, உங்கள் சருமத்தை குறிப்பிட்ட அந்த சன்ஸ்கிரீன் எவ்வளவு நேரம் சூரிய ஒளி பாதிப்பிலிருந்து காக்கவல்லது என்பதைக் குறிக்கும். உங்கள் சன்ஸ்கிரீனில் குறிக்கப்பட்டிருக்கும் SPF எண்ணை ஐந்தால் பெருக்கிக்கொள்ளவும். உதாரணமாக, மாலத்தீவுக்குச் செல்பவர்களுக்குப் பரிந்துரைக்கப்படும் SPF 50 என்று குறிக்கப்பட்டிருந்தால், 50 X 5 = 250. அதாவது 250 நிமிடங்கள் வரை உங்கள் சருமத்தை வெயிலிலிருந்து அந்த சன்ஸ்கிரீன் பாதுகாக்கவல்லது.

திமிங்கல கூட்டங்கள் நிறைந்த தீவு

பொதுவாக கடற்கரையில் அமர்ந்து காலை நனைத்துவிட்டுச் செல்லும் அலைகளை ரசிப்பது ஒரு வகை என்றால், மாலத்தீவு கடற்கரையில் அலைகளோடு சேர்த்து, கண்ணுக்கெட்டும் தூரத்தில் அவ்வப்போது துள்ளிக் குதித்து, 'ஹலோ' சொல்லிவிட்டுச் செல்லும் திமிங்கலங்களை ரசிப்பது அலாதியான இன்னொரு சுகம். உலகின் மிகப்பெரிய மீனான இந்த திமிங்கலங்களை, ஆண்டு முழுவதும் காணக்கூடிய சில இடங்களில் மாலத்தீவும் ஒன்றாகும்.

அரிதான பவளப்பாறை கடற்கரைகளின் தாயகம்

இங்குள்ள கடற்கரைகள் பெரும்பாலும் வெள்ளை மணலைக் கொண்டுள்ளதால், அவை பவளப்பாறைப் போன்ற தோற்றம் கொண்டவையாக காட்சித் தரும். இதுபோன்ற அற்புதமான வெள்ளை நிறத்துடன் கூடிய மணல் பாங்குகள் கொண்ட அரிதான பவளப்பாறை கடற்கரைகள், உலகில் சில இடங்களில் மட்டுமே காணப்படுகிறது. இன்னும் சரியாகச் சொல்வதானால், உலகில் உள்ள அனைத்து கடற்கரைகளிலும் வெறும் 5% மட்டுமே இதுபோன்ற பவளப்பாறை கடற்கரைகளைக் கொண்டுள்ளன. மாலத்தீவு கடற்கரைகள், பூமியின் சொர்க்கமாக கருதப்படுவதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம்.

அரிய வகை ஆமைகளின் தாயகம்

உலகில் உள்ள ஏழு வகையான கடல் ஆமைகளில் லெதர்பேக், ஆலிவ் ரிட்லி , லாக்கர்ஹெட், பச்சை நிற ஆமை மற்றும் பருந்தைப் போன்ற தோற்றமுடைய உதடுகளைக் கொண்ட ஹாக்ஸ்பில் ஆமை ஆகிய 5 வகையான ஆமைகளின் தாயகம் மாலத்தீவு என்பதால், இங்குள்ள கடற்பகுதிகளில் இந்த அரிய வகையான ஆமைகளைக் காணலாம்.

உலகின் தட்டையான நாடு

கடல் மட்டத்திலிருந்து சராசரியாக 1.5 மீ உயரத்தில் இருக்கும் மாலத்தீவு, பூமிப் பந்தில் இருக்கும் தட்டையான நாடாகும்.

நோ சண்டே லீவ்!

நமக்கெல்லாம் சனி, ஞாயிற்றுக்கிழமையானால் வார விடுமுறை விடப்படுவது போன்று மாலத்தீவில் இல்லை. அதற்குப் பதில் வெள்ளி மற்றும் சனி. எனவே மாலத்தீவு மக்கள் ஞாயிற்றுக்கிழமைகளில், நமது திங்கட்கிழமைப் போன்று 'தீயாக' வேலை செய்கிறார்கள். இதனால், உங்கள் டூர் பிளானை அதற்கேற்ற வகையில் போட்டுக் கொள்ளலாம்.

மூழ்கும் தேசம்

இவ்வளவு அழகுகளையும், அதிசயங்களையும், ஆச்சரியங்களையும் கொண்டிருக்கும் மாலத்தீவு, 2030 ஆம் ஆண்டுக்குள் நீரில் மூழ்கி விடும் என்பது அதிர்ச்சியானதுதானே... ஆனால், அதுதான் உண்மை எனப் போட்டுடைக்கிறார்கள் சூழலியலாளர்கள்.

கடல் மட்டத்திலிருந்து சராசரிக்கும் குறைவான உயரம் கொண்டதாக இருக்கும் இந்தத் தீவுத் தேசத்தின் கடல் நீர் மட்டமும், நில அரிப்பும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், இது கொஞ்சம் கொஞ்சமாக மூழ்கிக் கொண்டிருக்கிறது. இதே நிலைமை தொடர்ந்தால், 2030 ஆம் ஆண்டுக்குள் இந்தத் தீவு முற்றிலும் நீரில் மூழ்கி காணாமல் போய் விடும்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?