மகத்தான சல்லிப் பயலாக இருக்கும் மனிதன், தான் மட்டுமே வாழ வேண்டும், தன் சுக துக்கங்கள் மட்டுமே முக்கியம் என்று வாழ்ந்த காலம் மெல்ல மலையேறிக் கொண்டிருக்கிறது.
சொல்லப் போனால், சில தசாப்தங்கள் முன்பு வரை இந்த நாடுதான் சிறந்தது, அந்த நாடு தான் வளர்ந்தது… என்கிற குழாயடிச் சண்டைகள் நிறைய நடந்து கொண்டிருந்தன. ஆனால் காலநிலை மாற்றப் பிரச்னைகளால் விரைவில் ஒட்டுமொத்த உலகமும் ஒரே அணியில், இயற்கையில் இருந்து மனித இனத்தைப் பாதுகாத்துக் கொள்ள போராட வேண்டிய சூழல் ஏற்படும்.
காலநிலை மாற்றப் பிரச்னையால், ஒட்டுமொத்த உலக நாடுகளும் எதிர்கொள்ளவிருக்கும் ஒரு பொதுவானப் பிரச்னை கடல் மட்ட உயர்வு.
த்வைட்ஸ் (Thwaites) என்கிற பனிஅடுக்கைக் குறித்துக் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா..? மேற்கு அண்டார்டிகா பகுதியின் அமுந்த்சென் (Amundsen) கடலுக்கு அருகில் இருக்கிறது இந்த ராட்சத பனியடுக்கு. இது சுமார் 1.92 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பு கொண்டது. சொல்லப் போனால் கிரேட் பிரிட்டனை விட கொஞ்சம் சிறியது.
இந்த பனியடுக்கு வரலாறு காணாத அளவுக்கு அதிவேகமாக உருகி வருகிறது. இந்த பனியடுக்கு முழுமையாக உருகிவிட்டால், கடல் மட்டம் சுமார் 50 சென்டிமீட்டர் வரை உயரலாம் என பிபிசி வலைதளக் கட்டுரை ஒன்றில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இது குறித்து பல்வேறு விஞ்ஞானிகளும் தங்கள் கவலை தொய்ந்த கருத்துக்களைப் பதிவு செய்திருக்கின்றனர்.
அதுவும் பிரச்னை தான். இந்த ராட்சதப் பனியடுக்கு மெல்ல உருகினாலும், அதிலிருந்து வெளிவரும் சிறு சிறு பனிக்கட்டிகள் அதிவேகமாக உருகும் வெப்பமான பகுதியை நோக்கி மிதந்து சென்று நீரில் கரைகின்றன. எனவே மெல்ல உருகினால் பிரச்னை தீராது என்கிறது அறிவியல் சமூகம்.
இந்த அண்டார்டிக் பனியடுக்கை ஆராய பிரிட்டிஷ் அண்டார்டிக் சர்வே (BAS) மற்றும் யூ எஸ் அண்டார்டிக் ப்ரொகிராம் என்கிற இரு அமைப்புகளும் இணைந்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். கடலில் ஏற்படும் தட்பவெப்பநிலை மாற்றத்திற்கு இந்த பனியடுக்குகள் எதிர்பார்த்த அளவை விட வேகமாகவும் எளிதில் உருகும் தன்மையுடன் இருப்பதாகவும், எளிதில் பாதிக்கப்படக் கூடியதாக இருப்பதாகவும் இவர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
1990களில் த்வைட்ஸ் பனியடுக்கு ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து தொடங்குகிறது என்று கருதினர். அப்புள்ளியை கிரவுண்டிங் லைன் என்றழைத்தனர். ஆனால் இப்போது (1990களில் இருந்து இப்போது வரை) கிரவுண்டிங் லைனில் இருந்து சுமார் 14 கிமீ வரை பனி கரைந்து நீராகிவிட்டது.
சில இடங்களில், ஒவ்வொரு ஆண்டும் இந்த கிரவுண்டிங் லைனில் இருந்து கிட்டத்தட்ட 1 கிமீ தூரம் வரை கிரவுண்டிங் லைன் மாற்றமடைகிறது என்றும் பிபிசி வலைதளக் கட்டுரை ஒன்றில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. எதிர்காலத்தில் இது மேலும் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
யூ எஸ் அண்டார்டிக் ப்ரோகிராம் களமிறக்கிய ஐஸ்ஃபின் (Icefin) என்கிற எந்திரம் த்வைட்ஸ் பனியடுக்கு குறித்து பல திடுக்கிடும் உண்மைகளை வெளிக்கொணர்ந்துள்ளது.
இந்த ஐஸ்ஃபின் எந்திரத்தை கார்னெல் பலக்லைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் பிரிட்னி ஸ்மிட் (Britney Schmidt) என்பவர், வீடியோ கேம் ஜாய்ஸ்டிக் போன்ற கருவியைப் பயன்படுத்தி, நிலத்தில் ஒரு வீடியோ மானிட்டரைப் பயன்படுத்தி, பனியடுக்கின் கீழ் உள்ள நீர் பரப்பில் ஐஸ்ஃபின் கருவியை இயக்கியுள்ளார்.
ஐஸ்ஃபின் எந்திரத்தைப் பயன்படுத்தி, ஐந்து முறை பனியடுக்குகளின் கீழ் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. த்வைட்ஸ் பனியடுக்கில் பல்வேறு படிக்கட்டு போன்ற உருவங்களும், பல வெடிப்புகளும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன.
இதை அவர்கள் எதிர்பார்க்கவே இல்லை என்றும் கூறியுள்ளார் ஸ்மிட். அதோடு கிரவுண்டிங் லைன் பகுதியில் தொடர்ந்து வெப்பமான நீர் வருவதால் பனியடுக்கு கரைந்து வருவதாகவும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
வெப்பமான நீர், பனியடுக்கின் பலவீனமான பகுதிகளை மேலும் பலவீனப்படுத்துகிறது என்கிறார் பிரிட்னி. இந்த ஆய்வினால் நமக்கு கிடைத்திருக்கும் ஒரே நிம்மதியளிக்கும் விஷயம் என்னவென்றால், இந்த பனியடுக்கு எப்படி வெடித்துப் பிரியும், எப்போது தனித்தனியாக பிரிந்துச் செல்லும் என்கிற தரவுகளைப் பெற முடியும் என்பது மட்டுமே.
பல நூறு மீட்டர் தடிமன் கொண்ட த்வைட்ஸ் பனியடுக்குக்கே வெப்பமான நீரினால் இது தான் நிலை என்றால், மற்ற பனியடுக்குகளுக்கும் இதே நிலை வரலாம் என்பது மறுப்பதற்கில்லை.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust