Hotel Arbez : பிரான்சில் தலைவைத்து சுவிட்சர்லாந்தில் கால் நீட்டி தூங்கலாம் - வாவ் ஹோட்டல்!  twitter
உலகம்

Hotel Arbez : பிரான்சில் தலைவைத்து சுவிட்சர்லாந்தில் கால் நீட்டி தூங்கலாம் - வாவ் ஹோட்டல்!

Antony Ajay R

ஐரோப்பாவில் இருக்கும் இந்த ஹோட்டலில் நீங்கள் தங்கினால், உங்களுக்கு எந்த நாட்டில் இருக்கிறோம் என்றே தெரியாது.

சில நேரங்களில் நீங்கள் பிரான்சில் இருப்பதாக கூற முடியும், சில சமயம் ஸ்விட்சர்லாந்தில்.

இப்படி ஒரே நேரத்தில் இரண்டு நாடுகளில் மல்லாக்கப்படுத்து தூங்கும் வசதி உலகிலேயே இந்த ஒரு ஹோட்டலில் தான் இருக்கிறது. ஏனெனில் ஹோட்டல் அர்பெஸ் இரண்டு நாடுகளுக்கும் நடுவில் இருக்கிறது.

பொதுவாக சர்வதேச எல்லைகள் மிகவும் தீவிரமான பாதுகாப்புடன் அல்லவா இருக்கும்? இது எப்படி சாத்தியம் என நீங்கள் கேட்கலாம், உங்கள் கேள்விக்கான விடையைத் தேடுகிறது இந்தக் கட்டுரை.

அர்பெஸ் உருவானது எப்படி?

ஐரோப்பிய பாரம்பரியத்தை எடுத்துரைக்கும் விதமாக இது கட்டப்பட்டுள்ளது.இதனை ஒரு சிறிய குடும்பத்தினர் நடத்தி வருகின்றனர். ஹோட்டல் அர்பெஸ் ஃப்ரான்கோ சுஸ்ஸி எனும் இன்ய்த ஹோட்டல், L'Arbézie (லர்பேஸ்) என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த ஹோட்டல் சுவிட்சர்லாந்தையும் பிரான்ஸையும் பிரிக்கும் காடுகள் நிறைந்த ஜுரா மலைகளில் அமைந்துள்ளது. 1862ம் ஆண்டு இந்த பகுதிக்கு அருகில் இருக்கும் ஒரு சாலையை பிரான்ஸ் நாட்டிடம் ஒப்படைக்கும் விதமாக சுவிட்சர்லாந்து மற்றும் பிரான்ஸ் அரசுகள் ஒப்பந்தத்தை மேற்கொண்டன.

டாப்ஸ் ஒப்பந்தம் எனப்படும் அந்த ஒப்பந்தத்தில் சற்றும் எதிர்பாராத விளைவாக உருவானது தான் இந்த அர்பெஸ் ஹோட்டல்.

எல்லையில் இருக்கும் கட்டிடங்கள் அப்படியே இருக்கவும் எல்லையைத் தாண்டி வணிகத்தை மேற்கொள்ளவும் டாப்ஸ் உடன்படிக்கை அனுமதித்தது.

உடன்படிக்கை கையெழுத்தான காலத்தில் இந்த ஹோட்டல் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவரான பாந்தஸ் என்பவரின் பெயரில் இருந்தது. இதனை 1921ம் ஆண்டு ஜூல்ஸ்-ஜீன் அர்பெஸ் என்பவர் வாங்கி, ஹோட்டலாக மாற்றிக்கொண்டார்.

வேடிக்கை நிகழ்வுகள்

இரண்டு நாட்டுக்கும் நடுவில் இருக்கும் இந்த ஹோட்டலில் இரண்டு நாட்டும் கொடிகளையுமே ஆங்காங்கு பார்க்க முடியும்.

கொடிகள் வெறும் அடையாளங்கள் மட்டுமல்ல, அவை அந்த பகுதி எந்த நாட்டுக்கு உரியது என்பதையும் தெரிவிக்கும்.

சில அறைகளில் குறுக்காக இருக்கும் கட்டிலில் படுத்தால் கை பிரான்ஸிலும் கால் சுவிட்சர்லாந்திலும் இருக்கும்.

அறைகளில் தொங்கும் ஓவியங்களை ஒரு பக்கமாக சாய்த்தால் சுவிட்சர்லாந்தில் இருந்து பிரான்ஸுக்கு கொண்டுவந்துவிட முடியும்.

சில அறைகள் முழுவதுமாக ஒரே நாட்டுக்கு உரிய இடத்தில் இருக்கும், ஆனால் அதன் சுவர் மற்றொரு நாட்டைச் சேர்ந்ததாக இருக்கும்.

ஒருமுறை சுவிட்சர்லாந்து சுங்க அதிகாரிகள் ஒரு அறையில் சீட்டு விளையாடிக்கொண்டிருந்தவர்களை கைது செய்தனர். நீங்கள் நினைப்பது போல அவர்கள் சூதாட்டமெல்லாம் ஆடவில்லை. ஆனால் பிரான்ஸில் தயாரிக்கப்பட்ட சீட்டுகட்டைக் கொண்டு சுவிட்சர்லாந்தில் இருக்கும் அறையில் விளையாடினர். பொருட்களை எடுத்துவரும் போது வரிகட்ட வேண்டும் அல்லவா?

சீட்டு கட்டு சம்பவத்தின் நினைவு ஓவியம்

இரண்டு நாட்டு சாப்பாடு கிடைக்குமா?

இங்கு உணவு அருந்துவது சாதாரண விஷயமல்ல. பிரான்ஸ் நாட்டுக்கு உட்பட்ட பகுதியில் அமர்ந்துவிட்டால் டாம் வௌடோயிஸ் எனும் ஸ்விட்சர்லாந்து சீஸை சாப்பிட முடியாது. இதேபோல சுவிட்சர்லாந்து பகுதியில் அமர்ந்தவர்கள் பிரஞ்சு உணவுகளை சாப்பிட முடியாது.

ஆனால் பில் கட்டுவதில் எந்த பிரச்னையும் இல்லை. இரண்டு நாடுகளிலும் யூரோ கொடுக்க முடியும்.

இரண்டு நாடுகளிலும் வேறு வேறான மின்சார சாக்கெட்களைப் பயன்படுத்துவதனால் இரண்டுவகை சாக்கெட்களையும் ஹோட்டலில் பயன்படுத்துகின்றனர்.

இரண்டு நாட்டிலும் வரி கட்டுவதற்கு இரு நாட்டு அதிகாரிகளிடமும் தனிப்பட்ட ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளனர்.

இரண்டாம் உலகப் போர்

உங்களுக்கு தெரிந்த படியே முதல் மற்றும் இரண்டாம் உலகப் போரில் சுவிட்சர்லாந்து நடுநிலையுடனே இருந்தது. ஆனால் பிரான்ஸ் ஜெர்மனிக்கு எதிராக போரில் ஈடுபட்டிருந்தது.

இந்த ஹோட்டலின் பிரான்ஸ் பகுதியை ஜெர்மனிய வீரர்கள் கைப்பற்றினர். ஆனால் மேல்தளத்துக்கு செல்லும் படிகட்டுகள் சுவிட்சர்லாந்து பகுதியில் இருந்ததால் அவர்களால் மேல்தளத்துக்கு செல்ல முடியவில்லை.

ஜெர்மனி வீரர்கள் ஹோட்டலுக்கோ அல்லது பாருக்கோ சென்றால் அந்த இடைவெளியில் யூத அகதிகளையும் தஞ்சம் தேடி வருவோரையும் மேல் அறையில் தங்க வைத்தார் அப்போதைய ஹோட்டல் உரிமையாளர் மேக்ஸ் அர்பெஸ்.

இதற்காக அவர் பின்னாளில் கௌரவிக்கப்பட்டார்.

இரண்டாம் உலகப் போரில் புகழ்பெற்ற படிகட்டு

இரகசிய பேச்சுவார்த்தைகள்

பிரான்ஸ் நாட்டிலிருந்து அல்ஜீரியாவுக்கு விடுதலை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை 1960களில் வலுத்துவந்தது.

அப்போது அல்ஜீரிய தலைவர்கள் சிறைபிடிக்கப்படுவோம் என்ற அச்சத்தால் பிரான்ஸ் நாட்டுக்குள் செல்ல அஞ்சினர். பிரஞ்சு அதிகாரிகளோ தங்கள் நாட்டிலிருந்து பேசுவது தான் சரி என நினைத்தனர்.

அப்போது இரண்டு நாட்டவருக்கும் தனி அறை ஒன்றை ஏற்படுத்திக்கொடுத்தது அர்பெஸ் ஹோட்டல். இப்படி பல சர்வதேச அரசியல் நிகழ்வுகளில் அர்பெஸின் பெயர் அடிபடும்.

அல்கொய்தா தீவிரவாத அமைப்புகள் முதல் திருடர்கள் வரை பலர் பலமுறை சர்வதேச எல்லையைக் கடக்க இந்த ஹோட்டலை பயன்படுத்த முயன்று சிக்கியிருக்கின்றனர்.

ஒரு சர்வதேச தூக்கத்தை விரும்பினால் நிச்சயமாக இந்த ஹோட்டலுக்கு செல்லுங்கள்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?