ஜோ பைடன் Twitter
உலகம்

Morning News Today: உக்ரைனுக்கு ரூ.6,000 கோடி ராணுவ உதவி - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முடிவு

உக்ரைனுக்கு 800 மில்லியன் டாலர் (சுமார் ரூ.6,000 கோடி) ராணுவ உதவியை ஜோ பைடன் அறிவித்துள்ளார். மேலும் இன்றைய முக்கிய செய்திகளை இங்கு தெரிந்துகொள்ளுங்கள்...

Antony Ajay R

உக்ரைனுக்கு ரூ.6,000 கோடி ராணுவ உதவி - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முடிவு

ரஷ்யாவின் தாக்குதலை எதிர்கொள்வதற்கு உக்ரைன் போதிய ஆயுதங்கள், தளவாடங்கள் இன்றித் தவித்துவருகிறது. இதையொட்டி உக்ரைன் பிரதமர் டெனிஸ் சுமிஹால் வாஷிங்டன் சென்று வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை சந்தித்துப் பேசினார். அதைத்தொடர்ந்து, உக்ரைனுக்கு 800 மில்லியன் டாலர் (சுமார் ரூ.6,000 கோடி) ராணுவ உதவியை ஜோ பைடன் அறிவித்துள்ளார். மேலும், உக்ரைன் அரசின் நடவடிக்கைகளுக்காகவும், சம்பளம் வழங்கவும், உக்ரைனுக்கு மேலும் 500 மில்லியன் டாலர் (சுமார் ரூ.3,750 கோடி) நிதி உதவியை வழங்குவதாக அமெரிக்க நிதித்துறை அமைச்சகம் அறிவித்திருக்கிறது.

முதல்வர் ஸ்டாலின்

4-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி - முதல்வர் ஸ்டாலின் தலைமையில் குழு!

ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 -ம் தேதி வரை மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடக்கவிருக்கிறது. தமிழக அரசு நடத்தும் இந்தப் போட்டிக்கா முதல்வர் ஸ்டாலின் தலைமையில் 23 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருக்கிறது. இந்தக் குழுவில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்ய நாதன், சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், டி.ஜி.பி சைலேந்திர பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் ராஜா, சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பல்வேறு துறைகளின் முதன்மைச் செயலாளர்கள் உள்பட 23 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

சித்ரா ராமகிருஷ்ணா

சித்ரா ராமகிருஷ்ணனுக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்!

2013- 2016 -ம் ஆண்டு வரை தேசிய பங்குச்சந்தையின் நிர்வாக இயக்குநராகப் பதவி வகித்தவர் சித்ரா ராமகிருஷ்ணன். இவர் தனது பதவிக்காலத்தில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக இந்தியப் பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI) குற்றம் சாட்டியது. இமயமலையில் உள்ள ஒரு சாமியாரிடம் பங்குச்சந்தை ரகசியங்களைப் பகிர்ந்து கொண்டது, முன் அனுபவம் இல்லாத ஆனந்த் சுப்பிரமணியன் என்பவரைத் தலைமை வியூக அதிகாரியாக நியமித்து சலுகைகளை வழங்கியது உள்ளிட்ட குற்ற்சாட்டுகள் காரணமாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்நிலையில், ஆனந்த் சுப்பிரமணியன் பிப்ரவரி 25-ம் தேதியும், சித்ரா ராமகிருஷ்ணன் கடந்த மார்ச் 6-ம் தேதியும், கைது செய்யப்பட்டனர். இருவருக்கும் எதிராக சிபிஜ அதிகாரிகள் நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்கின்றனர்.

sasikala

கொடநாடு விவகாரம்: சசிகலாவிடம் 2வது நாளாக இன்றும் விசாரணை!

கொடநாடு கொலை, கொள்ளை விவகாரம் தொடர்பாக மேற்கு மண்டல காவல்துறை ஐ.ஜி. சுதாகர் தலைமையிலான 8 பேர் கொண்ட தனிப்படை காவல்துறையினர், சசிகலாவிடம் சென்னையில் உள்ள அவரது வீட்டில் வைத்து நேற்று விசாரணை நடத்தினர். நேற்று காலை 11 மணிக்கு சசிகலாவிடம் விசாரணை தொடங்கியது. மாலை 5.20 மணியளவில் விசாரணை முடிந்தது.கொடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் நிகழ்ந்த மரணங்கள், விபத்துகள், தற்கொலை குறித்தும் வெவ்வேறு கோணங்களில் சசிகலாவிடம் 100-க்கும் மேற்பட்ட கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. சசிகலாவிடம் தொடர்ந்து 2-வது நாளாக இன்றும் அதிகாரிகள் விசாரணை நடத்தவிருக்கின்றனர்.

hijab issue

கர்நாடகத்தில் இன்று பி.யூ.சி. பொதுத்தேர்வு : முஸ்லிம் மாணவிகள் தேர்வுக்கு ‘ஹிஜாப்’ அணிந்து வரத் தடை!

கர்நாடகத்தில் கொரோனா 2-வது அலையின் தீவிரத்தால் கடந்த 2021-ம் ஆண்டு பி.யூ.சி. 2-ம் ஆண்டு தேர்வு ரத்து செய்யப்பட்டது. உரு வருடத்துக்குப் பிறகு நடத்தப்படும் பி.யூ.சி. 2-ம் ஆண்டு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது.தேர்வுக்காக மாநிலம் முழுவதும் 1,076 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 6 லட்சத்து 84 ஆயிரத்து 255 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள். இதில் 3 லட்சத்து 46 ஆயிரத்து 936 பேர் மாணவர்களும், 3 லட்சத்து 37 ஆயிரத்து 319 மாணவிகளும் அடங்குவர். மே மாதம் 18-ம் தேதி இந்த தேர்வுகள் நிறைவடைகிறது. கர்நாடகத்தில் பள்ளி, கல்லூரிகளில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணியத் தடை விதித்து கர்நாடக அரசு பிறப்பித்த உத்தரவை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. அதனால் மாணவ-மாணவிகள் சீருடை மட்டுமே அணிந்து வர வேண்டும் என்று அரசு கூறியுள்ளது. முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுதத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

CSK

ஐபிஎல் போட்டிகள் நிலவரம்:

நேற்று நடைபெற்ற ஐ.பி.எல் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் மும்பை இந்தியன்ஸை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இன்றைய போட்டியில் , டெல்லி கேப்பிட்டல்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?