பிரேசில் சுரங்க தொழில் Twitter
உலகம்

பிரேசில் பழங்குடிகள் வாழ்க்கையை சிதைத்த உக்ரைன் போர் - ஒரு சோக கதை

Govind

ஏற்கனவே பிரேசிலின் அமேசான் மழைக்காடுகள் பெரும் ஆபத்தில் இருக்கின்றன. பிரேசிலின் வலது சாரி அதிபர் போல்சனாரோ பதவியேற்ற பிறகு இந்த ஆபத்து அதிகரித்திருக்கிறது. காடுகளை அழித்து கனிம வளத்தைத் தோண்டுவது, மரங்களை வெட்டி ஏற்றுமதி செய்வது என சூழலியல் இரக்கமே இல்லாமல் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் உக்ரைன் போர் இந்த அழிவுப் பணியை அதிகப்படுத்தப் பிரேசில் அரசாங்கத்திற்கு ஒரு முகாந்திரமாக இருக்கிறது.

பூர்வீக நிலத்தை இழக்கும் பழங்குடி மக்கள்

வடக்கு பிரேசிலில், வெனிசுலாவின் எல்லைக்கு அருகில் உள்ள ஆரிஸ் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர் மொரிசயோ யெக்வானா. தனது மண்ணின் எதிர்காலம் குறித்து அவர் பெரிதும் கவலைப்படுகிறார்.

யானோமாமி எனப்படும் பாரம்பரிய பிரதேசத்தின் ஒரு பகுதியில் தங்கம், வைரங்கள் மற்றும் கனிமங்கள் நிறைந்துள்ளன. மேலும் சட்டவிரோத சுரங்கத் தொழில் இங்கே கொடி கட்டிப் பறக்கிறது. மொத்தத்தில் இப்பகுதியில் நடக்கும் சட்டவிரோத சுரங்கத் தொழிலில் 20,000 தொழிலாளர்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

"கடந்த சில ஆண்டுகளில் இது மோசமாகிவிட்டது," என்று மொரிசியோ கூறுகிறார். கோவிட் தொற்றுநோய் காலத்தின் போது, ​​சட்டவிரோத சுரங்கத் தொழில் தொடர்பான விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் படகுகளின் எண்ணிக்கை அதிகரித்தது.

Tribe

மொரிசியோவுக்கு வயது 35. ஆனால் இளைய தலைமுறையினர் குறித்தே அவர் பெரிதும் கவலைப்படுகிறார். இளவயது இளைஞர்கள் வேலையின்மை காரணமாக இந்த சட்டவிரோத சுரங்கத் தொழில் வேலைக்குப் பெரிதும் ஈர்க்கப்படுகிறார்கள்.

"இளைஞர்கள் இத்தொழிலில் திறமையான படகு ஓட்டுநர்களாக பணியாற்றுகிறார்," என்று அவர் கூறுகிறார். இதற்காக ஒரு பயணத்திற்கு அவர்கள் 2 டாலர் வரை சம்பாதிக்கலாம்.

பிரேசிலின் தலைநகரான பிரேசிலியாவிற்கு "நிலத்தைக் கைப்பற்றாதே" எனும் உரிமைப் போராட்டத்தில் பங்கேற்க மவுரிசியோ வந்துள்ளார். இது அவர்களின் நில உரிமைகளைப் பாதுகாக்க விரும்பும் பழங்குடி சமூகங்களை ஒன்றிணைக்கும் வருடாந்திர நிகழ்வாகும்.

தலைநகரம் பிரேசிலியாவில் காங்கிரஸுக்கும் ஜனாதிபதி மாளிகைக்கும் செல்லும் வழியில் ஒரு பெரிய திறந்த வெளியில், நாடு முழுவதும் உள்ள பழங்குடி சமூகங்கள் நூற்றுக்கணக்கான கூடாரங்களை அமைத்துள்ளன.

முகாமைச் சுற்றி முழக்கங்களோடு வலம் வரும் பழங்குடி பிரேசிலியர்கள், இறகுகள் கொண்ட தலைக்கவசங்கள், சிக்கலான மணிகளால் ஆன நகைகள் மற்றும் தங்கள் பழங்குடித் தன்மையை அடையாளப்படுத்தும் வடிவில் தமது எதிரப்பை காண்பிக்கின்றனர்.

இந்த ஆண்டு, இந்நிகழ்வு இன்னும் பெரிய பரிணாமத்தை எடுத்துள்ளது.

Brazil Tribal Farmers

உக்ரைன் போரால் ரஷ்யாவிலிருந்து உரம் இறக்குமதியாகவில்லை

அதிபர் ஜெய்ர் போல்சனாரோ, அமேசானில் பொருளாதார வளர்ச்சியைத் தூண்டுவதற்கு இயற்கை வளத்தை அழிப்பது குறித்துக் கவலைப்படுவதில்லை. பூர்வீக பிரதேசங்களுக்குள் நுழைவதற்கான காரணமாக, அவர் உக்ரைனில் நடந்த போரை மேற்கோள் காட்டியுள்ளார். பிரேசில் அதன் விவசாயத்திற்கு இறக்குமதி செய்யப்பட்ட உரங்களைப் பெரிதும் நம்பியுள்ளது. அதன் 90% க்கும் அதிகமான உரங்கள் வெளிநாட்டிலிருந்து வருகின்றன. மேலும் ரஷ்யா அதன் மிக முக்கியமான ஏற்றுமதியாளராகும்.

பூர்வீக பிரதேசங்களில் சுரங்கம் அமைத்து எடுப்பதின் மூலம், பிரேசில் தனது சொந்த பொட்டாசியம் உரத் தேவைகளை எதிர்கொள்ள முடியும் என்று அவர் வாதிட்டார்.

அதிபரைக் கேள்வி கேட்கும் அறிஞர்கள்

2018ல் காங்கிரசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பழங்குடிப் பெண்மணியான ஜோனியா வாபிசானா கூறுகையில், "தற்போது மொத்த நிலத்தில்11% மட்டுமே பூர்வீக மக்களுக்குச் சொந்தமாக உள்ளன. மேலும் சாவோ பாலோ மற்றும் மினாஸ் போன்ற பிற மாநிலங்களிலும் பழங்குடி மக்களுக்கு நிலம் உள்ளது. இந்த பழங்குடி நிலத்தைப் பயன்படுத்தா விட்டால் பிரேசில் மக்களுக்கு உணவு கிடைக்காது அவர்கள் என்று நம்ப வைக்கப்படுகிறார்கள்." என்கிறார். இதைக் கணிசமான நடுத்தர, மேட்டுக்குடி வர்க்கம் நம்புகிறது.

"தொழில்நுட்ப மற்றும் சுற்றுச்சூழல் கண்ணோட்டத்தில், தேவையான உரிமங்கள் மற்றும் உள்கட்டமைப்பு - அனைத்திற்கும் நேரம் எடுக்கும். பிரேசிலிய சந்தையில் இந்த தயாரிப்புகளை வழங்குவதற்கு ஏழு முதல் 10 ஆண்டுகள் வரை ஆகலாம்," என்கிறார் பிரேசிலியா பல்கலைக்கழகத்தின் புவியியல் பேராசிரியர் சுசி ஹஃப். "இது பிரேசிலின் பிரச்னைகளைத் தீர்க்கும் என்று சொல்வது தவறானது." என்று மேலும் கூறுகிறார்.

அதிபர் பொல்சனாரோ

பழங்குடி நிலங்களைக் கைப்பற்ற அனுமதிக்கும் மசோதா

பூர்வீக நிலத்தைக் கைப்பற்ற அனுமதி வழங்கும் மசோதா 2020ல் இருந்து பரிசீலனையில் உள்ளது. ஆனால் கடந்த மாதம், அவசர விதிகளின் கீழ் அதை பரிசீலிக்கவும் கமிட்டி விவாதங்கள் தேவையில்லை என ரத்து செய்தும் பாராளுமன்றத்தின் கீழ் சபை வாக்களித்தது.

"இது மிகவும் தெளிவாக அச்சுறுத்தல்" என்கிறார் பேராசிரியர் ஹஃப். "பொல்சனாரோ பூர்வீக நிலங்கள் உட்படக் கனிம ஆய்வுகளை அனுமதிக்கும் இந்தத் திட்டத்தைத் தொடர தீவிரமாக இருக்கிறார். மேலும் இந்த திட்டத்தை நியாயப்படுத்தப் பிரேசிலில் இருக்கும் உரங்களின் தட்டுப்பாட்டை நியாயப்படுத்துகிறார்."

இந்த மசோதா முழுமையான செயல்பாட்டில் வர இந்த வாரம் கீழ் சபையில் வாக்களிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் அது நடக்கவில்லை. இந்த தேர்தல் ஆண்டில் அது நடக்கும் என்று சிலர் நம்புகிறார்கள். தொழில்துறையில் உள்ள பெரிய நிறுவனங்கள் கூட அதை ஏற்கவில்லை. கடந்த மாதம் பிரேசிலிய சுரங்க நிறுவனம் இந்த மசோதா "அதன் நோக்கங்களுக்கு ஏற்றது அல்ல" என்று கூறியதோடு பரந்த விவாதத்திற்கும் அழைப்பு விடுத்தது.

பழங்குடி பெண்கள் போராட்டம்

பழங்குடி மக்களை ஆதரிக்கும் முன்னாள் அதிபர் லூலா டா சில்வா

வாக்களிப்பதில் தாமதம் என்பது பழங்குடித் தலைவர்களால் ஒரு நிவாரணமாகக் கருதப்பட்டாலும், அது இன்னும் களத்தில் ஒரு சவாலாகவே உள்ளது.

"பொல்சனாரோ சுரங்கத்தை ஆதரிப்பதாகக் கூறுவதும், பூர்வீக நிலங்களில் சுரங்கத்தை ஒழுங்குபடுத்துவேன் என்று சொல்வதும் ஏற்கனவே பழங்குடி மக்களின் வாழ்க்கையைக் கேள்விக்குள்ளாக்குவதோடு அவர்களை மேலும் பாதிப்புக்கு ஆளாக்குகிறது."என்கிறார் ஜோனியா வாபிச்சானா.

இந்தப் பிரச்சினை நிச்சயமாக ஆழமான அரசியல் சார்ந்தது. குறிப்பாகத் தேர்தல்கள் நடக்க இருக்கும் போது இப்பிரச்சினையும் முன்னிலைக்கு வந்திருக்கிறது. செவ்வாயன்று, முன்னாள் அதிபர் லுலா டா சில்வா - மற்றும் வரும் அக்டோபரில் நடைபெறும் தேர்தலில் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுவர் - பழங்குடி மக்களின் போராட்ட முகாமுக்கு விஜயம் செய்தார்.

"இன்று தலைப்புச் செய்தியாகப் பேசப்படும் இப்பிரச்சினை ஏற்கனவே இந்த நிலத்தில் வாழும் பழங்குடி சமூகங்களைப் புண்படுத்துவதற்கும் தாக்குவதற்கும் முயல்கிறது. அப்படி இந்த அரசாங்கம் நேர்மையற்றதாக செயல்படுகிறது," என்று அவர் கூறினார்.

இது பிரேசில் பழங்குடி மக்கள் பிரச்சினை அல்ல, உலகப் பிரச்சினை

"அவுட் வித் போல்சனாரோ - பொல்சனாரோவே வெளியேறு" என்ற பெரும் ஆரவாரம் பழங்குடி மக்களிடமும், கணிசமான பிரேசில் மக்களிடமும் நிலவுகிறது. ஆனால் தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்கள் உள்ளன. இது பிரேசிலின் அரசியலை நிறைய மாற்றலாம். மேலும் பிரேசிலின் பழங்குடியினரின் எதிர்காலம் முன்னெப்போதையும் விட நிச்சயமற்றது. ஒருவேளை பொல்சனாரோவே வெற்றி பெற்றால் என்ன நடக்கும் என யோசித்துப் பாருங்கள்.

பழங்குடி மக்களின் நிலம் மட்டுமல்ல, பிரேசிலின் இயற்கை வளமே முற்றிலும் சுரண்டப் படலாம். பிரேசிலின் இயற்கை வளம் அழிவது என்பது ஏதோ அங்குள்ள பழங்குடி மக்களின் பிரச்சினை அல்ல. பூமியின் வெப்பமயதாதல், மாறிவரும் காலநிலை பிரச்சினைகளோடு தொடர்புடையது. ஏனெனில் அமேசான் மழைக்காடுகள்தான் பூமியின் நுரையீரல் என்று அழைக்கப்படுகிறது. அந்த நுரையீரல் நோய்வாய்ப்பட்டால் அது உலக மக்கள் அனைவருக்கும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?