பிஜு பட்நாயக் Twitter
உலகம்

பிஜு பட்நாயக் : பிரதமரைக் காப்பாற்றிய ஒரு முதல்வரின் விமான சாகசம் - அறியாத வரலாறு

1950 இல் இந்தோனேசிய அரசாங்கம் பட்நாயக்கிற்கு ஒரு வன நிலத்தையும் அரண்மனை கட்டிடத்தையும் வெகுமதியாக வழங்கியது. ஆனால் அவர் அதை ஏற்கவில்லை. அவருக்கு இந்தோனேசியாவின் கெளரவ குடியுரிமையும் வழங்கப்பட்டது. மற்றும் வெளிநாட்டவருக்கு அரிதாகவே வழங்கப்படும் ‘பூமி புத்ரா’ என்ற அங்கீகாரமும் அவருக்கு வழங்கப்பட்டது.

Govind

டெல்லியில் 2020 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தில் இந்தோனேசியத் தூதரகம் ஒரு கண்காட்சியை ஏற்பாடு செய்தது. அதில் ஒடிசா முன்னாள் முதல்வர் பிஜு பட்நாயக்கின் நினைவாக ஒரு கல்வெட்டுப் பலகை அர்ப்பணிக்கப்பட்டது.

அந்த கண்காட்சியில் உள்ள புகைப்படங்களைப் பார்த்தால் பட்நாயக் இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்திற்கு ஆற்றிய பங்களிப்பு, நேருவுடனான அவரது நட்பு, அவர் ஏன் இந்தோனேசியாவில் ஒரு ஹீரோவாக போற்றப்படுகிறார் அனைத்தும் தெரிய வருகிறது.

1947 இல் டச்சு ஏகாதிபத்தியம் இந்தோனேசியாவைக் கட்டுப்படுத்த முயன்ற போது பட்நாயக் ஆற்றிய சரப்பணிக்காக அவருக்கு இந்தோனேசியாவில் "பிண்டாங் ஜசா உதாமா" விருது வழங்கப்பட்டது.

1930 இல் டெல்லி விமானக் கிளப்பில் பைலட் பயிற்சியை முடித்த பட்நாயக் 1936 ஆம் ஆண்டில் ராயல் இந்திய விமானப்படையில் ஒரு பைலட்டாக சேர்ந்தார்.

நேருவுடன் பட்நாயக்

சுதந்திரப் போராட்டத்தில் பட்நாயக்

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பட்நாயக் முக்கிய பங்கு வகித்தார். பிரிட்டிஷ் இந்திய ஆயுதப் படைகளின் ஒரு பகுதியாக மியான்மருக்கு எதிராகப் போரிடும் இந்திய வீரர்களுக்காக வெள்ளையனே வெளியேறு இயக்கம் குறித்த துண்டுப் பிரசுரங்களை அவர் விமானத்திலிருந்து வீசினார். சுதந்திரப் போராட்டத்தின் போது ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு சுதந்திரப் போராட்ட வீரர்களைப் படகில் கொண்டு செல்லவும் அவர் உதவினார்.

இந்த நேரத்தில்தான் அவருக்கு ஜவஹர்லால் நேருவுடன் நட்பு ஏற்பட்டது.

கலிங்கா ஏர்லைன்ஸ்

பட்நாயக்கின் கலிங்கா ஏர்லைன்ஸ்

முன்னாள் ஒடிசா முதல்வரான பட்நாயக், சுதந்திரப் போராட்டத்தின் ஆரம்ப ஆண்டுகளில் டகோட்டா விமானங்களை இயக்கிய கலிங்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்தையும் நிறுவினார். இந்த விமானங்கள் இந்தோனேசியாவில் குறிப்பிடத்தக்கப் பங்கைக் கொண்டிருந்தன. 1953 இல், கலிங்கா ஏர்லைன்ஸ் இந்தியன் ஏர்லைன்ஸுடன் இணைக்கப்பட்டது.

இந்தோனேசியா 1945 இல் டச்சு ஆட்சியிலிருந்து விடுதலை பெற்றது. அதன் பிறகு இந்தோனேசியாவின் முதல் ஜனாதிபதி சுகர்னோ அதன் பிரதம மந்திரி சுதன் ஸ்ஜஹ்ரிருடன் இணைந்து நாட்டில் ஒரு சுதந்திர அரசாங்கத்தை உருவாக்கினார்.

பிஜு பட்நாயக் அஞ்சல் தலை

இந்தேனேசிய மீட்புப் பணியில் பட்நாயக்

இருப்பினும், அடுத்த ஆண்டு, 1946 இல், டச்சுக்காரர்கள் மீண்டும் இந்தோனேசியாவை ஆக்கிரமிக்கத் தொடங்கினர். ஜூலை 1947 இல் முழு அளவிலான தாக்குதலையும் தொடங்கினர். டச்சு இராணுவம் ஜகார்த்தாவில் பிரதமர் ஸ்ஜஹ்ரிரை வீட்டுக் காவலில் வைத்தது.

இந்தோனேசியாவின் அவலநிலையை உலகம் முழுவதும் வெளிப்படுத்த நேரு விரும்பினார். அதன் பொருட்டு அவர் பட்நாயக்கை, இந்தோனேசியாவின் பிரதமர் ஸ்ஜஹ்ரிரையும், பின்னர் துணைத் தலைவர் முகமது ஹட்டாவையும் ஜாவாவிலிருந்து வெளியேற்றும்படி கேட்டுக் கொண்டார்.

பட்நாயக், தனது மனைவி ஞான தேவியுடன் 21 ஜூலை 1947 இல் ஜகார்த்தாவை அடைந்தார். சிங்கப்பூரில் இருந்து ஜாவா தீவுகளுக்குச் செல்லும் வழியில், டச்சுக்காரர்கள் அவரது விமானத்தைச் சுட்டு வீழ்த்துவதாக அச்சுறுத்தினர். ஆனால் எதுவும் அவரைத் தடுக்கவில்லை. அவர் ஸ்ஜஹ்ரிர் மற்றும் ஹட்டாவை ஏற்றிக் கொண்டு சிங்கப்பூருக்கும், பின்னர் இந்தியாவிற்கும் பத்திரமாகப் பறந்து வந்தார்.

பிஜு பட்நாயக்

பட்நாயக்கிற்கு இந்தோனேசியாவின் உயர்ந்த பூமி புத்ரா விருது

1950 இல் இந்தோனேசிய அரசாங்கம் பட்நாயக்கிற்கு ஒரு வன நிலத்தையும் அரண்மனை கட்டிடத்தையும் வெகுமதியாக வழங்கியது. ஆனால் அவர் அதை ஏற்கவில்லை. அவருக்கு இந்தோனேசியாவின் கெளரவ குடியுரிமையும் வழங்கப்பட்டது. மற்றும் வெளிநாட்டவருக்கு அரிதாகவே வழங்கப்படும் ‘பூமி புத்ரா’ என்ற அங்கீகாரமும் அவருக்கு வழங்கப்பட்டது.

டக்ளஸ் C-47B-20-டகோட்டா விமானத்தை இந்தோனேசிய செஞ்சிலுவைச் சங்கத்திற்கு மனிதாபிமான உதவிகளை எடுத்துச் செல்ல பட்நாயக் கடன் கொடுத்தார். இந்த விமானம் ​​ஜூலை 1947 இல் டச்சுக்காரர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டது. பின்னர், டச்சுக்காரர்கள் இந்திய அரசாங்கத்திற்கு ஒரு விமானத்தை இழப்பீடாகக் கொடுத்தனர். அதையொட்டி அந்த விமானம் இந்தோனேசியாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

பெரிஸ்டிவா ஹீரோயிக் எனும் இந்தோனேசிய விமானப்படையின் வரலாறு குறித்த புத்தகத்தின்படி, பட்நாயக் 1947 இல் இந்தோனேசியாவில் விமானிகளுக்குப் பயிற்சி அளிப்பதற்காக இரண்டு வாரங்களுக்கு மேல் பயணம் செய்தார்.

இந்தோனேசியாவிற்கும் ஒடிசாவிற்கும் இடையிலான பழைய வர்த்தகப் பாதையைக் கண்டறிய 1992 இல் பழைய கலிங்க யாத்திரைக்கும் பட்நாயக் புத்துயிர் அளித்தார். பாய்மரப்படகு INSV-சமுத்ரா 1992 இல் ஒடிசாவின் பரதீப் துறைமுகத்திலிருந்து தனது பயணத்தைத் தொடங்கி 1993 இல் இந்தோனேசியாவின் பாலியை அடைந்தது. இன்றும் பட்நாயக்கின் இந்த கலிங்க யாத்திரை ஒடிசாவின் கட்டாக்கில் கொண்டாடப்படுகிறது.

இந்தோனேசியாவுடன் பட்நாயக் தனிப்பட்ட உறவும் தொடர்பும் கொண்டிருந்தார். ஜனாதிபதி சுகர்னோவின் மகளுக்கு மேகவதி என்று பெயரிடுமாறு அவர் வற்புறுத்தினார். பின்னர் மேகவதி இந்தோனேசியாவின் ஜனாதிபதியானார்.

இப்படி தனது இளம் வயதில் ஒரு சாகசக் காரராகவும் சுதந்திரப் போராட்ட வீரராகவும் பிஜு பட்நாயக் விளங்கினார். இவரது மகன் நவீன் பட்நாயக்தான் இன்று ஒடிசாவின் முதல்வராக இருக்கிறார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?