கோஸ்ட்டாரிக்காவில் டிஎச்எல் நிறுவனத்திற்குச் சொந்தமான சரக்கு விமானம் அவசரமாகத் தரையிறங்கியது. அப்போது திடீரென விமானத்தின் பின்புறத்திலிருந்து புகை கிளம்பியது. இயக்கத்திலேயே இருந்த விமானம் ஒரு கட்டத்திற்கு மேல் இரண்டாக உடைந்து நின்றது.
இந்த விபத்து ஏற்படும் போது, விமானத்தில் 2 பேர் மட்டுமே இருந்துள்ளனர். அவர்கள் இருவருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை என கோஸ்ட்டாரிக்கா தீயணைப்பு வீரர்களின் தலைவர் ஹெக்டர் சாவ்ஸ் தெரிவித்தார். இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானத்தில் இருந்த இருவரையும் மருத்துவப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்துள்ளனர்.
விமானம் தரையிறங்கிய போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்து தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலானது. விபத்து குறித்துஉள்ளூர் அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர்.
கோஸ்ட்டாரிக்கா தலைநகர் சான் ஜோஸுக்கு வெளியே உள்ள ஜுவான் சாண்டாமரியா சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட போயிங்-757 ரக விமானத்தில் திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து புறப்பட்ட 25 நிமிடங்களில் அந்த விமானம் அவசர அவசரமாக தரையிறங்க முயன்றுள்ளது. அப்போது தான் இந்த விபத்து ஏற்பட்டது. ஹைட்ராலிக் பிரச்சனை காரணமாக விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த விபத்து காரணமாக விமான நிலையம் மாலை 6 மணி வரை மூடப்பட்டது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.