ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையிலான போர் கடந்த 2022 பிப்ரவரி மாதம் முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இரு தரப்பிலும் பலத்த உயிர் சேதங்களும், பொருட்சேதங்களும் அதிகரித்து வருகின்றன. இருப்பினும் போர் இதுவரை நின்றபாடில்லை.
உக்ரைனுக்கு சில மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவிகளைச் செய்து வருவதாக ரஷ்யா குற்றம்சாட்டி வருகிறது. சமீபத்தில் ரஷ்யா மேற்கத்திய நாடுகளின் ஆயுத உதவிகளை அழித்ததாகக் கூறியுள்ளது.
அப்படி சமீபத்தில், அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் வழங்கிய கனரக ஆயுதங்கள் வைக்கப்பட்டிருந்த இடத்தை, ரஷ்யப் படைகள் தாக்கி அழித்திருப்பதாக ராய்டர்ஸ் முகமையில் செய்தி வெளியானது. ராய்டர்ஸால் இச்செய்தியைச் சுயாதீனமாக உறுதி செய்ய முடியவில்லை.
இன்டர்ஃபேக்ஸ் என்கிற சுயாதீன ரஷ்ய செய்தி முகமையில் குறிப்பிடப்பட்டிருந்ததை மேற்கோள்காட்டி, கடந்த ஜூன் 12 ஆம் தேதி ராய்டர்ஸ் அச்செய்தியை பிரசுரித்துள்ளது.
உக்ரைனின் டெர்னோபைல் பிராந்தியத்தில் வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்பட்ட ஆயுதங்கள் அழிக்கப்பட்டதாக ரஷ்யாவின் பாதுகாப்புத் துறை கூறியுள்ளது.
"நீண்ட தூரம் சென்று துல்லியமாக இலக்கைத் தாக்கக் கூடிய கலிபர் (Kalibr) ஏவுகணைகளைக் கொண்டு டெர்னோபைல் பிராந்தியத்தில் சோர்ட்கிவில் இருந்த ஆயுதக் கிடங்கு அழிக்கப்பட்டது. அழிக்கப்பட்ட ஆயுதங்களில் டாங்கிகளை அழிக்கக் கூடிய ஏவுகணைகள், எந்த இடத்துக்கு வேண்டுமானாலும் கொண்டு சென்று ஏவி போர் விமானங்களைத் தாக்கி அழிக்கும் வசதி கொண்ட ஏவுகணைகள், ஆர்டில்லரி குண்டுகள் எனப் பல ஆயுதங்களும் அடக்கம்.
இவை அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளிலிருந்து உக்ரைனுக்கு வழங்கப்பட்டவை" என ரஷ்ய படைகளின் செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் இகோர் கொனஷென்கோவ் (Igor Konashenkov) கூறியுள்ளார்.
இந்த தாக்குதலில் சுமார் 22 பேர் காயமடைந்துள்ளதாக டெர்னோபைல் பிராந்திய ஆளுநர் கூறியுள்ளதாக தி இந்து வலைதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் ரஷ்யா தாக்குதல் நடத்திய இடத்தில் எந்த வித ஆயுதங்களும் சேமித்து வைக்கப்படவில்லை என்றும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் 11ஆம் தேதி (சனிக்கிழமை), ரஷ்யாவின் விமானப் படை, மூன்று உக்ரைனிய போர் விமானங்களை சுட்டி வீழ்த்தியதாக ராய்டர்ஸ் முகமையில் செய்தி வெளியானது. அதை ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சகமும் ஒரு செய்தியறிக்கையில் ஒப்புக் கொண்டது.
அவ்வறிக்கையின் படி, ரஷ்ய ராணுவம் இரு எம் ஐ ஜி 29 விமானங்களை மிகோலயிவ் பிராந்தியத்திலும், ஒரு சு 25 ரக போர் விமானத்தை கார்கில் பிராந்தியத்திலும் சுட்டு வீழ்த்தியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
உக்ரைன் நாட்டுக்குள் ரஷ்யா படையெடுத்து நுழைந்த பிறகு, அமெரிக்கா மற்றும் சில மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு உதவி வருகின்றன. இதில் ரஷ்யாவை எதிர்க்க உக்ரைனுக்கு ஆயுத உதவிகளும் செய்யப்பட்டு வருவதாகப் பல சர்வதேச ஊடகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரஷ்யாவைத் தோற்கடிக்கும் வரை உக்ரைனுக்கு ஆயுத உதவிகள் தேவை என உக்ரைன் நாட்டின் துணைப் பாதுகாப்பு அமைச்சர் கன்னா மல்யார் (Ganna Malyar) சமீபத்தில் கூறியது இங்கு நினைவுகூரத்தக்கது.
ரஷ்யா அதையே தொடர்ந்து ஒரு குற்றச்சாட்டாகக் கூறி வருகிறது. மேற்கத்திய நாடுகள், நோட்டோ நாடுகள் உக்ரைன் ரஷ்யா போரைத் தீவிரப்படுத்துவதாகக் குற்றம்சாட்டியது.
அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்குத் தொலைதூர ஏவுகணைகள், எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் சென்று ஏவும் வசதி கொண்ட மொபைல் ராக்கெட் ஏவுகணைகள் போன்ற ஆயுதங்களை வழங்கி உதவினால், உக்ரைனில் மேலும் பல புதிய இடங்கள் இலக்கு வைத்துத் தாக்கப்படும் என ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினே சமீபத்தில் கூறியதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust