செங்கிஸ்கான்
செங்கிஸ்கான்  NewsSense
உலகம்

செங்கிஸ்கான் கல்லறை : உலகை நடுங்க வைத்த ஒரு மர்ம வரலாறு - அட்டகாச தகவல்

Govind

செங்கிஸ்கான் வரலாற்றில் மிகவும் பிரபலமான அரசர்களில் ஒருவர். மங்கோலியப் பேரரசின் நிறுவனர். மற்றும் முதல் கிரேன் கான் என்றும் அழைக்கப்பட்டார். அவரது காலத்தில் பசிபிக் பெருங்கடல் முதல் காஸ்பியன் கடல் வரை நீண்டிருந்த நிலப்பரப்பை ஆண்டார்.

வடகிழக்கு ஆசியாவின் பல நாடோடி பழங்குடியினரை ஒன்றிணைத்து தன்னை மங்கோலிய ஆட்சியாளராக அறிவித்துக் கொண்டார். அதன் பின்னர் செங்கிஸ்கான் மங்கோலியப் படையெடுப்புகளைத் தொடங்கினார். இறுதியில் யூரேசியாவின் பெரும்பகுதியை அவர் கைப்பற்றினார். அவரது மரணத்திற்கு பிறகு மங்கோலியப் பேரரசு வரலாற்றில் மிகப்பெரிய பேரரசாக மாறியது.

செங்கிஸ்கான் குதிரையில் இருந்து விழுந்து அல்லது போரில் ஏற்பட்ட காயங்களால் இறந்திருக்கலாம். அவரது பழங்குடியினரின் பழக்க வழக்கங்களின்படி, அவரை ரகசியமாக அடக்கம் செய்யுமாறு சாவதற்கு முன்பு அவர் கேட்டுக் கொண்டார்.

செங்கிஸ்கான் இறந்த பிறகு துக்கமடைந்த அவரது இராணுவம் அவரது உடலை இரகசியமாக மங்கோலியாவிற்கு எடுத்துச் சென்றது. வழியில் கண்டவர்களை இரகசியம் காக்கும் பொருட்டு கொன்றது. அவரது கல்லறை யாருக்கும் தெரியக்கூடாது என்பதற்காக கூடச்சென்ற இராணுவத்தினர் அனைவரும் தற்கொலை செய்து கொண்டனர். இரகசியம் வெளியே கசியக்கூடாது என்பதற்காக சவாரி செய்த 1000 குதிரைகளையும் புதைத்தனர்.

இன்று 800 வருடங்கள் கழித்தும் எவரும் ஜெங்கிஸ்கானின் கல்லறை எங்கிருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அவரது கல்லறை இடம் புராதான உலகின் அறியமுடியாத மர்மமாக இன்றும் நீடிக்கிறது.

செங்கிஸ்கான்

கல்லறையைப் பின்தொடர்தல்

செங்கிஸ்கானின் கல்லறை எங்கு உள்ளது என்பதற்கு பல புராணக்கதைகள் உள்ளன. அவரது கல்லறையைக் கண்டுபிடிக்க முடியாதபடி ஒரு நதி திசை திருப்பப்பட்டதாக ஒருவர் கூறுகிறார். அது நிரந்தரமாக ஊடுருவ முடியாதபடி எங்கோ பெர்மாஃப்ரோஸ்ட் என்றழைக்கப்படும் கடும் பனி நிலவும் உறைந்த நிலத்தில் புதைக்கப்பட்டதாக மற்றொருவர் கூறுகிறார். மற்ற கூற்றுக்கள் அவரது சவப்பெட்டி மங்கோலியாவிற்கு வந்த நேரத்தில் ஏற்கனவே காலியாக இருந்தது என்று கூறுகின்றன.

மர்மத்தின் வெளிச்சத்தில், வரலாற்றாசிரியர்கள் மற்றும் புதையல் வேட்டைக்காரர்கள் மத்தியில் இயற்கையாகவே கல்லறை இருக்கும் இடம் பற்றிய ஊகங்கள் பெருகியுள்ளன. ஜெங்கிஸ்கானின் கல்லறையானது பண்டைய மங்கோலியப் பேரரசு முழுவதிலும் இருந்த பொக்கிஷங்களைக் கொண்டுள்ளது என்று சிலர் நம்புகிறார்கள். மற்றும் கல்லறையானது ஜெங்கிஸ்கானைப் பற்றியும் அவரைச் சுற்றியுள்ள உலகைப் பற்றியும் விரிவான தகவல்களை வழங்கும் என்று கருதப்படுகிறது.

வல்லுநர்கள் வரலாற்று நூல்கள் மூலமாகவும், நிலப்பரப்பு முழுவதையும் அகழ்வாராய்ச்சி செய்வதன் மூலமாகவும் கல்லறையின் இருப்பிடத்தைக் கண்டறிய முயன்றனர். அவரது உடல் கென்டி அய்மாக்கில் அவரது பிறந்த இடத்திற்கு அருகில் எங்காவது வைக்கப்பட்டிருக்கலாம் என்று பரவலாக சந்தேகிக்கப்படுகிறது. இது ஓனான் நதி மற்றும் கென்டி மலைத்தொடரின் ஒரு பகுதியாக இருக்கும் புர்கான் கல்துன் மலைக்கு அருகில் இருக்கலாம்.

விண்வெளியில் இருந்து கூட கல்லறையை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி நடத்தப்பட்டது. நேஷனல் ஜியோகிராஃபிக்ஸின் வேலி ஆஃப் தி கான்ஸ் திட்டம் கல்லறைக்கான தேடுதல் ஆய்விற்காக செயற்கைக்கோள் படங்களைப் பயன்படுத்தியது.

செங்கிஸ்கான் கல்லறை

மங்கோலிய நிலப்பரப்பு

கல்லறையின் இருப்பிடத்தைக் கண்டறியும் போது மற்றொரு தடையாக இருப்பது மங்கோலியாவின் நிலப்பரப்பு. கிரேட் பிரிட்டனின் அளவை விட 7 மடங்கு பெரியதாக இருக்கிறது மங்கோலியா. ஆனால் பிரிட்டனில் உள்ள சாலைகளில் 2% மட்டுமே இங்கு உள்ளது. நாடு முக்கியமாக பழமையான மற்றும் மிகவும் ஊடுருவ முடியாத வனப்பகுதிகளைக் கொண்டுள்ளது. மேலும் 30 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள்தொகையை மட்டுமே கொண்டுள்ளது.

கண்டுபிடிக்கப்பட்ட மற்ற அரச கல்லறைகள் பூமியில் 20 மீட்டர் ஆழத்தில் தோண்டப்பட்டுள்ளன. மேலும் செங்கிஸ் கானின் கல்லறை இதேபோல் ஆழத்தில் மறைக்கப்பட்டிருக்கலாம்.

இதேபோல், 1000 குதிரைகள் அந்த இடத்தை மிதித்தது பற்றிய புராணக்கதை ஒன்று அவர் ஒரு பரந்த திறந்தவெளி அல்லது சமவெளியில் புதைக்கப்பட்டதாகக் கூறுகிறது. இன்னொரு தகவலின் படி அவர் ஒரு மலையில் புதைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. எனவே அவரது கல்லறையை கண்டுபிடிப்பது கடினமாகவோ அல்லது சாத்தியமற்றதாகவோ இருக்கிறது.

சந்தேகத்தோடு கல்லறையை தேடுகிறார்கள்

மர்மத்தில் ஒரு முக்கிய திருப்பம் என்னவென்றால், செங்கிஸ்கானின் கல்லறை கண்டுபிடிக்கப்படுவதை மங்கோலிய மக்கள் பெரும்பாலும் விரும்பவில்லை. இது ஆர்வமின்மையால் அல்ல. நாணயம் முதல் ஓட்கா பாட்டில்கள் வரை அனைத்திலும் கானின் உருவம் காட்டப்படுவதால், நாட்டின் கலாச்சாரத்தில் அவர் இன்னும் பிரபலமான நபராக இருக்கிறார்.

இருப்பினும், அவரது கல்லறை கண்டுபிடிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்று பலர் விரும்புவதற்கு பல காரணங்கள் உள்ளன. முதலாவது - இது சற்று மிகைப்படுத்தப்பட்டதாகவோ அல்லது ரொமாண்டிக் செய்யப்பட்டதாகவோ இருக்கலாம் - கானின் கல்லறை கண்டுபிடிக்கப்பட்டால், உலகம் அழிந்துவிடும் என்ற நம்பிக்கை மக்களிடையே நிலவுகிறது.

1941 ஆம் ஆண்டு சோவியத் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் 14 ஆம் நூற்றாண்டின் அரசரான தைமூரின் கல்லறை திறக்கப்பட்ட புராணக்கதைக்கு இது பின்னோக்கி செல்கிறது. கல்லறை திறக்கப்பட்ட 2 நாட்களுக்குப் பிறகு, நாஜிக்கள் சோவியத் யூனியனை ஆக்கிரமிப்பதன் மூலம் ஆபரேஷன் பார்பரோசா தொடங்கியது. ஸ்டாலினே தைமூரின் எச்சங்களை மீண்டும் புதைக்க உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கு ஆதாரமில்லை என்றாலும் மங்கோலிய மக்கள் அதை நம்புகிறார்கள்.

வரலாற்று அறிஞர்களுக்கு இந்தக் கல்லறை கண்டுபிடிக்கப்பட்டால் அது பல வரலாற்று விவரங்களைத் தரும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

செங்கிஸ்கானின் மரபு

ஜெங்கிஸ்கானின் மரபும் அவரது உலக வெற்றியும், பல நாகரீக முன்னேற்றங்களை அமல்படுத்தியதும் இணைந்து அவரது கல்லறையை கண்டுபிடிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்துகின்றன.

அவர் கிழக்கையும் மேற்கையும் இணைக்கும் பட்டுவழிப் பாதையை அனுமதித்தார். அவரது ஆட்சியில் ராஜதந்திர மன்னிப்பும், மதச் சுதந்திரமும் இருந்தன. மேலும் தன் ஆட்சியில் அவர் நம்பகமான அஞ்சல் துறை சேவையையும், காகிதப் பணத்தை அறிமுகப்படுத்தினார்.

எனவேதான் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அவரது கல்லறையை தேடி வருகிறார்கள். அவரது அரண்மனை 2004 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் மூலம் அவரது கல்லறை அதன் அருகில் இருக்கலாம் என்று ஊகம் எழுந்தது. தற்போது அந்த முயற்சி மேலும் முன்னேற்றம் அடைந்திருக்கிறது.

இன்று ஜெங்கிஸ்கானின் கல்லறை பற்றிய மர்மம் தீர்க்கப்பட வாய்ப்பில்லை என்றாலும் அவரது அரண்மனை ஒரு நினவுச்சின்னமாக போற்றப்படுகிறது.

வாழும் போது உலகை ஆட்சி செய்த ஜெங்கிஸ்கானின் கல்லறையும் கூட இன்று உலக அறிஞர்களிடையே ஆட்சி செய்கிறது என்றால் மிகையல்ல.

உள்நாட்டு இந்திய விமானங்களில் எவ்வளவு மது எடுத்துச் செல்லலாம்?

”நீட் தேர்வு மாநில உரிமைக்கு எதிரானது” - மாணவர்களிடம் விஜய் பேசியது என்ன?

உலகில் மிகக் குறைவாகப் பார்வையிடப்பட்ட நாடுகள் இவைதான்!

அமெரிக்காவில் இன்றும் கழுதைகள் மூலம் அஞ்சல் அனுப்பப்படுகிறதா! ஏன் இந்த நடைமுறை?

மெசேஜிங் செயலி விற்று கோடீஸ்வரரான இளைஞர் - எப்படி தெரியுமா?