நவீன செளதி அரேபியாவின் அரசியலை தீர்மானிக்க காரணமாக இருந்தது எண்ணெய் வளம்தான். 20-ம் நூற்றாண்டில்தான் மத்திய கிழக்கில் எண்ணை வளம் கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது மேற்கு ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் தான் நவீன தொழிற்துறையில் கோலோச்சிக் கொண்டிருந்தன. இந்த நாடுகளின் தொழில் வளர்ச்சியை உந்தித் தள்ள எண்ணை தேவையாக இருந்தது. இத்தனைக்கும் அமெரிக்க நிலத்தினடியிலும் அள்ள அள்ளக் குறையாத எண்ணை வளம் இருக்கத் தான் செய்தது. இன்றளவும் தனது நிலத்தடி எண்ணை வளத்தை பெரிதும் சுரண்டாமல் வைத்திருக்கும் அமெரிக்கா, சென்ற நூற்றாண்டின் துவக்கத்திலேயே தனது கவனத்தை மத்திய கிழக்கின் பக்கம் திருப்பியது.
தொழிற்துறையில் வளர்ந்திருந்த மேற்கத்திய வல்லரசு நாடுகளுக்கு இடையே வளைகுடா நாடுகளின் எண்ணை வளத்தைக் கைப்பற்றும் போட்டி முதலாம் உலகப் போருக்கு பிந்தைய ஆண்டுகளில் உக்கிரமடைந்தது.
ஏறத்தாழ இதே காலகட்டத்தில் அரேபிய தீபகற்பத்தில் மதரீதியாக நடந்து வந்த இன்னொரு மாற்றமும் நமது கவனத்திற்கு உரியது. அது என்ன என்பதை இரண்டாம் பாகத்தில் பார்ப்போம்.
செளதி அரேபியா
இத்தொடரின் முதல் பகுதியில் எவ்வாறு மத்திய கிழக்கும், அரபு தீபகற்பமும் பல்வேறு இனக்குழுக்களாக பிரிந்து தமக்குள் சண்டையிட்டு கொண்டிருந்தனர் என்பதைப் பார்த்தோம். இந்நிலையில் பதினெட்டாம் நூற்றாண்டில் இப்னு அல்-வஹாப் என்பவரால் வகாபிசம் என்கிற ஒரு கடுங்கோட்பாட்டுவாத இசுலாமிய மதப்பிரிவு உருவாக்கப்பட்டது. இது சன்னி இசுலாத்தின் ஒரு வகை. இப்னு அல்-வஹாபின் காலத்தில் இன்னொரு முக்கிய ஆளுமையாக இருந்தவர் முகமது இப்னு சவூத் என்பவர்.
அன்றைக்கு பல்வேறு அரபு இனக்குழுக்களைச் சேர்ந்த யுத்த பிரபுக்களும் குறுநில மன்னர்களும் சிறுசிறு பகுதிகளை ஆண்டு வந்தனர். அதில் திரிய்யா எமிரேட் எனப்படும் ஒரு குட்டி ராஜ்ஜியத்தின் இளவரசர் தான் முகம்மது இப்னு சவூத்.
மொத்த அரபு தீபகற்பத்தையும் ஒரு சாம்ராஜ்ஜியமாக கட்டியெழுப்ப வேண்டும் என்கிற கனவு முகம்மது இப்னு சவூதுக்கு இருந்தது. இராணுவ ரீதியில் கில்லாடியான அவர் எத்தனை முயற்சித்தும் தனது கனவை நனவாக்க முடியவில்லை. இந்நிலையில் தான் முகம்மது சவூதோடு கைகோர்க்கிறார் அல்-வஹாப். போர்வாளும் மதமும் ஒன்றை ஒன்று ஆரத்தழுவிக் கொண்ட அந்த நிகழ்வு மிக முக்கியமானது.
Saudi Arabia
பிறகு திரிய்யா எமிரேட் அரசு பல்வேறு விரிவாக்க யுத்தங்களில் ஈடுபட்டது. அரபு தீபகற்பத்தைச் சேர்ந்த சின்னஞ்சிறு ராஜ்ஜியங்கள் அல்-வகாபின் கடுங்கோட்பாட்டுவாதத்தின் முன்னும் இப்னு சவூதின் வாளின் முன்னும் எதிர்த்து நிற்க முடியாமல் சீட்டுக் கட்டு மாளிகையாக சரிந்து விழுந்தன. அரபு தீபகற்பத்தின் பிற பகுதிகளில் நிலவி வந்த தர்ஹா வழிபாடு (இறந்தோரை வணங்குவது) உள்ளிட்ட முறைகளை வகாபிசம் அடியோடு ஒழித்துக் கட்டியது. மதக் கடுங்கோட்பாட்டுவாதத்தை அடிப்படையாக கொண்ட ஒரு இசுலாமிய நாட்டை உருவாக்குவதில் வெற்றி பெற்றார் இப்னு சவூத்.
அந்த சமயத்தில் மத்திய கிழக்கில் செல்வாக்காக இருந்த கடைசி கிலாஃபத் ராஜ்ஜியமான ஒட்டோமன் சாம்ராஜ்ஜியத்தின் கண்களை அரபு தீபகற்பத்தில் பற்றிக் கொண்ட காட்டுத் தீ உறுத்த துவங்குகியது. 19-ம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஒட்டோமன் பேரரசர் தனது எகிப்திய தளபதியின் தலைமையில் ஒரு பெரிய படையை அரபு தீபகற்பத்திற்கு அனுப்பி வைத்தார். அப்போது நடந்த கடும் போரில் சவுதி ராஜ்ஜியம் தோல்வியடைந்தது. அதைத் தொடர்ந்து 20-ம் நூற்றாண்டின் துவக்க காலம் வரைக்கும் ஒரு நிலையான அரசாட்சியின்றி சவுதி வம்ச வாரிசுகள் அலைந்து கொண்டிருந்தனர். சில காலத்திற்கு ரியாத்தைச் சுற்றியுள்ள மிகச் சிறிய பகுதியைக் கட்டுப்படுத்தவும் செய்கிறார்கள்.
ஆட்சியதிகாரத்தை இழந்தனர் என்றாலும் அல்-வகாப் உருவாக்கி பற்ற வைத்த வகாபியம் என்கிற நெருப்பு மட்டும் அணையவில்லை. மக்களின் சமூக வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே வகாபியிசம் மாறிவிட்டிருந்தது.
ஒட்டோமன் சாம்ராஜ்ய
முதல் உலகப் போர் உக்கிரமாக நடந்து கொண்டிருந்த காலம். துருக்கியை மையமாக கொண்டு மத்திய கிழக்கு நாடுகளை ஆண்டு வந்த ஒட்டோமன் சாம்ராஜ்ஜியம் அந்த சமயத்தில் ஒரு முட்டாள்தனமான முடிவை எடுக்கிறது. தோற்கும் குதிரையான அச்சுநாடுகளை (ஜெர்மன், ஆஸ்த்ரியா, இத்தாலி) ஆதரித்து நேச நாடுகளின் (இங்கிலாந்து பிரான்ஸ், ரஷ்யா) கோபத்தை சம்பாதித்துக் கொண்டது ஒட்டோமன் சாம்ராஜ்ஜியம்.
இந்த சூழ்நிலையை மிகச் சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார் சவுத் வம்சாவளியைச் சேர்ந்த இப்னு சவுத். அவர் உடனடியாக இங்கிலாந்துக்கு ஆதரவு கொடுக்கிறார். பதிலுக்கு சவுதியை ஒட்டோமன் சாம்ராஜ்ஜியத்திலிருந்து விடுவிக்க உதவுமாறு இங்கிலாந்தை கேட்டுக் கொள்கிறார். போரின் முடிவு நமக்குத் தெரியும். நேசநாடுகள் வெற்றி பெறுகின்றன. அத்தோடு மத்திய கிழக்கின் கடைசி கிலாஃபத்தான ஒட்டோமன் சாம்ராஜ்ஜியம் துண்டு துண்டாக சிதறிப் போகிறது. கலீஃபா முறையும் ஒரு முடிவுக்கு வருகின்றது.
அவ்வாறு சிதறியதில் கொஞ்சம் பெரிய துண்டு சவுதி அரேபியாவாக, ஒரு நாடாக நிலை பெறுகின்றது. இப்னு சவுத் மற்றும் அல்-வகாப் ஆகியோரின் வழிவந்த வாரிசுகள் தமக்குள் மண உறவுகளை ஏற்படுத்திக் கொண்டு சவுதி அரசின் பல்வேறு அதிகாரம் மிக்க பதவிகளில் அமர்ந்தனர் - இது இன்றைக்கு வரை அப்படியே தொடர்ந்து கொண்டிருக்கிறது.
தன்னுடைய ஆட்சியதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ள வல்லரசு நாடுகளுக்கு தனது எண்ணை வளத்தை திறந்து விட்டது செளதி அரசு. வகாபிய கடுங் கோட்பாடுகளைக் கொண்டு தன் நாட்டு மக்களை கட்டுப்படுத்தவும் செய்கிறது.
இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் மீண்டும் வல்லரசு நாடுகள் பிரிந்து நின்று சண்டையிட்டுக் கொண்டன. ஜெயிக்கும் குதிரையை அடையாளம் காண்பதில் வல்லவர்களான சவுதி அரச குடும்பம் நேரடியாக அமெரிக்காவிடம் சரணடைகிறது. அது முதல் மத்திய கிழக்கில் அமெரிக்கா நடத்திய அனைத்து பதிலிப் போர்களுக்கும் நம்பகமான கூட்டாளியாக சவுதி விளங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
ஆப்கானில் சோவியத் ரசியா
ஆப்கானில் சோவியத் ரசியாவை விரட்டியடைக்க வாகாபிய வெறிபிடித்த முஜாஹித்தீன்களை உருவாக்க வேண்டுமா, ஈராக் போருக்கு ஆதரவுத் தளம் வேண்டுமா - இதோ உள்ளேன் ஐயா என்று ஓடி வருகிறது சவுதி அரேபியா. அமெரிக்காவுக்கு எப்போதெல்லாம் மத்திய கிழக்கில் அடியாள் தேவைப்பட்டதோ அப்போதெல்லாம் முதலில் கை உயர்த்தி முன் வருவது சவுதி அரேபியா தான். குறிப்பாக இன்றைய தாலிபான்களின் தத்துவ வழிகாட்டியும் தந்தையும் சவுதி தான் - அதே தாலிபான்களை அமெரிக்கா அடித்த போது வேடிக்கை பார்த்ததும் சவுதி தான் - பின்னர் அதே தாலிபான்களிடம் ஆப்கானை அமெரிக்கா விட்டுச் சென்ற பின் தாலிபன்களோடு கொஞ்சிக் குலாவுவதும் சவுதி தான்.
சவுதி அரசு மேற்கொள்ளும் இந்த அந்தர் பல்டிகளை ஒரே மூச்சில் கேட்டு உங்களுக்கு தலையும் புரியவில்லை வாலும் புரியவில்லை அல்லவா? அதைப் புரிந்து கொள்ள சவுதியின் பொருளாதாரத்தையும் - அது எப்படி அமெரிக்க பொருளாதாரத்தோடும் அதன் நலன்களோடும் பின்னிப் பிணைந்துள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
அப்போது தான் நமக்கு இடது கையால் இசுலாமிய கடுங்கோட்பாட்டுவாதத்தை கட்டிப்பிடித்துக் கொண்டே வலது கையால் அப்பாவி இசுலாமியர்களின் படுகொலைகளை ஆதரிக்கும் சவுதி அரசின் முரண்பட்ட தன்மையைப் புரிந்து கொள்ள முடியும்.
அதை இறுதி பாகத்தில் பார்ப்போம்!