Aborginal Australians

 

Twitter

உலகம்

ஆஸ்திரேலியா ஆதிக்குடிகள் அழிக்கப்பட்ட வரலாறு: பழங்குடிகளிடமிருந்து ஐரோப்பா திருடிய நாடு

1788 இல் ஆஸ்திரேலியா மீது ஐரோப்பியர் படையெடுத்ததில் இருந்து பழங்குடி மக்கள் அவர்களது சொந்த மண்ணில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு ஒடுக்கப்பட்டனர்.

Govind

ஆஸ்திரேலியா பழங்குடியினரின் வாழ்க்கை முறை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தொடர்ந்த ஒன்று. ஆஸ்திரேலிய தீவுக் கண்டத்தில் இறங்கிய அந்நியர் கொண்டு வந்த தொற்று நோய்களால் சிட்னியில் உள்ள பழங்குடியின மக்கள் அழிக்கப்பட்டனர். 1788 ஆம் ஆண்டில் தீவுக் கண்டத்தில் சுமார் 7,50,000 பூர்வகுடி மக்கள் வசித்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.

லெப்டினன்ட் ஜேம்ஸ் குக் 1770 ஆம் ஆண்டில் கிழக்குக் கடற்கரையில் சென்ற போது அந்த நிலம் யாருக்கும் சொந்தமில்லை என்று காலனித்துவவாதிகள் நம்பினர். குக் இப்படிச் சொல்லும் போது தீவுக் கண்டத்தில் 400-க்கும் மேற்பட்ட பகுதிகளில் பழங்குடிகள் வாழ்ந்து வந்தனர்.

ஜேம்ஸ் குக்கிற்கு பிறகு கேப்டன் பிலிப் தலைமையில் முதல் கப்பற்படையினர் சிட்னி கோவுக்கு வந்த போது இது யாருக்கும் சொந்தமில்லை என்று சொல்வது உண்மையல்ல என்று உணர்ந்தனர். ஏனென்றால் கரையோரத்தில் பூர்வீகவாசிகள் ஈட்டிகளை அசைத்து கூச்சலிடுவதைக் காண முடிந்தது என பிலிப் குக் கூறினார்.

ஐரோப்பியரகள் வருவதற்கு முன்பு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வடக்கு சிட்னியில் வெவ்வேறு பழங்குடியின மக்கள் வாழ்ந்து வந்தனர். முதன்மையாக துறைமுகத்தின் கரையோரங்களில் வாழ்ந்த அவர்கள், அப்பகுதியின் நீர் மற்றும் உள்பகுதிகளிலில் மீன்பிடித்து வேட்டையாடினர். மேலும் சுற்றியுள்ள காட்டுபுதர்களில் இருந்து தேவையான உணவை அறுவடை செய்தனர். அவர்கள் அங்கே தன்னிறைவான வாழ்க்கை வாழ்ந்து வந்ததால் தங்கள் சொந்த நிலத்திலிருந்து வெகுதூரம் பயணிக்க வேண்டிய அவசியமில்லை. அவர்களைச் சுற்றிலும் வாழ்வதற்கு தேவையான வளங்கள் ஏராளமிருந்தன.

மேலும் அவர்கள் தீவுக் கண்டத்திலுள்ள பிற பழங்குடி மக்களுடன் வர்த்தகத்தையும் நிறுவினர். மாறிவரும் பருவங்களுக்கு ஏற்ப அவர்கள் இடம் பெயர்ந்தாலும் மக்கள் தங்கள் அன்றாட வாழ்விற்கு 4-5 மணி நேரம் வேலை செய்தால் போதுமானதாக இருந்தது. இந்த ஓய்வு நேரத்தினால் அவர்கள் வளமான மற்றும் சிக்கலான சடங்குகள் நிறைந்த வாழ்க்கையை உருவாக்கினர். மொழியும் பழக்க வழக்கங்களும் வளர்ந்தன.

James Cook

ஐரோப்பிய கண்டுபிடிப்பு மற்றும் வருகை

1770 இல் லெப்டினண்ட் ஜேம்ஸ் குக்கின் வருகை இந்த புராதான வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வருவதின் அடையாளமாக இருந்தது. குக்கிற்கு இரண்டு கடமைகள் இருந்தன.தெற்கு கண்டம் மக்கள் வசிக்காமல் இருந்தால் அதை எடுத்துக் கொள்ள வேண்டும். பூர்வீகவாசிகள் இருந்தால் அவர்களின் ஒப்புதலுடன் நிலைத்தை கைப்பற்ற வேண்டும் என குக் அறிவுறுத்தப்பட்டிருந்தார்.

லெப்டினன்ட் குக் ஆஸ்திரேலியா வந்த உடன் நியூ சவுத் வேல்ஸ் என்று அழைக்கப்பட்ட நிலத்தை பிரிட்டனின் மூன்றாம் ஜார்ஜ் மன்னரின் சொத்து என்று அறிவித்தார். மேலும் அந்த நிலம் ஏற்கனவே மக்கள் வாழ்ந்து வந்த உண்மையை புறக்கணித்தார். பூர்வீக குடிமக்களின் சம்மதத்தைப் பெறுவதற்கான முயற்சியில் அவர் தோல்வியுற்றார். இந்த தோல்வியால் ஆஸ்திரேலியா ஒரு ஆளரவற்ற கண்டம் அங்க யாருமில்லை என்ற கட்டுக்கதை சட்டப்பூர்வமாக பரப்பப் பட்டது.

குக்கிற்கு பிறகு ஜனவரி 1978-இல் ஆர்தர் பிலிப்பின் தலைமையில் முதல் கடற்படை அண்டி, ஆஸ்திரேலியா வந்தது. இப்படையெடுப்பின் நோக்கம் டெர்ரா ஆஸ்திரேலியாவைக் கைப்பற்றி ஒரு காலனியை நிறுவி கட்டுப்பாட்டை நிறுவுவதாகும்.

எச்எம்எஸ் சிரியஸ் கப்பலைச் சேர்ந்த ஒரு குழுவினர் தண்ணீர் மற்றும் நிலத்தை பெறுவதற்கு கரைக்குச் சென்றனர். ஐரோப்பியர்கள் வந்த நான்கு நாட்களுக்குள் முதல் நில உரிமையை மேற்கொண்டனர். ஜனவரி 26-ம் தேதிக்குள் முதல் கடற்படை சிட்னி கோவுக்குச் சென்று துறைமுகத்தில் தரையிறங்கியது.

ஆரம்பகால ஐரோப்பியர்கள் பழங்குடியினரின் வாழ்க்கை முறையை முதலில் சந்தித்தபோது இளக்காரமாக பார்த்தனர்.

நிலத்தை சொந்தம் கொண்டாடுதல்

நிலத்தை சொந்தம் கொண்டாடுதல்

பழங்குடியின மக்களுக்கும், இந்த நிகழ்வில், சிட்னியின் வடக்குக் கரையில் வாழும் குலங்களுக்கும் காலனியவதிகளின் செயல்கள் குறித்து உண்மையில் புரியவில்லை. ஆரம்பகால குடியேற்றவாசிகள் புரிந்து கொள்ளாதது, மற்றும் பல ஆஸ்திரேலியர்கள் இப்போது புரிந்து கொள்ளத் தொடங்குவது என்னவென்றால், பழங்குடியினரின் வாழ்க்கை முறை இயற்கை சூழலுடன் முழு உறவை அடிப்படையாகக் கொண்டது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் பெறப்பட்ட ஞானமும் திறமையும் அவர்கள் தங்கள் சூழலை அதிகபட்சமாக பயன்படுத்த உதவியது.

பழங்குடியின மக்களைப் பொறுத்தவரை, உணவுக்காக விலங்குகளைக் கொல்வது அல்லது தங்குமிடம் கட்டுவது போன்ற செயல்கள் சடங்கு மற்றும் ஆன்மீகத்தோடு தொடர்புடையது. மேலும் அவர்களின் சுற்றுப்புறச் சூழலுடன் சரியான சமநிலையில் இருக்குமாறு வாழ்க்கையை மேற்கொண்டனர். அதாவது சுற்றுச்சூழலை அழிக்காமல் இயைந்து வாழ்ந்து வந்தனர்.

தரமான குடிநீர் மற்றும் தங்குமிடம் மற்றும் உணவு அங்கே ஏராளமாக இருந்தது. வளமான, ஆரோக்கியமான வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தும் உடனடியாகக் கிடைத்தன. அது அப்படியே தொடரவில்லை. ஆங்கிலேயர் வருகை ஆயுத மோதலையும் புரிதல் இல்லாமையையும் கொண்டு வந்தது. இது வடக்கு சிட்னி குலங்களின் அழிவை முன்னறிவித்தது. சிட்னி படுகையில் உள்ள மற்ற மக்களுடன் - தெற்கே தரவால் மற்றும் மேற்கில் தாருக் மக்கள் பெரும் நெருக்கடிக்கு உள்ளானார்கள். உணவு பற்றாக்குறை விரைவில் ஒரு பிரச்சனையாக மாறியது. பெரிய வெள்ளை இன மக்கள் மீன்களை பெருமளவு பிடிப்பதன் மூலமும், கங்காருக்களின் எண்ணிக்கையை தாங்க முடியாத அளவில் வேட்டையாடுவதன் மூலமும் குறைத்தனர். நிலத்தை சுத்தம் செய்து, தண்ணீரை மாசுபடுத்தினர். இதன் விளைவாக, சிட்னி படுகையில் உள்ள பழங்குடியின மக்கள் விரைவில் பட்டினியால் வாடும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

Australia was Colonised

நோய் மற்றும் அழிவு

அதுவரை ஐரோப்பா மற்றும் ஆசியா முழுவதும் பரவிய நோய்களிலிருந்து ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தனிமைப்படுத்தப்பட்ட பழங்குடியின மக்களுக்கு காலனியவாதிகள் கொண்டு வந்த இந்தப் புதிய நோய்கள் ஒரு அபாயகரமான மற்றும் விரிவான பாதிப்பைக் கொடுத்தது. கப்பலில் வந்த மாலுமிகள் மற்றும் குற்றவாளிகளுக்கு இருந்த பெரியம்மை, சிபிலிஸ் மற்றும் இன்ஃப்ளூயன்ஸா போன்ற கொடிய வைரஸ்களை எதர்ப்பதற்கு பழங்குடி மக்களிடத்தில் ஏதுமில்லை. ஒரு வருடத்திற்குள், சிட்னி படுகையில் வசிக்கும் பழங்குடி மக்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெரியம்மை நோயால் இறந்தனர். பழங்குடியின குலங்களின் துடிப்பான வாழ்க்கையுடன் இருந்த இப்பகுதி, இப்போது அமைதியாகி விட்டது. அல்லது மயானமாகி விட்டது.

இந்த நிகழ்வு சிட்னி பகுதியின் பழங்குடியின குலங்களுக்கு எவ்வளவு பேரழிவை ஏற்படுத்தியது என்பதைப் புரிந்து கொள்வது கடினம்.

பிரிட்டீஷ் வரலாற்றை விட பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் முந்தைய நாகரீகத்தைச் சேர்ந்த பழங்குடிகளை ஆங்கிலேய காலனியவாதிகள் சில மாதங்களில் அழித்து விட்டனர். தங்கள் கண்ணெதிரே முழுநிலமும் ஆக்கிரமிக்கப்படுவதை பழங்குடியனர் கண்ணுற்று வேதனை அடைந்தனர்.

பெரும்பாலான ஆங்கில காலனிய குடியேறிகளுக்கு, பழங்குடியின மக்கள் என்பவர்கள் கங்காருக்கள், டிங்கோக்கள் மற்றும் ஈமுக்கள் போன்ற வினோதமான விலங்கினங்களாகக் கருதப்பட்டனர். இந்த விலங்குகளையும் பழங்குடியினரையும் அழித்தால்தான் விவசாயம் மற்றும் மேய்ச்சல் வளர்ச்சிக்கு வழி பிறக்கும் என காலனியவாதிகள் கருதினர்.

British Invaded Australia

ஆஸ்திரேலியா என்பது பழங்குடிமக்களிடமிருந்து ஐரோப்பியர்கள் திருடிய கொள்ளையடித்த நாடு

இத்தகைய பாதிப்புகள் இருந்த போதிலும் ஆஸ்திரேலிய பழங்குடி மக்கள் ஆங்கில காலனியவாதிகளை எதிர்த்து பல வருடங்கள் கொரில்லா போரில் ஈடுபட்டனர்.

இருப்பினும் போரில் கொல்லப்பட்டதை விட பெரியம்மையில் பாதிக்கும் மேற்பட்ட பழங்குடி மக்கள் இறந்து போயினர். குடியேற்றங்கள் மற்றும் பண்ணைகளுக்காக நிலம் அழிக்கப்பட்டதால் பெரியம்மை பாதிக்கப்பட்ட பழங்குடிகள் கூட இடம் பெயரவேண்டிய அவலச்சூழல் ஏற்பட்டது. இப்படிப் பறிக்கப்பட்ட நிலங்கள்தான் பழங்குடி மக்களுக்கு பல ஆண்டுகள் உணவை அளித்தது. இந்நிலையில் தங்களது வறுமை காரணமாக பழங்குடி மக்கள் வெள்ளையர் அளிக்கும் உணவு, உடைக்கு கையேந்த வேண்டிய அவலநிலை ஏற்பட்டது. ஆங்கிலேயர்களால் வணிகத்திற்கான வழிமுறையாகப் பயன்படுத்தப்பட்ட மது, பழங்குடியினரின் பாரம்பரிய சமூக மற்றும் குடும்பக் கட்டமைப்புகளை மேலும் சிதைக்க உதவியது.

ஐரோப்பிய நாகரீகம் ஒரு கண் சிமிட்டும் நேரத்தில் பழங்குடி மக்களின் புரதான வாழ்க்கையை அழித்தது. சிட்னி பகுதியில் வாழ்ந்து வந்த பழங்குடிமக்களில் பெரும்பான்மையினர் 1788 போரில் கொல்லப்பட்டனர். இன்றும் கூட இப்பகுதிகளில் பழங்குடியினர் வாழ்ந்ததின் தொல்லியல் வரலாற்று பகுதிகள் உள்ளன. ஆனால் இதன் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறத்தான் யாருமில்லை.

இன்றும் நாகரீக ஜனநாயகத்தின் மையம் என்று சொல்லப்படும் ஐரோப்பிய நாகரீகம் ஆஸ்திரேலியாவில் பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்ந்து வந்த புராதானமான மக்களைக் கொன்று அவர்களது நாட்டைக் கைப்பற்றி இப்போது ஆஸ்திரேலியா என்று பெயர் வைத்திருக்கிறார்கள். எனவே ஆஸ்திரேலியா என்பது பழங்குடிமக்களிடமிருந்து ஐரோப்பியர்கள் திருடிய கொள்ளையடித்த நாடு என்றே சொல்லலாம்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?