ஜப்பானில் புதன் இரவு ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 20 லட்சம் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
7.4 என்ற அளவில் பதிவாகியுள்ள நிலநடுக்கம், 11 வருடங்களுக்கு முன்பு ஃபுகிஷிமா அணு உலை விபத்து ஏற்படக் காரணமாக இருந்த அதே பகுதியில்தான் ஏற்பட்டுள்ளது. எனவே மக்கள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இந்த நிலநடுக்கத்தில் இதுவரை 90 பேர் வரை காயமடைந்துள்ளனர் நான்கு பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
தலைநகர் டோக்யோ உட்பட பல்வேறு பகுதிகளில் கட்டடங்கள் பலமாக அதிர்ந்தன. பொருட்கள் தூக்கி வீசப்பட்டன. ஃபுகிஷிமா நகருக்கான மெட்ரோ ரயில் தடம் புரண்டு பயணிகள் வெளியேற்றப்பட்டனர் ஆனால் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.
அடுத்த சில தினங்களுக்குச் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏதேனும் ஏற்பட்டால் அதனைக் கையாள்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக ஜப்பானின் பிரதமர் ஃபுமியோ கிஷிடா தெரிவித்துள்ளார்.
நிலநடுக்கம்
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது. இருப்பினும் தற்போது அந்த எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டுள்ளது. சில இடங்களில் கடல் மட்டம் உயர்ந்து காணப்பட்டாலும் பெரிதான ஆபத்துகள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ள ஒரு நாடுதான் ஜப்பான். அங்குக் கட்டடங்களும் நிலநடுக்கத்தைத் தாங்கும் திறனில்தான் கட்டப்பட வேண்டும். ஆனால் 11 வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட ஃபுகிஷிமா அணு உலை விபத்திலிருந்து அந்நாடு அவ்வளவு எளிதாக மீளவில்லை. ஒரு சில தினங்களுக்கு முன்புதான் ஃபுகிஷிமா அணு உலை விபத்தின் ஆண்டு தினம் அனுசரிக்கப்பட்டது. தற்போது ஃபுகிஷிமா அணு உலைக்கு எந்த ஆபத்தும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் நேற்றைய நிலநடுக்கத்திற்குப் பிறகு சில அதிர்வுகளை உணரலாம் என மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஃபுகிஷிமா
2011ஆம் ஆண்டு ஜப்பானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் அதன்பிறகு வந்த சுனாமி ஃபுகிஷிமா அணு உலையைத் தாக்கியது. 9.0 என்ற அளவில் பதிவாகிய நிலநடுக்கம் அதுவரை ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் மிகச் சக்தி வாய்ந்ததாக இன்றளவும் கருதப்படுகிறது. இதனால் ஏற்பட்ட சுனாமியால் சுமார் 18 ஆயிரம் பேர் வரை உயிரிழந்துள்ளனர். சுனாமி ஃபுகிஷிமா அணு ஆலையைத் தாக்கியது.
இந்த அணு உலை விபத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் முழுமையாகச் சரியாக 40 வருடங்கள் வரை ஆகும் என்கிறது ஜப்பான். அதுமட்டுமல்ல அணு உலை விபத்தால் ஏற்பட்ட கதிர்வீச்சின் பாதிப்பு இன்றளவும் காணப்படுகிறது. சுனாமிக்கு 10 நிமிடங்களுக்கு முன்னதாக மட்டுமே எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனால் பெருமளவிலான மக்களால் தப்பிக்கவும் முடியவில்லை.
நிலநடுக்கம், சுனாமி, அணு உலை விபத்து என அந்த பகுதியே சீர் குலைந்து போனது. இதனால் 5 லட்சத்துக்கும் மேலானவர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.