அமெரிக்கா - கனடா சர்வதேச எல்லையில் ஒரு இந்தியக் குடும்பத்தைச் சேர்ந்த 3 வயதுக் குழந்தை உட்பட நான்கு நபர்கள் இறந்து உறைந்த நிலையில் கிடந்துள்ளனர்.
கடந்த 19-ம் தேதி ராயல் கனடியன் மவுண்டட் போலீஸ் (RCMP) கனடாவில் எமர்சன் நகருக்கு அருகில், உறைந்து இறந்து கிடந்த நான்கு உடல்களைக் கண்டுபிடித்தனர். அவர்கள் நான்கு பேரும் இந்தியர்கள் என்று அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டனர்.
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 39 வயது,ஜெகதீஷ் பல்தேவ்பாய் பட்டீல் அவரது மனைவி வைஷாலிபென் ஜெகதீஷ்குமார் பட்டீல் (37) இவர்களின் 11 வயது மகள் விஷாங்கி மற்றும் 3 வயது குழந்தை தார்மிக் ஆகியோர் இறந்துள்ளனர்.
அமெரிக்க -கனட எல்லை
ஜெகதீஷ் பல்தேவ்பாய் குஜராத் மாநிலம் காந்திநகர் மாவட்டத்திலிருக்கும் ஒரு கிராமத்தில் பள்ளி ஆசிரியராக பணியாற்றி வந்திருக்கிறார்.
இவர்கள் இரண்டு வாரங்களுக்கு முன் பார்வையாளர் விசா மூலம் கனடாவுக்குச் சென்றனர் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இறந்த குடும்பத்தினரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்ட அதே நாளில் அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக ஆட்களைக் கடத்தி வரும் ஸ்டீவ் சாண்ட் என்பவர் கைது செய்யப்பட்டார்.
அப்போது அவர் வாகனத்தில் சட்ட விரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைந்த 2 இந்தியர்கள் இருந்தனர்.
தவிர, மேலும் ஐந்து இந்தியர்கள் சட்ட விரோதமாக எல்லையைக் கடந்ததற்காகக் கைது செய்யப்பட்டிருக்கிறனர்.
இந்த 7 பேரும் இறந்து போன 4 பேரும் ஒன்றாக வந்தவர்களாக இருக்கலாம் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்டவர்களுக்குத் தூதரக ரீதியிலான உதவிகள் வழங்கப்படும் எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்கா, கனடா அதிகாரிகளிடமிருந்து தொடர்ந்து தகவல்களைச் சேகரித்து வருவதாக இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது. கனடாவில் உள்ள இந்தியத் தூதரகத்திலிருந்து அதிகாரிகள் மேனிடோபா நகருக்குச் சென்றுள்ளனர். அதேபோல், சிகாகோவிலிருந்து ஒரு தூதரகக் குழு சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளதாக அமெரிக்காவில் உள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்தது.