நான்காவது டோஸ் தடுப்பூசி போடும் இஸ்ரேல்

 

Pixabay

உலகம்

ஒமிக்ரான் - மீண்டும் கொரோனா : நான்காவது டோஸ் தடுப்பூசி போடும் இஸ்ரேல்

Niyasahamed M

உலக நாடுகள் அனைத்தும், 2019ஆம் ஆண்டு கொரோனா தொற்று பரவ தொடங்கிய அதே நிலை மீண்டும் வருகிறதோ என்ற அச்சத்தில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இதற்கு காரணம் கொரோனாவின் புதிய திரிபான ஒமிக்ரான்.

பல ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும் தடுப்பு மருந்து செலுத்தி கொள்ளாத மக்கள் கட்டாயம் தடுப்பு மருந்து செலுத்தி கொள்ள வேண்டும் என்று தெரிவித்துவிட்டன.

சில நாடுகள் ஒருபடி மேல் சென்று ஒமிக்ரானிடமிருந்து தப்புவதற்கு பூஸ்டர் டோஸ் அவசியம் என்று தெரிவித்தன.

இந்தியாவிலும், அரசால் ஏதும் அறிவிப்புகள் வரவில்லை என்றாலும் ஏறக்குறைய பூஸ்டர் டோஸ் போட வேண்டிய நிலை வரும் என்ற மனநிலைக்கு பலர் வந்துவிட்டனர்.

ஆனால் பூஸ்டர் டோஸை தாண்டியும் தற்போது ஒரு நாடு நான்காவது டோஸ் தடுப்பு மருந்தை செலுத்துவதற்கு தன் மக்களை தயார்ப்படுத்தி கொண்டு வருகிறது.

ஆம் இஸ்ரேலில்தான் இந்த நிலை.

ஒமிக்ரான் தொற்று பரவலை தடுக்க இந்த நான்காவது பூஸ்டர் டோஸ் அவசியம் என அந்நாட்டின் சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போதைய நிலையில் 60 வயதுக்கும் மேற்பட்டோருக்கும், சுகாதார பணியாளர்களுக்கும் நான்காவது டோஸ் செலுத்த இஸ்ரேல் திட்டமிட்டு வருகிறது.

இதற்கான முயற்சிகளை அந்நாடு மேற்கொண்டு வருகிறது.

இஸ்ரேல்

நான்காம் டோஸ் என்னும் ஆயுதம்

கொரோனா தொற்றின் ஒமிக்ரான் திரிபு முதன்முதலாக தென் ஆப்ரிக்காவில்தான் கண்டறியப்பட்டது. அதன்பிறகு பல உலக நாடுகள் ஒமிக்ரான் தங்களின் நாடுகளில் கால் பதித்துவிட்டதாக தெரிவித்தன.

இருப்பினும் ஒரு நம்பிக்கை தரும் விதமாக ஒமிக்ரான் வேகமாக பரவினாலும் அதன் அறிகுறிகள் மிதமாகதான் இருக்கின்றன என தெரிவித்து வந்தனர்.

ஆனால் பிரிட்டனில் முதன்முறையாக ஒமிக்ரான் திரிபால் ஒருவர் உயிரிழந்தார் என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்ததும் உலக நாடுகளை மீண்டும் அச்சம் சூழ்ந்தது.

அதன்பின் அமெரிக்காவிலும் ஒமிக்ரான் தொற்றால் ஒருவர் உயிரிழந்தார்.

செவ்வாயன்று இஸ்ரேலில் ஒருவர் ஒமிக்ரான் தொற்றால் உயிரிழந்துள்ளார்.

எனவேதான் இஸ்ரேல் நான்காம் டோஸ் என்ற ஆயுதத்தை கையில் எடுத்துள்ளது.

இஸ்ரேலில் தற்போது 300க்கும் அதிகமானோருக்கு ஒமிக்ரான் திரிபு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

நான்காம் டோஸ் செலுத்த வேண்டும் என்ற முடிவுக்கு மூத்த சுகாதார அதிகாரிகள் இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை என்றாலும் இஸ்ரேல் பிரதமர் நஃப்டாலி பென்னட் இந்த முடிவை வரவேற்றுள்ளார்.

ஒமிக்ரானை நான்காம் டோஸ் கொண்டு எதிர்கொண்டுவிட முடியும் என அவர் நம்புகிறார்.

முன்னோடியாக திகழ்ந்த இஸ்ரேல்

கொரோனா தொற்றிலிருந்து மக்களை காக்க தடுப்பு மருந்தே ஒரே வழி என நாடுகள் முடிவுக்கு வந்தவுடன் அதை சிறப்பாக செய்து முடித்த ஒரு நாடு இஸ்ரேல் பல ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவுக்கு முன்னதாகவே அதிகப்படியான மக்களுக்கு இஸ்ரேல் தடுப்பு பூசி செலுத்தியது.

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலை குறித்து பெரிதும் யோசிக்காத அந்த சமயத்தில் இஸ்ரேல் கிட்டதட்ட தனது கொரோனாவுக்கு முந்தைய வாழ்க்கையை வாழ தொடங்கியது.

2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இஸ்ரேலில் ஃபைசர் தடுப்பு மருந்துடன் தடுப்பு மருந்து செலுத்தும் பணியை தொடங்கியது இஸ்ரேல்.

ஐந்தே வாரங்களில் இஸ்ரேல் பாதிக்கும் அதிகமான மக்களுக்கு தடுப்பு மருந்தை செலுத்திவிட்டது.

அதற்கு முக்கியமான ஒரு காரணம் இஸ்ரேலின் சிறப்பான பொது சுகாதார அமைப்பு.

மற்றொரு காரணம் கடந்த மார்ச் மாதம் நடைபெறவிருந்த தேர்தல் அப்போது இஸ்ரேல் பிரதமராக இருந்த பெஞ்சமின் நேதன்யாஹு ஏற்கனவே ஊழல் குற்றச்சாட்டு விசாரணகளை எதிர்கொண்டு வந்தார்.

இந்நிலையில் கொரோனா பெருந்தொற்றை சரியாக கையாளவில்லை என்ற அவப்பெயரும் அதில் சேர்ந்து கொள்ள வேண்டாம் என்பதற்காக தடுப்பு மருந்து செலுத்தும் பணியை வேகப்படுத்தினார். ஆனாலும் அது அவருக்கு கைக் கொடுக்கவில்லை என்பது வேறு கதை.

இஸ்ரேலில் இதுவரை ஒரூ கோடியே 36 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தாலும், 8,200 பேர் அங்கு கொரொனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இது பல நாடுகளை காட்டிலும் மிக குறைவான எண்ணிக்கை.

Covid19

ஒமிக்ரான் தடுப்பு நடவடிக்கை

முந்தைய அலைகளை பெரிதாக எந்த விமர்சனமும் இல்லாமல் எதிர்கொண்ட இஸ்ரேல் தற்போது ஒமிக்ரானை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி வருகிறது.

இஸ்ரேல் ஏற்கனவே அமெரிக்கா, ஜெர்மனி, கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு பயணக்கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

தடுப்பு மருந்தை முதலில் செலுத்திய நாடாக இருந்தாலும், உலக நாடுகளால் முன்னோடியாக பார்க்கப்பட்டாலும் இஸ்ரேல் ஒரு முக்கிய பிரச்னையை எதிர்கொள்ள வேண்டியிருந்தது ஆம் இஸ்ரேல் மக்கள் தொகையில் பலர் 14 வயதுக்கு குட்பட்டவர்கள். எனவே நவம்பர் மாதம் முதல் ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கும் தடுப்பு மருந்து செலுத்தப்படும் என இஸ்ரேல் அறிவித்தது.

இது எல்லாம் போதாமல்தான் தற்போது நான்காம் டோஸ் செலுத்தப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஆக மொத்தம் இஸ்ரேல் கொரோனாவை தடுக்க 4ஆவது டோஸ் அவசியம் என கூறியுள்ளதால் இது பிற நாடுகளுக்கும் ஒரு எடுத்துக்காட்டாக அமைய வாய்ப்புள்ளது என்றே கூறலாம்.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?