இஸ்ரேல் - பாலஸ்தீன பிரச்சனை Mathias Starzer
உலகம்

இஸ்ரேல் - பாலஸ்தீன பிரச்சனை : அ முதல் ஃ வரை - விரிவான தகவல்

NewsSense Editorial Team

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சில மாதங்களுக்கு முன்பு இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கு இடையிலான பிரச்சனைக்கு பல்லாண்டு காலமாக கூறப்பட்டு வரும் இரு தனிநாடு தீர்வை (two-state solution) முன்வைத்து அதற்கு தன் ஆதரவையும் தெரிவித்தார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஜெருசலேம் நகரத்தில் இஸ்ரேல் பிரதமர் யயிர் லபிட் அவர்கள் உடனிருக்கும் போது, இரு தனி நாடு தீர்வை குறிப்பிட்டு பேசினார். இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கு இடையில், நீண்ட கால அமைதியை நிலைநாட்ட இதுவே சிறந்த வழி என்றும் கூறினார் அமெரிக்க அதிபர்.

இஸ்ரேல் பாலஸ்தீன பிரச்சனை என்றால் என்ன? அப்பிரச்சனைக்கு முன்வைக்கப்பட்ட இரு தனிநாடு தீர்வு என்றால் என்ன? அது ஏன் இத்தனை ஆண்டு காலமாக நிறைவேற்றப்படவில்லை?  காசா ஸ்ட்ரிப் என்று அழைக்கப்படும் பகுதி ஹமாஸ் தீவிரவாதக் குழுவின் கட்டுப்பாட்டில் இருப்பதால் அவர்களுக்கு தனி நாடு வழங்க முடியுமா? 

அது என்ன இஸ்ரேல் பாலஸ்தீன பிரச்சனை?

இன்று யூதர்கள் மற்றும் பாலஸ்தீனர்கள் தங்கள் நிலம் என்று அழைத்துக் கொள்ளும் பகுதி, ஒரு காலத்தில் ஒட்டமான் சாம்ராஜ்யத்தின் கீழும் அதன் பிறகு பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் கீழும் இருந்தது.

அப்பகுதியைச் சேர்ந்த அரேபியர்கள், அந்த நிலப்பரப்பை பாலஸ்தீன் என்று அழைக்க வேண்டும் அப்படி ஒரு நாட்டை உருவாக்க வேண்டும் என விரும்பினர். சொல்லப் போனால் அந்த நிலப்பகுதி பாலஸ்தீன் என்று தான் அழைக்கப்பட்டது என அவுட் லுக் இந்தியா வலைதளக் கட்டுரை ஒன்றில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

பல ஐரோப்பிய நாடுகளில் தங்கள் இனத்தின் காரணமாகவும், மதத்தின் காரணமாகவும், மிக மோசமாக நடத்தப்பட்டு பல்வேறு வன்முறைகளை எதிர்கொண்ட யூத மக்கள் தங்களுக்கென ஒரு தனி நாட்டை உருவாக்க விரும்பினர். அதுவும் தாங்கள் புனிதத் தளமாகக்  கருதும் நிலப்பரப்பில் தங்கள் நாட்டை உருவாக்க விரும்பினர். அப்படி அவர்கள் புனிதமாக கருதிய நிலப்பரப்பு தான் ஜெருசலேம். இதை அரேபியர்கள் கடுமையாக எதிர்த்தனர், அதோடு இது தங்கள் நிலம் என்றும் கூறினர்.

இதுதான் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்துக்கு இடையிலான மோதலின் மையப் பகுதி. யாருக்கு என்ன நிலம் கிடைக்கும் அதை எப்படி கட்டுப்படுத்துவது என்கிற பிரச்சனை இப்போது வரை நிலவி வருகிறது.

அரசியல் வரலாறு:

1917 ஆம் ஆண்டு பால்ஃபோர் பிரகடனத்தின் போது, பாலஸ்தீனத்தில் யூத மக்களுக்கு என ஒரு பகுதி நிறுவப்படுவதற்கு பிரிட்டன் தன் ஆதரவைத் தெரிவித்தது. இதையும் அரேபியர்கள் மிகக் கடுமையாக எதிர்த்தனர், பல பகுதிகளில் வன்முறை வெடித்தது.

1922 முதல் 1926 ஆகிய நான்கு ஆண்டுகளில் சுமார் 75 ஆயிரம் யூத மக்கள் பாலஸ்தீனத்தில் குடியேறி இருந்தனர். 1935வது ஆண்டில் மேலும் 60 ஆயிரம் யூத மக்கள் பாலஸ்தீனத்தில் குடியேறி இருந்ததாக அர்கான்சாஸ் மத்திய பல்கலைக்கழகம் சொல்கிறது.

பாலஸ்தீனத்தில் யூதர்கள் குடியேறுவதைத் தடுக்க வேண்டும் என அரேபியர்கள் பிரிட்டனுக்குக் கோரிக்கை வைத்தனர், ஆனால் அவற்றைப் பிரிட்டன் கண்டுகொள்ளவில்லை. யூத குடியேற்றம் தொடர்பான பல்வேறு வன்முறைச் சம்பவங்களில் கிட்டத்தட்ட சுமார் 500 பேர் உயிரிழந்ததாக அவுட்லுக் இந்தியா வலைத்தளம் சொல்கிறது.

ஐக்கிய நாடுகள் சபை முன் வைத்த தீர்வு:

இன்று ஐக்கிய நாடுகள் சபை எப்படி இயங்கிக் கொண்டிருக்கிறதோ அதேபோல 1920களில் அதன் முன்னோடியாக லீக் ஆஃப் நேஷன்ஸ் என்கிற அமைப்பு இயங்கிக் கொண்டிருந்தது. அந்த அமைப்பு யூதர்களுக்கு என ஒரு தனி பகுதியை உருவாக்கும் பொறுப்பைப் பிரிட்டனுக்கு வழங்கியது.

இதன் அடிப்படையில் யூதர்கள் மற்றும் அரேபியர்களுக்கு மத்தியில் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது மறுபக்கம் பல வன்முறைச் சம்பவங்களும் அரங்கேறின. 1936 ஆம் ஆண்டு பிரிட்டன் பீல் ஆணையத்தை (Peel Commission) அமைத்தது. பாலஸ்தீனத்தை யூதர்களுக்கும் அரேபியர்களுக்கும் பிரித்துக் கொடுத்துவிடலாம் என ஒரு யோசனை முன்வைக்கப்பட்டதென அர்கான்சாஸ் மத்திய பல்கலைக்கழகத்தின் சில பிரசுரங்கள் கூறுகின்றன.

1947 ஆம் ஆண்டு, இஸ்ரேல் பாலஸ்தீன பிரச்சனையை ஐக்கிய நாடுகள் சபையிடம் பரிந்துரைத்தது பிரிட்டன். ஐக்கிய நாடுகள் சபையோ இரு தீர்வுகளை முன்வைத்தது.

1. பொருளாதார ரீதியில் ஒன்றிணைந்த இரு தனி நாடுகள் (two separate states joined economically).

2. யூதர்கள் & அரேபியர்களுக்கென தன்னாட்சி அதிகாரம் கொண்ட பை நேஷனல் ஸ்டேட் (single binational state made up of autonomous Jewish and Palestinian areas) என்கிற யோசனையை முன் வைத்தது. 

யூதர்கள் இதில் முதல் யோசனையை ஒப்புக்கொண்டனர். அரேபியர்கள் இந்த இரு திட்டங்களையும் நிராகரித்தனர் என்கிறது பிரிட்டானிகா வலைத்தளம்.

1947 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இஸ்ரேல் பாலஸ்தீன பிரச்சனை குறித்து இறுதி பரிந்துரை முன்வைக்கப்பட்டது. அதன்படி பாலஸ்தீனத்தை அரேபியர்களுக்கும் யூதர்களுக்கும் பிரித்துக் கொடுப்பதாகவும் இரு தரப்பினரும் புனிதமாகக் கருதும் ஜெருசலேம் பகுதியை சில சர்வதேச ஏற்பாடுகள் மூலம் நிர்வகித்துக் கொள்ளலாம் என்றும் பரிந்துரைக்கப்பட்டது. இதையும் அரேபியர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

1948 ஆம் ஆண்டு மே மாதம் இஸ்ரேல் சுதந்திரம் அடைந்ததாக அறிவித்துக் கொண்டது. இஸ்ரேலை சுற்றி இருந்த லெபனான், சிரியா, இராக், எகிப்து போன்ற பல நாடுகள் அந்த புதிய தேசத்தின் மீது போர் தொடுத்தனர்.

போரின் முடிவு இஸ்ரேல் பல நிலப்பரப்புகளை வென்றது. அந்த நிலப்பரப்புகள் எல்லாம் ஐக்கிய நாடுகள் சபையின் 1947 தீர்மானத்தின்படி பாலஸ்தீன அரேபியர்களுக்கு வழங்கப்பட்டு இருந்தது என்பதும் இங்குக் குறிப்பிடத்தக்கது.

ஏன் இரு தனிநாடு தீர்மானம் ஒத்துவரவில்லை? இதுநாள் வரை நிறைவேற்றப்படவில்லை?

நாம் முன்பே கூறியது போலப் பாலஸ்தீன நிலப்பரப்பை, யூதர்களுக்கு என ஒரு தனி நாடாகவும் அரேபியர்களுக்கு என ஒரு தனி நாடாகவும் பிரித்துக் கொள்வதே இரு தனிநாடு தீர்மானம்.

இந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வராமல் இருந்ததற்கு, இருப்பதற்கு நான்கு முக்கிய காரணங்களை முன்வைக்கிறது நியூ இயர் டைம்ஸ் பத்திரிக்கை.


1. எல்லைப் பிரச்சனை

சரி ஒரு வழியாக இரு தனிநாடு தீர்மானத்திற்கு இரு நாடுகள் ஒப்புக்கொண்டால் கூட, அந்த இரு நாட்டிற்கான எல்லைகளை எப்படி வரையறுப்பது எந்த பகுதிகளை யார் வைத்துக் கொள்வது என்கிற விஷயத்தில் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை. 

1967 ஆம் ஆண்டு போரின் போது இஸ்ரேல், சினாய் (sinai) தீபகற்ப பகுதி, காசா ஸ்ட்ரிப், வெஸ்ட் பேங்க், பழைய ஜெருசலேம் நகரம், கோலன் ஹைட்ஸ்... எனப் பல பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டது.

பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு 1982 ஆம் ஆண்டு சினாய் தீபகற்ப பகுதியை எகிப்திடம் திருப்பி கொடுத்தது இஸ்ரேல்.

ஆனால் மற்ற பகுதிகளை இஸ்ரேல் இழக்க விரும்பவில்லை. இவையெல்லாம் தாண்டி வெஸ்ட் பேங்க் பகுதியில் இஸ்ரேலியர்கள் மிகப்பெரிய எண்ணிக்கையில் குடியேறுவது குறித்துத் தொடர்ந்து கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

இஸ்ரேல் வெஸ்ட் பேங்க் பகுதிக்கு உள்ளிருந்து கொண்டே பல எல்லை சுவர்களைக் கட்டமைத்தது. அதோடு வெஸ்ட் பேங்க் பகுதியிலேயே யூத மக்கள் குடியேறுவதற்கு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன. தன்னிச்சையாக இனி அப்பகுதியை சுயாதீன பாலஸ்தீன பகுதி என்று நிறுவுவது சிரமமான விஷயமாகி விட்டது. 

2. ஜெருசலேம்

இஸ்ரேலும் சரி பாலஸ்தீன மக்களும் சரி ,ஜெருசலேம் தான் தங்களுடைய தலைநகரம் அது தங்கள் மதம் மற்றும் கலாச்சாரத்தின் அச்சாணி என்று கூறிக் கொள்கிறார்கள்.

இஸ்ரேலோ ஜெருசலேம் தங்களின் பிரிக்கப்படாத தலைநகரம் (Undivided Capital) என பிரகடனமே செய்துவிட்டது. இப்போது கிட்டத்தட்ட ஒட்டுமொத்த ஜெருசலேம் பகுதியையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது இஸ்ரேல்.

அகதிகள்

3. அகதிகள்

1948 ஆம் ஆண்டு போர் காரணமாகக் கிட்டத்தட்ட 50 லட்சம் பாலஸ்தீன அரேபியர்கள், தங்கள் நிலப்பகுதியை விட்டு அகதிகளாக வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டது. இப்போது வரை அவர்கள் தங்களுடைய தாய் நிலத்திற்குத் திரும்ப உரிமை கோருகின்றனர்.

இஸ்ரேல் அதை முழுமையாக மறுக்கிறது. ஒருவேளை இந்த அகதிகளை தங்களுடைய தாய் நிலத்திற்குத் திரும்ப இஸ்ரேல் அனுமதித்தால், இந்த நிலப்பகுதியில் யூத மக்கள் தங்களுடைய பெரும்பான்மைவாதத்தை இழப்பர். அது இஸ்ரேலுக்கே பெரிய தலைவலியாக அமைந்துவிடும் என்பதால் இஸ்ரேல் அனுமதிப்பதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவு.

4. பாதுகாப்பு பிரச்சனைகள்

இன்று இஸ்ரேல் என்று அழைக்கப்படும் நிலப்பகுதியில், மத்தியத்தரைக் கடலுக்கு அருகில் காசா ஸ்ட்ரிப் என்கிற பகுதி இப்போதும் ஹமாஸ் குழுவின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அக்குழுவோடு அவ்வப்போது இஸ்ரேல் ராணுவம் மற்றும் பாதுகாப்புப்படை ஏவுகணைகளை எல்லாம் ஏவி சண்டையிட்டுக் கொள்வதைப்  பார்க்க முடிகிறது. இஸ்ரேல் நாட்டிற்குள்ளேயே இருந்து கொண்டு அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்கிற பாதுகாப்பு பிரச்சனையை எப்போதும் இஸ்ரேல் எதிர்கொண்டு வருகிறது.

பாலஸ்தீன மக்களுக்கும் பாதுகாப்பு குறித்த விஷயங்களில் பிரச்சனைகள் இல்லாமல் இல்லை. அவர்களைப் பொறுத்தவரை அந்நிய ராணுவப் படைகள் தங்கள் நிலப்பரப்பிலிருந்து முழுமையாக வெளியேற வேண்டும் என்கின்றனர். இந்த நான்கு முக்கிய காரணங்களால் தான் இன்று வரை இரு தனி நாடு தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை என்கிறது நியூயார்க் டைம்ஸ்.

மூன்றாவது நபர்

பொதுவாகவே ஐநா சபை போன்ற சர்வதேச அமைப்புகள் தொடங்கி, இஸ்ரேல் போன்ற நாடுகள்  தனிப்பட்ட தீவிரவாத குழுவோடும் பேச்சு வார்த்தை நடத்த முடியாது. 

இஸ்ரேலின் காசா ஸ்ட்ரிப் பகுதியை ஹமாஸ் தீவிரவாத குழு தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக நாம் முன்பே கூறியிருந்தோம். ஒருவேளை இரு தனிநாடு தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் கூட, அப்பகுதியை என்ன செய்யலாம் அதைப் பாலஸ்தீனத்தோடு இணைக்கலாமா அல்லது இஸ்ரேலோடு இணைக்கலாமா அல்லது காசா ஸ்ட்ரிப்பை தனி நாடாக அறிவிக்க வேண்டுமா என்கிற பிரச்சனை எழுகிறது.

ஒரு தீவிரவாத குழுவை அங்கீகரித்து காசா ஸ்ட்ரிப்பை ஒரு தனி நாடாக அறிவிக்க முடியாது. எனவே மூன்றாவது நபர் மூன்றாவது நாடு என்கிற பேச்சுக்கே இங்கு இடம் இல்லை. 

இந்த இரு தனிநாடு தீர்மானம் குறித்து பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்றால் கூட இஸ்ரேல் தரப்பிலிருந்து இஸ்ரேல் அரசையும், வெஸ்ட் பேங்க் பகுதியை ஆட்சி செய்து வரும் பாலஸ்தீனியன் அத்தாரிட்டி என்கிற அமைப்பையும், காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் தீவிரவாத குழுவையும் பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டி இருக்கும்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?