இந்தோனேசியா உலகில் நான்காவது மிக அதிக மக்கள் தொகையைக் கொண்ட நாடாகும். உலகில் அதிக முஸ்லீம்களைக் கொண்ட நாடாகவும் இந்தோனேசியா திகழ்கிறது. இந்த அளவு பெரிய நாட்டின் தலை நகரை மாற்றுவது சாதாரண நிகழ்வு அல்ல. இதற்கான காரணங்களை உலக நாடுகள் அலசிப்பார்க்க வேண்டிய தேவை நிச்சயம் இருக்கிறது.
நுசாந்தரா
தென் கிழக்கு ஆசியாவில் இந்தியப் பெருங்கடல் மற்றும் பசிபிக் கடல்கள் இணையும் இடத்தில் இந்தோனேசியா அமைந்திருக்கிறது. இந்த நாடு பல தீவுகளால் ஆனது. மொத்தம் 17000 தீவுகள் இருக்கின்றன. இந்த எல்லா தீவுகளுக்கும் ஓரளவு நடுவில் இருக்கும் போர்னியா தீவில் தான் புதிய தலைநகர் அமையவிருக்கிறது. புதிய தலை நகருக்கு நுசாந்தரா எனப் பெயரிடப்பட்டுள்ளது. நுசாந்தரா என்றால் தீவுக்கூட்டம் என்று பொருள். தலைநகர் மாற்றும் மசோதா சமீபத்தில் தான் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இந்தோனேசியாவில் உள்ள 34 மாகாணங்களில் 27.5 கோடி மக்கள் வசிக்கின்றனர். இவர்களில் ஒரு கோடி மக்கள் தற்போதைய தலைநகரான ஜார்கட்டா-வில் வசிக்கின்றனர். வட ஜார்கட்டா பகுதி 2050 ஆண்டு மூழ்கிவிடும் என அறிஞர்கள் தெரிவித்துள்ளனர். இதுவே தலை நகரை மாற்றுவதற்கான முக்கிய காரணமாக இருக்கின்றது. மாறிவரும் காலநிலையால் உயரும் கடல் மட்டம் கடந்த 10 ஆண்டுகளில் 2.5 மீட்டர் அளவு ஜார்கட்டா நிலப்பரப்பை அழித்திருக்கிறது. அதாவது ஆண்டுக்கு 25செ.மீ கடல்மட்ட உயர்ந்திருக்கிறது. அதுமட்டுமின்றி சென்னையைப் போல மழை வரும் போதெல்லாம் வெள்ள பாதிப்புகள் ஏற்படுவதும் அங்கு அதிகரித்துள்ளது.
வட ஜார்கட்டா மக்கள் விரைவில் வேறு பகுதிகளுக்குக் குடியேறுவதற்கான தேவையும் ஏற்படும். காலநிலை மாற்றத்தில் உருவாகும் அகதிகளின் வாழ்வாதாரம் குறித்து எந்த நாடுகளும் சரியான திட்டமிடலைக் கொண்டிருக்கவில்லை. இந்தோனேசிய மக்களின் நிலையும் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.
Joko Widodo
புதிய தலைநகராக உருவாகும் நுசாந்தரா அதிக வனப்பகுதிகளை உள்ளடக்கிய பகுதி. இங்குத் தலைநகரை அமைக்க 32 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை பயன்படுத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. “தற்போதுள்ள எந்த பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியையும் நாங்கள் சீர்குலைக்க மாட்டோம், அதற்குப் பதிலாக அதை மறுசீரமைப்போம்” என அதிபர் ஜோகோ விடோடோ தெரிவித்துள்ளார்.
காலநிலை மாற்றத்தால் ஒரு நாட்டின் தலைநகரம் இன்னும் 30 ஆண்டுகளில் கடலில் மூழ்கிவிடும் என்ற தகவல், உலக நாடுகளுக்கு உள்ளார்ந்த அச்சத்தை ஏற்படுத்துவதை தவிர்க்க முடியாது. இனியும் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் அபாயங்களிலிருந்து தப்பித்துக்கொள்ள புதிய வழிகளைச் சிந்திக்காமல் தாமதப்படுத்துவது மனித குலத்தின் எதிர்காலத்துக்கு ஏற்புடையதாக இருக்காது.