1982ஆம் ஆண்டு அவரது புகழ்பெற்ற ‘திரில்லர்’ ஆல்பம் வெளியிடப்பட்டு விற்பனையில் உலகசாதனை படைத்தது. இதுவரை இல்லாத அளவில் தோல்கருவிகளின் தாளங்களும், கிதாரின் நரம்பு அறுபடும் வேகமும், மைக்கேலின் புதிய பாணிக்காக காத்திருந்த மனங்களை பாய்ந்து கவ்விக் கொண்டன. எல்லாவகை இசை வகைகளையும் தேவைக்கேற்ற விதத்தில் கலந்து கொடுத்த மைக்கேல் பாப்பிசையின் உண்மையான பொருளை இரசிப்பவர்களுக்கு உணரச்செய்தார். அவரது வீடியோ ஆல்பங்களில் அவர் பிரத்யேகமாக தயாரித்திருந்த நடன அசைவுகளும் இசையோடு போட்டி போட்டுக் கொண்டு இயங்கியதால் அவரது இசை மற்றவர்களை விட இதயங்களுக்கு நெருக்கமாக சென்றது. 60களின் இறுதியில் கலகங்களுக்காக முன்னணி வகித்த இளைய தலைமுறை இப்போது மைக்கேல் ஜாக்சனது பாப்பிசையின் மூலம் தமது இருப்பை தேட ஆரம்பித்தது.
87இல் BAD, 91இல் DANGEROUS, 95இல் HISTORY, 2001இல் INVINCIBLE முதலிய ஆல்பங்களில் கடைசியைத் தவிர்த்து மற்றவையும் அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றன. அவர் பிரபலமாகிய அதே காலத்தில்தான் மேற்கத்திய நாடுகளின் அறிவியல் தொழில் நுட்ப புரட்சியும் உச்சத்திற்கு வந்து கொண்டிருந்தது. மைக்கேலின் பாப்பிசை ஒரு உலகச்சந்தையை கைப்பற்றுவதற்கு இதுவும் முக்கிய காரணம். ஒரு ட்ராக் மோனா ஒலிப்பதிவைக் கொண்டிருந்த ரிக்கார்டு பிளேயர் தட்டுக்கள் காலாவாதியாகி பல ட்ராக் ஸ்டீரியா ஒலிப்பதிவில் கேசட்டுகள் வந்திறங்கின. இது இசையின் நுட்பத்தையும், பயன்பாட்டையும் பெரிய அளவுக்கு கொண்டு சென்றது. மைக்கேலின் காலத்தில்தான் ஹாலிவுட் படங்களுக்கிணையாக வீடியோ இசை ஆல்பங்களை பெரும் முதலீட்டில் தயாரிக்கும் வழக்கம் பிரபலமானது. இதிலும் அவரது ஆல்பங்கள் முன்மாதிரியாக இருந்தன என்பதும் மிகையில்லை. வீடியோ க்ராபிக்ஸ், அனிமேஷன், ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் என எல்லா நுட்பங்களையும் கையாண்டு ஜாக்சனது வீடியோ ஆல்பங்கள் தயாரிக்கப்பட்டன. வீடியோ கேசட்டுகளும், அதன் ப்ளேயரும் புதிய வீட்டுப் பொருட்களாக வீடுகளை சென்றடைந்தன.
Music Television
இதே காலத்தில் 24மணிநேர கேளிக்கை தொலைக்காட்சி சேனல்கள் மேற்கத்திய நாடுகளில் தோன்றி பெரிய உலகச்சந்தையை பிடித்து வந்தன. அதில் இசைக்கென வந்த எம்.டி.வி – மியூசிக் டவி, மைக்கேலின் பாப்பிசையோடு சேர்ந்து வளர்ந்தது. ஆரம்பத்தில் கருப்பினக் கலைஞர்களை புறக்கணித்த எம்.டி.வி., திரில்லர் ஆல்பத்தின் வெற்றிக்குப் பிறகு அதன் வீடியோவை ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க அரைமணி நேரத்திற்கொரு முறை ஒளிபரப்பு செய்தது. மைக்கேல் ஜாக்சன் மேற்கொண்ட உலக இசை நிகழ்ச்சி சுற்றுலாக்களெல்லாம் பிரம்மாண்டமான விளம்பரங்களுடன் இந்த சேனலில் வெற்றி பெற்றன. அவர் சென்ற எல்லா நாடுகளிலும் நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் காட்சி, ஒலி,ஒளி அமைப்புக்கள் அரங்கில் பார்வையாளருக்கு புதிய உணர்ச்சியை ஆச்சரியத்துடன் அளித்தன. மைக்கேலின் மேடை பொருட்கள் மட்டும் இரண்டு கார்கோ விமானங்களில் எடுத்து செல்லப்பட்டன என்பதிலிருந்து அதன் பிரம்மாண்டத்தைப் புரிந்து கொள்ளலாம். இருப்பினும் பெரும்பாலான கலைஞர்கள் மேடை நிகழ்வுகளில் வெற்றிபெறுவதில்லை என்பதோடு மைக்கேல் ஜாக்சன் அதில் அனாயசமாக வெற்றி பெற்றார் என்பதையும் இணைத்துப் பார்க்க வேண்டும்.
நுகர்வுக் கலாச்சாரத்தின் இசை
உணவில் சர்க்கரையோ, கொழுப்புச் சத்தோ அதிக அளவில் தீடீரென விழுங்கப்படும் போது குறிப்பிட்ட அளவில் உணர்ச்சிகள் சமநிலையிழக்கின்றன. டப்பா உணவு வகைகளில் இந்த மிகை சத்து காரணமாக அவற்றை கொறிக்கும் சிறுவர்கள் அளவு மீறிய கோபம், ஆத்திரம், பிடிவாதம், வெறுப்பு முதலியனவற்றுக்கு ஆளாவதாக ஒரு ஆய்வு கூறுகிறது. இந்த நிலை இசைக்கும் பொருந்தும் என்பதை வலியுறுத்தத் தேவையில்லை. மைக்கேல் ஜாக்சனின் இசை தொழில்நுட்பத்தின் இசை மட்டுமல்ல நுகர்வுக் கலாச்சாரத்திற்கான இசையும் கூட.
80-களின் காலம் மேற்கத்திய நாடுகளில் நுகர்வுக் கலாச்சாரம் கொடிகட்டிப் பறந்த காலமும் கூட. வீடுகளை மனித உணர்வுகள் நிரப்பும் காலம் போய் விதம் விதமான வீட்டுப்பொருட்கள் நிரப்பும் காலம் வந்தது. அவற்றை வாங்கும் வழி முறைகளும், பேரங்காடிகளும், இசை, டி.வி., சமையல் அத்தனையும் நவீன பொருட்களால் மாற்றம் பெற்றன. இவற்றை விளம்பரம் செய்த சேனல்கள், அந்த விளம்பரங்களை பெறுவதற்கான பிரபலமான நிகழ்ச்சிகள் இரண்டும் ஒன்றையொன்று தேடியறிந்து கருவைக் கட்டியமைத்தன. காதல், பாசம், அன்பு, நேசம் முதலான உணர்ச்சிகளெல்லாம் மனித உறவுகளைத் தீர்மானிப்பதற்குப் பதில் பொருட்களின் சேகரிப்பே அனைத்து வகை உறவுகளையும் கட்டியமைக்கும் வலிமையைப் பெற்றன.
Black or White
சினிமா, டி.வி, ஷாப்பிங், கேளிக்கைப் பூங்காக்கள் மட்டுமே மனிதனின் சமூக நடவடிக்கைகளுக்கான நிறுவனங்களாக மாற்றப்பட்டன. ஆரம்பத்தில் கடும் உழைப்பிற்காக அமெரிக்க தொழிலாளிகள் அணிந்து வந்த ஜீன்ஸ் பேண்ட் அறுபதுகளின் போராட்ட யுகத்தில் கலகம், கிளர்ச்சி செய்யும் இளைஞர்களது சீரூடையாக குறிக்கப்பட்டன. எண்பதுகளிலோ இந்த ஜீன்ஸ் காலுடை அரட்டை அடிப்பதையே கலகமாய் கருதும் தலைமுறையின் சீருடையாக அவதாரம் எடுத்தது. இவர்கள் தனிமனித இன்பம் துய்ப்பதற்கு இந்த சமூகம், உறவுகள், தந்தைகள் தடுப்பதாக ஆத்திரம் கொண்டு ‘கலகம்’ செய்யும் புதிய தலைமுறையினர். இன்றளவும் வலிமையுடன் நீடிக்கும் வாரிசுகளின் முன்னோடிகள். மைக்கேல் ஜாக்சனின் ‘பிளாக் ஆர் ஒயிட்’ பாடலில் இசை கேட்பதை தடுக்க நினைக்கும் தந்தையை அந்தச் சிறுவன் பல்லாயிரம் வாட்ஸ் ஒலிப்பான்களை வைத்து தூக்கி எறிவதாக ஒரு காட்சி வருமே அதுதான் இந்த இளைஞர்களை குறிக்கும் சரியான குறியீடு.
அந்தப் பாடலில் மேலோட்டாமான கருப்பு வெள்ளை நிறங்களின் ஒற்றுமை பற்றி மைக்கேல் பாடினாலும் அந்தப் பாடலின் வேகமான தாளமும், கிதாரின் கவரும் நரம்பு மீட்டலும்தான் அதாவது கிளர்ந்தெழும் இசை மட்டும்தான் ரசிகர்களின் இதயங்களுக்குள் நுழைகிறது. ட்ரேசி சாப்மெனின் பாடல்களில் ஜாக்சனது வித்தைகள் எதுவும் இல்லை என்றாலும் அவரது சமூக அக்கறை நமது மனங்களில் கேள்வியாய் இசையுடன் கலந்து முகிழ்விக்கிறது. மைக்கேல் ஜாக்சனின் ‘முற்போக்கு’ பாடல்களைக் கேட்டு சில வெள்ளை நிறவெறியர்கள் கூட திருந்தவில்லை என்றாலும் அவரது பாடல்களுக்கு நிறங்களைக் கடந்த ரசிகர்கள் இருந்தார்கள். அதாவது நுகர்வுக் கலாச்சாரத்திற்கு அத்தகைய பிரிவினைகள் எதுவும் தேவையில்லை என்பதும் சமூகத்தோடு முரண்படும் தனிமனினது இன்பத்துய்ப்பை மட்டும் அவனது ஒரே கிளர்ச்சி நடவடிக்கையாய் ஆக்குவதும்தான் அதனது இலக்கு என்பதால் இங்கே வேற்றுமைகள் கடந்த ஒற்றுமையில் குறிப்பாக நடுத்தர வர்க்கம் தனது அடையாளத்தை தேடுகிறது
Elizabeth Taylor
அவரது சிநேகிதியான எலிசபெத் டெய்லரால் பாப்பிசையின் அரசனென்று அழைக்கப்பட்டு நட்சத்திரமாக நிலைகொண்ட மைக்கேல் ஜாக்சனும் தனது அடையாளத்தை தேட… அல்ல, மாற்றத் துவங்கினார். ஜாக்சனது இசைக்கு பொருத்தமாக அப்போது பெப்சி வெளியிட்ட விளம்பரத்தில்தான் “பெப்சி…புதிய தலைமுறையின் தெரிவு” என்ற முத்திரை வாசகம் வெளியிடப்பட்டது. இந்த விளம்பரத்தில் தனது நடனத்துடன் நடித்த ஜாக்சன் அப்போது ஏற்பட்ட விபத்தினால் மூக்கில் அடிபட்டு சிகிச்சை பெறுகிறார். பிளாஸ்டிக் சர்ஜரிக்கும் அறிமுகமாகிறார்
இதன் பிறகு மைக்கேல் ஜாக்சனது நிறம், தோற்றம் அனைத்தும் அவரது புதிய இசை வெற்றிக்கு பொருத்தமாக மாற ஆரம்பித்தன. அதை அடுத்த பாகத்தில் காண்போம்.
முந்தைய பாகத்தை படிக்க