உலகெங்கும் உக்ரைன் நாட்டிற்கு இதுவரை 13.7 மில்லியன் டாலர் கிரிப்டோ கரன்சி நன்கொடைகள் வழங்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த நன்கொடை அடையாளமற்ற மக்களிடமிருந்து வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
உக்ரைன் அரசு மற்றும் அந்நாட்டின் தன்னார்வக் குழுக்கள் இணையத்தில் தங்களது பிட்காயின் வாலட் முகவரிகளை வெளியிட்டு நன்கொடை தருமாறு விளம்பரம் செய்திருந்தனர். அதைப் பார்த்து விட்டு இதுவரை 4,000 த்திற்கும் மேற்பட்ட நன்கொடைகள் வந்துள்ளன.
அடையாளமற்ற நன்கொடையாளர் ஒருவர் உக்ரைனின் தன்னார்வ என்ஜிவோ அமைப்பு ஒன்றிற்கு மூன்று மில்லியன் டாலர் மதிப்புள்ள பிட்காயினை நன்கொடையாக அளித்துள்ளார்.
People of Ukraine
கடந்த சனிக்கிழமை அன்று உக்ரைன் அரசு தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் ஒரு செய்தியை வெளியிட்டது. அதில் " உக்ரைன் மக்களை ஆதரியுங்கள். இப்போது கிரிப்டோ கரன்சி நன்கொடைகளை ஏற்றுக் கொள்கிறோம். பிட்காயின், ஈத்தரியம் மற்றும் யூஎஸ்டிஎட் ஆகிய கிரிப்டோ கரன்சிகளை ஏற்கிறோம்" என்று குறிப்பிட்டிருந்தது.
இந்த வேண்டுகோள் வெளியான எட்டுமணி நேரத்திற்குள் பிட்காயின், ஈதர் மற்றும் பிற கிரிப்டோ நாணயங்களில் சுமார் 5.4 மில்லியன் டாலர் கிரிப்டோ கரன்சி வசூலானது. இதற்கென உக்ரைன் அரசு இரண்டு கிரிப்டோ கரன்சி வாலட் முகவரிகளை வெளியிட்டிருந்தது.
உக்ரைனிய டிஜிட்டல் துறை அமைச்சகம் இந்த நன்கொடைகள் உக்ரைன் ஆயுதப் படைகளுக்கு உதவப் பயன்படும் என கூறியிருக்கிறது. ஆனால் எவ்வாறு செலவிடப்படும் என்பதை விரிவாகக் கூறவில்லை.
கிரிப்டோ கரன்சி வர்த்தகத்தை மதிப்பிட்டு ஆய்வு செய்யும் எலிப்டிக் நிறுவனத்தின் டாம் ராபின்சன் இது குறித்து விளக்கியுள்ளார். அதன்படி உக்ரைனிய இராணுவத்தை ஆதரிக்கும் குழுக்களுக்கு நன்கொடைகளை வழங்க வழமையாக பணம் செலுத்தும் நிறுவனங்கள் மறுத்துவிட்ட நிலையில் கிரிப்டோ கரன்சிகள் ஒரு சக்திவாய்ந்த மாற்றாக உருவெடுத்துள்ளன என்று கூறியிருக்கிறார்.
Come Back Alive – மீண்டும் உயிர்த்தெழுவோம் என்ற உக்ரைனிய என்ஜிவோ அமைப்பு கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் உக்ரைனிய இராணுவத்திற்காக நன்கொடையை திரட்டி வருகிறது. நன்கொடை திரட்டும் தளமான பேட்ரியானில் இந்த உக்ரைனிய தன்னார்வ அமைப்பிற்கு என்று ஒரு கணக்கு உள்ளது. ஆனால் பேட்ரியான் இப்படி இராணுவம் மற்றும் ஆயதங்கள் வாங்குவதற்கு தங்களது நிறுவனம் உடன்படாது, தங்களது நிறுவனத்தின் கொள்கைக்கு எதிரானது என அந்த என்ஜிவோ அமைப்பை தனது தளத்தில் தடை செய்தது.
Crypto Currencies
உக்ரைன் என்று அல்ல பிரச்னைக்குரிய முரண்பாடுகள் இருக்கும் உலகின் எல்லா இடங்களிலும் கிரிப்டோ கரன்சி மூலம் பணம் திரட்டுவது வளர்ந்து வருகிறது. அதே நேரம் உக்ரைனின் பிரச்சினையை பயன்படுத்தி நன்கொடை அளிப்பவர்களை மோசடி செய்யும் சிலர் பயன்படுத்திக் கொள்ளவும் செய்கின்றனர்.
இத்தகைய மோசடி ஒன்றை எலிப்டிக் நிறுவனம் கண்டுபிடித்திருக்கிறது. உண்மையான என்ஜிவோ ஒன்று வெளியிட்ட நன்கொடை வேண்டுகோளை நகலெடுத்து தனது பிட்காயின் முகவரிக்கு மாற்றி ஒருவர் சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார்.
போர் என்றதும் மக்கள் வாய்ப்புள்ள வழிகளின் நன்கொடை கொடுக்க இயலாத போது கிரிப்டோ கரன்சி மூலம் முயல்கின்றனர். ஆனால் கிரிப்டோ கரன்சி இன்னும் உலகின் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் செலவாணியாக பல நாடுகள் அங்கீகரிக்காததால் பல முறைகேடுகளும் நடக்கின்றன. நிறுவனங்களின் சர்வரை ஹேக் செய்யும் ஹேக்கர்கள் கூட தமது மிரட்டல் தொகையை கிரிப்டோ கரன்சிகளில்தான் வாங்கிக் கொள்கின்றனர்.
இந்த மோசடிகளையும் மீறி உக்ரைன் அரசிற்கு கிரிப்டோ கரன்சி நன்கொடைகள் குவிவது உலக மனிதநேயத்திற்கு ஒரு சான்று.