பர்மா - சியாம் மரண ரயில் பாதை

 

Twitter

உலகம்

பர்மா - சயாம் மரண ரயில் பாதை : கொத்து கொத்தாக இறந்த தமிழர்கள் - ஒரு ரத்த சரித்திரம்

புள்ளிவிவரப்படி இறந்து போன தொழிலாளிகளில் 60,000 தமிழர்களும், 30,000 பர்மியர்களும் இருந்தனர். உண்மையான இறப்பு எண்ணிக்கை அதிகமிருக்கும். அதுவும் ஜப்பானிய அரசுக்கு மட்டும் தெரியும்.

Govind

பர்மா இரயில்வே அல்லது பர்மா சயாம் இரயில்வே என்று அழைக்கப்படுகிறது இந்த ரயில்பாதை. ஆயிரக்கணக்கான தொழிலாளிகள் மற்றும் கைதியாக இருந்த போர் வீரர்களின் குருதி சிந்தி கட்டப்பட்டதால் இதை பர்மா சியான் மரண ரயில் பாதை என்றும் அழைக்கிறார்கள்.

இரண்டாம் உலகப்போரின் போது தாய்லாந்தில் இருக்கும் பாங்காக் மற்றும் பர்மாவில் இருக்கும் மௌல்மைன் ( இப்போது மாவ்லமைன் ) ஆகியவற்றை இணைத்து இந்த ரயில் பாதை கட்டப்பட்டது. அப்போது பர்மாவைக் கைப்பற்றிய ஜப்பான் இராணுவத்திற்கு உதவும் பொருட்டு குவே நொய் அல்லது கவாய் நதி பள்ளத்தாக்கில் கட்டப்பட்ட ரயில்பாதை இது. இக்கட்டுமானத்தின் போது 12,000த்திற்கும் மேற்பட்ட நேசநாட்டு போர் கைதிகள் மற்றும் 1,00,000த்திற்கும் மேற்பட்ட கட்டாய உழைப்புத் தொழிலாளிகள் இறந்தனர்.

Work

2 ஆம் உலகப்போரில் ஆரம்பகால ஜப்பானிய வெற்றிகள்

இரண்டாம் உலகப்போரின் போது கிழக்கே பசிபிக் கடல் பிராந்தியத்திலும் போர் நடந்தது. அச்சு நாடுகளின் கூட்டணியில் இருந்த ஜப்பான் மேற்கு பசிபிக் மற்றும் தென் கிழக்கு ஆசியா முழுவதுமுள்ள நேச நாட்டுத் தளங்களைத் தாக்கின. 1942 ஆம் ஆண்டில் சிங்கப்பூர், ஹாங்காங், பிலிப்பைன்ஸ், டச்சு கிழக்கிந்திய தீவுகளில் உள்ள நேச நாட்டுப் படைகள் ஜப்பானிடம் சரணடைந்தன.

சுமார் 1,40,000 நேச நாட்டுப் போர்க் கைதிகளை ஜப்பான் சிறைபிடித்தது. கூடுதலாக 40,000 குழந்தைகள் உள்ளிட்டு 1,30,000 பொதுமக்களும் ஜப்பானால் சிறைபிடிக்கப்பட்டனர். போர் வீரர்களை விட பொதுமக்கள் சற்று மேம்பட்ட முறையில் நடத்தப்ட்டாலும் ஜப்பானிய சிறைகளின் நிலமை மிக மோசமாக இருந்தது. ஜப்பானிய காவலில் இருந்த பொதுமக்களில் 11% பேரும், போர்வீரர்களின் 27% பேரும் இறந்தனர் அல்லது கொல்லப்பட்டனர். ஜெர்மன் முகாம்களில் இருந்த போர்க்கைதிகளில் இறப்பு விகிதம் சுமார் 4 சதவீதம் என்பதிலிருந்து ஜப்பானியர்களின் கொடூரத்தை அறிந்து கொள்ளலாம்.

ஜப்பானால் கைது செய்யப்பட்ட நேச நாட்டு போர்வீர்களில் 22,000ஆஸ்திரேலியர்கள், 50,000 பிரிட்டீஷ் துருப்புகள், 25,000 இந்திய வீரர்கள் இருந்தனர்.

இந்த படை வீரர்களின் பெரும்பகுதியினர் சிங்கப்பூர் ஜப்பான் வசம் வந்ததும் கைது செய்யப்பட்டனர். இது பிரிட்டீஷ் வரலாற்றில் மிக மோசமான தோல்வியாக பார்க்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட வீரர்கள் கட்டாய உழைப்பை செலுத்தும் வண்ணம் பசிபிக் மற்றும் தென்கிழக்கு ஆசியா முழுவதும் உள்ள பல இடங்களுக்கு அனுப்பப் பட்டனர். அதற்காக அவர்கள் "நரகக் கப்பல்கள்" என்று அழைக்கப்பட்ட கப்பல்களில் பயணம் செய்தனர். நெருக்கடியான, வாழ்வதற்குரிய வசதிகள் இல்லாத இந்த கொடிய பயணத்தில் ஐந்து கைதிகளில் ஒருவர் இறந்து போனார்.

Cemetry

கைதிகளில் ஏராளமான பிரிட்டீஷ், ஆஸ்திரேலிய மற்றும் இந்தியர்கள் பர்மாவிற்கு (மியான்மர்) அனுப்பப்பட்டனர். இரண்டு காரணங்களுக்காக ஜப்பானியர்களுக்கு பர்மா ஒரு முக்கிய தளமாக இருந்தது. பர்மிய நகரமான லாஷியோ, பர்மா சாலையின் தெற்கு முனையாக இருந்தது. இது சீன – ஜப்பானிய போரின் போது சீனர்கள் பயன்படுத்திய சரக்கு போக்குவரத்து சாலையாகும். சீனாவின் சியாங் கை ஷேக்கின் படைகள் இந்த சாலையை இழந்தால் சீனாவைக் கைப்பற்றுவது எளிது என ஜப்பானியர்கள் கருதினர். இது முதலாவது காரணம்.

இரண்டாவது பர்மாவை ஆக்கிரமித்தால் ஜப்பானிய படைகள் பிரிட்டீஷ் இந்தியாவின் வாயிலைத் தொட்டு விடும். ஜப்பானோடு கூட்டு வைத்திருந்த இந்தியத் தலைவரான சுபாஷ் சந்திர போஸின் கீழ் இருந்த படைகள் பிரிட்டீஷ் படைகளை எதிர்த்துப் போராடுவதற்கு அஸ்ஸாம் ஒரு முக்கிய தளப்பகுதியாக இருக்குமென நம்பினர். இந்த இரண்டு நோக்கங்களுக்காகத்தான் ஜப்பானியர்கள் பர்மா சியாம் ரயில்பாதை கட்டுமானத்தை ஆரம்பித்தார்கள்.

பர்மா சியாம் ரயில்பாதை

பர்மா சயாம் ரயில்பாதை கட்டுமானம்

1942 மே, ஜூன் மாதங்களில் பவளக் கடல் போர் மற்றும் மிட்வே போர் ஆகியவற்றில் ஜப்பானிய படைகள் தோற்கடிக்கப்பட்டார்கள். இதனால் ஜப்பானிய தீவுகளுக்கும் பர்மாவிற்குமான கடல் வழி பாதுக்காப்பாக இல்லை. பர்மாவைக் கைப்பற்றிய ஜப்பான் படைகளுக்கு ஆதரவளிக்க தரைவழிப்பாதை தேவைப்பட்டது. அதனால்தான் ஜப்பான் இந்த ரயில்பாதை கட்டுமானத்தை துவங்கியது.

தோராயமாக ஆசிய நாடுகளைச் சேர்ந்த 2,00,000 தொழிலாளிகளை கட்டாயமாகவும், 60,000 த்திற்கும் அதிகமான நேசநாட்டுப் படைகளைச் சேர்ந்த துருப்புகளும் இந்த ரயில்பாதை கட்டுமானத்தில் வலுவந்தமாக இறக்கிவிடப்பட்டனர். இப்பணியினை மேற்பார்வையிட 12,000 ஜப்பானிய துருப்புகள் இருந்தன.

கட்டுமானத்திற்கு இலட்சக்கணக்கில் தொழிலாளிகள் தேவைப்படுவர் என்பதை ஜப்பானியர்கள் உணர்ந்தனர். அதன் பொருட்டு மலேசிய ரப்பர் தோட்டங்களில் பணிபுரிந்து வந்த இந்தியத் தமிழர்கள் மற்றும் பர்மிய தொழிலாளர்களுக்கு அதிக கூலி கொடுப்பதாக ஆசை காட்டி அழைத்து வந்தனர்.

ஜூன் 1942 முதல் அக்டோபர் 1943 வரை போர்க்கைதிகளும், கட்டாய உழைப்பில் ஈடுபடுத்தப்பட்ட தொழிலாளிகளும் இணைந்து 415 கி.மீ தூரமுடைய ரயில் பாதையை உருவாக்கினர். இது தாய்லாந்தின் பாங்காக் நகருக்கு மேற்கே இருக்கும் பான் பாங் இடத்திலிருந்து, பர்மாவில் இருக்கும் தன்பியுசயத் வரை இணைத்தது. இந்த காலகட்டத்தில் நோய், உணவின்மை மற்றும் ஜப்பானியர்களால் வழங்கப்பட்ட சித்திரவதை மற்றும் தண்டனைகளால் கட்டுமானத்தில் ஈடுபட்ட கைதிகளும், தொழிலாளிகளும் கடும் துன்பத்தை அனுபவித்தனர்.

“நரகத்தீ தாண்டல்" பகுதியில் வெட்டும் வேலை மெதுவாக நடந்தது என விரைவுபடுத்துமாறு ஜப்பானிய காவலர்கள் உத்திரவிட்டனர். இப்பகுதியில் மட்டும் 700 கைதிகள் இறந்தனர் அல்லது கொல்லப்பட்டனர்.

தாய்லாந்தின் காஞ்சனபுரிக்கு வடமேற்கே சுமார் 72 கிமீ தொலைவில் உள்ள கொன்யுவில் ரயில்பாதை அமைக்கும் பொருட்டு நீளமான ஆழமான தடத்தை வெட்ட வேண்டியிருந்தது. கொன்யுவின் முதல் பகுதியில் 450 மீட்டர் நீளமும், 7 மீட்டர் ஆழமும் கொண்ட தடம் வெட்டப்பட்டது. இரண்டாவது பகுதி 75 மீட்டர் நீளமும், 25 மீட்டம் ஆழமும் கொண்டது. இத்தகைய கடினமான கொடூரமான பணியாக இருந்ததால் இப்பகுதி "நரகத்தீ தாண்டல்" Hellfire Pass என்று அழைக்கப்பட்டது.

ரயில்பாதை அமைக்கும் பணி முழுவதும் பொருத்தமற்ற கைக் கருவிகளால் மட்டுமே நடந்தது. குறித்த காலத்திற்குள் ரயில் பாதை பணி ஒரு இடத்தில் முடியவில்லை என்றால் அங்கே வேலையின் அளவு அதிகரிக்கப்பட்டது. கைதிகள் நாள் முழுவதும் பணிபுரியுமாறு நிர்ப்பந்திக்கப் பட்டனர். ஒரு ஷிப்டின் நேரம் 18 மணி அளவில் இருந்தது.

“நரகத்தீ தாண்டல்" பகுதியில் வெட்டும் வேலை மெதுவாக நடந்தது என விரைவுபடுத்துமாறு ஜப்பானிய காவலர்கள் உத்திரவிட்டனர். எப்போது பணி திருப்திகரமாக நடக்கவில்லை என்று ஜப்பானியர்கள் கருதினார்களோ அப்போது கைதிகளுக்கு கடும் உடல்ரீதியான தண்டனைகள் கிடைத்தது. இப்பகுதியில் மட்டும் 700 கைதிகள் இறந்தனர் அல்லது கொல்லப்பட்டனர்.

ஜப்பானியர்கள் ரயில் பாதையை விரைவாக முடிக்க விரும்பினர். உத்தேச வழித்தடத்தின் முழுப்பாதையையும் பல பிரிவுகளாக பிரித்து அவைகளுக்கு கைதிகள் மற்றும் தொழிலாளிகள் ஒதுக்கப்பட்டனர். கட்டுமான வேலை மிகவும் கடினமாக இருந்தது. கொசுக்கள் மற்றும் பூச்சிகள் நிறைந்த காடு, பருவமழை நிலைமைகள், சமமற்ற நிலப்பரப்பு வழியாக செல்லும் ரயில் பாதை, ஆறுகள் மற்றும் பள்ளத்தாக்குகள், வெட்டப்பட வேண்டிய மலைகள், பாலங்கள் என வேலை கற்பனைக்கெட்டாத வகையில் துன்பமாக இருந்தது.

தொழிலாளர்கள்

குவாய் ஆற்றின் குறுக்கே தொழிலாளர்கள் பல இடங்களில் மரப்பாலங்களை கட்டினார்கள். ஆனால ஆற்றின் வெள்ளப்பெருக்கால் அப்பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டன. திரும்பவும் பாலம் அமைக்க தொழிலாளர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டனர். தொழிலாளிகளுக்கு மூன்று வேளை கொஞ்சம் அரிசிக் கஞ்சியும் கருவாடும் உணவாக கொடுக்கப்பட்டது.

கடும் உழைப்பின் காரணமாக எலும்புக்கூடாக காட்சியளித்த போர்க்கைதிகள் நோயால் இறந்து போனால் ரயில்பாதை அருகேயே புதைக்கப்பட்டனர். அதில் ஒரு சிலுவை அமைத்து இறந்தவரின் பெயரை தொங்க விட்டனர். இப்படி ரயில் பாதை முழுவதும் இறந்து போனவர்களின் சமாதி இருந்தது. மலேசியாவில் இருந்து வந்த தமிழர்கள், பர்மியர்கள், ஜாவாவியர்கள் போன்ற ஆசியத் தொழிலாளிகள் சுமார் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டோர் இப்பாதை அமைக்கும் போது இறந்து போயிருக்கின்றனர். புள்ளிவிவரப்படி இறந்து போன தொழிலாளிகளில் 60,000 தமிழர்களும், 30,000 பர்மியர்களும் இருந்தனர். உண்மையான இறப்பு எண்ணிக்கை அதிகமிருக்கும். அதுவும் ஜப்பானிய அரசுக்கு மட்டும் தெரியும்.

இப்படி ரத்தம் சிந்தி மரணத்தால் கட்டப்பட்ட பாதைதான் பர்மா - சயாம் மரண ரயில் பாதை!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?