என்.ஆர். நாராயண மூர்த்தியால் நிறுவப்பட்ட இன்போசிஸ் நிறுவனத்திற்கு மாஸ்கோவில் கிளை உள்ளது. நாராயண மூர்த்தியின் மகளது பெயர் அக்ஷதா. பில்லியனரான அக்ஷதாவின் கணவர் இங்கிலாந்தின் கரூவூலத் தலைவரான ரிஷி சுனக் ஆவார். அக்ஷதாவின்கு இன்போசிஸ் நிறுவனத்தில் பங்குகள் உள்ளன.
இங்கிலாந்தின் பாராளுமன்றத்தில் இரு அவைகள் உள்ளன. ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் என்பது கீழவை. இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இடம்பெறுவார்கள். இந்த அவைதான் சட்டமியற்றலையும், அரசு பரிபாலனத்திற்குப் பொறுப்பையும் ஏற்றிருக்கிறது. ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸ் என்பது மேலையாகச் செயல்பட்டு வருகிறது.
கடந்த செவ்வாய்க் கிழமை அன்று கீழவையில் தொழிலாளர் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கிரிஸ் ப்ரயண்ட் ஒரு கேள்வி எழுப்பினார். அதில் ரஷ்யாவில் முதலீடு செய்திருக்கும் இன்போசிஸ் போன்ற நிறுவனங்கள் மீது பிரிட்டன் ஏன் இன்னும் அழுத்தம் கொடுக்கவில்லை என்று கேட்டிருந்தார். ஏற்கனவே ரஷ்யா மீது அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் கடும் பொருளாதாரத் தடைகளை விதித்திருக்கின்றன.
Rishi with Boris Jhonson
இன்போசிஸ் தொடர்பான குடும்ப உறுப்பினர்கள் ரஷ்யாவினால் ஆதாயம் அடையும் போது அவர்களுக்கும் பொருளாதாரத் தடைகள் விதிக்க வேண்டும் என்பது அவரது எண்ணம்.
இது குறித்து ஸ்கை நியூஸ் எனப்படும் தொலைக்காட்சியின் நெறியாளர் ஜேன் செக்கர், இன்போசிஸ் நிறுவனரது மகளின் கணவரான ரிஷி சுனக்கிடம் கேள்வி எழுப்புகிறார். அதில் ரிஷியின் குடும்பத்தினருக்கு ரஷ்யாவில் தொடர்பு உள்ளது எனவும், அவரது மனைவிக்கு இன்போசிஸ் நிறுவனத்தில் பங்குகள் உள்ளதாகவும் கூறுகிறார். மேலும் இன்போசிஸ் நிறுவனத்திற்கு மாஸ்கோவில் அலுவலகம் உள்ளதோடு அங்கிருக்கும் ஆல்ஃபா வங்கியோடு தொடர்பு உள்ளதாகவும் கேட்கிறார். பாராளுமன்ற உறுப்பினரான ரிஷி ஊருக்கெல்லாம் ரஷ்யா மீதான பொருளாதாரத் தடை பற்றி உபதேசிக்கும் போது தனது சொந்த வீட்டில் அதைக் கடைப்பிடிக்க வேண்டாமா என்று கேட்கிறார்.
இதற்கு ரிஷி தான் ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதி என்றும், தான்தான் எதற்கும் பொறுப்பேற்க வேண்டுமே அன்றி தன் மனைவி அல்ல என்று பதிலளிக்கிறார். நெறியாளர் ஜேன் விடாமல் கேட்கிறார். பிரிட்டன் ஒரு தேசமாகத் தனது வரிப்பணத்திலிருந்து உக்ரைனுக்கு ஆதரவு அளிக்கும் போது, பிரிட்டன் மக்கள் தமது வீடுகளை உக்ரைன் அகதிகளுக்குக் கொடுக்க வேண்டும் என்று கேட்கும் போது, உங்கள் குடும்பம் மட்டும் ரஷ்ய அதிபர் புடினது ஆட்சி மூலம் ஆதாயமடைவது சரியா என்று ரிஷியை மடக்குகிறார்.
புடினுடன் Infosys நாரயணசாமி
பிரச்சினை இதுவல்ல என்று பதிலளிக்கும் ரிஷி, நிறுவனங்களது செயல்பாடுகள் அந்தந்த நிறுவனங்களைப் பொறுத்தது, நாம் விதித்திருக்கும் பொருளாதாரத் தடைகளை நிறுவனங்களும் பின்பற்றுகின்றன. இதன் மூலம் ரஷ்ய அதிபர் புடினுக்கு கடுமையான எச்சரிக்கை விடப்பட்டிருக்கின்றது. ரிஷியின் இந்த பதிலோடு திருப்தியடையாத நெறியாளர் விடாமல், எனில் இன்போசிஸ் நிறுவனம் அந்தத் தடைகளைப் பின்பற்றுகிறதா என்று கேட்கிறார்.
தனக்கு ஒன்றும் தெரியாது, இன்போசிஸ் நிறுவனத்தோடு தனக்கு எந்த உறவுமில்லை என்கிறார் ரிஷி.
இந்தப் பிரச்சினை குறித்து இன்போசிஸ் நிறுவனம் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில் தமது நிறுவனத்தின் சார்பில் ஒரு சிறு பணியாளர் குழு ரஷ்யாவில் இருக்கிறது என்றும் அங்கிருந்து கொண்டு உள்ளூர் அளவில் உலகளாவிய வாடிக்கையாளர்களுக்குச் சேவை செய்கிறோம் என்று கூறுகிறது. மேலும் ரஷ்யாவில் உள்ள நிறுவனங்களோடு தீவிரமான வணிக உறவு இல்லை என்றும் ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கிடையில் அமைதி நிலவ வேண்டும் என்பதே தமது விருப்பம் என்றும் கூறுகிறது. மேலும் உக்ரைனில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 1 மில்லியன் டாலரை நிவாரணப் பணிகளுக்கு ஒதுக்கியிருப்பதாகவும் கூறுகிறது.
ரிஷிசுனக்
பிரிட்டன் அரசு, ரஷ்யாவைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்குப் பொருளாதாரத் தடைகளை விதித்திருக்கிறது. பிரிட்டன் நிறுவனங்களான பிரிட்டிஷ் பெட்ரோலியம், ஷெல், எம் அண்ட் ஜி, அவைவா போன்றவை ரஷ்யாவோடு தமது வர்த்தகத்தை நிறுத்துவதாகவோ இல்லை குறைப்பதாகவோ கூறியிருக்கின்றன.
இன்போசிஸ் நாராயண மூர்த்தி மகளை மணந்திருக்கும் ரிஷி சுனக்கும், மார்ச் 13 அன்று பிரிட்டன் நிறுவனங்கள் ரஷ்யாவில் முதலீடு செய்வதை நிறுத்துமாறும், ரஷ்யாவில் இருக்கும் சொத்துக்களை விலக்கிக் கொள்ளவும் அழைப்பு விடுத்தார்.
ஆனால் இந்த அழைப்பு இன்போசிஸ் நிறுவனத்திற்கும் மட்டும் செல்லுபடியாகாது போலும். மேலும் இன்போசிஸ் நிறுவனம் பிரிட்டனின் தடைகளை ஏற்காமல், மாஸ்கோவில் தனது பணிகளை தொடர்கின்றது. ஆக்கிரமிப்பு செய்த நாடான ரஷ்யாவைக் கண்டிக்காமல், ரஷ்யா - உக்ரைனில் அமைதி நிலவ வேண்டுமென்று பொதுவான நிலை எடுத்திருக்கிறது. ஏனெனில் ரஷ்யா மூலம் வரும் பொருளாதார ஆதாயத்தை இழக்க இன்போசிஸ் தயாராக இல்லை. அதே போன்று பிரிட்டன் மக்களுக்கு உபதேசம் செய்யும் ரிஷி சுனக்கும் தனது பில்லியனர் மற்றும் இன்போசிஸ் மனைவியின் ஆதாயத்தை இழக்கத் தயாரில்லை.