நெருக்கமாகும் சவுதி அரேபிய - சீன நட்பு,

 

China.gov

உலகம்

உக்ரைன் போர்: நெருக்கமாகும் சவுதி அரேபிய - சீன நட்பு, தனித்துவிடப்படும் அமெரிக்கா

Govind

மத்திய கிழக்கில் அமெரிக்காவின் முக்கியக் கூட்டாளியாக இருக்கும் சவுதி அரேபியா, அமெரிக்காவுடன் பல பிரச்சினைகளில் கடுமையாக முரண்படும் சீனாவுடன் நட்பை அதிகரிக்கிறது. இதனால் அமெரிக்கவிற்கு என்ன பாதிப்பு ஏற்படும்?

சீனாவின் தலைவர் ஜி ஜின்பிங் வரும் மே மாதத்தில் சவுதி அரேபியாவின் அழைப்பை ஏற்று அந்நாட்டிற்கு செல்கிறார். மேலும் உலகின் மிகப்பெரும் எண்ணைய் உற்பத்தியாளரான சவுதி அரேபியா தனது எண்ணையை அமெரிக்க டாலருக்கு பதில் சீனாவின் சொந்த செலவாணியான யுவானில் இறக்குமதி செய்து கொள்ளலாம் என்றும் கூறியிருக்கிறது.

சவுதி அரேபியா தனது கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் கால் பங்கை சீனாவிற்கு ஏற்றுமதி செய்கிறது. இவ்வருடத்தின் முதல் இரண்டு மாதங்களில் சீனாவிற்கு அதிக எண்ணெய் ஏற்றுமதி செய்து வந்த ரஷ்யாவை அது முந்தி விட்டது.

உக்ரைன் மீதான ரஷ்ய ஆக்கிரமிப்பு காரணமாக உலகின் புவிசார் அரசியல் பதட்டங்கள் அதிகரித்திருக்கிறது. உலக நாடுகள் யார் எந்தப் பக்கம் என்பது கவனமாக பார்க்கப்படும் நேரத்தில் சவுதி அரேபியாவின் இந்த சீன நெருக்கம் இறுதியில் ரசியாவை ஆதரிப்பதில் முடியுமா என்ற கேள்வி எழுகிறது.

சீனா தனது யுவான் செலவாணியில் எண்ணெய் பணத்தை செலுத்தலாம் என அனுமதித்தால் டாலரைப் போல யுவானும் உலகின் முக்கியமான செலவாணியாக மாறலாம். இதன் மூலம் ரசியா தன்மீது விதிக்கப்பட்டிருக்கும் மேற்குலகின் பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்ள முடியும். ஏனெனில் இப்போரில் சீனா நடுநிலை வகிப்பதாக கூறி ரஷ்யாவை அமைதியாக ஆதரிக்கிறது.

சவுதியின் இந்த அறிவிப்பு அதன் கூட்டாளிகளான மேற்கத்திய நாடுகளின் மீது அழுத்தத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐரோப்பிய நாடுகளின் வெளியுறவுக் கவுன்சில் 2019 இல் எழுதிய படி மத்திய கிழக்கில் சீனா தனது செல்வாக்கை அதிகரிக்கும் என்பதை இது உண்மையென காட்டுகிறது.

சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோக்கி, துருக்கியில் சவுதி உளவுத்துறையால் கொடூரமாக கொல்லப்பட்ட போது சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் திடீரென ஆசிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் செய்தார். இதன் மூலம் மேற்கத்திய நாடுகளில் சவுதிக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஆயுதங்கள் தடை செய்ய வேண்டுமென்ற விவாதங்களை திசை திருப்பினார்.

Saudi Arabia

சவுதி அரேபியா மீதான அரசியல் அழுத்தங்களின் பின்னணி

அமெரிக்கா, ஐரோப்பா இரண்டும் சவுதியின் ஆதரவை நாடுகின்றன. பிரிட்டனின் பிரதமர் போரிஸ் ஜான்சனைப் போல அமெரிக்காவின் பாதுகாப்பு ஆலோசகர் பிரெட் மெக்குர்க்கும் கடந்த வாரம் வளைகுடாவிற்கு பயணம் செய்தார்.

இருப்பினும் இன்று வரை எண்ணைய் விலையை குறைப்பதற்காக அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் சவுதியின் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கும் முயற்சியில் தோல்வியைத்தான் அடைந்துள்ளன. ஐக்கிய அரபு அமீரகத்தோடு சவுதி அரேபியா மட்டும்தான், நினைத்தால் அதிக எண்ணெய் உற்பத்தியை செய்ய முடியும். மற்ற எண்ணெய் உற்பத்தி நாடுகள் அப்படி செய்யும் நிலையில்இல்லை. உக்ரைன் போரினால் ரசியாவின் எண்ணெய் ஏற்றுமதி சிக்கலாகியிருக்கும் நேரத்தில் உலக சந்தையில் அதிக எண்ணெய் வரத்து இருந்தால் விலை குறையும். ஆனால் இதற்கு சவுதி அரேபியா இடம் கொடுக்க மறுத்து வருகிறது.

மேலும் வளைகுடா நாடுகள் முன்பு போல அமெரிக்கா தம்மை மிரட்ட முடியாது என்றும் நம்புகின்றன. வளைகுடாவின் ஷேக் ஆட்சியார்கள் இப்படி அமெரிக்க, ஐரோப்பாவுடன் இணைந்து ரஷ்யாவிற்கு எதிராக நிற்க மறுப்பது என்பது ரஷ்யா பற்றிய பிரச்சினை அல்ல. வளைகுடா நாடுகள் தமது தேசிய நலன்களை முன்வைத்து சர்வதேச பிரச்சினைகளை பார்க்கின்றன என்கிறார் ஒரு அரசியல் ஆய்வாளர்.

இதில் சீனாவின் பங்கு என்ன?

இப்படி மேற்குலகோடு வளைகுடா நாடுகள் முரண்படும் இடத்தில் சீனா உள்ளே நுழைகிறது. ஏற்கனவே சவுதி அரேபிய சீன உறவு பல ஆண்டுகளாக வலுத்து வருகிறது. 2020 ஆம் ஆண்டில் சவுதி அரேபியா சீனாவின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாக இருந்தது. அப்போது சீனாவுடனான அதன் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியின் மதிப்பு 67 பில்லியன் டாலராகும்.

பெரும்பாலும் சீன சவுதி உறவு என்பது இருதரப்பிற்கும் நன்மை பயக்கும் பொருளாதார உறவை அடிப்படையாகக் கொண்டது. இது சீனாவின் சாலை மற்றும் கடல் மார்க்கத்தில் போடப்படும் ஒரு டிரில்லியன் டாலர் பட்டுவழிச் சாலை திட்டத்திற்கு பலனளிக்கும். மேலும் சவுதி அரேபியாவின் சொந்த திட்டமான 2030 இல் நவீனமயமாகும் திட்டத்திற்கும் (விஷன் 2030) பலனளிக்கும்.

ஐரோப்பிய நாடுகள் சூரிய மின்சாரம் மற்றும் காற்றாலை பக்கம் கவனத்தை திருப்பும் போது சீனா அதிக எண்ணையை சவுதி அரேபியாவிடம் வாங்குகிறது. இதனால் சவுதிக்கு சீனாவுடனான உறவு முக்கியமாகிறது.

விஷன் 2030 திட்டத்தின் ஒரு நோக்கம் என்னவென்றால் எண்ணெய் வளம் காலியாவதற்குள் சவுதி மாற்று பொருளாதார ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்பது. இந்நிலையில் சீனாவின் பட்டு வழிச்சாலை திட்டத்தில் சவுதி அரேபியா மிகப்பெரும் போக்குவரத்து மையமாக மாறும் வாய்ப்பு இருக்கிறது. இந்த வகையில் இருநாடுகளின் உறவில் ஒரு நீண்ட கால நோக்கமும் இருக்கிறது.

சில ஆய்வாளர்கள் கூற்றுப்படி சீன – மத்திய கிழக்கு உறவில் ஒரு புதிய அத்தியாயம் துவங்கியிருக்கிறது. கடந்த ஜனவரியில் வளைகுடா நாடுகளில் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பலர் சீனாவிற்கு சுற்றுப்பயணம் செய்தது அதற்கோர் சான்று. வர்த்தகம், தொழிற்துறை அமைச்சர்களை தவிர்த்து விட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சீனா செல்லக் காரணம் என்ன? இது அரசியல் சார்ந்தது என்பதோடு புவிசார் அரசியல் நிலைமையின் மாற்றத்தையும் குறிக்கிறது.

மேலும் சீனாவிடமிருந்து சவுதி அரேபியா இராணுவ ஆயுதங்களையும் இறக்குமதி செய்கிறது. 2016 மற்றும் 2020 க்கு இடையில் இந்த இறக்குமதி 386% அதிகரித்திருக்கிறது. இதில் பாலிஸ்டிக் ஏவகணைகளை ஏற்றுமதி செய்த சீனா பின்பு அதை சவுதியே தயாரிப்பதற்கும் உதவி செய்து வருகிறது. மேலும் சீனாவில் நடக்கும் ஒரு கட்சி ஆட்சிமுறையும் மத்திய கிழக்கின் ஷேக்குகளை கவர்ந்திருக்கிறது. அடிப்படையில் சீனா, மத்திய கிழக்கு இரண்டும் சர்வாதிகார ஆட்சி முறைகளை பின்பற்றுகின்றன. சீனாவுடனான நெருக்கம் மேற்கத்திய நாடுகள் கோரும் ஜனநாயக மாற்றம் மற்றும் மனித உரிமை தொடர்பான பிரச்சினைகளிலிருந்து பொறுப்பை துறப்பதற்கு மத்திய கிழக்கு நாடுகளுக்கு உதவி செய்கிறது.

சவுதி சீன நெருக்கம் அமெரிக்க டாலரின் முக்கியத்துவத்தை குறைக்குமா?

சீனா யுவானில் செலுத்தலாம் என்று 4 ஆண்டுகளுக்கு முன்னரே சவுதி அரேபியா கூறியிருக்கிறது. ஒருவேளை அது அப்படி நடந்தாலும் அது உலகளாவிய அன்னியச் செலவாணி சந்தையில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். எண்ணெய் வர்த்தகத்தின் விலை டாலரில் மதிப்பிடப்படும் போது அதை மாற்றுவது என்பது நிறைய நடைமுறை சிக்கல் சார்ந்த ஒன்று.

மேலும் சீனா இறக்குமதி செய்யும் ஒரு நாளின் கச்சா எண்ணெய் மதிப்பு என்பது 320 மில்லியன் டாலர் மட்டும்தான். ஆனால் உலக அளவில் ஒரு நாளில் நடக்கும் அனைத்து வர்த்தகத்தின் மதிப்பு 6.6 ட்ரில்லியன் டாலராகும்.

ஆனாலும் நீண்ட கால நோக்கில் சீனாவின் யுவான் டாலருக்கு மாற்றான செலவாணியாக உருவெடுக்குமா என்ற அச்சம் நிலவுகிறது. இந்தியா கூட சமீபத்தில் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு யுவானை பயன்படுத்தினால் சர்வதேச தடைகளை தவிர்க்கலாம் என்று யோசித்து வருகிறது. அப்படிப் பார்த்தால் ரஷ்யாவும் இந்த தடைகளை சீனாவின் ஆதரவோடு யுவானைப் பயன்படுத்தி எதிர்கொள்ளலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஆக இனி உலகில் அமெரிக்க ஐரோப்பிய நாடுகளது செல்வாக்கின் எதிர்காலம் இப்படியே தொடராது என்பதை சீன சவுதி உறவு நெருக்கம் நமக்கு காட்டுகிறது.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?