ஒருபுறம் பொருளாதார நெருக்கடி, மறுபுறம் அரசியல் நெருக்கடி. இலங்கையில் என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்போம்.
1. நேற்று நள்ளிரவு முதல் இலங்கையில் அமலில் இருந்த அவசர நிலை, திரும்பப் பெறப்படுவதாக அதிபர் கோத்தபயா ராஜபக்ஷே அறிவித்தார்.
2. இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஐநா, மனித உரிமைகள் ஆணையம் அவசர நிலை பிரகடனம் குறித்து அதிருப்தி தெரிவித்திருந்த நிலையில் விலக்கிக் கொள்ளப்பட்டது.
3. அதிபர் கோத்தபயா ராஜபக்ஷே பதவி விலக மாட்டார் என நாடாளுமன்ற கொறடா ஜான்ஸ்டன் ஃபெர்னாண்டோ தெரிவித்திருக்கிறார்.
4. அதிபர் கோத்தபயா ராஜபக்ஷே, பிரதமர் மஹிந்தா ராஜபக்ஷேவுக்கு எதிராக 7-வது நாளாக மக்கள் போராட்டம் தொடர்கிறது.
5. இந்தியாவிடமிருந்து $500 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான டீசல், இலங்கைக்கு வழங்கப்பட்ட போதும், இன்னும் அங்கு பற்றாக்குறை நிலவுகிறது. மக்கள் டீசல் வாங்க நீண்ட வரிசைகளில் காத்திருக்கின்றனர்.
6. மருந்து மாத்திரைகள் கையிருப்பு குறைந்து வருவதால், அடுத்த சில வாரங்களில் மருத்துவத்துறை சிக்கலைச் சந்திக்க நேரிடும் என அரசு மருத்துவ அதிகாரிகள் கூட்டமைப்பு தெரிவித்திருக்கிறது.
7. இலங்கைக்கு $2 மில்லியன் மதிப்பிலான மருந்து பொருட்களை தந்து உதவ இருப்பதாக உலக சுகாதார மையம் தெரிவித்திருக்கிறது
8. இலங்கை பங்குச் சந்தை தனது வர்த்தக நேரத்தை 2 மணி நேரமாக குறைத்துக் கொண்டது. மின்சார விநியோகம் சீரடையாததால், வர்த்தக நேரத்தைக் குறைத்திருக்கிறது.
9. கொரோனா பெருந்தொற்றே இலங்கையின் இந்த நெருக்கடி நிலைக்கு காரணம் என அதிபர் கோத்தபயா ராஜபக்ஷே தெரிவித்திருக்கிறார்.
10. இலங்கையின் புதிய நிதியமைச்சராக பதவியேற்ற அலி சப்ரி, 24 மணி நேரத்தில் பதவி விலகினார். இக்காட்டான பொருளாதார சூழலில் இருக்கும் இலங்கைக்கு புதிய நிதியமைச்சர் இன்னும் நியமிக்கப்படவில்லை!