மார்ச் 15 முதல் கொழும்பில் அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன. இலங்கை அதிபர் ராஜினாமா செய்ய வேண்டுமென அவரது அலுவலகத்திற்கு எதிரே எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றன.
2019 ஈஸ்டர் ஞாயிறு பண்டிகை அன்று தேவாலயங்கள் மற்றும் சொகுசு விடுதகளில் குண்டு வெடித்து 270 பேர் கொல்லப்பட்டனர். அதன் பிறகு இரண்டு ஆண்டு கோவிட் 19 பொது முடக்கம். இவற்றினால் இலங்கையின் முக்கிய வருமானம் ஈட்டும் சுற்றுலாத் துறை முடங்கி விட்டது.
மின்சாரம், எரிபொருள், உணவு மற்றும் மருந்து அனைத்தும் நாடு முழுவதும் தட்டுப்பாடாக உள்ளது. தினசரி கூலி வேலை செய்பவர்கள் முதல் பிற தொழில் செய்பவர் வரை வாழ்வதற்கே சிரமப்படுகின்றனர். பணவீக்கம் 15% த்தை தொட்டு விட்டது. இது ஆசியாவிலேயே அதிகம்.
Srilankan Genocide
2 கோடியே 20 இலட்சம் மக்கள் வாழும் இலங்கை மோசமான நெருக்கடியை சந்தித்து வருகிறது. செயற்கை உரங்களை தடை செய்த அரசின் முடிவால் அரிசி, தேயிலை போன்றவற்றின் அறுவடை பெருமளவு குறைந்தன. கூடவே தற்போதைய நெருக்கடிக்கு காரணமாக அன்னியச் செலவாணி காலியான நிலைமை.
அதிபர் கோத்தபயா ராஜபக்சே இந்நிலையை மாற்றத் தவிக்கிறார். இந்தியா, சீனா தவிர சர்வதேச உதவிகள் மறுக்கப்பட்டிருக்கும் நிலையில் இலங்கை திவாலாகும் நிலையில் உள்ளது. இந்த நெருக்கடி நிலையை கொண்டு வந்ததில் ராஜபக்சே குடும்பத்திற்கு பெரும் பங்குண்டு.
மகிந்த ராஜபக்சே 2004 இல் பிரதமராக அதிகாரத்திற்கு வந்தார். அப்போது கோத்தபய ராஜபக்சே பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்தார். 2009 தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலை புலிகளின் பெயரால் நடத்தப்பட்டதில் இவருடைய பங்கு முக்கியமானது. ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டும், நாட்டை விட்டு வெளியேறவும் செய்தனர். சிறை, சித்திரவதை, பாலியல் வன்முறை, சுட்டுக் கொல்வது, கடத்துவது போன்ற கொடூரங்கள் தமிழ் மக்கள் எதிர்கொண்டனர். இது போக பத்திரிகையாளர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் சிலருக்கும் இந்த அடக்குமுறை நடந்தது.
Rajapaksa Brothers
2019 தேர்தலில் கோத்தபய ராஜபக்சே அதிபராகி தனது சகோதரர் மகிந்தாவை பிரதமராக்கினார். மற்றொரு சகோதரர் பாசில் ராஜபக்சேவை நிதி அமைச்சராக்கினார். அமெரிக்க மற்றும் இலங்கை குடியுரிமை கொண்ட பாசிலை பாராளுமன்றத்தில் கொண்டு வருவதற்காகவே அரசியலமைப்புச் சட்டத்தை திருத்தினார்கள். இதன்படி இரட்டை குடியுரிமை உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிடலாம்.
மூத்த சகோதரரான சாமல் ராஜபக்சேவும் ஒரு கேபினட் அமைச்சராகவும், இவரது மகன் கேபினட் அல்லாத அமைச்சராவும் இருக்கிறார்கள். பிரதமர் மகிந்தாவின் ஒரு மகன் அமைச்சராகவும், மற்றொரு மகன் தலைமை பணியாளர் பொறுப்பிலும் உள்ளார். ஒரு மருமகன் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார். இலங்கை வரவு செலவு திட்டத்தில் சுமார் 75% ராஜபக்சே குடும்பத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இப்படியாக இலங்கை ஒரு வம்சத்தின் ஆட்சியில் சிக்கியிருக்கிறது.
Rajapaksa Brothers
நெருக்கடியிலிருந்து மீள பசில் ராஜபக்சே மார்ச் 16 இந்தியா வந்தார். ஒரு பில்லியன் டாலரைக் கடனாகப் பெற முயன்றார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு போர் இலங்கையில் கச்சா எண்ணெய் விலையை உயர்த்தியதோடு பற்றாக்குறையையும் ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் சுற்றுலாத்துறையையும் கடுமையாக பாதித்திருக்கிறது. இந்த வருடம் இலங்கை வந்த அயல்நாட்டவர்களில் 30% பேர் ரஷ்யா, உக்ரைன், போலந்து மற்றும் பெலாரஸ் நாடுகளைச் சேர்ந்தவர்கள். இலங்கை ஏற்றுமதி செய்யும் தேயிலையை வாங்கும் மிகப்பெரிய நாடு ரஷ்யா.
இத்தகைய குழப்பத்தில் ராஜபக்சே சகோதரர்கள் செய்வதறியாது திகைக்கின்றனர். சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) கடனுதவி கேட்டிருக்கின்றனர். இது குறித்த பேச்சுவார்த்தை அடுத்த மாதம் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை பூர்த்தி செய்ய இலங்கை ரூபாயின் மதிப்பை அரசு குறைத்தது. இதனால் விலைவாசி மேலும் உயர்ந்தது. நிதி நிபுணர்கள் இந்த நடவடிக்கை தவறு என்கின்றனர். அரசு தன்னுடைய கடன்களை மறுசீரமைப்பு செய்வதில் முன்னுரிமை கொடுத்திருக்க வேண்டும்; அதற்கு அடுத்துதான் வட்டி விகித்தை அதிகரிப்பதும், ரூபாயின் மதிப்பை குறைப்பதையும் செய்திருக்க வேண்டும் என்கின்றனர்.
இலங்கையின் தற்போதைய நெருக்கடி இதுவரை நாடு கண்டிராத ஒன்று. 2022 ஆம் ஆண்டு வரை இலங்கையின் வெளிநாட்டுக் கடன் 7 பில்லியன் டாலர் என்றால் அதை திருப்புதவற்கு இலங்கையிடம் 2 பில்லியன் டாலர் மதிப்பில் மட்டுமே அன்னியச் செலவாணி உள்ளது. அதிலும் 1 பில்லியன் டாலர் பத்திரங்கள் வரும் ஜூலையில் முதிர்ச்சியடைவதால் இலங்கை திவாலாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதிலிருந்து மீள இலங்கை மக்கள் பெரும் துன்பத்தை சுமப்பதைத் தவிர வேறு வழியில்லை என்கிறார்கள் வல்லுநர்கள்.
முள்ளிவாய்க்கால் போருக்கு முன்பு 2007 ஆம் ஆண்டில் மகிந்த ராஜபக்சே அதிபராக இருக்கும் போது வாங்கிய கடன், தற்போதைய மொத்த கடனில் 38% ஆகும். மொத்த கடன் மதிப்பில் சீனாவின் பங்கு 10%. தனது கடன்களை மறுசீரமைக்குமாறு சீனா, இந்தியா இரண்டையும் இலங்கை கேட்டிருக்கிறது. இலங்கையில் அமைக்கப்பட்ட ஹம்பந்தோட்டா துறைமுகம் சீனாவின் பட்டுவழிச் சாலைத்திட்டத்தின் அங்கமாக உள்ளது. இதை கட்டுவதற்காக பெருங்கடன் வாங்கிய இலங்கை அதை திருப்பிச் செலுத்த இயலாமல் சீனாவிற்கு துறைமுகத்தை 99 வருடம் குத்தகைக்கு விட்டுவிட்டது. முடிவுகள் தவறாக போவதற்கு இது ஒரு சான்று.
Rajapaksa Brothers
அதிபர் கோத்தபய ராஜபக்சேவும் அவரது குடும்பமும் இப்போது இலங்கைக்கு தேவைப்படக்கூடிய ஒன்றாக இல்லை. நாடாளுமன்றத்தில் ராஜபக்சே கட்சி மூன்றில் இரு பங்கு பெரும்பான்மை கொண்டிருக்கும் நிலையில் 2025 தேர்தல் வரை எதிர்க்கட்சிகளால் இக்குடும்பத்தை ஒன்றும் செய்ய முடியாது.
மார்ச் 16 அன்று அதிபர் கோத்தபய நாட்டு மக்களிடம் உரையாற்றினார். நெருக்கடியைத் தீர்க்க சர்வதேச நாணய நிதியத்துடம் இணைந்து பணியாற்றுவதாகவும், கடந்த 2 மாதங்களாக மக்கள் அனுபவிக்கும் துன்பத்தை உணர்வதாகவும் கூறினார்.
ஆனால் காலம் கடந்து விட்டது. மக்கள் பெருங்கோபத்தில் இருக்கிறார்கள். ஐஎம்எஃப்புடன் உடனான உடன்படிக்கை தாமதமானால் இலங்கை திவாலாகும் என்பது உறுதி. அத்தகைய முடிவை நோக்கி இலங்கை பயணிப்பதை யாரும் விரும்பவில்லை. இருப்பினும் ராஜபக்சே சகோதரர்கள் உருவாக்கிய இந்த நெருக்கடி இலங்கை மக்களின் வாழ்வை கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது.