Marcopolo

 

Twitter

உலகம்

Silk Road History : ஐரோப்பாவையும் சீனாவையும் இணைத்த பட்டுவழிச் சாலையின் வரலாறு

சீனாவையும் ஐரோப்பாவையும் இணைக்கும் பட்டுவழிச்சாலை உருவாக்கப்பட்டது. கிமு 130 முதல் கிபி 1453 ஆம் ஆண்டு வரையிலும் இவ்விரு புராதான உலகங்களும் இச்சாலையில் வர்த்தகம் செய்து வந்தன

Govind

கிமு 130 ஆம் ஆண்டில் சீனாவை ஹான் வம்சம் ஆட்சி செய்து வந்தது. அப்போது சீனாவையும் ஐரோப்பாவையும் இணைக்கும் பட்டுவழிச்சாலை உருவாக்கப்பட்டது. கிமு 130 முதல் கிபி 1453 ஆம் ஆண்டு வரையிலும் இவ்விரு புராதான உலகங்களும் இச்சாலையில் வர்த்தகம் செய்து வந்தன.

பட்டு வழிச்சாலை என்பது ஒரே சாலையாக இருவேறு கண்டங்களையும் இணைக்கவில்லை. அது பல சாலைகளாக இருந்ததால் வரலாற்று அறிஞர்கள் பட்டுவழிச்சாலைகள் என்று பன்மையில் அழைக்கிறார்கள்.

Marco Polo

பட்டுவழிச் சாலையில் பயணம் செய்த மார்கோ போலோ

ஐரோப்பாவின் வெனிஸ் நகரத்தைச் சேர்ந்த பயணக்காரரும் ஆய்வாளருமான மார்கோ போலோ (கிபி 1254 – 1324) இந்த பட்டுவழிச் சாலைகளில் பயணித்து தனது அனுபவங்களை எழுதியிருக்கிறார். அப்போது இந்த வழித்தடத்திற்கு பட்டுவழிச் சாலை என்று பெயரிடப்படவில்லை. கிபி 1877 இல் ஜெர்மன் புவியலாளரரும் பயணியுமான ஃபெர்டினான்ட் வான் ரிச்தோபென் என்பவரால்தான் இந்த வழித்தடம் பட்டுவழிச் சாலை மற்றும் பட்டுவழித் தடம் என்று பெயரிடப்பட்டது. இவரும் சரி, மார்கோ போலோவும் சரி பட்டு வழிச்சாலையில் இரு துருவங்களை நோக்கி கொண்டு செல்லப்பட்ட சரக்குகளை பட்டியலிடுகின்றனர்.

Silk Road

பட்டுவழிச் சாலையில் பயணித்த பொருட்கள்

ஐரோப்பாவிலிருந்து சீனாவிற்கு குதிரைகள், ஒயின், திராட்சை, நாய்கள், பிற விலங்குகள், விலங்குளின் உரோமங்கள் மற்றும் தோல்கள், தேன், பழங்கள், கண்ணாடி பொருட்கள், கம்பளி வகைகள், திரைச்சீலைகள், தங்கம், வெள்ளி, ஒட்டகங்கள், ஆயுதங்கள் மற்றும் கவசங்கள் மற்றும் மனித அடிமைகள் போன்றவை கொண்டு செல்லப்பட்டன.

சீனாவிலிருந்து ஐரோப்பாவிற்கு பட்டு, தேயிலை, சாயங்கள், விலைமதிப்பற்ற கற்கள், சீன தட்டுகள், கிண்ணங்கள், கோப்பைகள், குவளைகள், பீங்கான் பொருட்கள், இஞ்சி, இலவங்கப் பட்டை போன்ற மசாலாப் பொருட்கள், வெண்கல மற்றும் தங்க பொருட்கள், மருந்துகள், வாசனை திரவியங்கள், தந்தம், அரசி, காகிதம், வெடி மருந்து ஆகியவை கொண்டு செல்லப்பட்டன.

பட்டுவழிச் சாலை மூடப்படுதல்

கிபி 1453 ஆம் ஆண்டில் துருக்கியைச் சேர்ந்த உஸ்மானியப் பேரரசர் ஐரோப்பாவுடனான வர்த்தகத்தை துண்டித்துக் கொண்டு பட்டு வழிச் சாலையை மூடினார். ஆகவே வணிகர்கள் பொருட்களை கொண்டு வர புதிய வழிகளை தேட வேண்டியதாயிற்று.

பட்டு வழி மூடப்பட்டதை அடுத்து ஐரோப்பியர்கள் கடல்வழி மூலம் கிழக்கிற்கு வழி தேடினர். இது "கண்டுபிடிப்புகளின் காலம்" (கிபி 1453 – 1660) என அழைக்கப்படுகிறது. இக்காலத்தில் ஐரோப்பியக் கப்பல்கள் புதிய இடங்களைக் கண்டுபிடித்தன. அவற்றிற்கு தமது கடவுள் மற்றும் நாட்டின் பெயரை சூட்டின. மேலும் மேற்கத்திய கலாச்சாரம், மதம் போன்றவை புதிய இடங்களுக்கு பரவியது. அதே போன்று புதிய இடங்களின் கலாச்சார மரபுகள் ஐரோப்பிய மரபில் மாற்றங்களையும் கொண்டு வந்தன. ஆனால் இந்த கண்டுபிடிப்பிற்கு முன்பு வரை பட்டு வழிச்சாலைதான் உலக நாகரிகத்தின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியது.

Silk Road

பாரசீக ராயல் சாலை

சீனாவின் ஹான் வம்சத்திற்கு முன்பே பட்டுவழிச்சாலை பயன்பாட்டில் இருந்தது. பட்டுவழிச்சாலையின் முக்கிய அங்கமாக திகழ்வது பாரசீக ராயல் சாலை. கிமு 550 – கிமு 330 வரை இருந்த அச்செமனிட் பேரரசின் காலத்தில் இச்சாலை நிறுவப்பட்டது. இன்றைய ஈரானின் சூசாவிலிருந்து இன்றைய துருக்கியில் இருக்கும் ஆசியா மைனரை இச்சாலை இணைத்தது. ஆசியா மைனர்தான் மத்திய தரைக்கடலையும் ஆசியக் கண்டத்தையும் இணைக்கும் பகுதி. பேரரசு முழுவதும் செய்திகளை வழங்க தூதுவர்கள் குதிரைகளுடன் இப்பாதையில் பயணித்தனர். பாரசீக தூதர்களின் வேகம் மற்றும் திறனைப் பற்றி ஹெரோடோடஸ் குறிப்பிடுகிறார்.

Silk Road

மேற்குலகிற்கும் சீனாவிற்குள் உள்ள தொடர்பு

மாசிடோனியாவிலிருந்து கிளம்பிய பேரரசர் அலெக்சாண்டர் பாரசீகத்தைக் கைப்பற்றிய பிறகு இன்றைய திஜிகிஸ்தானில் அலெக்ஸாண்ட்ரியா என்ற நகரத்தை உருவாக்கி காயமடைந்த தனது வீரர்களை அங்கே விட்டுச் சென்றார். அலெக்சாண்டர் மரணத்திற்கு பிறகு இந்த வீரர்கள் உள்ளூர் மக்களுடன் மணம் செய்து கொண்டனர். இதற்கு முன்பே கிரேக்கர்களும், ரோமானியர்களும் சீனாவை செரெஸ் என்று அறிந்திருந்தனர். செரெஸ் என்பதன் பொருள் பட்டுத்துணி இருக்கும் நிலம். எனில் சீனாவிற்கும் மேற்குலத்திற்கும் கிமு 200 ஆம் ஆண்டு முதல் வர்த்தக தொடர்பு இருந்திருக்கலாம்.

சீனாவின் ஹான் வம்சப் பேரரசை அதன் வடக்கு மற்றும் மேற்கு எல்லைகளில் உள்ள நாடோடி பழங்குடி மக்கள் அடிக்கடி தாக்கி வந்தனர். அவர்களைத் தோற்கடிக்க பேரரசர் வூ தனது தளபதியான ஜாங் கியானை மேற்கு நோக்கி அனுப்பினார்.

ஜாங் கியானின் பயணம் அவரை மத்திய ஆசியாவில் உள்ள பல்வேறு கலாச்சாரம் மற்றும் நாகரீகங்களுடன் தொடர்பு கொள்ள வழிவகுத்தது. அவர் அலெக்சாண்டரின் படைவீரர்களுடன் கலந்து உருவான உள்ளூர் மக்களை அயோனியர்கள் என்று அழைத்தார். இப்படியாக சீனாவிற்கும் மேற்குலகிற்கும் தொடர்பு ஏற்பட்டது.

சீனர்கள் நீண்ட காலமாக குதிரைகளை அறிந்திருந்தாலும் மேற்குலகின் குதிரைகளை அதன் பெரிய அளவு மற்றும் வேகம் காரணமாக விரும்பினார்கள். மேற்கத்திய குதிரைகளைப் பயன்படுத்தியே ஹான் வம்சம் தனது போர்களில் வெற்றி பெற்றது. இது பேரரசர் வூவுக்கு குதிரைகள் அல்லாமல் வேறு என்ன பொருட்களை மேற்கில் இருந்து வாங்கலாம் என்று எண்ண வைத்தது. இப்படித்தான் போர்,பேரரசு, வர்த்தகம் போன்ற காரணங்களால் பட்டு வழிச்சாலை உருவாக்கப்பட்டது.

Silk Road

பட்டுவழிச் சாலை வழியாக பொருட்கள் வர்த்தகம்

பட்டுவழிச்சாலை வழியாக பல பொருட்கள் பயணித்தாலும் ரோமில் சீனப் பட்டு பிரபலமடைந்ததால் இச்சாலைக்கும் அப்பெயர் வைக்கப்பட்டது. பட்டு வழிச் சாலைகள் சீனாவிலிருந்து இந்தியா, ஆசிய மைனர், பாரசீகம், எகிப்து, ஆப்ரிக்க கண்டன், கிரீஸ், ரோம், பிரிட்டன் வரை நீண்டு செல்கின்றது.

பாரசீகத்தில் சீனாவின் காகிதம், வெடிமருந்து, மசாலாப் பொருட்கள் ஆகியவை விரும்பப் பட்டன. எகிப்து, கிரீஸ், ரோம் போன்ற நாடுகளில் பட்டுத்துணி மிகவும் விரும்பப்படும் பொருளாக இருந்தது.

Silk Road

பட்டுவழிச் சாலைகளின் முக்கியத்துவம்

கலை, மதம், தத்துவம், தொழில்நுட்பம், மொழி, அறிவியல், கட்டிடக் கலை மற்றும் நாகரீகத்தின் அனைத்து கூறுகளும் பட்டுவழிச் சாலைகளில் பரிமாறிக் கொள்ளப்பட்டன. வணிகர்கள் தமது பொருட்களுடன் பல்வேறு நாடுகளுக்கு சென்று வர்த்தகம் புரிய இந்த சாலை பயன்பட்டது. வர்த்தகம் மட்டுமல்ல தொற்றுநோய்களும் இச்சாலை வழியாக மற்ற நாடுகளுக்கு பரவியது.

பட்டு வழிச்சாலை மூடப்பட்ட போது வணிகர்கள் புதிய கடல்வழிகளைத் தேடினார்கள். கண்டுபிடிப்புகளின் காலம் பிறந்தது. வட தென் அமெரிக்க கண்டங்களுக்கு ஐரோப்பியர்கள் சென்றனர். இந்தியாவிற்கு வாஸ்கோட காமா கடல் வழி கண்டுபிடித்தார்.

இப்படி பட்டு வழி பல வழிகளில் உலக நாடுகளின் இணைப்பிற்கும், புதிய வரலாறு பிறப்பதற்கும் உதவியிருக்கிறது. இன்றை சீன அரசும் கூட நில வழியாகவும், கடல் வழியாகவும் ஐரோப்பாவிற்கு வர்த்தகம் செய்யும் நோக்கில் இரு பட்டு வழிகளை உருவாக்கி வருகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?