ஒரு நாட்டின் பொருளாதாரம் வளமாக இருந்தால் தான் அந்நாட்டு மக்கள் நிம்மதியாக, சண்டை சச்சரவுகளின்றி வாழ்கையை நடத்த முடியும். அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் நல்லபடியாக வழங்க முடியும்.
சமீபத்தில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறிய பிறகு, அந்நாட்டுப் பொருளாதாரம் அத்தனை சிறப்பாகச் செயல்பட முடியாமல், மற்ற ஐரோப்பிய நாடுகளை விட அதிக சிரமங்களை எதிர்கொள்வதாகப் பல தரவுகள் கூறுகின்றன.
மற்ற ஐரோப்பிய நாடுகளோடு ஒப்பிடும் போது, பிரிட்டன், கொரோனா வைரஸ் பெருந்தொற்று மற்றும் உக்ரைன் ரஷ்யா போர் போன்ற காரணங்களால் விலைவாசி அதிகமாகவும், பொருளாதார வளர்ச்சி குறைவாகவும் இருக்கிறது.
பிரிட்டனின் மத்திய வங்கியான பேங்க் ஆஃப் இங்கிலாந்து, பிரிட்டனில் நிலவும் விலைவாசிப் பிரச்சனை இன்னும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக எச்சரித்துள்ளது. அதே போலப் பணவீக்கப் பிரச்சனை நீண்ட காலத்துப் பிரிட்டன் பொருளாதாரத்தில் நிலைத்து நிற்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளது. அதோடு பிரிட்டனின் பொருளாதார வளர்ச்சி பலவீனமாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.
சமீபத்தில், மத்திய வங்கிகளின் ஆளுநர்கள் மாநாடு ஒன்றில் பேசிய பேங்க் ஆஃப் இங்கிலாந்தின் ஆளுநர் ஆண்ட்ரூவ் பெய்லி பிரிட்டன் பொருளாதாரம், மற்ற பொருளாதாரங்களை விட பலவீனமடைந்து வருவதாகக் கூறினார். இந்த தரவுகள் அனைத்தும் பிரிட்டன் பொருளாதாரம் தடுமாறிக் கொண்டிருப்பதைக் காட்டுகிறது.
பிரிட்டன் ஒரு பெரிய ரெசசனை எதிர்கொள்ளலாம் என்றும், அது மற்ற ஐரோப்பிய நாடுகளை விடப் பெரிதாக இருக்கலாமென வால்கிரீம் பூட்ஸ் என்கிற மருந்து நிறுவனத்தின் தலைவர் ஸ்டிஃபனோ பெஸ்ஸினா பிபிசி ஊடகத்திடம் கூறியுள்ளார்.
பிரிட்டன் வாடிக்கையாளர்கள் தங்களின் அன்றாடத் தேவைகளை வாங்குவதற்குக் கூட குறைவாகவே செலவழிப்பதாக பவுண்ட் லேண்ட் என்கிற சூப்பர்மார்கெட் கடைகளை நடத்தி வரும் பெப்கோ நிறுவன தரப்பில் கூறப்பட்டுள்ளது.
மற்ற ஐரோப்பிய நாடுகளில் விலைவாசி அதிகரித்தாலும், அங்கு ஊழியர்களின் வருமானமும் அதற்குத் தகுந்தாற் போல அதிகரிக்கிறது. ஆனால் பிரிட்டனில் அப்படி தொழிலாளர்களின் சம்பளம் உயரவில்லை.
பிரிட்டனின் நுகர்வோர் நம்பிக்கை கருத்துக் கணிப்பு, வரலாறு காணாத அளவுக்குத் தரைதட்டியுள்ளது. சுருக்கமாக மக்கள் தங்கள் பணத்தைத் தாராளமாகச் செலவு செய்ய விரும்பவில்லை.
இது போக, அமெரிக்க டாலருக்கு எதிரான பிரிட்டனின் பவுண்ட் ஸ்டெர்லிங் கரன்சியின் மதிப்பு கடந்த 2007ஆம் ஆண்டு முதல் மெல்ல சரிந்து வருகிறது. ஒரு அமெரிக்க டாலருக்கு 2.05 பிரிட்டிஷ் பவுண்ட் ஸ்டெர்லிங் என்கிற நிலை மாறி தற்போது 1.19 பவுண்ட் ஸ்டெர்லிங்குக்குச் சரிந்திருக்கிறது.
இது பிரிட்டனின் இறக்குமதி செலவுகளைக் கடுமையாகப் பாதித்து வருகிறது. உதாரணத்துக்கு 2007 காலகட்டத்தில் ஒரு டாலர் மதிப்புள்ள பொருளை இறக்குமதி செய்ய 0.5 பவுண்ட் செலவழித்து வந்த பிரிட்டன், இப்போது கிட்டத்தட்ட 1 பவுண்டைச் செலவழிக்க வேண்டியுள்ளது.
பிரிட்டனின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறையும் (Current Account Deficit) வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளது. அதாவது ஏற்றுமதி மூலம் பிரிட்டனுக்கு கிடைக்கும் வருவாயை விட, இறக்குமதிக்கு ஆகும் செலவு அதிகரித்துள்ளது.
பிரிட்டன் நாடு பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை நிறைவேற்றிய பிறகு அந்நாட்டில் தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்படலாம், வர்த்தகங்களை மேற்கொள்வதில் சில சிக்கல்களை எதிர்கொள்ளலாம் எனப் பொருளாதார வல்லுநர்கள் கணித்திருந்தனர். அது போகப் பணவீக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஒருங்கிணைத்துச் சமாளிப்பதில் கூட சிக்கல் ஏற்படலாம் என ஆரூடம் கூறினர்.
அவர்கள் கூறியது பலித்துவிட்டால், பிரிட்டனின் பணவீக்கம் மேலும் வலுவடையும், அது மீண்டும் பிரிட்டனின் மத்திய வங்கி வட்டி விகிதங்களை உயர்த்த வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தும்.
ஏற்கனவே பிரிட்டிஷ் சேம்பர் ஆஃப் காமர்ஸ், தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்கள் பற்றாக்குறையால் உணவகங்கள் மற்றும் விடுதிகளுக்கு வரும் வாடிக்கையாளர்களைத் திருப்பி அனுப்புவதாகக் கூறியுள்ளது. தொழிலாளர்கள் பற்றாக்குறை தொடர்பாக அரசு விரைந்து பரிசீலிக்க வேண்டும் என்றும் அவ்வமைப்பு அரசிடம் முறையிட்டுள்ளது.
இப்படிப் பல பிரச்சனைகளால்தான் பிரிட்டன் பொருளாதாரம் மற்ற நாட்டுப் பொருளாதாரங்களை விட அதிக சிரமங்களைச் சந்தித்து வருகிறது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust