உக்ரைனில் ரஷ்ய படைகள் தொடர்ந்து எட்டாவது நாளாக தாக்குதல் நடத்தி வருகின்றன.
உக்ரைன் தலைநகர் கீவ் உள்பட முக்கிய நகரங்களை கைப்பற்றும் முனைப்புடன் ரஷ்யா தாக்குதல்களை தொடுத்து வருகிறது. ஏற்கனவே கீவ் மற்றும் கார்கீவ் போன்ற நகரங்களில் கடும் தாக்குதல்கள் நடந்த நிலையில் தற்போது உக்ரைனின் தெற்கு பகுதியில் இருக்கும் துறைமுக நகரான கர்சனை ரஷ்ய படைகள் கைப்பற்றியுள்ளதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
படையெடுப்புக்கு பிறகு ரஷ்யாவால் கைப்பற்றப்பட்டுள்ள முதல் முக்கிய நகரமாக கர்சன் உள்ளது.
ரஷ்ய படைகள் நகர கவுன்சில் கட்டடத்தை நோக்கி வலுக்கட்டாயமாக வந்து மக்களை வெளியே வரவிடாமல் தடுத்தனர் என கர்சன் நகர மேயர் கொலிகேவ் தெரிவித்துள்ளார்.
முகநூல் பதிவு ஒன்றில், கொலிகேவ், ரஷ்ய படைகள் கர்சன் நகரை முழு கட்டுப்பாட்டில் எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
கர்சன் நகரில் சுமார் இரண்டு லட்சத்து 80 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நகரம் உக்ரைனின் தெற்கு கருங்கடல் பகுதியில் கரையை ஒட்டி இருக்கும் துறை முக நகரம் என்பதால் இந்த கைப்பற்றல் ரஷ்ய படைகளுக்கு பெரிதும் சாதகமான ஒன்றாக அமையும்.
ஏனென்றால் கர்சன் நகரம் நீப்பர் நதி கருங்கடலில் கலக்கும் கரை பகுதியில் அமைந்துள்ளது. இந்த நகரை ரஷ்யா கைப்பற்றும் பட்சத்தில் ரஷ்யா தனது ராணுவ தளத்தை அங்கு நிறுவக் கூடும் அதன்முலம் மேலும் ஊடுறுவலை படைகள் மேற்கொள்ளும்.
உக்ரைனில் பன்முனை தாக்குதல்களை நடத்தி வரும் ரஷ்யா கடந்த புதன்கிழமையன்று தனது தாக்குதலை மேலும் தீவிரப்படுத்தியது. பல இடங்களில் வெடிகுண்டு தாக்குதல்கள் நடைபெற்றன.
ரஷ்ய படைகளுக்கு உக்ரைன் படைகள் முடிந்த அளவில் ஈடுகொடுத்து வருகின்றனர். அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சகம் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் நாட்டுக்காக போர் தொடுக்க வர வேண்டும் என தெரிவித்திருந்தது. பொதுமக்களும் ஆயுதம் ஏந்தி போராடி வருகின்றனர். அவ்வப்போது உக்ரைன் அதிபர் விளாடிமிர் செலன்ஸ்கி தனது குடிமக்களின் வீரத்தை பாராட்டி காணொளிகளை வெளியிட்டு வருகிறார்.
ரஷ்ய படையெடுப்பில் 2000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்திருப்பதாக உக்ரைன் தெரிவிக்கிறது. அதுமட்டுமல்லாமல் பல்லாயிரக்கணக்கான மக்கள் தாக்குதல்களுக்கு அஞ்சி உக்ரைனை விட்டு வெளியேறி வருகின்றனர்.
அதேபோல ரஷ்ய முதன்முறையாகத் தனது ராணுவ படைகளில் உயிரிழப்பு ஏற்பட்டதை ஒப்புக் கொண்டுள்ளது. இதுவரை சுமார் 498 பேர் உயிரிழந்திருப்பதாகவும், மேலும் 1,597 பேர் காயமடைந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது. ஆனால் ரஷ்ய தரப்பில் ஆயிரக்கணக்கான உயிர் சேதங்கள் ஏற்பட்டிருக்கின்றன என உக்ரைன் தெரிவிக்கிறது.
மேற்கத்திய நாடுகள் உட்பட பல்வேறு உலக நாடுகள் ரஷ்யா தனது தாக்குதலை நிறுத்த வேண்டும் என உறுதியாக தெரிவித்து வருகின்றன. ஆனால் ரஷ்யா தனது தாக்குதலை நாளுக்கு நாள் தீவிரமாக்கிக் கொண்டு வருகிறது.
உக்ரைனின் முக்கிய நகரங்களில் இரவுப் பகலாக தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது.
நாளுக்கு நாள் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், மக்களின் துயரக் கதைகள் உலக மக்களை உலுக்கி கொண்டு வருகிறது.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உக்ரைனில் நடைபெற்று வரும் போர்க்குற்றங்கள் குறித்து விசாரிக்க தொடங்கியுள்ளது.
ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானம் முன்மொழியப்பட்டது ரஷ்யாவுக்கு எதிராக 100க்கும் மேற்பட்ட நாடுகள் வாக்களித்தன வட கொரியா, சிரியா உள்ளிட்ட ஒரு சில நாடுகளே தீர்மானத்திற்கு எதிராக வக்களித்துள்ளன. இருப்பினும் இந்தியா அந்த வாக்கெடுப்பை நிராகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது