Vladimir Putin

 

NewsSense

உலகம்

Ukraine war : Russia அதிபர் Putin -ஐ கொல்ல கூறிய US செனட்டர் லிண்ட்சே கிரஹாம்

NewsSense Editorial Team

ரசிய உக்ரைன் போர் எப்போது முடியுமென பலர் விரும்பும் போது சிலர் அதை ஹாலிவுட் ஆக்சன் படத்திற்கு போட்டியாக பார்க்கின்றனர். அமெரிக்காவின் தென் கரோலினாவைச் சேர்ந்த செனட்டர் லிண்ட்சே கிரஹாம். உக்ரைன் மீதான ரசியப் போரை முடிவுக்கு கொண்டு வர ரசிய அதிபர் விளாடிமிர் புடினை கொடுகொலை செய்ய வேண்டும் என்று இந்த செனட்டர் கூறியிருக்கிறார்.

கொல்லுங்கள்

கடந்த வியாழனன்று ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சியில் பேசிய போது கிரஹாம் இந்தக் கொலைத் திட்டத்தை பரிந்துரைத்தார். உடனே அதை டிவிட்டரிலும் வெளியிட்டார். இது வைரலானதோடு பலரது கண்டனத்தையும் பெற்றிருக்கிறது.

“ரசியாவில் ஒரு புரூட்டஸ் இருக்கிறாரா? வெற்றிகரமான கர்னல் ஸ்டாஃபென்பெர்க் இருக்கிறாரா? ரசியாவில் உள்ள ஒருவர் இந்த நபரை (புடின்) தூக்க வேண்டும்" என்று டிவிட்டரில் கிரஹாம் கூறினார். கூடவே "இதுதான் உங்கள் நாட்டிற்கும், உலகிற்கும் நீங்கள் செய்யும் சிறந்த சேவை" என்றும் கூறியுள்ளார்.

பண்டைய ரோமானியப் பேரரசரின் கொலையாளிகளில் ஒருவர்தான் புரூட்டஸ். அவரது சதியை வைத்துத்தான் யூ டூ புரூட்டஸ் எனும் வழக்கு பிரபலமாகியது. செனட்டர் குறிப்பிட்ட ஸ்டான்ஃபென்பெர்க் ஒரு ஜெர்மன் இராணுவ அதிகாரி. 1944 ஆம் ஆண்டில் அவர் ஹிட்லரைக் கொல்ல முயற்சி செய்தார் என குற்றம் சாட்டப்ட்டு தூக்கிலடப்பட்டார்.

"உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வரவேண்டிய ஒரே மக்கள் ரசியர்கள்தான். சொல்வது எளிதென்றாலும் செய்வது கடினம். மிச்சமிருக்கும் உங்கள் வாழ்க்கயை இருண்டகாலத்தில் வாழக்கூடாது என்றால், உலகிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டு வறுமையை சந்திப்பதை தவிர்க்க வேண்டுமென்றால், நீங்கள் இந்தச் செயலைச் செய்ய வேண்டும்" என்று மேலும் ஒரு கருத்தை டிவிட்டரில் வெளியிட்டார்.

US Senator Lindsey Graham

அசரவில்லை

இதையடுத்து அமெரிக்காவின் இடதுசாரிகள் மற்றும் வலதுசாரிகள் அனைவரிடமிருந்தும் கிரஹாமின் கருத்துக்களுக்கு கடும் விமர்சனங்கள் வந்தன. ஆனாலும் இந்த செனட்டர் அசரவில்லை. வெள்ளிக்கிழமை காலையில் ஃபாக்ஸ் நேர்காணலில் தனது கருத்தை மேலும் வலியுறுத்தியிருக்கிறார்.

ரசிய அதிகாரிகள் கிரஹாமின் கருத்துக்கள் ஒரு குற்றச் செயல் என்று கூறியதோடு அமெரிக்க அரசு இதற்கு விளக்கமளிக்க வேண்டும் என்றும் கோரியிருக்கின்றனர்.

“ரசியா மீது அமெரிக்கவில் இருக்கும் ரசியோஃபோபியா மற்றும் வெறுப்புக்கு அளவே இல்லை" என்று அமெரிக்காவின் ரசியத் தூதர் அனடோலி அன்டோனோவ் ஃபேஸ்புக்கில் கூறியிருக்கிறார். உலகத்துக்கே ஒழுக்கத்தை போதிக்கும் ஒரு நாட்டின் செனட்டர் அமெரிக்காவின் நலனுக்காக பயங்கரவாதத்தை பரிந்துரைப்பதை நம்ப முடியவில்லை என்றும் அவர் கூறினார்.

கிரஹாமின் கருத்துக்களை கேட்டு அமெரிக்க பாராளுமன்றத்தின் இரு கட்சிகளான ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் அதிர்ச்சி அடைந்து சீற்றத்துடன் பதிலளித்திருக்கின்றனர். உக்ரைனில் உள்ள அணுமின்நிலையங்களை ரசியா தாக்கி வரும் நிலையில் அதன் அதிபரை கொல்லக்கோருவது எவ்வளவு பெரிய ஆபத்து என்பதைச் சுட்டிக் காட்டியிருக்கின்றனர்.

மூன்றாம் உலகப் போர் வந்துவிடக்கூடாது என அமெரிக்க நிர்வாகம் முயன்று வருகையில், பாராளுமன்ற உறுப்பினர்கள் அதற்கு தோதாக கருத்து தெரிவிக்க வேண்டுமென்று முற்போக்கானவரும் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினருமான இல்ஹான் ஓமர் ஒரு டிவிட்டில் கூறினார். உக்ரைன் போர் குறித்து அமெரிக்காவும் அதன் தலைவர்களும் என்ன கருத்து கூறுகிறார்கள் என்று உலகமே உற்றுப் பார்க்கும் வேளையில் கிரஹாம் மற்றும் சில உறுப்பினர்களின் கருத்துக்களால் பலன் இல்லை என்றும் அவர் கூறினார்.

அமைதிதான் வேண்டும்

ஜனநாயகக் கட்சியின் செனட்டரான பிரையன் ஷாட்ஸ், “ இன்றிரவு ஒரு டஜனுக்கும் மேற்பட்ட பைத்தியக்காரத்தனமான ட்விட்டுகளை பார்த்திருக்கிறேன். தயவு செய்து ஒவ்வொருவரும் உங்களைப் பற்றிய அறிவார்ந்த பண்பை வைத்துக் கொள்ளுங்கள்" என்று கூறியிருக்கிறார்.

அமெரிக்க குடியரசுக் கட்சியைச் சேர்ந்த செனட்டரான டெட் க்ரூஸும் கிரஹாமின் கருத்தை மோசமான ஆலோசனை என்று விமரிசித்திருக்கிறார். பொருளாதாரத் தடைகள், ரசியாவின் எண்ணெய் மற்றும் எரிவாயுவை புறக்கணிப்பது, உக்ரேனுக்கு இராணுவ உதவி செய்வது இவைதான் உக்ரைன் மக்களைக் காப்பாற்றும், மாறாக ரசியாவின் தலைவரை கொலை செய்யுமாறு நாம் கூறுவது தவறு என்கிறார் அவர்.

கொரோனா கட்டுப்பாடுகளும் யூதர்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலைகளையும் ஒப்பிட்டு எக்குதப்பாக பேசும் மார்ஜோரி டெய்லர் கிரீன் எனும் காங்கிரஸ் பெண்மணி கூட கிரஹாமின் கருத்துக்களை விமரிசிக்கிறார்.

மேலும் அவர் கூறுகையில் நாம் அனைவரும் உக்ரைன் மக்களின் அமைதிக்காக பிராத்தனை செய்து கொண்டிருக்கும் போது இந்தக் கருத்து பொறுப்பற்றது, அபாயரகமானது. நமக்கு அமைதியான மனதுடன் நிலையான ஞானம் உள்ள தலைவர்களே தேவை என்றார். போர்வெறி பிடித்த, இரத்த தாகமுள்ள கொலை செய்யச் சொல்லும் அரசியல்வாதிகள் தேவையில்லை என்று கூறியதோடு அமெரிக்கர்கள் போரை விரும்பவில்லை என்றும் அவர் கூறினார்.

அமெரிக்க வெள்ளை மாளிகையில் தினசரி நடக்கும் பத்திரிகையாளர் சந்திப்பில் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் இவ்வாறு கூறினார்: “ நாங்கள் ஒரு வெளிநாட்டின் தலைவரைக் கொல்வதற்கோ, ஆட்சி மாற்றத்திற்கோ வாதிடவில்லை. இது அமெரிக்காவின் கொள்கையும் அல்ல".

உக்ரைன் மீதான போர் ரசிய அதிபர் புடினுக்கு மட்டுமல்ல, அமெரிக்காவின் அரசியல்வாதிகள் சிலருக்கும் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பது இதிலிருந்து தெரிகிறது.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?