அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் இதுவரை 5 பெண் நீதிபதிகளே இருந்து வந்த நிலையில் தற்போது 6வது பெண் நீதிபதியாக கேடான்ஜி பிரவுன் ஜாக்சன் நியமிக்கப்பட உள்ளார்.
வரலாற்றின் முதன்முறையாக அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் முதல் கறுப்பின பெண் நீதிபதியாக கேடான்ஜி பதவியேற்க உள்ளார். இதற்கு முன்பு 2 ஆண் கறுப்பின நீதிபதிகள் மட்டுமே இருந்துள்ளனர்.
பள்ளிப்படிப்பை முடித்த கேடான்ஜி பிரவுன், ஹார்வர்ட் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றார். அதன் பின்னர் 1992 முதல் 1993 வரை டைம் பத்திரிகையின் பணியாளர் நிருபராகவும் ஆராய்ச்சியாளராகவும் பணியாற்றினார். இதனை தொடர்ந்து ஹார்வர்ட் வளாகத்தில் சட்டமும் படித்து முடித்தார். 1996 முதல் 1997 வரை ஜாக்சன் அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாவட்ட நீதிமன்றத்தின் நீதிபதிக்கு எழுத்தராகப் பணியாற்றினார். அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் பொதுப் பாதுகாவலராகப் பணியாற்றிய ஒரே நீதிபதி கேடான்ஜி என்பது குறிப்பிடத்தக்கது.
ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்கள் ஒபாமாவுடன் கேடான்ஜிக்கு நல்ல நட்பு இருந்துள்ளது. அதன் காரணமாக அப்போதைய அமெரிக்க அதிபர் ஒபாமா, பிரவுன் ஜாக்சனை நீதிபதியாக பரிந்துரைத்தார். இதையடுத்து, 2010ம் ஆண்டு பிரவுன் ஜாக்சன் மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
சமீபத்தில் நடந்துமுடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் தனது தேர்தல் வாக்குறுதியிலேயே கறுப்பின ஆப்ரிக்க அமெரிக்கரை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிப்பது குறித்து பேசியிருந்தார். அதன் தொடர்ச்சியாக தற்போது இந்த நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஜாக்சனை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் புதிய நீதிபதியாக நியமிக்க ஒப்புதல் அளித்தார். இவரின் ஒப்புதலுக்கு பின் வாக்கெடுப்பு நடத்தி நீதிபதி நியமனம் அறிவிக்கப்பட இருந்தது. ஏனென்றால், ஜாக்சனை நீதிபதியாக நியமிக்க தொடக்கத்திலிருந்தே ஜனநாயகக் கட்சி எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து 100 உறுப்பினர்களைக் கொண்ட அமெரிக்க செனட் சபை ஜனநாயகக் கட்சியினருக்கும் குடியரசுக் கட்சியினருக்கும் இடையே 50-50 என சமமாகப் பிரிக்கப்பட்டு வாக்கெடுப்பு நடந்தது.
வாக்கெடுப்புக்கு கமலா ஹாரிஸ் தலைமை தாங்கினார். இதில், 53 வாக்குகள் கிடைக்க, இப்போது அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் முதல் கறுப்பின பெண் நீதிபதியாக நியமிக்கப்படபோவது உறுதியாகியுள்ளது.
அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாக இருக்கும் நீதிபதி ஸ்டீபன் பிரேயர் ஓய்வு பெறவுள்ளார். அவர் ஓய்வு பெற்ற பிறகு 116வது நீதிபதியாக பிரவுன் ஜாக்சன் பொறுப்பேற்க இருக்கிறார்.
நீதிமன்ற அமைப்புகள் ஒவ்வொரு நாடுகளை பொறுத்தும் மாறுப்பட்டிருக்கும். இந்திய உச்சநீதிமன்ற அமைப்புகளில் இருந்து முற்றிலும் மாறானது அமெரிக்க உச்சநீதிமன்ற அமைப்பு. அதாவது, இந்தியாவில் பணிபுரியும் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் பதவிக்காலம் 65 வயது வரை மட்டுமே.
ஆனால், அமெரிக்க உச்சநீதிமன்ற அமைப்பில் ஓய்வுக்கான வயதுவரம்பு இல்லை. வாழ்நாள் முழுவதும் அவர்கள் நீதிபதிகள்தான். சுய விருப்பத்தின் பேரில் ஓய்வு பெற்று கொள்ளலாம் என்று கூறப்படுகிறது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.