Gold  Pexels
உலகம்

314 டன் ரஷ்ய தங்கம் குறிவைக்கப்படுகிறதா? - அதிர வைக்கும் தகவல்

ரஷ்யா மீதான மேற்கத்திய நாடுகளின் தடை, பொருளாதார அளவில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்துவதற்கு பதிலாக அரசியல் ரீதியில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தலாம் என சந்தை பகுப்பாய்வாவார்கள் நம்புகின்றனர்.

NewsSense Editorial Team

ரஷ்யாவில் உற்பத்தி செய்யப்படும் தங்கத்திற்கு எதிராக ஒரு பொது தடையை விதிக்க அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உட்பட ஜி 7 நாடுகள் ஒரு வலுவான திட்டத்தை உருவாக்கிய வருகின்றனர். இத்திட்டத்திற்கு அடுத்த சில நாட்களுக்குள் ஒப்புதல் பெறப்படும் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன.


கடந்த மாதம் ஜெர்மனியில் உள்ள பவேரியா நகரத்தில் நடைபெற்ற 48ஆவது ஜி 7 உச்சி மாநாட்டிலேயே ரஷ்யத் தங்கத்திற்குத் தடை விதிப்பது குறித்து முன்மொழியப்பட்டது. அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஜப்பான் போன்ற நாடுகள் அத்தடைக்கான ஆவணங்களை ஆய்வு செய்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

ரஷ்யாவில் உற்பத்தி செய்யப்படும் தங்கம் அனைத்தும் முறையாக தேதியிடப்பட்டு குறியீடுகளோடு சந்தைக்கு வருகின்றன. எனவே ரஷ்யத் தங்கத்தை எளிதில் அடையாளம் கண்டுவிடலாம் என லண்டன் புல்லியன் மார்க்கெட் அசோசியேஷன் கூறியுள்ளது.


ஜூன் 24 ஆம் தேதி ரஷ்யத் தங்கத்தின் மீது தடை விதிக்கப்பட்டது. எனவே அந்த தேதிக்குப் பிறகு ரஷ்யாவிலிருந்து வரும் தங்கம் சந்தையில் விற்பனை செய்யப்படாது. ஜூன் 24 ஆம் தேதிக்கு முன் சந்தையில் இறக்கப்பட்ட தங்கம் வழக்கம் போல வர்த்தகமாகும் என லண்டன் சந்தை தரப்பிலேயே கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே சில நாடுகள் தடை விதித்திருக்கிறது:


ரஷ்ய நாட்டிலிருந்து வரும் தங்கத்திற்கு லண்டன் சந்தை ஏற்கனவே ஒரு தடையை விதித்து இருக்கிறது. அது ஒரு அதிகாரப்பூர்வமான தடை அல்ல என்றாலும் பெரும்பாலான வர்த்தகர்கள் ரஷ்யத் தங்கத்தில் வர்த்தகம் மேற்கொள்வதை நிறுத்தி விட்டனர்.

ரஷ்யாவில் உற்பத்தி செய்யப்படும் தங்கம் ரஷ்ய அரசோடு நெருங்கிய தொடர்பில் இருக்கும் பல ரஷ்ய பணக்காரர்களுக்கு மிகப்பெரிய செல்வத்தை ஈட்டிக் கொடுக்கும். இந்த பணக்காரர்கள் மேற்கத்திய நாடுகள் விதித்திருக்கும் தடைகளை கடந்து பணம் சம்பாதிக்க தங்கம் போன்ற விலை உயர்ந்த உலோகங்கள் வர்த்தகமாகும் சந்தையின் பக்கம் திரும்பி இருப்பதாக பிரிட்டன் அரசு கருதியது. எனவே 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே போரிஸ் ஜான்சனின் அரசு ரஷ்யாவில் வெட்டி எடுக்கும் தங்கத்திற்கு தடை விதித்தது.

ரஷ்யா மீதான மேற்கத்திய நாடுகளின் தடை, பொருளாதார அளவில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்துவதற்கு பதிலாக அரசியல் ரீதியில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தலாம் என சந்தை பகுப்பாய்வாவார்கள் நம்புகின்றனர்.

பல மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவின் முக்கிய தங்க வர்த்தக வங்கிகளான வி டி பி (VTB), ஓட்க்ரைட்டி (Otkritie), ஸ்பேர் பேங்க் (Sber bank) போன்ற பல சர்வதேச வங்கிகள், தங்க சுத்தீகரிப்பாளர்கள் மற்றும் தங்கத்தை போக்குவரத்து செய்யும் பல நிறுவனங்கள் மீதும் தடைகளை விதித்துள்ளன.

உலகின் மிக முக்கியமான தங்கச் சந்தைகளை கொண்ட லண்டன் சந்தை மற்றும் சுரிச் (ஜெர்மனி) சந்தையில் தங்க வரத்து குறைந்திருக்கலாம் என அல்ஜெசீரா பத்திரிக்கையில் பிரசுரமான கட்டுரை ஒன்றில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

தங்கத்தை இலக்கு வைப்பது ஏன்?

ரஷ்யாவில் உற்பத்தி செய்யப்படும் தங்கத்தை தடை செய்வது மூலம், வலுவான மற்றும் நிலையான கரன்சிகளை ரஷ்யா பெறுவது தடுக்கப்படுகிறது.


இப்படி ரஷ்யாவின் முக்கிய வருவாய் மூலங்களை தாக்குவதால், உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா நடத்தி வரும் போர் செலவுகளை குறைக்க இது வழிவகுக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

ரஷ்யப் பொருளாதாரத்தில் தங்கத்தின் பங்களிப்பு என்ன?

உலகிலேயே தங்கத்தை அதிக அளவில் உற்பத்தி செய்யும் நாடுகள் பட்டியலில் முதலிடம் சீனாவுக்கு என்றால் இரண்டாவது இடம் ரஷ்யாவுக்கு. கடந்த 2021 ஆம் ஆண்டில் ரஷ்யா பிரிட்டனுக்கு மட்டும் சுமார் 15.2 பில்லியின் அமெரிக்க டாலருக்குத் தங்கத்தை ஏற்றுமதி செய்துள்ளது.

அதை 2021 ஆம் ஆண்டு, ரஷ்யா மட்டும் சுமார் 314 டன் தங்கத்தை வெட்டி எடுத்துள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஒட்டுமொத்தமாக உலகில் வெட்டி எடுக்கப்பட்ட தங்கத்தில் 10% என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக ரஷ்யாவில் வெட்டி எடுக்கப்படும் தங்கம் உள்நாட்டில் உள்ள வங்கிகள் மற்றும் வணிக வங்கிகளுக்கு விற்கப்படும். அந்த வங்கிகள் மாஸ்கோ மத்திய வங்கிக்கு தங்கள் தங்கத்தை விநியோகிக்கும் அல்லது ஏற்றுமதி செய்யும்.


கடந்த காலத்தில் ரஷ்யா வெட்டி எடுத்த தங்கத்தில் பெரும்பாலான பகுதி பிரிட்டனுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக, ரஷ்யா, தான் வெட்டி எடுக்கும் தங்கத்தில் ஒரு கணிசமான பகுதியை சுவிட்சர்லாந்து, துருக்கி, கஜகஸ்தான்... போன்ற மற்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யத் தொடங்கியது. எனவே ஒட்டுமொத்த ரஷ்யப் பொருளாதாரம் மற்றும் உலக தங்கச் சந்தையில் ரஷ்யாவின் பங்கு என்ன என்பதை தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும்.

மேற்கத்திய சந்தைகளில் தங்க வரத்துக் கடுமையாக பாதிக்கப்படுமா?

ரஷ்ய தங்கத்தின் மீது ஜி 7 நாடுகள் விதிக்க இருக்கும் தடை உலக தங்கச் சந்தையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என உலக தங்க கவுன்சில் (World Gold Council) கூறியதாக அல்ஜெசீரா பத்திரிக்கையின் கட்டுரை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆபரணங்களை செய்வதற்கும், சந்தையில் வர்த்தகம் மேற்கொள்வதற்கும் போதிய அளவுக்கு தங்கம் இருப்பதாகவும் உலக தங்கக் கவுன்சில் கூறியுள்ளதாக சில ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

ஒட்டுமொத்த தங்க உற்பத்தியில் சுமார் 10 சதவீதத்தை தன் வசம் வைத்திருக்கும் ரஷ்யாவை தடை செய்தால் உலக சந்தையில் போதுமான தங்க வரத்து இல்லாமல் தங்கத்தின் விலை அதிகரிக்குமே? அப்படி என்றால் தங்கள் விலை அதிகரிக்குமா..? என நீங்கள் கேட்பது சரியான வாதம் தான்.

ஆனால் மேற்கத்திய நாடுகளில் ரஷ்யாவின் தங்க வரத்து பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாததால் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து தங்கத்தின் விலை சரிந்து வருகிறது.
அதோடு ரஷ்யாவின் புத்திசாலித்தனம் அல்லது அதிர்ஷ்டமும் ஒரு முக்கிய காரணம் எனலாம்.

உலகின் மிகப்பெரிய தங்க இறக்குமதி நாடுகளான சீனா மற்றும் இந்தியா ரஷ்யாவிடமிருந்து தொடர்ந்து தங்கத்தை வாங்கிக் கொண்டிருக்கின்றனர். இதே ஆசிய நாடுகள்தான், ரஷ்யாவின் கச்சா எண்ணெய்யையும் தாறுமாறாக வாங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

எனவே மேற்குலக நாடுகள் வழியாக உலக சந்தைக்கு வராத தங்கம், கிழக்கத்திய நாடுகள் வழியாக உலக சந்தையை சென்றடைகிறது.

அதோடு, ஜி7 நாடுகள் ரஷ்ய தங்கத்தின் மீது விதிக்கப்பட்ட தடை ரஷ்ய பொருளாதாரத்திற்கு பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை என்றால், ஒரு பயனும் இல்லாத ஜி 7 நாடுகளின் ரஷ்யத் தங்கம் மீதான தடை எதற்கு?

ஒரு சொல்லில் விடை வேண்டுமானால்... இது ஒரு அரசியல் குறியீடு.

ஜி 7 நாடுகள் ரஷ்யாவின் தங்கத்தின் மீது விதித்திருக்கும் தடை குறுகிய காலத்தில் ரஷ்ய நாட்டு பொருளாதாரத்தின் மீது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாமல் இருக்கலாம்.

ஆனால், உலகின் முக்கியமான தங்கச் சந்தைகளிலிருந்து ரஷ்யா வெளியேற்றப்பட்டு இருப்பது நீண்ட காலத்தில் கடும் விளைவுகளை ஏற்படுத்தும், ரஷ்யாவின் உள்நாட்டிலுள்ள தங்க சுரங்க துறையை பாதிக்கும் என மேற்குலக நாடுகள் நம்புகின்றன.

வாடிக்கையாளர்களுக்குத் தங்கம் விலை என்னவாகும்?


முன்பே கூறியது போல ஜி 7 நாடுகள் ரஷ்யாவில் வெட்டி எடுக்கப்படும் தங்கத்திற்கு தடை விதித்திருந்தாலும், அது கிழக்கு உலக நாடுகள் வழியாக உலகச் சந்தையை சென்றடைந்து கொண்டிருக்கிறது. ரஷ்ய தங்கத்திற்கு எதிராகத் தடை விதிக்கும் நாடுகள் தவிர மற்றவர்களுக்கு பெரிய அளவில் விலை மாற்றம் இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.


இந்தியாவில் ஆடி மாதம் தொடங்கிவிட்டது. இந்திய மாநிலங்களில் பல கலாச்சாரங்களில் வெவ்வேறு பெயர்கள் இருந்தாலும், பொதுவாக இந்தியாவில் ஜூலை - ஆகஸ்ட் மாதம் நல்ல விஷயங்களைச் செய்யக் கூடிய காலமாக கருதப்படுவதில்லை. இம்மாதத்தில் தங்க விற்பனையும் கணிசமாக குறையும் என்பதால் இயல்பாகவே இந்தியாவில் தங்கம் விலை குறையும் என ஒரு தரப்பினர் கூறிவருகின்றனர்.


ஆடி போய் ஆவணி மாதம் வரட்டும், முகுர்த்தங்கள், திருமணங்களால் தங்கத்தின் விலை இந்தியாவில் எப்படி பற்ற வைத்த ராக்கெட் போல உயர்கிறது என பட்டவர்த்தனமாகத் தெரியும்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?