அய்மன் அல்-ஜவாஹிரி Twitter
உலகம்

அமெரிக்காவால் கொல்லப்பட்ட பின்லேடனின் வாரிசு அய்மன் அல் - ஜவாஹிரி யார்?

Govind

அல்கொய்தாவின் தலைவரும், 9/11 பயங்கரவாத நடவடிக்கையை ஏற்பாடு செய்த முக்கிய குற்றவாளியுமான அய்மன் அல்-ஜவாஹிரி, ஆப்கானிஸ்தானில் கடந்த சனிக்கிழமை படுகொலை செய்யப்பட்டார். இக்கொலை அமெரிக்க ஆளில்லா விமானத் தாக்குதல் மூலம் நடத்தப்பட்டது. திங்களன்று, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்த தண்டனைக் கொலையை மீண்டும் உறுதிப்படுத்தினார். மேலும் இறுதியில் "நீதி வழங்கப்பட்டது" என்று அறிவித்தார்.

பாகிஸ்தானின் ஜலாலாபாத்தில் அமெரிக்கப் படைகள் முன்பு ஒசாமா பின்லேடனைப் பின்தொடர்ந்ததைத் தொடர்ந்து, சமீபத்தில் 71 வயதை எட்டிய ஜவாஹிரி, அல்-கொய்தாவின் தளபதியாக ஆனார். ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டு 11 ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த அமைப்பின் உலகளாவிய அடையாளமாக ஜவாஹிரி உருவெடுத்தார். மேலும் அவரது தலைக்கு 25 மில்லியன் டாலர்கள் பரிசுத் தொகையை அமெரிக்கா அறிவித்திருக்கும் அளவிற்கு மிகப்பெரிய பயங்கரவாதியாகத் தலையெடுத்தார்.

ஜவாஹிரி எகிப்தில் மருத்துவர்களைக் கொண்ட நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து இவரும் ஒரு மருத்துவராக வளர்ந்தார். அவர் ரபியா அல் இன்னின் பேரன் ஆவார். மத்திய கிழக்கில் சன்னி இஸ்லாமிய ஆய்வின் மையப்பகுதி மற்றும் இஸ்லாத்தின் மிக முக்கியமான மசூதிகளில் ஒன்றுதான் அல் அஸ்ஹார் எனப்படும் பிரம்மாண்டமான மசூதி. இந்த மசூதியின் இமாம், ஜவாஹிரியின் ஆளுமையில் கணிசமான பங்கை செலுத்தியவர் ஆவார்.

1986 இல் பின் லேடனைச் சந்தித்த பிறகு, ஜவாஹிரி அவருடைய தனிப்பட்ட மருத்துவராகவும் ஆலோசகராகவும் சேர்ந்தார். இப்படி கண் அறுவை சிகிச்சை நிபுணராக இருந்தவர், மூன்றே ஆண்டுகளில் உலகில் மிகவும் தேடப்படும் பயங்கரவாதிகளில் ஒருவராக மாறினார்.

அவர் 1993 இல் எகிப்தில் இஸ்லாமிய ஜிஹாத்தின் கட்டுப்பாட்டை ஏற்றுக் கொண்டவராக மாறினார். மற்றும் 1990 களின் நடுப்பகுதியில் அரசாங்கத்தை கவிழ்த்து ஒரு கடுமையான இஸ்லாமிய அரசை நிறுவுவதற்கான இயக்கத்தில் முக்கிய பங்களிப்பு செலுத்தினார். 1,200க்கும் மேற்பட்ட எகிப்தியர்களின் கொலையில் அவர் பங்கேற்றது கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர், ஜவாஹிரி 2001 ஆம் ஆண்டு அமெரிக்க அரசாங்கத்தின் "அதிகம் தேடப்படும் பயங்கரவாதிகள்" பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு உயர்ந்தார். ஜவாஹிரி இறுதியாக 1998 இல் அல்-கொய்தவையும் எகிப்திய இஸ்லாமிய ஜிஹாத்தையும் இணைத்தார்.

ஆகஸ்ட் 7, 1998 இல் நைரோபி, கென்யா மற்றும் ஆப்பிரிக்காவில் உள்ள டார் எஸ் சலாம், டான்சானியாவில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் தாக்கப்பட்டது. இந்தக் குண்டு வெடிப்பில் ஈடுபட்டதாக ஜவாஹிரி மீது குற்றம் சாட்டப்பட்டது. இதில் 12 அமெரிக்கர்கள் உட்பட 224 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 4,500 பேர் காயமடைந்தனர்.

ஜவாஹிரியின் பயங்கரவாத சதித் திட்டத்தின் உச்சக்கட்டம் செப்டம்பர் 11, 2001 அன்று நடைபெற்றது. அப்போது நியூயார்க்கில் உள்ள உலக வர்த்தக மையம் மற்றும் அமெரிக்காவின் இராணுவத் தலைமையகமான பென்டகனின் இரட்டை கோபுரங்கள் மீதான தாக்குதல்களில் கிட்டத்தட்ட 3,000 பேர் கொல்லப்பட்டனர். வாஷிங்டனை நோக்கிச் சென்ற நான்காவது கடத்தப்பட்ட விமானம், பயணிகள் போராடிய பின்னர் பென்சில்வேனியா அருகே ஒரு மைதானத்தில் விழுந்து நொறுங்கியது.

இந்நிலையில் அவரும் பின்லேடனும் 2001 இன் பிற்பகுதியில் ஆப்கானிஸ்தானில் தாக்குதல் நடத்திய அமெரிக்கப் படைகளிடம் இருந்து தப்பினர்.

மே 2003 இல் சவுதி அரேபியாவின் ரியாத்தில் தற்கொலை குண்டு வெடிப்புகளுக்கு ஏற்பாடு செய்ததாக ஜவாஹிரி கண்டு பிடிக்கப்பட்டார். இந்த தாக்குதலில் ஒன்பது அமெரிக்கர்கள் உட்பட 23 பேர் கொல்லப்பட்டனர். ஜவாஹிரியின் குரல் அடங்கிய ஒலி நாடா சில நாட்களுக்குப் பிறகு இந்த குண்டுவெடிப்பிற்குப் பொறுப்பேற்று வெளியானது.

அதன் பிறகு ஜவாஹிரி அல்-கொய்தாவின் முக்கிய பேச்சாளராக உருவெடுத்தார். 2007 இல் 16 வீடியோக்கள் மற்றும் ஒலிநாடாக்களில் தோன்றி பேசினார். இந்த எண்ணிக்கை பின்லேடன் பேசியதை விட நான்கு மடங்கு அதிகமாகும். இந்தப் பிரச்சாரத்தின் மூலம் அல்-கொய்தா உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களை தீவிரவாதிகளாக ஆட்சேர்ப்பு செய்ய முயற்சித்தது.

ஜவாஹிரி எங்கிருக்கிறார் என்பது பல ஆண்டுகளாக மர்மமாக இருந்தது. ஆனால் அவர் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லையில் பதுங்கியிருப்பதாக நம்பப்பட்டது.

ஜனவரி 2006 இல், ஆப்கானிஸ்தானுடனான பாகிஸ்தானின் எல்லைக்கு அருகே அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதலில் ஜவாஹிரியைக் கொல்ல முயற்சி நடந்தது. இந்த தாக்குதலில் நான்கு அல்-கொய்தா உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர். ஆனால் ஜவாஹிரி உயிர் பிழைத்து இரண்டு வாரங்களுக்குப் பிறகு வீடியோவில் தோன்றியதோடு அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ்ஷை எச்சரித்தார். அவரால் அல்லது "பூமியில் உள்ள அனைத்து சக்திகளும்" புஷ்ஷின் மரணத்தை தடுக்க முடியாது என்று எச்சரித்தார்.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க இராணுவம் வெளியேறி, தலிபான்கள் நாட்டைக் கைப்பற்றிய ஒரு வருடத்திற்குப் பிறகு ஜவாஹிரி இலக்கு வைத்து கொலை செய்யப்பட்டிருக்கிறார்.

இதனால் நீதி கிடைத்து விட்டது என்று கூறிய அமெரிக்க அதிபர், "எவ்வளவு நேரம் எடுத்தாலும், எங்கு மறைந்தாலும் பரவாயில்லை, எங்கள் மக்களுக்கு நீங்கள் அச்சுறுத்தலாக இருந்தால், அமெரிக்கா உங்களை கண்டுபிடித்து அழிக்கும்" என்றும் கூறினார்.

இப்படியாக அல் - கொய்தாவின் இரண்டாவது பெரிய தலைவர் கொல்லப்பட்டிருக்கிறார். பின் லேடன் கொலைக்கு பிறகு அமெரிக்காவிற்கு கிடைத்த பெரும் வெற்றியாகும் இது. அதுவும் ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி நடத்தும் காலத்தில் அமெரிக்க படைகள் அங்கு இல்லாத நேரத்தில் இது நடந்திருக்கிறது. ஏற்கனவே அடையாள இயக்கமாக மாறிவிட்ட அல் கொய்தாவிற்கு இது அந்திமகாலமாக இருக்கும்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?