அக்சஷதா மூர்த்தி
அக்சஷதா மூர்த்தி News Sense
உலகம்

அக்ஷதா மூர்த்தி : 'ராணி எலிசபெத்தை விட அதிக சொத்து' இன்ஃபோசிஸ் மகள் பில்லியரானது எப்படி?

Govind

பிரிட்டனின் கருவூலத்துறை சான்சலராக இருக்கிறார் ரிஷி சுனக். இப்பதவி மற்ற நாடுகளின் நிதி அமைச்சருக்கு நிகரானது. கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினரான ரிஷி சுனக் தற்போது சர்ச்சைக்கு ஆளாகியுள்ளார். அவரது மனைவி அக்ஷதா இந்தியாவின் பில்கேட்ஸ் என்று அழைக்கப்படும் இன்போசிஸ் நாராயண மூர்த்தியின் மகளாவார்.

இன்ஃபோசிஸிஸ் நிறுவனத்தில் அக்ஷதாவிற்கு 0.91% பங்குகள் உள்ளன. இதன் நிகரமதிப்பு 500 மில்லியன் பிரிட்டன் பவுண்டுகள் ஆகும்.

தற்போது தனது மனைவியின் வரி விவகாரங்களை பாதுகாக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு சுனக் ஆளாகியுள்ளார். சுனக் தனது மனைவி, இரு மகள்களுடன் டவுனிங் தெருவில் வசிக்கிறார். ஆனால் அக்ஷதா இன்னும் இந்தியக் குடிமகனாகவே இருக்கிறார்.

இதனால் அக்ஷதா, டோம் அல்லாத அந்தஸ்தை அனுபவிக்கிறார். இதன் பொருள் அவர் தனது சர்வதேச வருமானத்திற்கு இங்கிலாந்தில் வரி செலுத்த வேண்டியதில்லை. உக்ரைன் மீது ரஷ்யா ஆக்கிரமிப்பு போர் நடத்தி வரும் நிலையில் இங்கிலாந்து மற்ற நாடுகளோடு சேர்ந்து பல பொருளாதாரத் தடைகளை ரஷ்யா மீது விதித்திருக்கிறது. ஆனால் இன்ஃபோசிஸ் இன்னும் மாஸ்கோவில் இயங்கி வருவதால் சுனக் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. ஊருக்கு உபதேசம், வீட்டிற்கு விலக்கா என ஊடகங்கள் கண்டித்தன.

ரிஷி சுனக் அமெரிக்காவின் கிரீன் கார்டு வைத்திருப்பதை ஒத்துக் கொண்டிருக்கிறார்.இப்படி அவர் அமெரிக்க குடிமகனாக இருப்பது குறித்து பெரும் சர்ச்சை எழுந்தது. அதே போன்று அவரது மனைவியும் உலகளாவிய வருமானத்திற்காக இங்கிலாந்தில் தற்போது வரி செலுத்துவதாக ஏப்ரல் 8 அன்று கூறியுள்ளார்.

இங்கிலாந்தின் ஸ்கை நியூஸ் தொலைக்காட்சி, அக்ஷதா மூர்த்தியின் குடும்ப செல்வம் குறித்தும், அது எப்படி அவரது கணவரின் அரசியல் வாழ்க்கையை பாதிக்கிறது என்பதையும் விரிவாக அலசியிருக்கிறது.

இந்திய பில்கேட்ஸின் மகள்

அக்ஷதா மூர்த்தி 1980 இல் கர்நாடகாவில் பெற்றோர்களான நாராயணமூர்த்தி மற்றும் சுதா மூர்த்திக்கு பிறந்தார்.

வேலை நிமித்தமாக மும்பைக்கு சென்றபோது, பெற்றோர் ஆரம்பத்தில் அக்ஷதாவையும் அவரது சகோதரர் ரோஹனையும் அவர்களுடன் அழைத்துச் சென்றனர். ஆனால் விரைவில் அவர்களை மீண்டும் கர்நாடகாவிற்கு தங்கள் தந்தை வழி தாத்தா பாட்டியுடன் வாழ அனுப்ப முடிவு செய்தனர்.

ஒரு வருடம் கழித்து 1981 இல் அவரது தந்தை இன்ஃபோசிஸ் நிறுவனத்தை நிறுவினார். அது அவரை இந்தியாவின் பணக்காரர்களில் ஒருவராக மாற்றியது.

எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்கில் முதுகலைப் பட்டம் பெற்ற பிறகு, ஐடி தொழிலில் தோல்வியடைந்த திரு மூர்த்தி, புதிய நிறுவனத்தை அமைப்பதற்காக தனது மனைவியிடமிருந்து 10,000 ரூபாய் கடன் வாங்கினார்.

இன்ஃபோசிஸ் சில ஆண்டுகளில் இந்தியாவில் இருந்து ஐடி சேவைகளை அவுட்சோர்சிங் செய்வதற்கான உலகளாவிய டெலிவரி மாடலை உருவாக்கி, மில்லியன் கணக்கில் டாலரை ஈட்டும் நிறுவனமாக உருவெடுத்தது.

திரு மூர்த்தி 2002 ஆம் ஆண்டு வரை இன்ஃபோசிஸின் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றினார். அதன் பிறகு அவர் நிறுவனத்தின் சேர்மனாக பதவியேற்றார். தற்போது அவர் கௌவர சேர்மனாக இருக்கிறார்.

ஃபோர்ப்ஸ் பத்திரிகை அவரது நிகர மதிப்பை 4.5 பில்லியன் டாலர் எனக் குறிப்பிடுகிறது. டைம் இதழோ அவரை "இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் துறையின் தந்தை" என்று குறிப்பிடுகிறது.

நாராயண மூர்த்தியின் மனைவியான சுதா மூர்த்தி கம்ப்யூட்டர் விஞ்ஞானி மற்றும் பொறியியலாளர் ஆவார். இந்தியாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிந்த முதல் பெண்மணியும் அவர்தான். அவர் இன்ஃபோசிஸிலும் பணிபுரிந்துள்ளார். மேலும் இப்போது ஒரு பணக்கார நன்கொடையாளராகவும் மற்றும் கேட்ஸ் அறக்கட்டளையின் உறுப்பினராகவும் உள்ளார்.

ரிஷி சுனக்கை ஸ்டான்போர்டில் சந்தித்த அக்ஷதா

இந்தியாவில் தனது பள்ளிப் படிப்பை முடித்த பிறகு, கலிபோர்னியாவில் உள்ள தனியார் கிளேர்மாண்ட் மெக்கென்னா கல்லூரியில் பொருளாதாரம் மற்றும் பிரெஞ்சு மொழியைப் படிக்க அக்ஷதா அமெரிக்கா சென்றார்.

பின்னர் ஃபேஷன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டிசைனில் டிசைன் மற்றும் மெர்ச்சண்டைசிங் படிப்பதற்காக லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றார்.

டெலாய்ட் மற்றும் யூனிலீவர் உள்ளிட்ட நிறுவனங்களில் பணிபுரிந்த பிறகு, எம்பிஏ படிக்க ஸ்டான்போர்ட் சென்றார். அங்கு 2005ல் ரிஷி சுனக்கை சந்தித்தார்.

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் பெங்களூரில் திருமணம் செய்து கொண்டனர். அந்த திருமண விழா ஆடம்பரமாக இரண்டு நாள் நடந்தது. பங்கேற்ற விருந்தினர் பட்டியலில் இந்தியாவின் முன்னணி கிரிக்கெட் வீரர்கள் பலர் இருந்தனர்.

திருமணமான அதே ஆண்டில் அவர் தனது சொந்த ஃபேஷன் பிராண்டான அக்ஷதா டிசைன்ஸை நிறுவினார். அதில் அவர் 2011 இல் ஃபேஷன் உலகில் பிரபல பத்திரிகையான Vogue இல் இடம்பெற்றார்.

அவரது சொந்த வணிகம் இருந்த போதிலும், இன்ஃபோசிஸில் அவரது பங்குதான் அவரது செல்வத்தின் பெரும் பகுதியை உருவாக்குகிறது. இது 500 மில்லியன் பவுண்டுகள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது இங்கிலாந்தின் இராணி இரண்டாம் எலிசபத்தின் சொத்தை விட அதிகம்.

அக்ஷதா 2010 இல் அவரது தந்தை துவங்கிய கேடமரன் வென்ச்சர்ஸ் யுகே என்ற நிதி மூலதன வணிக நிறுவனத்தின் இயக்குநராகவும் உள்ளார்.

அவரது கணவர் ரிஷி சுனக் ஒரு இணை உரிமையாளராக மேற்கண்ட நிறுவனத்தில் இருந்தார். ஆனால் 2015 இல் ரிச்மண்ட் தொகுதியில் கன்சர்வேடிவ் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு சற்று முன்பு அவரது பங்குகளை மனைவிக்கு மாற்றினார்.

non-dom status டோம் அல்லாத நிலை என்றால் என்ன?

இதன் பொருள் இங்கிலாந்தில் குடியுரிமை இல்லாதவர்கள அங்கே வசிப்பார்கள். ஆனால் வெளிநாட்டில் தங்களுடைய நிரந்தர வீடு அல்லது வசிப்பிடத்தைக் கொண்டிருப்பதாகக் கருதப்படுகிறார்கள். வெளிநாட்டில் அவர்கள் செய்து ஈட்டும் வருமானத்திற்கு இங்கிலாந்தில் வரி செலுத்த வேண்டியதில்லை என்று அர்த்தம்.

ஒரு நாட்டின் குடியுரிமை என்பது பொதுவாக ஒரு நபரின் தந்தை அந்த நபர் பிறந்த நேரத்தில் அவரது நிரந்தர வீடு இருக்கும் நாட்டைக் குறிக்கிறது. இருப்பினும், இங்கிலாந்தின் உள்துறை அலுவலக வழிகாட்டுதல்களின்படி, அந்த நபர் தனது குடியுரிமை நாட்டிலிருந்து விலகி மீண்டும் திரும்ப விரும்பவில்லை என்றால் அவரது குடியுரிமையை மாற்றிக் கொள்ளலாம்.

வெளிநாட்டில் இருந்து 2,000பவுண்டுக்கு மேல் சம்பாதிப்பவர் மற்றும் டோம் அல்லாத அந்தஸ்து கொண்ட ஒருவர், இந்த வருமானத்தை சுய மதிப்பீட்டு வரிக் கணக்கில் தெரிவிக்க வேண்டும்.

அவர்கள் ஈட்டிய வருமானத்திற்கு இங்கிலாந்தில் வரி செலுத்தலாம் அல்லது வெளிநாட்டிலிருந்து பணம் பெறுவதற்கு வருடாந்திரக் கட்டணம் செலுத்தலாம். அதாவது இங்கிலாந்திற்க்குள் கொண்டு வரப்படும் வருமானத்திற்கு மட்டுமே வரி செலுத்த வேண்டும்.

முந்தைய ஒன்பது வரி ஆண்டுகளில் குறைந்தபட்சம் ஏழு ஆண்டுகளுக்கு இங்கிலாந்தில் வாழ்ந்திருந்தால் அந்த நபருக்கு 30,000 பவுண்டுகள் கட்டணமாக கட்டவேண்டும். அல்லது முந்தைய 14 வரி ஆண்டுகளில் குறைந்தது 12 ஆண்டுகள் இங்கிலாந்தில் வாழ்ந்தால் 60,000 பவுண்டுகள் செலுத்த வேண்டும்.

அதிக வெளிநாட்டு வருமானம் கொண்ட தனிநபர்கள் தங்கள் வரிக் கட்டணத்தைக் குறைப்பதற்கு மேற்கண்ட விதிமுறை உதவுகிறது.

இது நியாயமற்றது என்று விமர்சகர்கள் கூறுகின்றனர். ஏனெனில் பெரும்பாலான மக்களுக்கு பொருந்தும் அதே வரி விதிகளுக்கு உட்படாமல் டோம் அல்லாத அந்தஸ்துள்ளவர்கள் இங்கிலாந்தின் பலன்களை அனுபவிக்க இது அனுமதிக்கிறது.

அக்ஷதா இதற்கிடையில், ஆடம்பர ஜென்டில்மேன் ஆடைகள் நியூ & லிங்வுட் மற்றும் இந்தியாவில் ஜேமியின் இத்தாலிய நிறுவனத்தை இயக்கும் இங்கிலாந்து நிறுவனம், ஆயா ஏஜென்சியான கொரு கிட்ஸ் மற்றும் ஜிம் செயின் டிக்மே ஃபிட்னஸ் உட்பட, குறைந்தது ஆறு இங்கிலாந்து நிறுவனங்களில் பங்குகளை வைத்திருப்பதாக பட்டியலிடப்பட்டுள்ளது.

அவருக்கும் அவரது கணவருக்கும் நான்கு வீடுகள் உள்ளன. இதில் கென்சிங்டனில் 7 மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள ஐந்து படுக்கையறை வீடு, லண்டனின் ஓல்ட் ப்ரோம்ப்டன் சாலையில் ஒன்று, அவரது வடக்கு யார்க்ஷயர் தொகுதியில் 1.5 மில்லியன் பவுண்டு மதிப்புள்ள மாளிகை மற்றும் கலிபோர்னியாவில் 5.5 மில்லியன் பவுண்டு மதிப்புள்ள சாண்டா மோனிகா பென்ட்ஹவுஸ் என வீடுகள் உள்ளன. இவர்களுக்கு கிருஷ்ணா, அனுஷ்கா என இரு மகள்கள் உள்ளனர்.

கடும் சர்ச்சையில் ரிஷி சுனாக்

கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் போது அவரது ஃபர்லோ திட்டத்திற்கு பெற்ற பரவலான பாராட்டுகளைத் தொடர்ந்து, ரிஷி சுனக் பிரதமர் போரிஸ் ஜான்சனின் வாரிசாக அறிவிக்கப்பட்டார்.

கோவிட் பொதுமுடக்கத்தின் போது டவுனிங் ஸ்ட்ரீட் மற்றும் வைட்ஹால் முழுவதும் நடைபெற்ற விருந்துகளுக்காக 'பார்ட்டிகேட்' ஊழலில் திரு ஜான்சனின் தொடர்பு மற்றும் காவல்துறையின் விசாரணை, அவருக்குப் பதிலாக யார் பிரதமராக முடியும் என்ற ஆர்வத்தை அதிகரித்தது.

ஆனால் சுனக்கின் மனைவியின் குடும்பத்தின் பெரும் செல்வம் பற்றிய கேள்விகள் சமீபத்திய வாரங்களில் அவரது வாய்ப்புகளைத் தடுக்கின்றன.

இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் பிற மேற்கத்திய கூட்டாளிகள் உக்ரைனில் நடந்த போருக்கு பதிலடியாக ரஷ்யாவிலிருந்து வெளியேறிய போதிலும், இன்ஃபோசிஸ் நிறுவனம் இன்னும் மாஸ்கோவில் செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

பின்னர் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ரஷ்யாவில் உள்ள ஊழியர்களை வெளிநாட்டில் உள்ள கிளைகளுக்கு மாற்றுவதாக உறுதிப்படுத்தினார்.

இந்த வாரம் தி இன்டிபென்டன்ட் பத்திரிகை, ஒரு இந்தியக் குடிமகனான திருமதி மூர்த்திக்கு 'நாம் டோம்' அந்தஸ்து இருப்பதாகத் தெரிவித்தது. இது முன்னர் இங்கிலாந்தில் வரி ஏய்ப்புகளுக்குப் பயன்படுத்தப்பட்டது.

து எப்படியோ இன்ஃபோசிஸ் நிறுவனம் இந்தியாவில் பங்குதாரர்களுக்கு நேர்மையாக செயல்படும் நிறுவனம், நாராயணமூர்த்தி ஒரு ரோல்மாடல் என்றெல்லாம் சொல்லப்படுகிறது. ஆனால் அக்ஷதாவின் கதையைப் பார்த்தால் பில்லியனர்கள் என்றாலே அவர்கள் வரி மோசடி இல்லாமல் செல்வத்தை ஈட்டமுடியாது என்பது தெரிகிறது. இங்கிலாந்தில் சுதந்திர ஊடகம் இருப்பதால் இத்தகைய மோசடிகள் வெளியே வருகிறது. நம் நாட்டு முதலாளிகள் குறித்து இப்படி வெளிநாட்டு பத்திரிகை மூலம்தான் அறிய வேண்டுமென்ற நிலையில் நாம் இருக்கிறோம்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

உள்நாட்டு இந்திய விமானங்களில் எவ்வளவு மது எடுத்துச் செல்லலாம்?

”நீட் தேர்வு மாநில உரிமைக்கு எதிரானது” - மாணவர்களிடம் விஜய் பேசியது என்ன?

உலகில் மிகக் குறைவாகப் பார்வையிடப்பட்ட நாடுகள் இவைதான்!

அமெரிக்காவில் இன்றும் கழுதைகள் மூலம் அஞ்சல் அனுப்பப்படுகிறதா! ஏன் இந்த நடைமுறை?

மெசேஜிங் செயலி விற்று கோடீஸ்வரரான இளைஞர் - எப்படி தெரியுமா?