பத்தாம் வகுப்புத் தேர்வில் எழுத்துப் பிழைகளுக்கு ஒரு சில மதிப்பெண்கள் பறிபோகும். அது பதினோராம் வகுப்பில் நீங்கள் எடுக்கும் பாடப் பிரிவைப் பாதிக்கலாம்.
ஆனால் பங்குச் சந்தையில் ஒரு தட்டச்சுப் பிழை உங்கள் பணத்தை நேரடியாகப் பாதிக்கும். ஈக்விட்டி பங்குகளில் வர்த்தகம் செய்பவர்களுக்குக் கூட அந்த பங்கு விலை அளவுக்கு மட்டுமே பாதிப்பு ஏற்படும். ஆனால் ஃப்யூச்சர் மற்றும் ஆப்ஷன்களில் வர்த்தகம் மேற்கொள்பவர்கள் தட்டச்சுப் பிழை செய்தால் கோடிக் கணக்கில் நஷ்டமாகும் என்பதற்கு சமீபத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
கடந்த ஜூன் 2ஆம் தேதி மதியம் 2.37 மணி முதல் 2.39 மணிக்குள் ஒரு பங்குச் சந்தை டிரேடர் (வர்த்தகர்) 25,000 லாட் நிஃப்டி (12.5 லட்சம் பங்குகள்) கால் ஆப்ஷன்களை 14,500 ஸ்டிரைக் ரேட்டில் 15 பைசாவுக்கு விற்றுவிட்டார். அப்போது ஒரு லாட் நிஃப்டி 2,100 ரூபாய்க்கு விற்று வந்தது. அந்த நேரத்தில் நிஃப்டி 16,600க்கு வர்த்தகமாகி வந்தது.
மிகக் குறைந்த ஸ்டிரைக் ரேட்டை வைத்து கால் ஆப்ஷன்களை விற்ற டிரேடர், தன் தவறை உணர்ந்து சட்டென தன் பொசிஷனை ஸ்கொயர் ஆஃப் செய்ய அதிக விலை கொடுத்து நிஃப்டி லாட்களை வாங்கினார்.
அதாவது ஒரு லாட்டை15பைசாவுக்கு விற்ற நிஃப்டி ஆப்ஷனை, 2,100 ரூபாய்க்கு வாங்கினார். இதனால் அந்த டிரேடருக்கு சுமார் 200 முதல் 250 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு இருக்கலாம் என பல வலைதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
உண்மையில் அந்த டிரேடர் 16,500 ஸ்டிரைக் ரேட் வைத்து கால் ஆப்ஷனை விற்க முயன்ற போது இந்த தவறு நடந்திருப்பதாக அச்செய்திகளில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.
இது போன்ற தட்டச்சுத் தவறுகள் கடந்த காலங்களிலும் நடந்துள்ளது. கடந்த 2012 அக்டோபரில் எம்கே குளோபல் நிறுவனத்தைச் சேர்ந்த டிரேடர் மேற்கொண்ட ஒரு தவறான டிரேடால் நிஃப்டி கிட்டத்தட்ட 15 சதவீதம் சரிந்தது நினைவுகூரத்தக்கது.
கடந்த 2014ஆம் ஆண்டு ஜப்பான் பங்குச் சந்தையில் ஒரு தவறான டிரேட் மேற்கொள்ளப்பட்டதால் சுமார் 600 பில்லியன் அமெரிக்க டாலர் நஷ்டம் ஏற்பட்டது
கடந்த 2007ஆம் ஆண்டு 18,149 அவுன்ஸ் எனத் தட்டச்சு செய்வதற்குப் பதிலாக 18,149 லாட்கள் என வர்த்தகம் மேற்கொண்டதால், தங்க ஃப்யூச்சரின் விலை காமெக்ஸ் சந்தையில் 1.6 சதவீதம் விலை சரிந்தது. ஆனால் நியூயார்க் சந்தையில் தங்க ஃப்யூச்சர்களின் வால்யூம் அதிகரித்தது.
இப்படிப்பட்ட தவறுகள் நடக்காமல் இருக்க, தட்டச்சு தவறுகளால் ஏற்படும் நஷ்டத்தைத் தவிர்க்க சில தரகர்கள் மற்றும் பங்குச் சந்தைகள் தங்களின் அமைப்பிலேயே இது போன்ற தவறான பொருந்தாத ஆர்டர்களை ஏற்றுக் கொள்ளாதவாறு சில ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். சிலர், இப்படிப்பட்ட தவறுகளுக்குக் கூட காப்பீடு செய்து வைத்துள்ளனர்.
ஒரு வார்த்தைப் பிழையால், வாழ்க்கையே பிழையாகிவிடும் என்கிற பழமொழி யாருக்குப் பொருந்துமோ இல்லையோ, இந்த வர்த்தகருக்கு நறுக்கெனப் பொருந்தும்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust