ஏர் இந்தியா டாடா குழுமத்தின் கையை விட்டுச் சென்றாலும், டாடா குழுமத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் ஜே ஆர் டி டாடா எந்தவித சுணக்கத்தையும் காட்டவில்லை. தொராப்ஜி டாடா மற்றும் ஜே ஆர் டியின் தந்தை ரத்தன்ஜி தாதாபாய் டாடா, டிஸ்கோவை (TISCO) லாபகரமாக இயக்க அரும்பாடுபட்டனர், ஆனால் இரண்டாம் உலகப் போர் அந்நிறுவனத்தின் வருவாயையும், லாபத்தை எகிறச் செய்தது.
ஐரோப்பாவில் படித்து வளர்ந்த ஜே ஆர் டி, டாடா நிறுவனத்தின் அன்றாட நடவடிக்கைகளில் பல மாற்றங்களைக் கொண்டு வந்தார்.
டாடா குழுமத்தில் நிர்வாக இயக்குநருக்கு மட்டும் என பிரத்யேகமாக ஒரு லிஃப்ட் இருந்தது. உயரதிகாரிகளுக்கு மட்டுமென தனி உணவறை, கழிவறை பராமரிக்கப்படும் நடைமுறைகளை நிறுத்தினார். டாடா குழுமத்தில் அதுவரை எடுக்கபடாத் மாபெரும் முடிவு ஒன்றை எடுத்தார் ஜே ஆர் டி.
அதுநாள்வரை டாடா குழுமத்தின் தலைவர் தான் அனைத்து டாடா நிறுவனங்களின் தலைவராக இருந்தனர். அந்த கலாச்சாரத்தை உடைத்து, ஒவ்வொரு டாடா நிறுவனத்துக்கும் தனித்தனி தலைவர்களை நியமித்தார். இது அடுத்தகட்டத்தில் தலைவர்களை உருவாக்கும் என்றும், நிர்வாக ரீதியில் குழுமத்துக்குள் நிலைத்தன்மையைக் கொண்டு வருமென அதைச் செயல்படுத்தினார். அதுதான் பின்னாளில் பல பிரமாதமான, துறை சார் ஜாம்பவான்களை டாடா நிறுவனத் தலைவர்களாக உருவாக வழிவகுத்தது.
நிர்வாகத்தைத் தாண்டி, வியாபார விரிவாக்கங்களிலும் வேகம் காட்டினார் ஜே ஆர் டி, அப்படி அவர் கவனத்தை ஈர்த்த ஒரு முக்கிய துறை தான் ரசாயணம்.
1930களில் கூட இந்தியாவுக்கு அத்தியாவசியத் தேவையான சோடா ஆஷ், சமையல் உப்பு, காஸ்டிக் சோடா ஆகிய ரசாயணங்கள் பெரிய அளவில் இந்திய நிறுவனங்களால் தயாரிக்கப்படவில்லை. அரும்பாடுபட்டு சேர்க்கப்படும் அந்நிய செலாவணியைக் கொட்டிக் கொடுத்து வெளிநாடுகளிலிருந்துதான் இறக்குமதி செய்யப்பட்டன. இந்திய ரசாயண சந்தை பிரிட்டன், ஜெர்மனி ஆகிய நாடுகளின் வியாபார களமாக இருந்தது. அவர்கள் தங்களின் தொழிலறிவை இந்தியாவோடு பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை.
பிரிட்டனோ, 1929ஆம் ஆண்டு டாரிஃப் ஆணையத்தின் மூலம், இந்தியா முன்னேற வேண்டுமானால், ரசாயண தொழிற்சாலைகளில் முதலீடு செய்ய வேண்டுமென குறிப்பிட்டிருந்தது.
அந்த நேரம் பார்த்து, பரோடாவின் மகாராஜா சாயாஜிராவ் ஒரு ரசாயண ஆலையை தன் சமஸ்தானத்துக்குள் நிறுவ விரும்பினார். அது குறித்து ஜே ஆர் டிக்கு கடிதமும் எழுதினார். சாயாஜிராவ் மற்றும் ஜஹாங்கீர் டாடா ரசாயண ஆலை குறித்து விவாதித்துக் கொண்டிருக்க, கபில் ராம் வகீல் என்கிற மூன்றாவது நபர் இதில் களமிறங்கினார்.
நீண்ட நெடிய ஆராய்ச்சிப் பயணத்துக்குப் பிறகு, இந்தியாவின் தெற்கு மற்றும் கிழக்கு கடற்கரையில் இருக்கும் தண்ணீரை விட, மேற்கு கடற்கரையில் இருக்கும் தண்ணீர் தான் அதிக உப்புத்தன்மை கொண்டது என்பதைக் கண்டறிந்தார். மேற்குப் பகுதி சரி, அங்கு எந்த இடத்தில் நிறுவுவது என அடுத்த கேள்வி எழுந்தது.
கட்ச் பிராந்தியத்தின் கடைசி முனையாக இருந்த மிதாபூரில் ஆலை நிறுவ தீர்மானிக்கப்பட்டது. அது சாயாஜிராவின் சமஸ்தானத்துகுட்பட்டதாகவும் அமைந்தது.
டாடா ஸ்டீலுக்கு எந்த இரண்டாம் உலகப் போர் தப்பிப்பிழைக்க வழிவகுத்ததோ, அதே உலகப் போர் காரணமாக, மிதாபூரில் டாடா கெமிக்கல்ஸுக்கான பணிகளை வழக்கம் போல மேற்கொள்ள முடியவில்லை. உலகப் பொருளாதாரத்தில் கப்பல் போக்குவரத்தை மட்டுமே மிகப்பெரிய அளவில் நம்பி இருந்த காலமது.
போர் நடப்பதால், வணிகக் கப்பல்களும் தாக்கப்படும் அபாயம் நிலவியது. அதையும் தாண்டி ஜே ஆர் டி துணிச்சலாக எந்திரங்களுக்கு ஆர்டர் கொடுத்தார். அனுப்பி வைக்கப்பட்ட எந்திரங்கள் போரின் தாக்குதலில் சிக்கி மூழ்கடிக்கப்பட்டன. இரண்டாவது முறை கொடுத்த ஆர்டர்களும் இந்தியா வந்து சேரவில்லை.
மீண்டும் ஆர்டர் பணிகள் தொடங்கின. ஒருவழியாக பம்பாய் வந்து சேர்ந்த எந்திரங்கள், மிதாபூர் ஆலைக்கு கொண்டு வரப்பட்டன. அவ்வியந்திரளைக் கொண்டு நாள் ஒன்றுக்கு 200 டன் சோடா ஆஷ் தயாரிக்க முடியும். நீரில் உள்ள அமிலத்தன்மையைக் குறைப்பது, சாய ஆலைகள், உரத் தொழிற்சாலைகள், உணவுப் பொருட்கள் என பல தொழிற்சாலைகளில் சோடா ஆஷ் ரசாயணம் அத்தனை அவசியமானது. எனவே ஜே ஆர் டி சோடா ஆஷின் தினசரி உற்பத்தியை 400 டன்னாக அதிகரிக்க விரும்பினார்.
அதற்கு சரியான தொழில்நுட்பம் மற்றும் செய்முறையில் நுபுணத்துவமும் தேவை என்பதையும் உணர்ந்திருந்தார். ஒரு ஜப்பான் நிறுவனத்தோடு இது தொடர்பாக பேசி வந்தார் ஜே ஆர் டி. ஆனால் அவர்களும் தங்கள் தொழில்நுட்பத்தைப் பகிர்ந்து கொள்ளத் தயாராக இல்லை.
அமெரிக்காவில் ரசாயண பொறியியல் படித்துவிட்டு, நல்ல வாய்ப்புக்காக இந்தியர் ஒருவர் காத்திருப்பதாகவும், 31 வயதான அவர் கப்பலில் பயணித்துக் கொண்டிருப்பதாகவும் ஜே ஆர் டிக்கு தெரிய வந்தது.
ஜெர்மனியில் சோடா ஆஷ் தயாரிக்கும் தொழில்நுட்பத்தைக் கற்றுக் கொண்டு வருமாறு அவருக்கு செய்தி அனுப்பினார் ஜே ஆர் டி. ஜெர்மனியில் தனக்கு போதிய ஆதரவு கிடைக்கவில்லை என இந்தியா வந்த உடன், ஜே ஆர் டிக்கு தெரியப்படுத்தினார். அவர் தான் பின்னாளில் டாடா கெமிக்கல்ஸ் நிறுவனத்தை உலகப் புகழ்பெறச் செய்த, ஜே ஆர் டி டாடாவின் அருமைத் தளபதிகளில் ஒருவரான தர்பாரி சேத்.
ஜே ஆர் டியுடனான முதல் சந்திப்பிலேயே ‘வெளிநாட்டு நிறுவனங்களை நம்பி பயனில்லை' என்றார். மேலும் நாமே நாள் ஒன்றுக்கு 400 டன் சோடா ஆஷ் தயாரிக்கும் ஆலையை நிறுவலாம் என்றும் கூறினார். டாடா செயற்குழு முன்னிலையில் தன் திட்டத்தை விளக்குமாறு கூறினார் ஜே ஆர் டி.
தர்பாரி சேத்தின் திட்டத்தை விளக்கமாகக் கேட்ட டாடா குழுவுக்கு, அது சரிப்பட்டு வருமெனத் தோன்றவில்லை. 16 பேரில் பெரும்பாலானோர் யோசனையை நிராகரித்தனர். ஆனால் ஜே ஆர் டி, தர்பாரி சேத்தை முழுமையாக ஆதரித்தார்.
தான் விரும்பிய படி ஆலையை கட்டமைக்குமாறு தர்பாரி சேத்துக்கு முழு சுதந்திரம் கொடுத்தார் ஜே ஆர் டி. 1939ஆம் ஆண்டு டாடா கெமிக்கல்ஸ் பிறந்தது.
இந்தியாவில் இரும்பு ஆலையின் தலைநகர் ஜாம்ஷெட்பூர் என்றால், இந்திய ரசாயணத் துறையின் தலைநகர் மிதாபூரென்று பெயர் எடுத்ததற்கு தர்பாரி சேத்தும், ஜஹாங்கீர் டாடாவும் தான் காரணம். 2019 - 20 நிலவரப்படி இந்த ஆலை, உலகிலேயே மிக அதிக அளவில் சோடா ஆஷ் (3,670 கிலோ டன்) மற்றும் சோடியம் பைகார்பொனேட் (222 கிலோ டன்) ரசாயணங்களை அதிகம் உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது.
முந்தைய பகுதியைப் படிக்க
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust