JRD Tata
டாடா குழுமம் வரலாறு : டாடாவை வம்பிற்கு இழுத்த மொரார்ஜி தேசாய் அரசு| பகுதி 19
டாடா குழுமத்தை ஒரு பெரும் வியாபார சாம்ராஜ்ஜியமாக வளர அடித்தளமிட்ட, டாடா அயர்ன் அண்ட் ஸ்டீல் நிறுவனத்தை கையகப்படுத்த முயன்றது இந்திய அரசு. அதை விட கொடுமை என்ன என்றால், அப்படி கையகப்படுத்தப்படும் நிறுவனத்தை, ஜே ஆர் டியை வைத்து நிர்வகிக்க விரும்பியது.
அப்போது 1977ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், இந்திரா காந்தியை முன்னிலைப்படுத்திய காங்கிரஸ் கட்சி தோல்வியுற்று, ஜனதா கட்சி வென்று, மொரார்ஜி தேசாய் தலைமையில் ஆட்சி நடந்து கொண்டிருந்த காலம். அப்போது அரசு இரும்பு போன்ற சுரங்கத் தொழில்கள், கார் மற்றும் இருசக்கர வாகன உற்பத்தி, சிமென்ட் போன்ற துறைகளை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர விரும்பியது.
JRD Tata
டாடா குழுமத்துக்கும் அரசுக்குமான புகைச்சல்
இந்திய அரசில் அமைச்சராக இருந்த ஜார்ஜ் ஃபெனாண்டஸ், ஒரு நாள் ஜஹாங்கீர் டாடாவை ஒரு தேநீர் விருந்துக்கு அழைத்தார். அவர் அழைப்பை ஏற்று, அவர் அலுவலகத்துக்குள் நுழைந்த போது, அவரோடு மத்திய இரும்பு மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் பிஜூ பட்நாயக்கும் உடன் இருந்தார்.
மெல்ல இரும்பு ஆலையை அரசுடமையாக்கும் திட்டத்தை ஜே ஆர் டியிடம் தெரிவித்தனர். மேலும் இந்தியாவில் இரும்பு சுரங்க நிறுவனங்களை எல்லாம் கையகப்படுத்தி, ஒரே நிறுவனமாக ஒருங்கிணைத்து அதை நிர்வகிக்கும் பொறுப்பை ஜே ஆர் டி ஏற்க வேண்டும் என்று கோரினர். ஜே ஆர் டி சற்றே அதிர்ந்து போனார்.
இந்த சம்பவத்துக்கு முன், பிஜு பட்நாயக், டாடா ஸ்டீலின் விரிவாக்கத் திட்டங்கள் ஒடிஷாவை நோக்கி இருக்க வேண்டும் என்று விரும்பினார். ஆனால் டாடா ஸ்டீலின் அசைக்க முடியாத தலைவராக இருந்த ருஸி மோடி அதற்கு சம்மதிக்கவில்லை. இரு பிடிவாதக்காரர்களினால், இந்த புகைச்சல் டாடா குழுமத்துக்கும் அரசுக்குமான புகைச்சலானது.
மொரார்சி தேசாய்
இந்திரா காந்தி அரசுக்கும், மொரார்சி தேசாய் அரசுக்குமான வேறுபாடு என்ன ?
பஜாஜ் ஆட்டோஸ் நிறுவனத்தையும் அரசு கையகப்படுத்த விரும்பியது, சமீபத்தில் காலமான, அந்நிறுவனத்தின் தலைவராக இருந்த ராகுல் பஜாஜ் அரசின் முடிவுக்கு எதிராக கடுமையாக போராடினார்.
அதிர்ஷ்டவசமாக பத்திரிகைகள் இச்செய்தியை கையில் எடுத்து காரசார விவாதங்களோடு பிரசுரித்தன. மொரார்ஜியின் அரசும் இப்படி நிறுவனங்களை கையகப்படுத்தும் என்றால், இந்திரா காந்தி அரசுக்கும், மொரார்சி தேசாய் அரசுக்குமான வேறுபாடு என்ன என கேள்வி எழுப்பின. இதற்கு எல்லாம் முத்தாய்ப்பாக, டாடா இரும்பு ஆலையின் ஊழியர்கள், அரசு, டாடா ஸ்டீலை கையகப்படுத்துவதை எதிர்த்தனர்.
கடைசியாக, மொரார்ஜி இந்த திட்டத்திலிருந்து பின் வாங்குமாறு பீஜு பட்நாயக் மற்றும் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸிடம் கூற பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. நேர காலமோ, அதிர்ஷ்டமோ டாடாவின் இரும்பு ஆலை தப்பியது. ஆனால் பிரச்சனை வேறொரு வடிவத்தில் ஜே ஆர் டியைச் சூழ்ந்தது.
JRD Tata
Newssense
ஜே ஆர் டி என்கிற வசீகர சக்தி வயதின் காரணமாக திணறிக் கொண்டிருக்கிறது
ஜே ஆர் டியின் தலைமையின் கீழ், டாடா கெமிக்கல்ஸ் நிறுவனத்தை - தர்பாரி சேத், டெல்கோவை - சுமந்த் மூல்காவுகர், டாடா ஸ்டீலை ருசி மோடி, இந்தியன் ஹோட்டல்ஸை (தாஜ் ஹோட்டல்கள்) அஜீத் கேர்கர், டிசிஎஸ் நிறுவனத்தை ஃபகிர்சந்த் கோலி என பல்வேறு ஜாம்பவான்களால் தனித்தனியாக நிர்வகிக்கப்பட்டு வந்தன. ஒருகட்டத்தில் டாடா குழுமத்துக்குள் இருக்கும் நிறுவனங்களே ஒன்றோடொன்று மோதிக் கொள்ளத் தொடங்கின.
உதாரணத்துக்கு டாடா கெமிக்கல்ஸ் மற்றும் டாடா ஸ்டீல் ஆகிய நிறுவனங்களும் சிமென்ட் உற்பத்தியில் இறங்க விரும்பின. ஆனால் ஏற்கனவே டாடா ஏசிசி என்கிற பெயரில் சிமெண்ட் வியாபாரத்தில் இருந்தது. 1919ஆம் ஆண்டு முதல் டாடா பவர் நிறுவனம் மின்சார உற்பத்தியில் ஈடுபட்டு வரும் போதே மறுபக்கம் டாடா ஸ்டீல் மின்சார வியாபாரத்தில் குதிக்க விரும்பியது.
போதாக்குறைக்கு டாடா இண்டஸ்ட்ரீஸ் மற்றும் டாடா சன்ஸ் லிமிடெட் ஆகிய இரு தாய் நிறுவனங்கள் தான் மற்ற டாடா நிறுவனங்களை
கட்டுப்படுத்தின. ஆனால் எதார்த்தத்தில் அத்தாய் நிறுவனங்களிடம், தங்கள் துணை நிறுவனங்களின் பங்குகள் போதிய அளவுக்கு இல்லை.
ஒரு கட்டத்தில், டாடா அயர்ன் அண்ட் ஸ்டீல் நிறுவனத்தில் டாடாவிடம் இருக்கும் பங்குகளை விட, பிர்லா குழுமம் அதிக பங்குகளை வைத்திருந்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். குழுமத்துக்குள் நடக்கும் இந்த மோதலை தடுக்க வேண்டிய கட்டாயம் எழுவதை ஜே ஆர் டி உணர்ந்திருந்தார். மேலும் ஜே ஆர் டி என்கிற வசீகர சக்தி வயதின் காரணமாக திணறிக் கொண்டிருப்பதையும் பலரால் உணர முடிந்தது.
ராஜிவ் காந்தி
ராஜிவ் காந்தி பிரதமரானார்
1983ஆம் ஆண்டு, பிர்லா குழுமத்தின் பிதாமகர் ஜி டி பிர்லாவிந் மறைவைத் தொடர்ந்து, அக்குழுமத்தின் அடுத்த வாரிசு யார் என்கிற கேள்வி எழுந்தது. ஜஹாங்கீர் டாடாவின் முதுமை காரணமாக தன்னிச்சையாக டாடா குழுமத்தை நோக்கியும் அந்த கேள்வி எழுந்தது.
இதற்கிடையில், டாடா குழுமம் வெளிநாடுகளிலும் ஹோட்டல்களை வாங்கி தன் வியாபாரத்தை விரிவுபடுத்தியது. டாடா கெமிக்கல்ஸ் நிறுவனம் ஐயோடைஸ்டு உப்பு என்கிற விளம்பரத்தோடு இந்திய சந்தையில் தன் பிராண்டெட் உப்பை அறிமுகப்படுத்தி சக்கைபோடு போட்டது.
மறு பக்கம் இந்திய அரசியலில் இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டு, அவரது மகன் ராஜிவ் காந்தி பிரதமரானார்.
முந்தைய பகுதியைப் படிக்க
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust

