தொடக்கத்தில் திருபாய் அம்பானியோடு வியாபாரம் செய்யவே பயந்த அமெரிக்காவின் டூ பாண்ட் நிறுவனம், 1970களின் இறுதியில், அந்நிறுவனத்தின் ஜெர்மனி ஆலையின் சில மாத மொத்த பாலியஸ்டர் உற்பத்தியையும் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கே விற்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் இந்தியாவின் மிகப்பெரிய பாலியஸ்டர் இறக்குமதியாளரானது ரிலையன்ஸ் நிறுவனம்.
1967ஆம் ஆண்டு முடிவிலேயே 90 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டிருந்தது. 13 லட்சம் ரூபாய் லாபம் பார்த்தது நரோடா ஆலை. இந்த நரோடா நூற்பாலையைத் தான், 1975ஆம் ஆண்டு உலக வங்கியிலிருந்து இந்தியாவுக்கு வந்த தொழில்நுட்பக் குழு சுற்றிப் பார்த்துவிட்டு, வளர்ந்த நாடுகளுக்கு இணையாக இந்தியாவில் இருக்கும் உயர்தர நூற்பாலை என்று பாராட்டியது குறிப்பிடத்தக்கது.
இதே காலகட்டத்தில்தான், மஸ்ஜித் பந்தரிலிருந்த தன் ரிலையன்ஸ் அலுவலகத்தை, கொஞ்சம் வசதியான இடமாகப் பார்த்து தோபி தலாவுக்கு மாற்றினார் திருபாய் அம்பானி. 1968ஆம் ஆண்டு வேணிலால் எஸ்டேட்ஸிலிருந்து, அல்டா மவுண்ட் பகுதியில் வேறு ஒரு வசதியான வீட்டுக்குக் குடியேறியது திருபாய் அம்பானியின் குடும்பம். திருபாய் தனக்கென ஒரு சொந்த காரை வாங்கிக் கொண்டதும் இந்த காலகட்டத்தில்தான். அதுவரை பேருந்து, ரயில் என்றுதான் பயணம் செய்து கொண்டிருந்தார் திருபாய். கிட்டத்தட்ட இரு தசாப்த காலத்துக்குப் பிறகு, 1988ஆம் ஆண்டு தான் 17 அடுக்கு வீடான 'சீ விண்ட்'-ல் குடியேறியது அம்பானி குடும்பம்.
ரிலையன்ஸ் நிறுவனத்தைக் குறித்து நாம் இவ்வளவு பார்க்கிறோமே, அதை உருவாக்கிய திருபாய் அம்பானி எப்படிப்பட்டவர்? அவரது குணாதிசயங்கள் என்ன? சதா சர்வ காலம் வியாபாரத்தைக் கட்டிக் கொண்டு வாழ்பவரா? குழந்தைகளை எப்படி வளர்க்க விரும்பினார் திருபாய்?
என்ன தான் திருபாய் மாபெரும் தொழிலபதிராக வளர்ந்தாலும், வியாபாரத்திலும் ஆலையிலும் ஆயிரத்து எட்டு பிரச்சனைகள் சூழ்ந்தாலும்... ஞாயிற்றுக்கிழமைகளை குடும்பத்தோடு மகிழ்ச்சியாகக் கழிக்கவே முயன்றார்.
ஏட்டுக் கல்வி மட்டும் வேலைக்கு ஆகாது என்பதை தன் சொந்த ஜீவிதம் கொண்டு உலகுக்கு உணர்த்திய திருபாய், தன் பிள்ளைகள் ஏட்டுச் சுரைக்காய்களாக இருக்கக் கூடாது என்று விரும்பினார்.
தன் பிள்ளைகளின் 360 டிகிரி வளர்ச்சிக்காக, மஹேந்திர வியாஸ் என்கிற நபரை நியமித்ததாக முகேஷ் அம்பானியே கூறியுள்ளார். கல்வி தவிர, திருபாயின் குழந்தைகளை வெளியே அழைத்துச் செல்வது, ஹாக்கி, கால்பந்தாட்டம் போன்ற விளையாட்டுக்களை கற்றுக் கொடுப்பது, வெகுஜன மக்களோடு மக்களாக, இந்திய மக்களின் வாழ்கையை இயல்பாகக் காட்டுவது அவர் பணியாக இருந்தது.
ஆரம்பத்தில் வேகத்தின் ரசிகனாக இருந்த திருபாய், நாளடைவில் கிளாஸான மாஸான கார்களைக் காதலித்தார். முதலில் ஃபியட் காரை வாங்கியவர், பிறகு மெர்சிடஸ் பென்ஸையும்,1970களில் கெடிலாக் (Cadillac) என்கிற சொகுசு காரையும் வாங்கினார். இன்று எப்படி ரோல்ஸ் ராய்ஸ் காரை எல்லோரும் வாங்கிவிட முடியாதோ, அப்படி அப்போது கெடிலாக் கார்களை இந்தியாவின் ஆகப் பெரிய பிரபலங்கள் கூட வாங்க முடியாத அளவுக்கு காஸ்ட்லி கார் அது. இது போக மகாராஷ்டிரா ஆளுநரின் ஹெலிபேடை, ஏதோ சொந்தக்காரர்களின் பார்கிங் ஏரியாவை பயன்படுத்துவது போல திருபாய் அம்பானி பயன்படுத்தியதெல்லாம் தனி கூத்து.
என்னதான் திருபாய் அம்பானி, நூற்பாலை அதிபர்களில் ஒருவரானாலும், லாபங்களை கொட்டித் தீர்த்தாலும், மும்பையின் முதலாளிகள் வட்டாரத்தில் அவர் தொடர்ந்து தனித்துவிடப்பட்டார் என ஒரு வாதமும், திருபாய் தன்னை தனிமையாகவே வைத்துக் கொண்டார் என மற்றொரு வாதமும் முன்வைக்கப்படுவதுண்டு.
அம்பானி... கோத்ரெஜ், டாடா, வாடியா போலொரு பார்சி அல்ல என்பதால் ஒதுக்கிவைக்கப்பட்டதாகச் சிலர் வாதிடுகின்றனர். மேலும், தொழில் ரீதியில் எதிரும் புதிருமாக இருந்த நுஸ்லி வாடியாவை பல இடங்களில், பல முறை திருபாய் அம்பானி தன் அரசியல் செல்வாக்கால் அலறவிட்டதனால்தான் பார்சிகள் மத்தியில் அம்பானியை எவரும் மதிக்கவில்லை என ஒரு குற்றச்சாட்டும் வைக்கப்படுகிறது.
பின்னாளில், இந்தியாவின் முன்னணி நிதிசார் நாளிதழ் ஒன்றுக்கு கொடுத்த பேட்டியில் கூட, திருபாய் அம்பானி தனக்கெதிராக மேற்கொண்ட அரசியல் காய் நகர்த்தல்கள், தனக்கு எதிராக விதிகளை மாற்றியமைத்ததைக் குறிப்பிட்டார் நுஸ்லி வாடியா. அதே நேரத்தில், திருபாய் அம்பானி போலப் பங்குச் சந்தையைப் பயன்படுத்தி, வங்கிகளின் கடன் தொல்லையிலிருந்து விடுபட்டு வியாபாரம் செய்து சாதித்தவர்கள் அரிது என அவரை பாராட்டவும் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust