சில தினங்களுக்கு முன்பு தான் உலகின் நம்பர் 1 பணக்காரரான எலான் மஸ்க் ட்விட்டரை வாங்குவதற்கான திட்டத்தை விளக்கிய போது, அதை ட்விட்டர் இயக்குநர்கள் குழு ஏற்றுக் கொண்டது.
ட்விட்டர் நிறுவனத்தை வாங்க சுமார் 44 பில்லியன் டாலர் பணத்தை எலான் மஸ்க் ஏற்பாடு செய்தார். அதில் 12.5 பில்லியன் டாலர் கடனுக்கு டெஸ்லா நிறுவனப் பங்குகளைப் பணயம் வைத்தும், 13 பில்லியன் டாலர் பணத்தை வங்கியிலிருந்து கடன் பெற்றதும் நினைவுகூரத்தக்கது. மீதமுள்ள பணத்தை ரொக்கமாகத் தரவிருக்கிறார் எலான் மஸ்க்.
ட்விட்டரின் வருமானம் அதிகரித்து லாபமீட்டும் என்கிற நம்பிக்கை வங்கிகளுக்கு இருந்தால் தானே நம்பி இத்தனை பெரிய கடன் தொகையைக் கொடுப்பார்கள். அப்படி வங்கிகளுக்கான ஒரு கூட்டத்தில், ட்விட்களைப் பயன்படுத்தும் வலைத்தளங்கள், ட்விட்டர் நிறுவனத்துக்குப் பணம் செலுத்த வேண்டும் என்கிற யோசனையையும் எலான் மஸ்க் பரிந்துரைத்ததாக ராய்டர்ஸ் முகமையில் ஒரு செய்தி வெளியாகியுள்ளது
இது குறித்து மேலதிகத் தகவல்கள் பெரிதாகக் கிடைக்கவில்லை. இவையனைத்தும் ஒரு தொலைநோக்குப் பார்வை தானே ஒழிய உறுதியான அறிவிப்புகள் இல்லை. ட்விட்டர் நிறுவனத்தின் செலவைக் குறைக்க என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என இதுவரை தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை.
ட்விட்டர் ப்ளூ சந்தாதாரர் சேவைக்குக் குறைந்த கட்டணம் வசூலிக்கப்பட்டு, விளம்பரங்கள் நீக்கப்படும் எனவும் எலான் மஸ்க் கூறியது இங்கு நினைவுகூரத்தக்கது. அதே போல ட்விட்டர் உயர் அதிகாரிகள் மற்றும் இயக்குநர் குழுவில் இருப்பவர்களுக்கான சம்பளம் போன்ற விஷயங்களும் குறைக்கப்படும் என முன்பே பேச்சு எழுந்ததும் இங்குக் குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் நிறுவனத்துக்கு எலான் மஸ்க் புதிய முதன்மைச் செயல் அதிகாரியைக் கூட தயார் நிலையில் வைத்திருப்பதாக உள் வட்டாரத்திலிருந்து செய்திகள் வெளியாயின. ஆனால் அவரின் பெயரைக் குறிப்பிடவில்லை.
"உச்சபட்ச நம்பிக்கை மற்றும் பல தரப்பு மக்களை உள்ளடக்கிய ஒரு தளத்தை உருவாக்க வேண்டும் என்கிற எலான் மஸ்கின் இலக்கு சரியானதுதான். அதுதான் பராக் அகர்வாலின் இலக்கும், ஆகையால் தான் நான் அவரைத் தேர்வு செய்தேன். ட்விட்டர் நிறுவனத்தைக் கடினமான சூழலிலிருந்து மீட்டுக் கொண்டு வருவதற்கு இருவருக்கும் என் நன்றி. இதுதான் சரியான பாதை என நான் முழுமையாக நம்புகிறேன்" எனக் கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி தன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ட்விட் செய்திருந்தார் ட்விட்டரின் நிறுவனர்களில் ஒருவரான ஜாக் டார்ஸி.
அதோடு ட்விட்டர் பங்குச் சந்தையைச் சார்ந்து இருக்கிறது, விளம்பரத்தைச் சார்ந்து இருக்கிறது என்றும், வால் ஸ்ட்ரீட்டில் இருந்து ட்விட்டர் நிறுவனத்தை பின்வாங்குவது நல்ல முடிவு என்றும் அதே ட்விட்டில் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் யாரும் ட்விட்டரை உரிமை கொண்டாடவோ, இயக்கவோ கூடாது என நான் நம்புகிறேன். ட்விட்டர் ஒரு நிறுவனமாக இருப்பதால் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைத் தீர்க்க, எலான் மஸ்க் ஒரு ஒற்றைத் தீர்வு என நான் நம்புகிறேன். எனவும் அத்தொடர் ட்விட் பதிவில் குறிப்பிட்டிருந்தார் ஜாக் டார்ஸி.
இதுவரை எலான் மஸ்கின் ட்விட்டர் டீல் முழுமையாக நிறைவடையவில்லை. ஆனால் அதற்குள் ட்விட்டர் தளத்தில் வெறுப்புப் பேச்சுகள் மற்றும் எலான் மஸ்க் ட்விட்டரை வாங்குவது குறித்து மனித உரிமைகள் குழுவினர் தங்கள் கவலைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com