IPL 2022 : உங்க பருப்பு இங்க வேகாது - டெல்லியை வதம் செய்தது சென்னை | DC vs CSK

சென்னை அணிக்கு நூலிழையில் ஒரு பிளே ஆஃப் வாய்ப்பு இருக்கிறது. அதற்கு ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு அணிகளில் ஏதாவது ஒன்றாவது இனி விளையாடும் அனைத்து போட்டிகளிலும் தோல்வியை தழுவ வேண்டும்.
CSK
CSKTwitter
Published on

நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட்மாஸ்டர்டா என நிரூபிக்கும் விதமாக ரிஷப் பந்தின் டெல்லி அணியை தோனி தலைமையிலான சென்னை அணி நேற்று இரவு வதம் செய்தது.

பேட்டிங், பௌலிங் என இரண்டிலும் சிஸ்கே ஆடிய ஆட்டம் வெறியாட்டம். இந்த வெற்றியின் விளைவாக அதிகாரபூர்வமாக ஐபிஎல் பிளே ஆஃப் வாய்ப்பிலிருந்து வெளியேறமாட்டேன் எனச் சென்னை அடம்பிடிப்பது உறுதியாகியுள்ளது.

டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ஃபீலடிங்கை தேர்வு செய்தார். ஜடேஜா மற்றும் பிரிட்டோரியஸ் ஆகியோருக்கு பதிலாக துபே மற்றும் டுவைன் பிராவோ அணியில் இணைந்தனர். அரிதிலும் அரிதாக ஜடேஜாவை கழற்றி விட்டது சென்னை அணி.

டாஸ் போட்ட பிறகு பேசிய தோனி, நாங்க டாஸ் ஜெயிச்சிருந்தாலும் பௌலிங் தான்பா எடுத்திருப்போம், ஏன்னா அதுக்கேத்த மாதிரி டீம் காம்பினேஷன் வச்சுருக்கோம். ஆனா டாஸ் எங்க கைல இல்லையே எனச் சொன்னார்.

ஏன் நாங்க ஃபர்ஸ்ட் பேட்டிங் பண்ணா நல்லா விளையாட மாட்டோமா, இவ்வளவு மனுசுல வச்சிருந்தா நேரா பேசிருக்கலாமே என தோனி குறித்து நினைத்தார்களோ என்னவோ சென்னையின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் பிரித்து மேய்ந்துவிட்டார்கள்.

பவர்பிளேவில் டீசண்டாக விளையாடி விக்கெட் இழக்காமல் 57 ரன்கள் எடுத்தது கான்வாய் - ருதுராஜ் ஜோடி. எட்டாவது ஓவரை வீச குல்தீப் யாதவ் வந்தார். இந்த ஆட்டத்தில் அவருக்கு இது தான் முதல் ஓவர்.

இதுக்குதான் காத்திருந்தேன்; வாடா என் மச்சி வாழைக்காய் பஜ்ஜி என ஜாலியாக சாத்தினார் டேவிட் கான்வாய். இரண்டு சிக்ஸர்கள், ஒரு பௌண்டரி என அந்த ஓவரில் மட்டும் 18 ரன்கள் எடுத்தது சென்னை.

27 பந்துகளில் அரை சதமடித்த கான்வாய், பத்தாவது ஓவரை வீச மீண்டும் குல்தீப் யாதவ் வந்தபோது ஹாட்ரிக் பௌண்டரி அடித்து ஓட விட்டார். 10 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 100 ரன்கள் எடுத்திருந்தது சென்னை.

CSK
CSKTwitter

கான்வாய்க்கு பக்கபலமாக ஆடிக்கொண்டிருந்த ருதுராஜ் 11வது ஓவரில் ஆட்டமிழந்தார். அவர் 33 பந்துகளில் 41 ரன்கள் எடுத்தார்.

அடுத்ததாக துபே வந்தார். சென்னை அணி ரன்ரேட் 10-க்கு மேல் இருந்தது.

200 நிச்சயம் 230 லட்சியம் என்ற ரீதியில் துபே கான்வாய் கூட்டணி விளையாடியது. எனினும் 13,14,15 ஓவர்களில் சிறு தொய்வு இருந்தது. 15 ஓவர்கள் முடிவில் 148 ரன்கள் எடுத்திருந்தது சென்னை அணி.

16வது ஓவரை வீச முன்னாள் சிஎஸ்கே வீரர் ஷர்துல் தாக்கூர் வந்தார். அவரது பந்தை கிழி கிழி எனக் கிழித்தார் துபே. இரண்டு சிக்ஸர்கள் ஒரு பௌண்டரி வைத்து 19 ரன்கள் எடுத்தார்.

அடுத்த ஓவரை கலீல் அகமது வீசினார், அருமையாக விளையாடிக் கொண்டிருந்த கான்வாயை திட்டம் போட்டு வலை விரித்து கச்சிதமாக வீழ்த்தினார். 49 பந்துகளை சந்தித்து ஏழு பந்துகளை பௌண்டரிக்கு ஓடவிட்டு, ஐந்து பந்துகளை சிக்சருக்கு பறக்கவிட்டு 87 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவர் வீழ்ந்தார். இந்த ரணகளத்திலும் வெறும் மூன்று ரன்கள் மட்டும் கொடுத்து கான்வாய் விக்கெட்டை அலேக்காக தூக்கிய கலீல் அகமது பாராட்டுகளைப் பெற்றார்.

கடைசிக் கட்டத்தில் தோனி இரண்டு சிக்ஸர்கள் ஒரு பௌண்டரி வைத்து 8 பந்துகளில் 21 ரன்கள் குவிக்க சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் ஆறு விக்கெட்டுகள் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்தது.

வார்னர் மற்றும் பந்த் கொஞ்சமே கொஞ்சம் முரண்டுபிடித்து பார்த்தார்கள் மற்றவர்கள் சிஎஸ்கே பந்தில் நிலைகுலைய 10 ஓவர்களில் பரிதாப கட்டத்தை எட்டியது டெல்லி. 18வது ஓவரை வீசிய பிராவோ அடுத்தடுத்து இரு விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லியை அடக்கம் செய்தார்.

வெறும் 117 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது டெல்லி. 91 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்றது சென்னை.

மொயின் அலி மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

சென்னை அணிக்கு நூலிழையில் ஒரு பிளே ஆஃப் வாய்ப்பு இருக்கிறது. அதற்கு ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு அணிகளில் ஏதாவது ஒன்றாவது இனி விளையாடும் அனைத்து போட்டிகளிலும் தோல்வியை தழுவ வேண்டும்.

மற்ற அணிகள் 14 புள்ளிகளை எட்டக்கூடாது, சென்னை மட்டும் மீதமுள்ள அனைத்து போட்டிகளையும் வென்று நல்ல ரன்ரேட்டுடன் 14 புள்ளிகள் பெற வேண்டும்.

இதெல்லாம் நடக்கிற காரியமா பாஸ் எனக் கேட்கலாம். அதற்கு தோனியே நேற்று பதிலளித்திருக்கிறார்.

நாங்க பிளே ஆஃப் போனா ஓகே சூப்பர் நல்லது, போகலைனா உலகம் ஒன்னும் முடிஞ்சு போயிடாது என்றார்.

CSK
IPL 2022: நம்பர் 1 இடத்தை பிடித்தது லக்நௌ; இனியும் சென்னைக்கு வாய்ப்பு உண்டா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

CSK
கிரிக்கெட் : ராபின் சிங் டு நடராஜன்; இந்திய அணியில் இடம் பிடித்த 10 சிறந்த தமிழக வீரர்கள்!

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com