ரசிகர்களை ஏமாற்றாத, ரசிகர்களை மதிக்கும் படமாக வந்திருக்கிறது கே.ஜி.எஃப்.
எப்போதும் Sequel எடுப்பதில் என்ன பிரச்னை என்றால் படம் என்ன தான் சிறப்பாக எடுக்கப்பட்டிருந்தாலும், அதன் முந்தைய பாகத்தை ஒப்பிட்டே அந்தப் படம் பேசப்படும் என்பதுதான். ஆனால், இந்தப் படத்திற்கு அதுவே ப்ளஸ் ஆக மாறி இருக்கிறது.
ஆம். முந்தைய பாகத்தைவிட இந்து சூப்பர் எனும் பேச்சுகளை திரையரங்குகளிலேயே கேட்க முடிகிறது.
முதல் பாகத்தில் கருடன் இறந்த இடத்திலிருந்து இரண்டாம் பாகத்தின் கதை தொடங்குகிறது.
முதல் பாகத்தின் கதை சொல்லியான ஆனந்த் நாக் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட, அவருக்கு பதிலாக அவரது மகன் பிரகாஷ் ராஜ் மாளவிகாவிடம் கதை சொல்கிறார். ஆனால் அவருக்கே அப்பாவின் சொல் மீது நம்பிக்கை இல்லை. இந்த கே.ஜி.எஃப் முழுக்க முழுக்க புனைவாகவும் இருக்கலாம் என்று அவர் கதை சொல்ல தொடங்குவதாலோ என்னவோ, படத்தின் மீது எந்த சந்தேகமும் இல்லாமல் நாம் கதையோடு ஒன்றி விடுகிறோம்.
கதை சொல்லும் பாணியில் இயக்குநர் நீல் ஒட்டுமொத்த சினிமா உலகத்தையும் திரும்பி பார்க்க வைக்கிறார்.
நாயகனாக நடித்து இருக்கும் யஷ் தனி ஒருவனாக படத்தை தன் தோள் மேல் சுமந்து செல்கிறார். மான்ஸ்டராக, மாஸ் ஹீரோவாக மனதில் நிற்கிறார். இவரது அலட்டல் இல்லாத நடிப்பு படத்திற்கு பெரிய பலம். நாயகியாக நடித்திருக்கும் ஸ்ரீநிதி ஷெட்டி அழகான தேவதையாக வந்து ரசிக்க வைக்கிறார்.
யஷ்ஷுக்கு அடுத்தபடியாக சத்தம் ஒலிப்பது 'சஞ்சய் தத்' இன்ட்ரோக்குதான். மிரட்டலான கெட்டப்-பில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அதுவும் அந்த வைக்கிங் ரெஃபரன்ஸ் எல்லாம் இது வரை இந்திய சினிமா பார்க்காதது.
அவர் மிகக் குறைவான காட்சிகளில் வந்தாலும் நிறைவைத் தருகிறார்.
படத்தில் நிறைய Goosebumps காட்சிகள் இருந்தாலும் நம்மை ரசிக்க வைப்பது யஷ் போலீஸ் ஸ்டேஷன் செல்லும் காட்சிகள்தான். தியேட்டர் தெறிக்கிறது.
பிரகாஷ்ராஜ், ஈஸ்வரி ராவ், மாளவிகா அவினாஷ், சரண் சக்தி ஆகியோர் கதாபாத்திரத்துக்கு தேவையான உழைப்பை கொடுத்திருக்கின்றனர். பிரதமராக ரவீனா டன்டன், அந்தக் கதாபாத்திரத்துக்கு உண்டான உடல்மொழியை உள்வாங்கி நடித்திருப்பது சிறப்பு.
‘ரத்தத்துல எழுதுன கதை இது; மையால தொடர முடியாது' என பிரகாஷ்ராஜ் கூறுவதைப்போல படம் முழுவதும் ரத்தம் தெறிக்கும் அதீத வன்முறை என்றாலும், படத்தை மையக் கதையே அதுதான் என்பதால் அதுவும் உறுத்தலாக திரியவில்லை.
கேஜிஎஃப் -முதல் பாகத்தை தூக்கி நிறுத்தியது வசனங்கள்தான். “யாரோ 10 பேர அடிச்சி டான் ஆகல.. அடிச்ச 10 பேருமே டான்தான்' 'காயப்பட்ட சிங்கத்தோட மூச்சு... கர்ஜனையோட பயங்கரமா இருக்கும்' போன்ற வசனங்கள் இல்லை என்றாலும் படத்தை பார்வையாளனுடன் ஒன்ற வைப்பது சாமான்யன் மேலே வரக் கூடாதா?. நெப்போடிஸம் கூடாது என்பது போன்ற வரிகள்தான்.
மாஸை எதிர்பார்த்து தியேட்டருக்கு சென்றவர்களுக்கு பரம திருப்தி. இறுதியில் மூன்றாம் பாகம் வரும் என்பது போன்று ஹின்ட் கொடுத்திருக்கிறார்கள்.