குளிர் 100 டிகிரி என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பரிட்சியமானவர் சஞ்சீவ். அதன் பிறகு 8 படங்கள் நடித்திருந்தாலும் பெரிய அளவில் அவருக்குப் பெயர் வாங்கி கொடுக்கவில்லை. எனவே வெள்ளித்திரைக்கு குட் பை சொல்லிவிட்டு சின்னதிரைக்கு வந்துவிட்டார் சஞ்சீவ். சஞ்சீவின் தந்தை இந்தியக் கடற்படையில் பணி புரிந்தவர் என்பதால் சஞ்சீவுக்கும் கடற்படையில் சேர வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் அது முடியாமல் போனதும் சினிமா பக்கம் வந்துவிட்டார். விஜய் டிவியில் ராஜா ராணி என்னும் சீரியலில் அறிமுகமானார். சஞ்சீவ்-ஆல்யா ஜோடிக்குத் தனி ரசிகர் பட்டாளமே உருவானது. சீரியலில் நடிக்கும் போதே ஆல்யாவுடன் காதலில் விழுந்த சஞ்சீவ் அவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது சன் டிவியில் கயல் என்னும் சீரியலில் நடித்து வருகிறார். சஞ்சீவின் கேரியர் கிராப் சட்டென டாப் ஆனதற்கு முக்கிய காரணம் ஆல்யா தான்.
சஞ்சீவ் - ஆல்யா ஜோடிக்கும், அவர்களின் மகள் அய்லாவுக்கும் இன்ஸ்டாவில் நிறைய ஃபேன் பக்கங்கள் இருக்கின்றன. அய்லாவுக்குத் தனியாக இன்ஸ்டா கணக்கும் உள்ளது. சஞ்சீவ், ஆல்யா, அய்லா என மூன்று இன்ஸ்டா கணக்கையும் சஞ்சீவ் தான் கையாள்கிறார். கடந்த வருடம் சின்ன சின்ன ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஒன்றிணைந்து சின்னதிரை பிரபலங்கள் மீது ஒரு முக்கிய குற்றச்சாட்டை முன் வைத்தனர் . இன்ஸ்டாவில் ஆடை, அணிகலன்கள், ஆர்கானிக் பொருட்கள் உள்ளிட்டவற்றை விளம்பரம் செய்கிறேன் என்று பணம், பொருள் மட்டும் வாங்கிக் கொண்டு விளம்பரம் செய்யவில்லை என்று சர்ச்சை எழுந்தது. இதில் ஆல்யா-வின் பெயரும் அடிபட்டது. இந்த விவகாரத்தில் ஆல்யாவுக்கு பதில், வணிகர்களிடம் பேசி சுமூகமாக பிரச்சனையை முடித்தது சஞ்சீவ் தான். அந்த சம்பவத்துக்கு பிறகு இன்ஸ்டாவில் கொலாபரேஷன் பிசினஸ் தொடர்பான அனைத்து விஷயங்களையும் சஞ்சீவ் கறாராக டீல் செய்கிறார். இன்ஸ்டாகிராம், யூ டியூப், டிவி கமர்ஷியல் என இன்னும் ஓஹோ என்று வருவதாக நண்பர்கள் வட்டம் சொல்கிறது.
ஆல்யா சஞ்சீவ் இருவருக்குமே சொகுசு கார்கள் மீது ஆர்வம் அதிகம். அய்லா பிறப்பதற்கு முன்பு இருவரும் பென்ஸ் கார் வாங்கினர். அய்லாவின் முதல் பிறந்தநாளுக்கு சஞ்சீவ், 40 லட்சம் ரூபாய்க்கு கியா கார்னிவல் கார் வாங்கி ஆல்யாவுக்குப் பரிசளித்தார். அதன் பின்னர் மூன்றாவதாகவும் சொகுசு கார் ஒன்றை வாங்கினார். சமீபத்தில் தன் அண்ணன் சமீருக்கு பென்ஸ் காரை பரிசளித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார் சஞ்சீவ். இதுகுறித்து தன் இன்ஸ்டாவில் ’’என் சகோதரருக்கு ஒரு சின்ன கிஃப்ட்’’ என்று குறிப்பிட்டிருக்கிறார். ``அட சொகுசு கார் சின்ன கிஃப்ட் டா’’ என்று ரசிகர்கள் வாய் பிளக்கின்றனர். குடும்பத்தின் மீது அதீத பற்று கொண்ட சஞ்சீவ் எந்த இடத்திலும் தன் அம்மா, அண்ணனை விட்டு கொடுத்ததே கிடையாது. ஆனால், குடும்ப நிகழ்வுகளில் ஆல்யாவின் பெற்றோரும், குடும்பத்தினரும் தென்படுவதில்லை. இந்த விஷயத்தில் ஆல்யா நினைத்தால் பாவமாக உள்ளது.
சஞ்சீவ் ஆல்யா சீக்கிரமே தங்கள் அபார்ட்மெண்ட் விட்டு, ஒரு பெரிய வீட்டுக்குக் குடியேற உள்ளனர். சொந்தமாக கஸ்டமைஸ் செய்து வீட்டைக் கட்டி வருகிறார் சஞ்சீவ். சொகுசு கார், வீடு, அடிக்கடி டிரிப் எனச் செலவு செய்து கொண்டிருந்தாலும், அதற்கேற்ற வருமானம் அவர்களுக்கு யூ டியூப்பில் வந்துவிடுகிறது போலும். தினமும் புதிய புதிய வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர்.
ஒவ்வொரு வீடியோவும் மில்லியன் வீயூக்களை தொட்டு விடுகிறது. ராஜா ராணி 2 சீரியல் பிரைம் டைமில் ஹிட்டடித்து கொண்டிருக்கும் நிலையில் ஆல்யா இரண்டாவதாகக் கர்ப்பமாகி, சீரியலை விட்டு விலகும் நிலை ஏற்பட்டுள்ளது. குழந்தை பிறந்து, அதன் பிறகு மீண்டும் வந்து சின்னதிரையில் மீண்டும் முத்திரை பதிப்பது எந்த அளவுக்குச் சாத்தியம் என்று தெரியவில்லை. எது எப்படியோ யூ டியூப் சேனல் ஓஹோ என்று ஓடுவதால், சஞ்சீவின் ஆடம்பரத்துக்குப் பஞ்சம் இருக்காது. கடந்த வாரம் அய்லாவின் இரண்டாவது பிறந்த நாளையும், ஆல்யாவின் வளைகாப்பும் ஒன்றாக ஒரே விழாவாக, பிரம்மாண்டமாக நடத்தியதே இதற்கு சான்று!