கடந்த இரண்டு வாரத்தில் மூன்றாவது ரஷ்யர் இந்தியாவில் இறந்திருக்கிறார். இந்த மூன்றையும் சேர்ந்து 2022 ஆம் ஆண்டு தற்கொலை செய்துகொண்ட அல்லது தற்கொலை செய்யப்பட்ட அல்லது விபத்தில் இறந்த அல்லது விபத்தின் மூலமாக இறக்க வைக்கப்பட்ட ரஷ்யர்கள் மட்டும் 23க்கு மேல்.
ஜார்ஜ் ஆர்வெலின் வரிகள்தான் நினைவுக்கு வருகிறது,
“ஒரு வெளிநாட்டிற்கு எதிரான போர், பணக்கார வர்க்கங்கள் அதில் லாபம் ஈட்டப் போகிறோம் என்று நினைக்கும் போதுதான் நடக்கும்.”
இந்த தற்கொலைகளுக்கும் உக்ரைன் யுத்தத்திற்குமே தொடர்பு இருக்கலாம் என்கிறார்கள் உலக நடப்புகளை தொடர்ந்து அவதானித்து வரும் வல்லுநர்கள்.
இறந்தவர்கள் யாரும் சாமானிய மக்கள் இல்லை. ரஷ்யா அதிகாரவர்க்கத்தினர், அந்நாடின் பெரும் செல்வத்தை கட்டுப்படுத்தியவர்கள், அந்நாட்டின் எண்ணெய் நிறுவனத்தில் பெரிய பொறுப்பில் இருந்தவர்கள்.
அலெக்ஸாண்டர் டுயலக்கோவ். இவர் ரஷ்யாவின் பெரிய எண்ணெய் நிறுவனத்தில் உயர் பொறுப்பில் இருந்தவர். உக்ரைன் போர் தொடங்கிய ஓரிரு தினங்களில் பீட்டர்ஸ்பெர்க் அருகே ஒரு கரேஜில் சடலமாக இருந்தார். இதனை தற்கொலை என்றனர் உள்ளூர் ஊடகங்கள்.
அடுத்து செர்ஜே ப்ரோடோசென்யா. இவரும் ஒரு பெரும் கேஸ் நிறுவனத்தில் துணை தலைவர் பொறுப்பில் இருந்தவர். இவர் ஸ்பெயினில் ஒரு விடுதியில் தூக்கிட்டப்படி சடலமாக இருந்தார். இவரது சொத்து மதிப்பு மட்டும் ஏறத்தாழ 440 மில்லியன் டாலர்கள்.
இவர் மட்டும் இறக்கவில்லை, இவரது மனைவியும், மகளும் வெட்டு காயங்களுடன் அந்த விடுதியில் சடலமாக கிடந்தனர்.
செர்ஜேதான் அவர்கள் இருவரையும் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார் என்றனர் விசாரணை அதிகாரிகள். ஆனால், இந்த குற்றச்சாட்டை அவர் மகன் மறுத்தார்.
அடுத்து விலாடிஸ்லவ் அவாயேவ், புதினின் பழைய நண்பர். இவரும் மாஸ்கோவில், தனது மனைவி மகளுடன் சடலமாக கிடந்தார். இவர் ரஷ்யாவின் ஒரு வங்கியில் துணை தலைவராக இருந்தவர்.
அவாயேவ் மனைவியும் மகளையும் கொலை செய்துவிட்டு தன்னையும் மாய்த்துக் கொண்டார் என்றனர் விசாரணை அதிகாரிகள்.
அடுத்து அலெக்ஸாண்டர் சபோடின். இவரும் ஒரு எண்ணெய் நிறுவனத்தில் உயர் பொறுப்பில் இருந்தவர். உக்ரைன் மீதான போரை எதிர்த்தவர். போரில் இறந்தவர்களுக்காக அஞ்சலி கடிதம் வாசித்தவர். இவரும் மாஸ்கோ அருகே ஒரு ஹீலர் வீட்டில் சடலமாக கிடந்தார். நெஞ்சு வலி காரணமாக இறந்தார் என காரணம் கூறப்பட்டது.
அடுத்து சோவியத்தில் பிறந்த அமெரிக்க தொழிலதிபரான டான் ரபோபோர்ட் வாஷிங்டனில் ஒரு அடுக்குமாடி வீட்டில் சடலமாக கிடந்தார். இவர் புதினை கடுமையாக எதிர்த்தவர். புதினை எதிர்த்த தலைவர்களுடன் நெருக்கமாக இருந்தவர்.
மாஸ்கோ, ஸ்பெயின், வாஷிங்டன் என நீண்ட இந்தப் பட்டியல் இந்தியாவின் ஓடிசாவில் இப்போது வந்து நிற்கிறது.
பாவெல் ஆண்டவ் ரஷ்யா நாடாளுமன்ற உறுப்பினர், புதினை விமர்சிப்பவர் ஒடிசாவில் ஒரு ஓட்டலின் மூன்றாம் மாடியில் இருந்து விழுந்து டிசம்பர் 24ஆம் தேதி இறந்தார். அதற்கு முன்னர் விளாடிமர் பைட்னவ் டிசம்பர் 22 தனது ஓட்டல் அறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்
தற்போது மில்யாகோவ் ஒரு கப்பலில் சடலமாக ஜனவரி 3ஆம் தேதி, கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
ஒற்றை வரியில் சொல்ல வேண்டுமானால், ‘புதினுக்கே வெளிச்சம்’. ஆம், உளவு அதிகாரியாக தன் வாழ்க்கையை தொடங்கிய புதினுக்கு இவ்வாறான மரணங்கள் புதிது அல்ல. சொல்லப்போனால் மாஸ்கோவுக்கும் இது புதிதி அல்ல.
கடந்த காலத்தை பின்னோக்கி பார்த்தால் பல விதமான படுகொலைகளை மாஸ்கோ நிகழ்த்தி இருக்கிறது.
அலெக்ஸி நவால்னி கொலை முயற்சி உங்களுக்கு நினைவு இருக்கிறதா?
கடந்த 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவால்னிக்கு விஷம் கொடுக்கப்பட்டது. சைபீரியாவின் டாம்ஸ்கில் இருந்து மாஸ்கோவுக்குச் செல்லும் விமான பயணத்தின்போது நவால்னி அப்படியே மயங்கி விழுந்தார். இரண்டு நாட்களுக்குப் பிறகு, கோமா நிலையில் இருந்த நவால்னி அவசர சிகிச்சைக்காக ஜெர்மனி கொண்டு செல்லப்பட்டார்.
தமக்கு நச்சு கொடுக்கப்பட்டதற்கு புதின்தான் காரணம் என்று அவர் குற்றம்சாட்டினார். அதை ரஷ்ய அரசு கடுமையாக மறுத்தது.
நவால்னிக்கு 'நோவிசோக்' என்கிற, ரஷ்யா பனிப் போர் காலத்தில் உருவாக்கிய விஷம் கொடுக்கப்பட்டதாக ஐரோப்பிய மருத்துவ நிபுணர்கள் கூறினர்.
இன்னும் பின்னோக்கி சென்றால்…
2004 ஆம் ஆண்டு ரஷ்யாவால் ஆதரிக்கப்பட்ட உக்ரைன் அரசுக்கு எதிராக செயல்பட்டார் என்பதற்காக விக்டோர் யூசென்கோவுக்கு விஷம் கொடுக்கப்பட்டது,
இன்னும் பின்னோக்கி சென்றால்…
முப்பது வருடங்களுக்கு முன்பு, பல்கேரிய உளவு அமைப்பு, ரஷ்ய கே.ஜி.பி உதவியுடன் அரச எதிரிப்பாளரான எழுத்தாளர் ஜார்ஜி மார்கோவ் கொல்லப்பட்டார். ஒரு குடையின் முனையில் விஷம் தடவி அவரின் காலில் குத்தி கொன்றனர் உளவாளிகள்.
கொலைகளை நிகழ்த்தும் உளவு அமைப்புகளின் பலமே தடயமே இல்லாமல் கொல்வதுதான். தாங்கள்தான் கொலையை நிகழ்த்தினோம் என எதிரிகளுக்கு தெளிவாக உணர்த்துவார்கள். ஆனால், தடயத்தை எங்கும் விட்டு செல்லமாட்டார்கள்.
ரஷ்யாவில் தொழில்முறையில் படுகொலைகளை நிகழ்த்தும் தொழிலுக்கு பெயர் wet work அப்படியே தமிழ்ப்படுத்தினால் ஈரமான வேலை. ஆம் இரக்கமற்ற வேலைக்கு பெயர் ஈரமான வேலை.
சரி… மீண்டும் முதல் பத்தியில் குறிப்பிட்ட ஆர்வெலின் வரிகளுக்கே வருகிறேன்.
“ஒரு வெளிநாட்டிற்கு எதிரான போர், பணக்கார வர்க்கங்கள் அதில் லாபம் ஈட்டப் போகிறோம் என்று நினைக்கும் போதுதான் நடக்கும்.”
ஆனால், இந்த போர் ரஷ்ய செல்வந்தர்களின் விருப்பத்திற்கு எதிராக நடக்கிறது என்கின்றனர் சர்வதேச அரசியல் பார்வையாளர்கள்.
உக்ரைன் போர் ரஷ்யாவின் பணக்கார வர்க்கத்திற்கு உகந்ததாக இல்லை. போர், அதனை தொடர்ந்து போடப்பட்ட பொருளாதார தடைகளால் தங்களது செல்வம் சுருங்குவதாக அவர்கள் கருதுகிறார்கள். தங்களை பின்னோக்கி பனிப்போரின் காலத்திற்கு புதின் இழுப்பதாக கருதுகிறார்கள். சிலர் கிளர்ந்து எழுகிறார்கள்.
அப்படி எழுபவர்கள் ’தற்கொலை’ செய்யப்படுகிறார்கள்.
போர் தொடரும் வரை இந்த தற்கொலைகளும் தொடரலாம்.
ஆர்வெல்லின் வரிகளுடனே இந்த கட்டுரையை முடிக்கிறேன்.
”இந்தக் கணத்தில் யார் வெற்றி பெறுகிறாரோ அவர் எப்போதும் வெல்ல முடியாதவரைப் போல் தோன்றுவார்.” - ஜார்ஜ் ஆர்வெல்
ஆனால், அது தோற்றப் பிழைதான்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust