சுற்றுலா என்ற உடன் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற ஊர்களுக்குச் சென்று போர் அடித்துவிட்டதா..? சீப் அண்ட் பெஸ்டாக ஏதாவது நல்ல ஊருக்குச் செல்ல விருப்பமா? வாங்க லிஸ்ட பாருங்க.
இந்தியாவின் கிராண்ட் கன்யான் என்று அழைக்கப்படும் இடம் கந்திக் கோட்டை. இது ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் கடப்பா மாவட்டத்தில் பென்னார் நதிக்கரையில் அமைந்திருக்கிறது. அந்த இடத்துக்குச் செல்வதே ஒரு அதிரடி நிறைந்த அனுபவமாகத் தான் இருக்கும்.
அங்கு சென்றுவிட்டால் எளிதில் வாகனத்தில் எல்லாம் ஏறி திரும்பிவிட முடியாது. எனவே பெரும்பாலும் அந்த இடத்தை நீங்கள் ரசித்தே ஆக வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுவீர்கள். தென்னிந்தியாவில் நிச்சயம் பார்க்கப்பட வேண்டிய இடமிது.
கடப்பா மாவட்டத்தில் உள்ள முண்டனுரு தான் அருகிலுள்ள ரயில் நிலையம். அங்கிருந்து கந்திக்கோட்டைக்கு சுமார் 26 கிலோமீட்டர் பயணிக்க வேண்டும். அருகில் உள்ள பேருந்து நிலையம் என்றால் ஜம்மலமடுகு தான்.
இந்த முறை நீங்கள் செல்லும் சுற்றுலா ஒரு திரில்லோடு இருக்க வேண்டுமானால் இப்போதே கந்திக்கோட்டைக்கு மூட்டை முடிச்சுகளைக் கட்டுங்கள்.
காலையில் எழுந்த உடன் காபி இல்லை எனில், அந்த நாளே காலி என்று கருதுபவரா நீங்கள், காபிக்காக உயிரையே விடக் கூடியவரா, அப்படி என்றால் அரக்கு வேலி என்று அழைக்கப்படும் அரக்கு பள்ளத்தாக்கு நீங்கள் அறிந்திருக்க வேண்டிய இடம்.
அரக்கு பள்ளத்தாக்கில் கடந்த 2007ஆம் ஆண்டு முதல் மலைவாழ் மக்கள் ஆர்கானிக் முறையில் காபி பயிரிட்டு விற்பனை செய்து வருகிறார்கள். 'அரக்கு எமரால்ட்' பிராண்ட் என்றால் உலகம் முழுக்க பிரசித்தம். இப்படி உலகப் புகழ் காபி எல்லாம் விளைவிக்கப்படும் இந்த மலை வாசஸ்தலம், ஆந்திரப் பிரதேசத்தில் விசாகப்பட்டினத்தில் இருக்கிறது.
ஷிமிலிகுடா ரயில் நிலையம் அரக்கு பள்ளத்தாக்கிலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் ரயில்நிலையம். அரக்கு பள்ளத்தாக்கு உங்கள் பார்வைக்காகக் காத்திருக்கிறது.
இந்தியாவின் இரண்டாவது பெரிய குகை பேலம் தான். இக்குகை 3,229 மீட்டர் நீளம் கொண்டது. இந்த குகைகள் கருப்பு சுண்ணாம்புக் கற்களால் உருவானவை. நீண்ட நடைபாதைகள், விஸ்தாரமான அறைகள், சுத்தமான நீர் என நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்த இக்குகையில் பல விஷயங்கள் இருக்கின்றன.
நிலத்துக்கு அடியில் தொடர்ந்து நீர் வரத்து இருந்ததால், இந்த குகைகள் உருவாக அது உதவியாக இருந்ததென்று கூறப்படுகிறது. இந்த குகையின் ஆழமான பகுதி சுமார் 150 அடி வரை செல்கிறது. தடிபத்ரி ரயில் நிலையத்திலிருந்து இந்த குகைக்கு 30 கிமீ பயணிக்க வேண்டும். இந்த ரயில்நிலையத்து பல ரயில்கள் செல்கின்றன.
திருவண்ணாமலையில் ஒரு ஸ்கந்தாஸ்ரமம் இருக்கிறதே அதுவா இது என்று கேட்டால்... இல்லை தான் பதில். கர்நாடகா மாநிலத்தில், பெங்களூரிலிருந்து சுமார் 70 கிமீ தொலைவில் கலவர துர்கா என்று அழைக்கப்படும் கோட்டைதான் இந்த ஸ்கந்த கிரி.
பெங்களூரிலேயே வாழும் மக்கள், வார இறுதி நாட்களில் ஒரு சூப்பர் ட்ரிப் அடிக்க பொருத்தமான இடம் இது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 1,350 மீட்டர் உயரத்தில் இருக்கும் இந்த இடத்துக்குச் சென்று ஒரு பெருமூச்சு எடுத்துப் பாருங்கள். அதை விவரிக்க வார்த்தைகள் இல்லை, மறக்காம மப்லர் எடுத்துக்கோங்க பாஸ்.
இந்தியாவின் நயாகரா என்று அழைக்கப்படும் இந்த நீர்வீழ்ச்சிக்கு அதிக அறிமுகம் தேவை இல்லை. சேட்டன் சேச்சிகளின் தேசமான கேரளாவில் திரிச்சூர் மாவட்டத்தில் சாலக்குடி தாலுகாவில் அமைந்திருக்கிறது இந்த அற்புத நீர்வீழ்ச்சி. திரிச்சூர் மாவட்ட சுற்றுலாத் துறை தினமும் சாலக்குடி முதல் மலக்கப்புரா வரை ஒரு சஃபாரி ட்ரிப் வேறு அழைத்துச் செல்கிறார்களாம். நீர் வீழ்ச்சி குளியலைத் தாண்டி, இயற்கை அழகையும் ரசிக்க ஓர் அற்புத வாய்ப்பு... பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
கொச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து 55 கிமீ, சாலக்குடி ரயில்நிலையத்திலிருந்து 30 கிமீ பயணப்பட்டால் அதிரப்பள்ளி. மிக முக்கிய விஷயம் என்னவெனில், அதிரப்பள்ளிக்கு டாக்ஸி, பேருந்து என சகல போக்குவரத்து வசதிகளும் உண்டு.
மக்கள் நெருக்கடி இல்லாத, கடலின் ஓசை மட்டுமே பிரதானமாக இருக்கும் இடம் மரவந்தே கடற்கரை. இக்கடற்கரையில் அமர்ந்து ரசிப்பது ஒரு வகை என்றால், மங்களூரு முதல் கார்வார் வரை வாகனத்தில் நிதானமாக பயணித்துக் கொண்டே கூட கடற்கரையை ரசிக்கலாம்.
இந்தியாவின் மிக சுத்தமான கடற்கரைகளில் ஒன்று மரவந்தே கடற்கரை. உடுப்பியிலிருந்து சுமார் 55 கிமீ தொலைவில் அமைந்திருக்கும் இக்கடற்கரை இன்னும் பலர் கண்ணில்படாத கடல் சொர்க்கம்.
ஒரு முறையல்ல, இருமுறையல்ல, ஒவ்வொருமுறையும் தனுஷ்கோடி பார்ப்பவர்களின் கண்களுக்குப் புதிதாகத் தெரியும் அற்புத நகரம். பாம்பன் தீவின் விளிம்பில் இருக்கும் இந்நகரத்தில் 1964ஆம் ஆண்டு ஏற்பட்ட புயலில் பல பயணிகள் காலமானார்கள். அந்த இயற்கைப் பேரிடருக்குப் பின், இந்நகரம் ஒரு சுற்றுலா தளமாக மாறிவிட்டது.
1897ஆம் ஆண்டு, சுவாமி விவேகானந்தர் உலக மத பாராளுமன்ற சபையில் கலந்து கொண்ட பின், இந்தியாவில் காலடி எடுத்து வைத்த நகரம் தனுஷ்கோடி. இப்படிப் பல வரலாற்றுச் சிறப்புகளை தன்னகத்தே கொண்டு அமைதியாக இருக்கும் நகரத்துக்கு, ராமேஸ்வரம் சென்று பேருந்து, டாக்ஸி என எப்படி வேண்டுமானாலும் தனுஷ்கோடிக்குச் செல்லலாம்.
கோவா செல்கிறீர்களா? உங்கள் கொண்டாட்டத்துக்கு மத்தியில் குட்லே கடற்கரையையும் பார்த்துவிடுங்கள். இந்தியர்கள் பலரின் காலடி படாத இடம் இது. இங்கு வெளிநாட்டவர்கள் தான் அதிகம் வருவர்.
கோகர்னாவில் மொத்தம் 5 கடற்கரைகள் இருக்கின்றன. குட்லே, ஓம், ஹாஃப் மூன், பேரடைஸ், கொகர்னா பீச். இதில் குட்லே கடற்கரையைச் சென்றடைய ஒரு சிறிய டிரெக்கிங் மேற்கொள்ள வேண்டும் என்பது தான் அக்கடற்கரை குறித்த சுவாரசியத்தை அதிகரிக்கும் விஷயம். ஐந்து கடற்கரைகளும் ஒன்றை விட மற்றொன்று அழகாக இருக்கும் என்பது மட்டும் கேரண்டி.
கோவாவில் உள்ள தபோலிம் விமான நிலையத்திலிருந்து சுமார் 90 கிமீ பயணித்தால் கோகர்ணா கடற்கரைகளைக் கண்டு ரசிக்கலாம்.
12ஆம் நூற்றாண்டில் இந்த நகரம் தான் ஹொய்சாலர்களின் தலைநகரமாக இருந்தது. கேதாரேஸ்வரா கோயிலுடன் கம்பீரமாக இருந்த இந்நகரத்தை 'தொரசமுத்ரா' என்று அழைத்தனர். அந்நகரத்தைத் தான் இன்று ஹலெபிடு என்று அழைக்கிறோம். மாலிக் கபூரின் படை எடுப்பின் போது இந்நகரம் சூறையாடப்பட்டது. இந்த நகரத்திலிருந்து பெலுர் என்கிற மற்றொரு வரலாற்று நகரமும் இருக்கிறது. பெங்களூரில் இருந்து சுமார் 210 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்நகரம்.
தமிழ்நாட்டில் தர்மபுரி மாவட்டத்தில் அமைந்திருக்கும் அற்புத நீர்வீழ்ச்சி. மருத்துவ குளியல், படகு சவாரிக்குப் பேர் போன இடமிது. அங்குக் கிடைக்கும் பதமான மீன் வறுவலுக்கு மயங்காத நாக்கு உண்டா? எனத் தெரியவில்லை. தர்மபுரியிலிருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் இந்த நீர்வீழ்ச்சிக்கு போதிய போக்குவரத்து வசதிகள் இருக்கின்றன. தமிழ்நாட்டில் கொழுத்தும் வெயிலுக்கு ஒரு நல்ல குளியல் போடலாம். என்ன ரெடியா?
ஆந்திரப் பிரதேசத்தில் பாபி மலைத் தொடர்கள் என்று அழைக்கப்படும் பாபி ஹில்ஸ் ராஹமுந்திரியில் அமைந்துள்ளது. கோதாவரி நதிக்கரையில் அமைந்திருக்கும் இந்த மலைத் தொடரின் அழகைக் காண, கண் கோடி வேண்டும்.
பத்ராசலம், ராஜமுந்திரி, குனவரம் எனப் பல இடங்களிலிருந்து படகு வசதிகள் உள்ளன. படகு சவாரியிலேயே மலைத் தொடர்களை ரசித்துக் களிக்கலாம்.
சில ஊர்களுக்குக் காரணப் பெயர் வழங்கப்பட்டிருப்பதைக் கவனித்திருக்கலாம். அப்படி, பொன்முடி எனப் பெயருக்கு ஏற்றார் போல, பொன்னால் மூடப்பட்டிருக்கும் மலை பொன்முடி மலை.
கேரளாவில் அமைந்திருக்கிறது இம்மலை. இது அடர்ந்த காடுகளால் மலை முழுக்க போர்த்தப்பட்டிருக்கும் தளமிது. கடல்மட்டத்திலிருந்து சுமார் 3,500 அடி உயரத்தில் அமைந்துள்ளது இம்மலை. கேரளாவின் தலைநகரான திருவனந்தபுரத்திலிருந்து சுமார் 55 கிமீ தொலைவில் அமைந்திருக்கும் இத்தளத்துக்குப் பேருந்து, டாக்ஸி என எப்படி வேண்டுமானாலும் வந்து சேரலாம்.
வர்கலா என்கிற பெயருக்குப் பல காரணங்களும் கதைகளும் உண்டு. ஆனால் எதார்த்தத்தில் ஒரே மாவட்டத்தில் மலையும் கடலும் உள்ள இடம் இது. இந்த கடற்கரையை பாபநாசக் கடற்கரை என்றும் அழைக்கிறார்கள். திருவனந்தபுரத்திலிருந்து வர்கலா கடற்கரைக்கு எளிதில் சென்றடையலாம்.
ஷிவ்கங்கே
கர்நாடக மாநிலத்தில் தும்கூர் நகரத்திலிருந்து சுமார் 20 கிமீ தொலைவில் அமைந்திருக்கும் ஒரு புனிதத் தளம் தான் ஷிவ் கங்கே. இது கடல் மட்டத்திலிருந்து சுமார் 1350 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.
இந்த மலை சிவலிங்க வடிவில் இருப்பதாக சில வலைத்தளங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு அருகில் ஒரு சிறிய நீர் ஊற்று உள்ளது. அது கங்கை என்று அழைக்கப்பட்டு வந்ததால் இந்த இடத்துக்கு ஷிவ கங்கே என்று பெயர் பெற்றதாகக் கூறப்படுகிறது. இதைத் தென்னகத்தின் காசி என்றும் அழைக்கிறார்கள். மலை உச்சிக்குச் சென்று நகரத்தை 360 டிகிரியில் சுற்றிப் பார்த்து ரசிக்கலாம்.
உடுப்பி நகரத்திலிருந்து சுமார் 10 கிமீ தொலைவில் அமைந்துள்ளது புனித மேரீஸ் தீவுகள். இத்தீவைத் தேங்காய் தீவு என்றும் அழைக்கிறார்கள்.
சுமார் 88 மில்லியன் ஆண்டுகளுக்கு முன், மடகாஸ்கர் கண்ட தகடு இந்தியாவோடு இணைந்த போது ஏற்பட்ட எரிமலை லாவா மாற்றங்களால் உருவானது தான் இந்த தீவு கூட்டத்தில் காணப்படும் பசால்டிக் லாவா பாறைகள். எனவே இந்த தீவுக் கூட்டம் பார்ப்பதற்கு மட்டுமல்ல, புவியியல் ரீதியாகவும் நம்மை கவர்ந்து இழுக்கும் ஒன்று என்கிறார்கள்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust