மகாராஷ்டிரா சிவசேனா : பதவியேற்புக்கு முன்பு அடுத்தடுத்து அரங்கேறிய அதிரடி காட்சிகள்

இருவரும் பதவியேற்று முடிக்கும்வரை பா.ஜ.க.வினரும் அதிருப்தி சிவசேனா கட்சியினரும் கடைசிக் கட்ட கிளைமாக்ஸ் ஏதும் நடந்துவிடுமோ என்ற பதைபதைப்பிலேயே இருந்தனர்.
Eknath Shinde
Eknath ShindeTwitter
Published on

பத்து நாள் அரசியல் குழப்ப நிலையை முடிவுக்குக் கொண்டுவந்து, மகாராஷ்டிரத்தில் ஒருவழியாக முதலமைச்சரும் துணைமுதலமைச்சரும் நேற்று இரவு பதவியேற்றுக் கொண்டனர்.

மிகவும் பரபரப்பாக மாறிய நேற்றைய பிற்பகல் 2 மணி முதல் இரவு வரை, கிட்டத்தட்ட ஐந்து மணி நேரம் அதிரடிகளும் திருப்பங்களுமான நிகழ்வுகளாக நடைபெற்று முடிந்தன.

அதிருப்தி சிவசேனா எம்.எல்.ஏ.கள் தங்கவைக்கப்பட்டுள்ள கோவாவில் இருந்து, நேற்று பிற்பகல் 2.15 மணிக்கு ஏக்நாத் ஷிண்டே மும்பைக்குப் புறப்பட்டார்.

சுமார் 3 மணிக்கு தெற்கு மும்பை, சாகர் பகுதியில் உள்ள பா.ஜ.க.வின் முன்னாள் முதலமைச்சரான தேவேந்திர பட்னவிஸ் இல்லத்தில், அவரைச் சந்தித்துப் பேசினார். பத்து நாள் பரபரப்பில் அன்றாடம் பல முறை பேசிக்கொண்டிருந்த அவர்களுக்கிடையே மேற்கொண்டு பேசுவதற்கு என்ன இருக்கிறது என்கிற நிலைதான்..!

சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு அங்கிருந்து இருவரும் ஒன்றாக ஆளுநர் மாளிகைக்குப் புறப்பட்டனர். அவர்களை ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி மகிழ்ச்சியுடன் வரவேற்று இனிப்பு வழங்கி உபசரித்தார். பா.ஜ.க. கூட்டணி அரசாங்கம் அமைப்பதற்கு அனுமதிக்குமாறு முறைப்படி அவர்கள் ஆளுநரிடம் தெரிவித்தனர். அதை அவரும் ஏற்றுக்கொண்டார்.

அதையடுத்து, மாலை 4.40 மணிக்கு இருவரும் செய்தியாளர்களைச் சந்தித்தனர். ஊடகத்தினரிடம் பட்னவிஸ் பேச, அவருக்குப் பின்னால் அமர்ந்திருந்தார், ஏக்நாத் ஷிண்டே.

யாரும் எதிராபாராதவண்ணம் ஷிண்டேதான் மகாராஷ்டிரத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்பார் என்று அறிவித்த பட்னாவிஸ், அரசாங்கத்தில் தான் இடம்பெறப் போவதில்லை என்றும் அரசாங்கம் நல்லபடியாக நடப்பதற்குத் தான் துணையாக இருக்கப்போவதாகவும் கூறினார்.

இதை நேரலையில் பார்த்துக்கொண்டிருந்த பெரும்பாலானவர்கள் திகைத்துப்போனார்கள். ஆனாலும் ஷிண்டேவின் ஆதரவாளர்களுக்கோ ஏககுஷியாகிவிட்டது.

அதிருப்தி எம்.எல்.ஏ.கள் தங்கவைக்கப்பட்டு இருந்த கோவா, தாஜ் சன்வென்சன் செண்டர் நட்சத்திர விடுதியில் பெரிய தொலைக்காட்சித் திரையில் ஷிண்டே- பட்னவிஸ் ஊடகச் சந்திப்பு நேரலையாக ஓடிக்கொண்டிருந்தது. பட்னவிஸின் இந்த அறிவிப்பைக் கேட்டதுமே பத்துக்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.கள் இந்திப் பாடலை ஒலித்தபடி உற்சாகத்தில் நடனமாடினர். அவர்களின் குத்தாட்டம் ஒருகட்டத்தில் அளவுக்கு மீறி அங்கிருந்த மேசை மீது ஏறி அந்த இடத்தை பெரும் கொண்டாட்டமாக மாற்றியது. ஒருவர் பின் ஒருவராக இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் மேசையில் நடனமாட, சிறிது நேரத்தில் அங்கிருந்த இன்னொருவர் வந்து அவர்களை தாஜாசெய்து இறங்கச் செய்தார்.

ஷிண்டேயின் தானே மாவட்டத்திலும் அவருடைய வீட்டைச் சுற்றிலும் ஆதரவாளர்கள் ஆரவாரக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

பா.ஜ.க. தரப்பிலோ எந்தவித உணர்ச்சி வெளிப்பாடும் இல்லாதபடி, கனத்த மௌனம் நிலவியது. 6.35 மணிவாக்கில் இந்த மௌனத்தை உடைத்தது, பா.ஜ.க. தலைவர் நட்டாவின் அறிவிப்பு.

ஊடகங்களிடம் பேசிய அவர், “மகாராஷ்டிரத்தில் துணை முதலமைச்சர் பதவியை பட்னாவிஸ் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனக் கட்சியின் மத்திய தலைமை தீர்மானித்து இருக்கிறது. அவரிடம் தனிப்பட்டும் இதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருக்கிறோம். அவர் அந்தப் பதவியை ஏற்றுக்கொள்ள வேண்டும்.” என்று கூறினார்.

அதை ஆமோதிக்கும்படியாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மாலை 6.58 மணிக்கு தன் ட்விட்டர் பக்கத்தில் கருத்திட்டார்.

“ தேவேந்திர பட்னாவிஸ் பெரிய மனதுடன் நடந்துகொண்டிருக்கிறார். மாநிலத்தின் நலனுக்காக புதிய அரசாங்கத்தில் இணைந்துகொள்வதாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார். சேவை மனப்பான்மையுடனும் உண்மையான விசுவாசத்தின் படியும் மனதின் அடி ஆழத்திலிருந்து அவர் இதைச் செய்திருப்பதற்காக நன்றி.” என மிகவும் உருக்கமாகவும் நெகிழ்ச்சியாகவும் அமித்ஷா கூறியிருந்தார்.

Eknath Shinde
மகாராஷ்டிரா முதல்வராக பதவியேற்ற ஏக்நாத் ஷிண்டே யார்? ஆட்டோகாரர் தலைவரான கதை

முன்னர் அறிவிக்கப்பட்டபடி இரவு 7.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில், முதலமைச்சர் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

பதவியேற்பு அரங்கத்தில் தரைதளத்திலும் மேல்மாடத்திலும் பார்வையாளர் இருக்கைகள் அனைத்தும் நிரம்பிவழிய, முன்வரிசையில் ஷிண்டேவும் பட்னவிசும் அமர்ந்திருந்தனர். ஆளுநர் வந்ததும் சம்பிரதாயப்படி அவர்கள் மேடைக்கு அழைக்கப்பட்டனர்.

முதலில் ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆளுநர் கோஷியாரி பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். அப்போது தன் பெயரைப் படித்த ஏக்நாத் ஷிண்டே, பால்தாக்கரே பெயரையும் தானே மாவட்டத்தில் தன்னுடைய அரசியல் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த ஆனந்தி திகேவின் பெயரையும் குறிப்பிட்டு, வணங்கிவிட்டுத் தொடர்ந்தார். அப்போது குறுக்கிட்ட ஆளுநர் கோஷியாரி, அவருக்குக் கொடுக்கப்பட்ட தாளில் உள்ளபடி மட்டுமே கூறி, பதவியேற்குமாறு அறிவுறுத்தினார். அவ்வாறே அவரும் வாசித்துப் பதவியேற்றுக்கொண்டார்.

துணை முதலமைச்சராகப் பதவிப்பிரமாணம் ஏற்றுக்கொண்ட பட்னாவிஸ், எந்த இடறலும் இல்லாமல் உறுதிமொழியை வாசித்து முடித்தார்.

இருவரும் பதவியேற்று முடிக்கும்வரை பா.ஜ.க.வினரும் அதிருப்தி சிவசேனா கட்சியினரும் கடைசிக் கட்ட கிளைமாக்ஸ் ஏதும் நடந்துவிடுமோ என்ற பதைபதைப்பிலேயே இருந்தனர்.

Eknath Shinde
மகாராஷ்டிர முதல்வர் ஆகிறார் ஏக்நாத் ஷிண்டே : உத்தவ் தாக்கரே வீழ்ந்தது எப்படி?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com