மும்பையில் உட்கார்ந்துகொண்டு ஒட்டுமொத்த இந்தித் திரையுலகையும் வளைகுடா நாடுகள் வரை பரந்திருந்த நிழல் உலக சாம்ராஜ்யத்தையும் கட்டுப்படுத்தி வைத்திருந்த சிவசேனா கட்சிக்கு, இன்று அதோ கதி ஆகிவிட்டது.
சிவசேனாவிலிருந்து அதிருப்தி எம்.எல்.ஏக்களுடன் பிளவை உருவாக்கி பாஜக ஆதரவுடன் நேற்று முதல்வராக பதவியேற்றார் ஏக்நாத் ஷிண்டே.
சிவசேனாவின் 40 சட்டப்பேரவை உறுப்பினர்களைக் கடத்திச்சென்றதைப் போல குஜராத், அசாம் எனச் சுற்றி உள்ள மாநிலங்களிலும் நிகழ்வதற்கான அச்சத்தை ஏற்படுத்தியுள்ளார், ஏக்நாத் ஷிண்டே.
அத்துடன், 35 சிவசேனா உறுப்பினர்கள் ஆதரவு தனக்கு இருக்கிறது என்றும் கட்சியின் கொறடா சுனில் பிரபுவை நீக்கிவிட்டு, அவருக்குப் பதிலாக பரத் கோகாவாலேவை புதிய கொறடாவாக நியமித்துவிட்டதாகவும் அவர் அறிவித்தார்.
ஐந்தில் மூன்று பங்கு எம்.எல்.ஏ.க்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் இவரை, கட்சித்தாவல் தடை சட்டத்தின்படி ஒன்றும் செய்யமுடியாது என்பது சட்டமன்ற நடைமுறைக் கணக்கு.
ஆட்சிக்கு ஆபத்து என்கிற நிலையில், முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லத்தை காலிசெய்து, சொந்த பங்களாவுக்கு மாறினார் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே.
இவ்வளவுக்கும், கடந்த ஜூன் 19ஆம் தேதியன்று ஐந்து நட்சத்திர விடுதியில் பூட்டப்பட்ட அரங்கத்தில், நடைபெற்ற கட்சியின் 56ஆவது ஆண்டு விழாவில், மேடையிலிருந்த ஆறு முக்கிய தலைவர்களில் ஷிண்டேவும் ஒருவர்.
நாற்பது ஆண்டுகளாக சிவசேனா கட்சிக்காகப் பாடுபட்டவர் எனப் பெயர்வாங்கியவர்...
இன்று சொந்தக் கட்சியின் ஆட்சியை காலிசெய்யும் அளவுக்கு மாறிப்போனது ஏன்?
தானே மாவட்டத்தில் கோப்ரி பஞ்ச்பகாடி சட்டப்பேரவைத் தொகுதியில் 4 முறை எம்.எல்.ஏ.வாக இருந்துவரும் ஏக்நாத் ஷிண்டே, ஆட்டோ ஓட்டுநராகப் பணியாற்றியவர். 1980களில் வாக்லே தொழிற்பேட்டையின் தொழிலாளர் சங்கத் தலைவராக உருவெடுத்து, அப்போதைய தானே மாவட்டத்து சிவசேனா தலைவர் டீகேவுக்குப் பிடித்தமானவர் ஆனார்.
2000ஆவது ஆண்டில் ஷிண்டேவின் மகனும் மகளும் நீரில் மூழ்கி இறந்துவிட்டனர். அந்தச் சோகத்திலிருந்து அவரை மீட்க, தானே நகராட்சியில் எதிர்க்கட்சித் தலைவராக ஆக்கினார், டீகே. இப்போதைய பால்கர் மாவட்டம்- அப்போதைய தானே மாவட்டப் பகுதிகளில் ஷிண்டேவுக்கென தனிப்பட்ட செல்வாக்கு உருவாகியது.
அடுத்த ஓராண்டில் விபத்தில் சிக்கிய டீகே இறந்துவிட, மாவட்டத் தலைவராக உருமாறினார், ஏக்நாத் ஷிண்டே.
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அத்தோடு சிவசேனா கட்சியிலும் ஷிண்டேவின் கை ஓங்கத் தொடங்கியது.
சிவசேனாவைப் பொறுத்தவரை ஏக்நாத் ஷிண்டே என்றால் அதிரவைக்கக்கூடிய ஒரு கட்சிக்காரர் என்று அழுத்தமாகப் பெயர் உண்டாகிவிட்டது. கொரோனா காலகட்டத்தில்கூட வழக்கம்போல தன்னுடைய பாணியில் களத்தில் இறங்கி வேலைசெய்தார், ஏக்நாத் ஷிண்டே. முழுக் கவச உடையை அணிந்துகொண்டு கொரோனா சிகிச்சைப்பிரிவுகளுக்கு நேரில் சென்று மருத்துவ உதவிகளைப் பார்வையிட்டும் குறைகளை நிவர்த்திசெய்தும் நல்ல பெயர் எடுத்தவர் என்பது முக்கியத்துவம் உடையது.
மும்பையில் மற்றவர்களுக்கும் சிவசேனா கட்சியினருக்கும் மோதல் வந்தால், காவிக் கொடிக் கட்சியினரின் குரல்தான் வலுவாக இருக்கும்.
நம்ம ஊரில் கூறப்படும்- இந்தப் படை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா என்பதைப்போல- யாரு சொல்றா... சிவசேனா சொல்லுது என்பது தடாலடியாக எழுந்து அடங்கும்.
அந்த நிலையில் கட்சியின் முக்கிய பிரமுகரும் அப்போதைய சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான நாராயண் ரானே, திடீரென காங்கிரசுக்குத் தாவினார். பின்னர் பாஜகவில் சேர்ந்து இப்போது மத்திய அமைச்சராக இருக்கிறார் என்பதெல்லாம் பழைய கதை.
அவர் கட்சி தாவியதை முன்னிட்டு உட்கட்சி மோதல் பயங்கரமாக நடைபெற்றது. அப்போதெல்லாம் கட்சித் தலைமைக்கு ஆதரவாக தெருவில் இறங்கி சண்டைபோட்டவர், இந்த ஏக்நாத் ஷிண்டே.
அந்த உக்கிர சண்டையில்தான் அவருக்குப் பல் உடைந்து இன்றைக்கும் அடையாளம் அப்படியே இருக்கும்.
சிவசேனா தலைமைக்கு ஆதரவாக மும்பைக்கு தொண்டர்களை அனுப்பியவரே, இன்றைக்கு அதே கட்சியின் முடிவுரையை எழுதவும் புறப்பட்டுவிட்டார். இதற்கான காரண காரியங்களையும் அவரைச் சார்ந்தவர்கள் பட்டியலிடுகிறார்கள்.
முதல் முறையாக மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் முதலமைச்சராக உத்தவ் தாக்கரே பதவி ஏற்றபின் மும்பையில் சிவசேனா பேரணியை நடத்தியது. அப்போது பந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ் பகுதியில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான சிவசேனா தொண்டர்களிடையே, சிவசேனை நிறுவனர் பால் தாக்கரேவைப் பற்றிப் பேசி, அதிக கைதட்டல்களை அள்ளினார், ஷிண்டே.
மகாராஷ்டிரத்தில் பா.ஜ.க.வுடன் இணைந்து முதல் முறையாகக் கூட்டணி ஆட்சியை அமைத்தது, சிவசேனை. முன்னர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஏக்நாத் ஷிண்டே, சிறிது காலம் அதில் பொதுப்பணி துறையின் அமைச்சராகப் பதவியேற்றார்.
குறுகிய காலமே அவர் அந்தப் பதவியில் இருந்தபோதும், அப்போதைய முதலமைச்சர் பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸுடன் ஷிண்டே நெருக்கமானார். 2017இல் இரு கட்சிகளும் உள்ளாட்சித் தேர்தலில் தனித்தனியாகப் போட்டியிட்டன.
ஷிண்டேவின் தானே மாவட்டத்தில் பாஜகவால் மல்லுக்கட்ட முடியவில்லை. அதையடுத்து, துணை முதலமைச்சர் பேச்சு எழுந்தபோது சிவசேனையின் சார்பில் ஷிண்டேவின் பெயரைப் பரிந்துரை செய்தார், பட்னாவிஸ். ஆனால், அதை உத்தவ் தாக்கரே தடை போட்டார்.
பால்தாக்கரே காலத்தில் 1991இல் சிவசேனையிலிருந்து விலகி இப்போது சரத்பவார் கட்சியில் மாநில அமைச்சராக இருக்கும் சகன் புஜ்பால், பிறகு நாராயண் ரானே ஆகியோருக்குக் கிடைத்த முக்கியத்துவத்தைப் போல ஷிண்டேவுக்கும் அளித்துவிடக்கூடாது என்பதில் உத்தவ் தாக்கரே உறுதியாக இருந்தார்.
குறிப்பாக, 2019இல் சிவசேனை தலைமையில் ஆட்சி அமைந்தது தனக்கு சாதகமாக இருக்கும் என ஷிண்டே எதிர்பார்த்தார். ஆனால் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்ய தாக்கரே நேரடி அரசியலுக்கு வந்ததுடன், அமைச்சரவையிலும் இடம் அளிக்கப்பட, ஷிண்டேவின் கனவு படிப்படியாகப் பொசுங்கியது என்கிறார்கள், அவரின் ஆதரவாளர்கள்.
இதற்கிடையே, முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவின் ஆட்சி நடத்தும் பாணி, கட்சி எம்.எல்.ஏ.க்கள்கூட அவரை அணுகமுடியாத நிலைமை, கூட்டணிக் கட்சி அமைச்சர்களிடம் எடுபடாத கோரிக்கைகள் என சிவசேனைக்குள் அதிருப்தியும் ஏமாற்றமும் அதிகரித்தது.
அவர்கள் எல்லாரும் பஞ்சாயத்து சொல்லும் இடமாக மாறிப்போனார், ஏக்நாத் ஷிண்டே.
அவரும் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை உரிய அமைச்சர்களிடம் எடுத்துப்போவது வழக்கமாகிவிட்டது.
காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் அமைச்சர்கள் சிலர் ஷிண்டேவின் இந்தச் செயல்பாட்டைக் குறிப்பிட்டு, அவரை பதில் முதலமைச்சர் என பட்டப்பெயர் வைத்துவிட்டார்கள் என்றால் பாருங்களேன்.
இத்துடன், ஏக்நாத் ஷிண்டேவின் வசமிருக்கும் நகர்ப்புற வளர்ச்சித் துறையில், உத்தவ் தாக்கரே தரப்பில் நேரடியாகத் தலையிட்டதும் இருவருக்கும் இடையில் உரசலை உண்டுபண்ணியிருக்கிறது. ஒரு கட்டத்தில் தாக்கரே குடும்பத்து இல்லமான மாதோஸ்ரியில் தனி பஞ்சாயத்தே நடந்திருக்கிறது என்கிறார்கள்.
இந்த நிகழ்வுகளைத் தொடர்ந்து தற்போது இந்திய அரசியலில் முக்கிய இடம் பெறும் மகாராஷ்டிராவின் முதல்வராக அவர் உருவெடுத்துள்ளார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust