சிவசேனாவைப் பிளவுபடுத்தி மகாராஷ்டிரத்தில் புதிய ஆட்சி வந்திருக்கும் நிலையில், முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவுக்கும் முன்னாள் முதலமைச்சரான, இந்நாள் துணை முதலமைச்சர் பட்னாவிசுக்கும் எப்படி ஒத்துப்போகும் என்பதுதான் இப்போதைய கேள்வி!
மூன்றாவது முறையாக முதலமைச்சராகப் பதவியேற்பார் எனக் கருதப்பட்ட பட்னாவிசு, கட்சி மேலிட முடிவுப்படி முன்பு விட அதிகாரம் குறைந்த பதவியை ஏற்றுக்கொண்டார். அதுவும் அவருடைய அமைச்சரவையில் இரண்டு முறை அமைச்சராக இருந்த ஏக்நாத் ஷிண்டேவின் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றதுதான் இந்தக் கேள்வியை முக்கியமாக எழுப்பவைத்திருக்கிறது.
பட்னாவிசுக்கும் ஷிண்டேவுக்கும் இடையே அரசியல் ரீதியாக அவரவர் கட்சித் தலைமைக்கு விசுவாசம் காட்டுவதில், ஒன்றுபோல இருந்தவர்கள். குறிப்பாக, ஷிண்டே அப்படி இருந்த காலகட்டத்தில் இருவருக்கும் இடையிலான உறவு, காரமாகவும் இனிப்பாகவும் இருவேறாக இருந்துள்ளது.
இரண்டு தலைவர்களும் இந்துத்துவ முகாமில் இருந்தாலும், தொடக்கத்தில் அவ்வளவு நல்லவிதமாக இருக்கவில்லை. இருவருக்கும் இடையிலான அரசியல் பகைமையானது, உள்ளாட்சித் தேர்தல் ஒன்றில் மேலும் கூடியது. 2015ஆம் ஆண்டில் நடைபெற்ற கல்யாண் டோம்பிவலி நகராட்சித் தேர்தலில்தான் பிரச்னை ஏற்பட்டது. கூட்டணியாக இருந்தபோதும் அந்தத் தேர்தலில் பா.ஜ.க.வும் சிவசேனாவும் தனித்தனியாகப் போட்டியிட்டன.
இரு கட்சிகளுக்கும் இடையில் அந்தத் தேர்தல் உவப்பானதாக இருக்கவில்லை. இரு தரப்பும் கடுமையாக நடந்துகொண்டன. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தலைமையில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில், அமைச்சர் பதவியிலிருந்து விலகியாவது வெற்றி பெற்றே தீர்வேன் என்று பகிரங்கமாக மேடையில் அறிவித்தார். அந்த அளவுக்கு அந்தத் தேர்தல் வெற்றி முக்கியமானதாக இருந்தது.
அதாவது அந்தத் தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன்னர் 2014ஆம் ஆண்டில், சிவசேனாவும் பா.ஜ.க.வும் ஒரே கூட்டணியாகப் பேரவைத் தேர்தலில் வெல்ல, கூட்டணி ஆட்சி அமைந்தது. ஆர்.எஸ்.எஸ். ஊழியரான தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான அமைச்சரவையில், சிவசேனாவுக்கு ஐந்து இடங்கள் வழங்கப்பட்டன. அதில் ஏக்நாத் ஷிண்டேவுக்கு பொதுப்பணிகள் துறை அமைச்சகம் ஒதுக்கப்பட்டது.
அதுவே விவகாரமாகவும் அமைந்தது. துறையின் அமைச்சர் ஏக்நாத் ஷிண்டேதான் என்றாலும், அதை முழுக்க இயக்குபவராக அப்போதைய முதலமைச்சர் பட்னாவிசு செயல்பட்டார். இதனால் கடுமையான அதிருப்தி அடைந்தார், ஷிண்டே.
ஆனாலும், அந்தத் துறையின் மூலம் மும்பைக்கும் நாக்பூருக்கும் இடையிலான சம்ருத்தி விரைவுச்சாலைத் திட்டம் கொண்டுவரப்பட்டது. அது, பட்னாவிசின் கனவுத்திட்டமாகக் கூறப்பட்டது.
கிட்டத்தட்ட 55ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான அந்த சாலைத் திட்டம் வந்தபின்னர், இரண்டு பேருக்கும் இடையில் உறவுப்பாலம் அமைக்கப்பட்டது எனக் கூறுகின்றனர், சிவசேனா உயர்மட்ட நிர்வாகிகள் தரப்பில்.
மாநிலத்தின் தலைநகரான மும்பையைக் குளிர்காலத் தலைநகரான நாக்பூருடன் இணைக்கும் 701 கிமீ திட்டத்துக்கு, சிவசேனா தரப்பில் முதலில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அந்தத் திட்டத்தைக் கண்டித்து கட்சிப் பத்திரிகையான சாம்னாவில் தலையங்கம் எழுதப்பட்டது. அதிவிரைவு சாலைத் திட்டத்துக்காக விவசாய நிலங்களை அரசு அதிகாரத்தின் மூலம் தவறான முறையில் பறிப்பதாகக் கடுமையாகச் சாடியது, அந்தத் தலையங்கம்.
2017 மே மாதம் எழுதப்பட்ட அந்தத் தலையங்கத்துக்கு அடுத்து விளக்கம் அளித்த ஏக்நாத் ஷிண்டே, விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவதை மட்டுமே கட்சி எதிர்ப்பதாகவும் அதிவிரைவுச் சாலைத் திட்டத்தை எதிர்க்கவில்லை என்றும் கூறினார்.
அத்துடன், அந்த சாலைக்கு சிவசேனாவின் தலைவர் பால்தாக்கரேவின் நினைவாக, ‘இந்துஹிருதய் சாம்ராட் பாலாசாகேப் தாக்கரே சம்ருதி அதிவிரைவுச் சாலை’ எனப் பெயரிடப்பட்டதும் அந்த விவகாரம் நிறைவுபெற்றது.
அந்த விவகாரம் அரசாங்கத்துக்குள் பிரச்னையாக உருவானபோது, பட்னாவிசும் ஷிண்டேவும் ஒரு மாதிரியாக இணக்கமாக அதைக் கையாண்டார்கள் என அப்போதைய உயர் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ஆனால் பொதுவாக அரசாங்க விவகாரங்களில் இருவரின் செயல்பாடும் வெவ்வேறு பாணியில் இருந்தன என அதே அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.
பட்னாவிசைப் பொறுத்தவரை, எதிலும் சட்டெனவும் உறுதியானவராகவும் முடிவெடுத்துச் செயல்படுவார்; ஏக்நாத் ஷிண்டேவோ எதிலுமே மிகவும் கவனமாக ஒவ்வொரு அடியையும் எடுத்துவைப்பார்; பட்னாவிசை ஒப்பிட ஷிண்டே அநியாயத்துக்கு முன்னெச்சரிக்கையாகச் செயல்படுவார் என்கிறனர் அதிகாரிகள்.
அமைச்சரவையில் இப்படியே இரண்டு ஆண்டுகள் ஓடிவிட, இருவருக்கும் இடையே கவனமான இடைவெளி ஏற்பட்டுவிட்டது. அதாவது, எச்சரிக்கையான நண்பர்களாக அரசியல் செய்துவந்தார்கள்.
அடுத்தகட்டமாக, 2017ஆம் ஆண்டில் மும்பை, தானே ஆகிய இரண்டு நகராட்சிகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டது. மும்பையில் 20 ஆண்டுகளுக்கும் மேலான வெற்றியை சிவசேனா தக்கவைத்தது. ஷிண்டேவின் அடையாளமான தானேவில் சொல்லவேண்டியதே இல்லை. அப்போது இரண்டு கட்சிகளும் அதன் உண்மையான வலுவைக் காட்டி வேலைசெய்தன. ஆனாலும் தானேவில் எதிரிக்கு வலிக்காமல் அடிப்பது என்பதைப்போல ஷிண்டே தரப்பிடம் பா.ஜ.க. நடந்துகொண்டது எனக் கூறப்படுகிறது.
மக்களவைத் தொகுதியான கல்யாணில் ஷிண்டேவின் இப்போதைய ஒரே மகனான மருத்துவர் ஸ்ரீகாந்த், நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் கல்யாணையும் உள்ளடக்கிய டோம்பிவலி நகராட்சித் தேர்தலில் இரு தரப்புமே வாழ்வா சாவா போராட்டத்தில் மோதிக்கொண்டனர்.
காட்சிகள் மாறி இப்போது அதே கல்யாண் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட டோம்பிவலி சட்டப்பேரவைத் தொகுதியில், பா.ஜ.க.வின் இரவீந்திர சவான் என்பவர் எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். அதிருப்தி சிவசேனா எம்.எல்.ஏ.களை சூரத்துக்கும் கவுகாத்திக்கும் அள்ளிச்சென்று வந்ததில், இவருடைய பங்கு முக்கியமானதாக இருந்திருக்கிறது. முன்னரே ஷிண்டே தரப்புக்கும் இவருக்கும் நல்லுறவு இருந்தது என்பதும், இந்த சவான் பட்னாவிசின் நம்பிக்கையான விசுவாசி என்பதும் மாநிலம் அறிந்த உண்மை.
முதலமைச்சராக ஷிண்டே அமர்த்தப்பட்டாலும், புதிய அரசாங்கத்தில் முக்கியமான துறைகளை பா.ஜ.க.வே கையகப்படுத்தும் என நேற்று இரவு முதலே உறுதியான தகவல்கள் வெளியாகத் தொடங்கின.
கிரீடம் யார் தலையில் இருக்கிறது என்பதைவிட, அரசாங்கத்தை இயக்குவது யார் என்பதுதான் முக்கியம் என பா.ஜ.க. தரப்பில் கூறப்படுகிறது. ஷிண்டே தரப்பிலோ பொம்மையாகக் கூட இருக்கட்டுமே; முதலமைச்சர் யார் என்பதுதான் சங்கதியே என்கின்றனர்.
நேற்று நடைபெற்ற புதிய அமைச்சரவையின் முதல் கூட்டத்துக்குப் பின்னர், முந்தைய உத்தவ் தாக்கரே அரசின் முக்கிய முடிவை நிறுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கோரேகான் பகுதியில் உள்ள ஆரே காலனியில் மெட்ரோ ரயில் 3ஆவது செட் அமைக்கும் திட்டத்தால், சுற்றுச்சூழலுக்கு ஆபத்து என எதிர்ப்பு கிளம்பியது. அதையடுத்து அத்திட்டத்துக்கான இடத்தை மாற்றுவதென உத்தவ் அரசு முடிவுசெய்தது. ஆனால் அதே இடத்திலேயே மெட்ரோ செட்டைக் கட்டுவதென இப்போது முடிவு மாற்றப்பட்டுள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இதே ஷிண்டே காலத்து நகர்ப்புற மேம்பாட்டுத் துறைதான் இந்த முடிவுகளை மேற்கொண்டிருந்தது எனும் நிலையில், புதிய முடிவுகளின் விளைவுகள் எப்படி இருக்கும் எனக் கேள்வி எழுகிறது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust