அதானி விவகாரம் : அதானி நிறுவன தவறுகளை முன்பே சுட்டிக்காட்டிய அதானி வாட்ச்

அதானி குழுமம் மேற்கொள்ளும் தவறான விஷயங்களை வெளிக்கொண்டு வருவது மட்டுமே அதானி வாட்ச் வலைதளத்தின் முக்கிய நோக்கமாக இருக்கிறது. அதைத் தாண்டி குறிப்பிட்டு எந்த ஒரு விடையையும் காண வேண்டும் என்கிற நோக்கில் இது செயல்படவில்லை என அதானி வாட்ச் கூறுகிறது
அதானி
அதானிTwitter

இந்தியாவின் மிகப்பெரிய தொழில் குழுமங்களில் ஒன்றான அதானி குழுமம் குறித்த செய்திகள், கடந்து சில வாரங்களாக இந்திய தேசிய ஊடகங்கள் தொடங்கி சர்வதேச ஊடகங்கள் வரை பலவற்றிலும் விரிவாக வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

கடந்த ஜனவரி 24 ஆம் தேதி ஹிண்டன்பெர்க் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், அதானி குழுமம் பணச் சலவை மோசடிகள், பங்குச் சந்தை மோசடிகள், பல்வேறு கார்ப்பரேட் முறைகேடுகளில் ஈடுபட்டு இருப்பதாக, பல்வேறு ஆதாரங்களோடு குற்றம்சாட்டப்பட்டு இருந்தது.

இந்த குற்றச்சாட்டுகளின் எதிர்வினையாக அதானி குழும பங்குகளின் சந்தை மதிப்பு சுமார் 100 பில்லியன் அமெரிக்க டாலருக்கு மேல் சரிந்திருக்கிறது. மேற்கொண்டு அதானி என்டர்பிரைசஸ் என்கிற நிறுவனம் வெளியிட்ட எஃப் பி ஓ பங்கு வெளியிட்டையும் திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது.

இப்படி, அமெரிக்காவை சேர்ந்த ஆராய்ச்சி நிறுவனம் அதானி குழுமத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்துவதற்கு முன்பே, அதானி வாட்ச் (Adani Watch) என்கிற பெயரில் இயங்கி வரும் ஒரு சிறிய வலைதளம் இது போன்ற பல குற்றச்சாட்டுகளை ஆதாரத்தோடு வெளியிட்டுக் கொண்டிருந்தது.

அத்தளத்தில் அதானி குழுமத்தின் முறைகேடுகள் தொடர்பாக, குறிப்பாக அதானி குழுமத்தின் வெளிநாட்டு முதலீடுகள் தொடர்பாக கடந்த 2021 ஜூலை முதல் பல்வேறு கட்டுரைகள் அத்தளத்தில் பிரசுரமாயின.

ரவி நாயர் என்கிற டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் செய்தியாளர் ஒருவர் இந்தக் கட்டுரைக்குத் தேவையான விஷயங்களை ஆராய்ந்து எழுதினார் என்கிறது ராய்டர்ஸ் இன்ஸ்டிட்டியூட் வலைதளம்.

கௌதம் அதானி
கௌதம் அதானிtwitter

யார் இந்த அதானி வாட்ச்?

அதானி வாட்ச் என்கிற வலைத்தளம், லாப நோக்கற்ற திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட ஒன்று.

பாப் ப்ரவுன் பவுண்டேஷன் என்கிற அமைப்பினால் உருவாக்கப்பட்டது. இதன் நோக்கமே அதானி குழுமத்தின் தவறான செயல்பாடுகளை கண்காணிப்பது தான்.

Geoff Law என்பவர் இந்த வலைதளத்தின் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். முன்னாள் ஆஸ்திரேலிய செனட்டரான பாப் ப்ரவுன், சுற்றுச்சூழல் தொடர்பான விழிப்புணர்வை வளர்த்தெடுக்கவும், மேம்படுத்தவும் பாப் ப்ரவுன் ஃபவுண்டேஷன் என்கிற அமைப்பை உருவாக்கினார்.

அதானி விஷயத்துக்கு வருவோம். ஆஸ்திரேலியாவின் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு, குவின்ஸ்லேண்ட் பகுதியில், ஒரு மிகப்பெரிய நிலக்கரி சுரங்கத்தை உருவாக்க இருப்பதாகச் செய்திகள் வெளியான போது தான், ஆஸ்திரேலியா உட்பட பல வெளிநாடுகளில் உள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் பாப் ப்ரவுன் உட்பட பலரும் அதானி குழுமத்தைக் குறித்து கேட்கத் தொடங்கினர்.

அத்திட்டத்தைத் தொடர்ந்து 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதவாக்கில், அதானி குழுமம் குறித்த விழிப்புணர்வை அதானி வாட்ச் அமைப்பு ஏற்படுத்தத் தொடங்கியது. இந்த வலைதளம் முழுக்க முழுக்க பாப் ப்ரவுன் ஃபவுண்டேஷன் அமைப்பின் நிதியில் மட்டுமே இயங்கியது. கார்மைக்கெல் நிலக்கரி சுரங்கத்தைத் தாண்டி, அதானி வாட்ச் வலைதளத்தின் கவனம் மெல்ல அதானி குழும விவகாரங்கள் மீதும் திரும்பியது.

அதானி வாட்ச் வலைதளம் மெல்ல தங்கள் வலைதளத்துக்கு செய்திகளைக் கொடுப்பவர்கள் & அதானி குழுமத்தின் நடவடிக்கைகளைப் பதிவு செய்பவர்களின் எண்ணிக்கையை அதிகரித்தது அல்லது மேம்படுத்திக் கொண்டது எனலாம். அப்படியே அதானி குழுமப் பணிகள், இந்தியா, மியான்மர், இந்தோனேசிய போன்ற நாடுகளின் சுற்றுச்சூழல், மனித உரிமை விவகாரங்களில் ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்தும் எழுதத் தொடங்கியது. எப்போதும் குறைந்தபட்சம் 12 பேராவது இப்பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.

இந்திய பிரதமர் நரேந்திர மோதி உடன் மிக நெருக்கமான தொடர்பில் இருப்பவர்தான் அதானி குழுமத் தலைவர் கௌதம் அதானி. ஆகையால் தான் அவருக்கு இந்திய அரசின் பல்வேறு மிகப்பெரிய அடிப்படைக் கட்டுமான மேம்பாட்டு ஒப்பந்தங்கள் மற்றும் எரிசக்தி துறை ஒப்பந்தங்கள் கிடைத்ததாக பல்வேறு சுயாதீன பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்கள் கூறுவதாக ராய்டர்ஸ் இன்ஸ்டிட்யூட் வலைதளத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அதானி
ஹிண்டன்பெர்க்: அதானி குழுமத்தின் மீது மோசடி குற்றம் சாட்டிய நேதன் ஆண்டர்சன் யார்?

இந்திய பொருளாதாரத்தின் பல துறைகளிலும் அதானி குழுமம் பரவிக் கிடக்கிறது. அதானி குழுமம் கிட்டத்தட்ட 18 நெடுஞ்சாலைத் திட்டங்களை கட்டமைத்துக் கொண்டிருக்கிறது. இந்த ஒரே ஒரு காரணத்தினால் இன்று இந்தியாவின் மிகப்பெரிய சாலை கட்டுமான நிறுவனமாக உருவெடுத்து இருக்கிறது அதானி குழுமம். அதேபோல இந்தியாவில் விமானத்தில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கையில் சுமார் 25% பேர் அதானி குழுமத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் விமான நிலையங்கள் வழியாகப் பறக்கிறார்கள்.

இந்தியாவின் ஒட்டுமொத்த விமான சரக்கு கையாளுதலில் மூன்றில் ஒரு பங்கை அதானி குழுமம் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது.

நிலக்கரி சுரங்கம், மின்சார உற்பத்தி மற்றும் மின் பகிர்மானம், தொலைக்காட்சி ஊடகம், சோலார் போன்ற மரபுசாரா எரிசக்தி துறை… என இந்திய பொருளாதாரத்தில் அதானி குழுமத்தின் காலடித்தடம் இல்லா இடம் ஏது என்று கேட்கலாம்.

அதானி
அதானிTwitter

பத்திரிகையாளர்கள் மீது பாயும் அதிகாரம்

ரவி நாயர், கௌதம் அதானியின் தனிப்பட்ட சொத்துக்கள் நரேந்திர மோதியின் இரண்டாவது ஆட்சி காலத்தில் அபரிவிதமாக அதிகரித்தது. ப்ளூம்பெர்க் நிறுவனத்தின் பில்லியனர் இண்டெக்ஸ் பட்டியலில் கொடுத்திருக்கும் தரவுகளின் படி, கடந்த 2020 ஜனவரியில் இருந்து 2022 ஆகஸ்ட் மாதத்திற்குள் கௌதம் அதானியின் சொத்து மதிப்பு சுமார் 13 மடங்கு அதிகரித்து இருப்பதாக கூறுகிறது. மறுபக்கம் உலக பத்திரிக்கைச் சுதந்திர குறியீட்டில் 142 ஆவது இடத்தில் இருந்த இந்தியா 2022ஆம் ஆண்டில் 150 வது இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறது.

இந்தியாவில் இருக்கும் எந்த ஒரு சுயாதீன பத்திரிக்கையாளரும், ஏதேனும் பத்திரிகை நிறுவனத்தைச் சேர்ந்த செய்தியாளரும் அதானி குழுமம் குறித்து விசாரித்து செய்திகளை வெளியிடுவது மிகக் கடினமான செயலாக மாறியுள்ளது.

அதையெல்லாம் மீறி யாரேனும் ஒருவர் அதானி குழுமத்தைக் குறித்து ஆராய்ந்து செய்திகளை வெளியிட்டால் அவர்கள் பல்வேறு சட்ட சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டது.

கடந்த 2022 ஜூலை மாதம் ரவி நாயர் மீது டெல்லி காவல்துறை ஓடோடி சென்று நடவடிக்கை எடுத்தது. கையில் சிறை வாரண்டையும் எடுத்துச் சென்றது. இதற்கு காரணம் என்னவென்றால் டெல்லியில் இருந்து சுமார் 1,000 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் காந்தி நகர் காவல் நிலையத்தில் அதானி குழுமம் ஒரு புகார் கொடுத்து வழக்கு தொடுத்தது தான்.

பத்திரிக்கையாளர் ரவி நாயர் தன்னுடைய 26 ட்விட் பதிவுகள் மூலம் அதானி குழுமத்தைக் கலங்கப்படுத்துவதாகக் குற்றம் சாட்டப்பட்டது. இத்தனைக்கும் ரவி நாயர் தன்னுடைய பதிவுகளில் வெவ்வேறு வலைதளங்களில் பிரசுரிக்கப்பட்ட அதானி தொடர்பான கட்டுரைகளின் இணைப்புகளை கொடுத்திருந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

பரஞ்சாய் குஹா தாகுர்தா:

இதே போல கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவின் புகழ்பெற்ற பத்திரிக்கையாளர்களில் ஒருவரான பரஞ்சாய் குஹா மீதும் கைது வாரன்டுகள் பிறப்பிக்கப்பட்டன. மோடி அரசாங்கத்தோடு அதானி குழுமத்திற்கு இருக்கும் நெருக்கம் குறித்தும், அதானி குழுமம் சில வரி ஏய்ப்புகளில் கூட ஈடுபட்டு இருக்க வாய்ப்பு இருக்கிறது என்றும் வெளியிட்ட இரண்டு கட்டுரைகளே இதற்குக் காரணம் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

2020 ஆம் ஆண்டு நியூஸ் கிளிக் (Newsclick) என்கிற வலைதளம் அதானி பவர் நிறுவனம் குறித்து செய்திகளை வெளியிடக் கூடாது என குஜராத் மாநிலத்தில் உள்ள கிழமை நீதிமன்றம் ஒன்றில் அதானி தரப்பு வழக்கு தொடுத்தது இங்கு நினைவு கூரத்தக்கது.

போதிசத்வா கங்கூலி, பவன் புருகுலா, நேஹல் சாலியாவாலா (எகனாமிக் டைம்ஸ்), லதா வெங்கடேஷ் & நிமேஷ் ஷா (சி என் பி சி டிவி 18), நியூஸ் கிளிக், எகனாமிக் & பொலிடிகல் வீக்லி போன்ற செய்தியாளர்கள் மற்றும் பத்திரிகை நிறுவனங்கள் மீது அதானி குழுமம் வழக்கு தொடுத்திருக்கிறது என்றால், அதானி குழுமத்துக்கு பத்திரிகையாளர்கள் மீதான பார்வை எப்படி இருந்திருக்கும் என நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்.

பொதுவாக இது போன்ற வழக்குகளில் பத்திரிக்கையாளர்கள் தண்டிக்கப்படுவது மிக மிகக் குறைவு, ஆனால் இந்த ஒட்டுமொத்த நடைமுறைகளும் பத்திரிகையாளர்களை ஒருவித அச்சத்தில் ஆழ்த்தவே மேற்கொள்ளப்படுகின்றன. மேலும் இது போன்ற வழக்குகளின் போது பத்திரிகையாளர்கள் செலவழிக்க வேண்டிய தொகை, நீதிமன்றங்களிடம் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் தொடர்பான பணிகள், அலைச்சல்… போன்றவைகள் பத்திரிக்கையாளர்களின் சாதாரண வாழ்க்கையை சிக்கலுக்கு உள்ளாக்கும்.

உதாரணத்திற்கு பத்திரிக்கையாளர் ரவி நாயர் தற்போது சிறையில் இருந்து பிணையில் வெளிவந்து விட்டார், இருப்பினும் தொடர்ந்து அவ்வழக்கில் போராடிக் கொண்டிருக்கிறார்.

இப்படி ஒரு பத்திரிகையாளர் ஒரு செய்தியையோ, கட்டுரையோ அதானி போன்ற மிகப் பெரிய நிறுவனத்திற்கு எதிராக வெளியிட்ட பிறகு, ஆண்டு கணக்கில் அலைந்து திரிவது கையில் உள்ள காசெல்லாம் நீதிமன்ற வழக்கை எதிர்கொள்ள கரைவது… போன்ற பிரச்னைகளை ஒருவர் எதிர்கொள்வதை மற்றவர்கள் பார்க்கும் போது, புதிய பத்திரிகையாளர்களும், வெகுஜன மக்களும் அதானி போன்ற மிகப் பெரிய கார்ப்பரேட் குழுமத்துக்கு எதிராக செய்திகளை வெளியிடவோ அவர்களை குறித்து ஆராயவோ அச்சப்படுவர்.

வணிக செய்திப் பிரிவில் நெருக்கடி

இந்தியாவில் வணிக செய்திப் பிரிவில் வெளியாகும் செய்திகள் தொடர்ந்து ஆய்வு செய்து விசாரணை செய்து வெளியிடப்படுவதில்லை. பெரும்பாலும் யாரோ ஒருவர் வெளியிடும் செய்திக் கசிவின் அடிப்படையிலேயே செய்திகள் வெளியாகி வருகின்றன என்கிறார் ஸ்ஃப்ரீ ஸ்பீச் கலெக்டிவ் என்கிற அமைப்பைச் சேர்ந்த ஷேசு.

அதுபோக செய்தி நிறுவனங்கள் பலதும், நிறுவனங்களின் விளம்பரங்களைப் பெரிய அளவில் நம்பி இருப்பதால், பெரு நிறுவனங்களை பகைத்துக் கொள்ள விரும்புவதில்லை. பல நேரங்களில் செய்திக் கட்டுரைகள் ஒரு நிறுவனத்தின் புகழைப் பாடும் பி ஆர் கட்டுரைகளாக மாறிவிடுகின்றன. மக்களுக்கு நன்மை பயக்கக்கூடிய அல்லது மக்களை ஆபத்திலிருந்து பாதுகாக்கக் கூடிய பொதுநலம் பொதிந்த கேள்விகள் கேட்கப்படுவது அரிதாகிக் கொண்டே போகிறது.

அதானி
கௌதம் அதானி : பணத்திற்காக கடத்தப்பட்ட வரலாறு தெரியுமா? - ஒரு விரிவான அறிமுகம்

பொதுவாகவே இந்தியாவில் புலனாய்வு செய்து செய்திகளை வெளியிடுவதற்கு போதிய நிதி ஆதாரங்கள் ஒதுக்கப்படுவதில்லை. அப்படியே ஏதேனும் ஒரு சில பத்திரிகை நிறுவனங்கள் ஆராய்ந்து செய்திகளை வெளியிட்டாலும் அவர்களுக்கு எதிராக தொடுக்கப்படும் சட்ட ரீதியிலான வழக்குகளை எதிர்கொண்டு அதிலிருந்து மீளவே மிக நீண்ட காலம் ஆகிறது.

அதானி குழுமம் மேற்கொள்ளும் தவறான விஷயங்களை வெளிக்கொண்டு வருவது மட்டுமே அதானி வாட்ச் வலைதளத்தின் முக்கிய நோக்கமாக இருக்கிறது. அதைத் தாண்டி குறிப்பிட்டு எந்த ஒரு விடையையும் காண வேண்டும் என்கிற நோக்கில் இது செயல்படவில்லை என அதானி வாட்ச் வலைதளத்தின் ஆசிரியர் Geoff Law ராய்ட்டர்ஸ் இன்ஸ்டிட்யூட் வலைதளத்திலும் கூறியுள்ளார்.

அதையும் தாண்டி, அதானி வாட்ச் வலைதளத்தின் பணிகளால் ஏதேனும் ஒரு மாற்றத்தைக் காண வேண்டும் என்றால், மத்திய இந்தியாவில் பரவிக் கிடக்கும் அடர்ந்த காடுகளை அப்புறப்படுத்தி நிலக்கரிச் சுரங்கத்தை அமைக்கும் முயற்சியில் இருக்கிறது அதானி குழுமம். அக்காடுகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து இந்திய அரசும், அதானி குழுமமும் அத்திட்டத்திலிருந்து பின்வாங்கிக் கொண்டு, ஆதிவாசிகள் பதுகாக்கப்பட வேண்டும் என்கிறார் அதானி வாட்ச் தளத்தில் ஆசிரியர் Geoff Law.

அதானி
அதானி குழுமம் : 100 பில்லியன் டாலருக்கு மேல் சந்தை மதிப்பை இழந்த அதானி - அடுத்து என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com