உலக பணக்காரர்களின் டாப் 3 இடங்களில் இருந்த அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானியின் சொத்து மதிப்பு சுமார் 48 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு சரிந்து இருக்கிறது. இந்த கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும் நேரத்தில் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 16ஆவது இடத்தில் இருக்கிறார். அதேபோல அதானி குழும நிறுவனங்களின் பங்கு மதிப்பு ஒட்டுமொத்தமாக கூட்டி கழித்துப் பாத்தால் சுமார் 100 பில்லியன் அமெரிக்க டாலருக்கு மேல் சரிந்திருக்கிறது.
இந்த பங்கு சரிவுகளுக்கெல்லாம் ஹிண்டன்பெர்க் ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கையே காரணம் என்பதை நாம் அறிவோம். அதானி குழுமம் பல்வேறு முறைகேடுகளை செய்திருக்கிறது, தன் குழுமத்தைச் சேர்ந்த நிறுவன பங்குகளின் விலையை அதிகரிக்க பல்வேறு சட்ட விரோத நடவடிக்கைகளை கையாண்டு இருக்கிறது, போலி நிறுவனங்கள் மூலம் பல்வேறு முதலீடுகளை மேற்கொண்டு இருக்கிறது என ஹிண்டன்பெர்க் அடுக்கடுக்காக பல குற்றச்சாட்டுகளை வைத்திருக்கிறது. அக்குற்றச்சாட்டுகள் அனைத்தும் அடிப்படை ஆதாரங்களற்றவை, தவறானவை என அதானி தரப்பிலிருந்து சுமார் 400 பக்கங்களுக்கு மேல் எழுத்துப்பூர்வமாக மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
ஆனால் ஹிண்டன்பெர்க் நிறுவனமோ தாங்கள் எழுப்பிய 88 கேள்விகளில் 62 கேள்விகளுக்கு பதில் கொடுக்கப்படவில்லை என சுட்டிக்காட்டியது. ஹிண்டன்பெர்க் நிறுவனம் அதானி குழுமத்தின் பங்குகளின் விலை எதிர்காலத்தில் கடும் வீழ்ச்சி காணும் என ஷார்ட் பொசிஷன் எடுத்திருக்கிறது ஹிண்டன்பெர்க்.
சமீபத்தில் அதானி என்டர்பிரைசஸ் நிறுவனம், FPO முறையில் தன்னுடைய கணிசமான பங்குகளை விற்று சுமார் 20,000 கோடி ரூபாய் (2.5 பில்லியன் அமெரிக்க டாலர்) திரட்ட இருப்பதாக அறிவித்தது. கடந்த ஜனவரி 25ஆம் தேதி தொடங்கிய எஃப் பி ஓ பங்கு வெளியிட்டில் சுமார் 3 சதவீத பங்குகள் மட்டுமே தொடக்கத்தில் சப்ஸ்கிரைப் செய்யப்பட்டு இருந்தன.
ஹிண்டர்பெர்க் அறிக்கை ஏற்படுத்திய சலசலப்புகளைக் கடந்தும், அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் பங்குகளை முழுமையாக வாங்கச் செய்ய, கெளதம் அதானியே களத்தில் இறங்கி பல முதலீடுகளைத் திரட்டியதாகச் சில முன்னணி வணிகச் செய்தி வலைதளங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன.
FPO பங்கு வெளியீட்டில் கடைசி நிமிடத்தில் அபுதாபியைச் சேர்ந்த ஐ ஹெச் சி இன்வெஸ்ட்மெண்ட்ஸ் நிறுவனம் சுமார் 400 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்தது, இந்திய ஸ்டீல் தொழிலதிபரான சஜ்ஜன் ஜிண்டால், டெலிகாம் பில்லியனாரான சுனில் மித்தல் ஆகியோர் முதலீடு செய்தது எல்லாமே, கெளதம் அதானியே நேரடியாக தலையிட்டு பேசி முதலீடுகளைப் பெற்றிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
ஒருவழியாக எஃப் பி ஓ பங்கு வெளியீட்டுப் பணிகள் எல்லாம் முடிந்த போது, அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் பங்குகள் அளவுக்கு அதிகமாக முதலீடு செய்ய விண்ணப்பங்கள் கோரப்பட்டு இருந்தன. அதானி குழுமம் ஹிண்டன்பெர்க் அறிக்கை ஏற்படுத்திய தாக்கத்தைக் கடந்து முதலீட்டாளர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றுவிட்டது என சில ஊடகங்களில் குறிப்பிடப்பட்டிருந்தன.
ஆனால், பிப்ரவரி 1ஆம் தேதி, அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம், FPO முறையில் முதலீட்டாளர்களுக்கு விற்பதாக இருந்த பங்குகளை திரும்பப் பெறுவதாகவும், இதுவரை வசூலித்த பணத்தை எல்லாம் முதலீட்டாளர்களுக்கே திருப்பிக் கொடுத்துவிட இருப்பதாகவும் தன் செய்திக் குறிப்பில் வெளியிட்டது ஒட்டுமொத்த இந்திய மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
முதலீட்டாளர்களின் நலன் கருதியும், அதானி குழுமப் பங்குகளின் விலை சரிந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் தார்மீக ரீதியாகவும் FPO முதலீடுகளை முன்னெடுத்துச் செல்வது சரியாக இருக்காது என்பதால் இந்த முடிவை எடுத்திருப்பதாக அதானி தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
இந்த எஃப் பி ஓ பங்கு வெளியீட்டிலும் அதானி தன்னுடைய சொந்த பணத்தையே முதலீடு செய்து இருக்கலாம், தன்னோடு நெருக்கமாக தொடர்பு வைத்திருக்கும் நிறுவனங்களே முதலீடுகளை மேற்கொண்டு இருக்கலாம் என்றும் சர்ச்சைகள் எழுந்தது இங்கு நினைவு கூறத்தக்கது.
இந்த சர்ச்சைகளை எல்லாம் கடந்து, கடைசியில் இந்தியாவின் மத்திய வங்கியான ரிசர்வ் வங்கி, தனக்குக் கீழ் இயங்கும் வங்கிகளிடம், அதானி குழும நிறுவனங்களுக்கு எவ்வளவு கடன் கொடுத்திருக்கிறார்கள் என்கிற விவரங்களை கோரியுள்ளது.
அமெரிக்காவின் மிகப்பெரிய நிதி நிறுவனங்களில் ஒன்றான சிட்டி குழுமம், அதானி குழுமத்தின் பங்குகளை சொத்துக்களாக கருதி கடன் கொடுக்க மறுக்கத் தொடங்கியுள்ளது. கிரெடிட் சூசி என்கிற மற்றொரு நிதி நிறுவனம் அதானி குழுமத்திற்கு சொந்தமான கடன் பத்திரங்களை ஏற்றுக் கொள்ள மறுக்கத் தொடங்கியுள்ளது.
இந்திய பங்குச் சந்தைகளை நெறிமுறைப்படுத்தும் செபி அமைப்போ, இந்தியாவின் ஆட்சி பீடத்தில் இருக்கும் அரசியல் தலைவர்கள் அல்லது உயர் அதிகாரிகளிடமிருந்தோ இதுவரை எந்த ஒரு விளக்கமோ, பதிலோ வரவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது என ஹெமிந்த்ரா ஹசாரி என்கிற சுயாதீன ஆய்வுப்பகுப்பாய்வாளர் (Independent Research Analyst) பி பி சி வலைதளத்திடம் கூறியுள்ளார்.
இந்த நெருக்கடிகள் எல்லாம் அதானி குழுமத்தைச் சூழ்ந்து இருக்கும் தற்காலிக பிரச்சனைகள் தான் என, இன்ஃப்ராவிஷம் ஃபவுண்டேஷன் என்கிற நிறுவனத்தைச் சேர்ந்த விநாயக் சேட்டர்ஜி பிபிசி வலைதளத்திடம் தெரிவித்திருக்கிறார். இவர் சுமார் 25 ஆண்டுகளாக அதானி குழுமத்தை தொடர்ந்து கண்காணித்து வருபவர்.
ஏற்கனவே இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கும், குஜராத் தொழிலதிபராக அறியப்பட்ட கௌதம் அதானிக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக பல்வேறு தரப்பிலிருந்து கூறப்பட்டு வருவதும் இங்கு கவனிக்கத்தக்கது. கௌதம் அதானியால் அரசியல் கட்சிகளும், அதிகாரத்தில் இருக்கும் அரசியல் கட்சிகளால் கௌதம் அதானியும் பயனடைந்ததாகவும், க்ரானி கேப்பிட்டலிசத்திற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்றும் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
கடந்த வியாழக்கிழமை, எதிர்க்கட்சிகள், நாடாளுமன்றத்தில் அதானி குழும நிறுவன பங்குகளின் விலை சரிவால் முதலீட்டாளர்கள் பாதிக்கப்படுவது தொடர்பாக ஒரு விவாதத்தை நடத்த வேண்டும் என்று கோரினர். ஹிண்டன்பெர்க் நிறுவனத்தின் அறிக்கை மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.
இப்படியாக இப்பிரச்னை முடிவிலியாக நீண்டுக் கொண்டிருக்கிறது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlus