Bombay Plague: கொரோனாவுக்கு முன்பு இந்தியாவில் பேரழிவை உண்டாக்கிய 1897 பிளேக் நோய்

மருத்துவ ரீதியாக புபோனிக் பிளேக் என்று அழைக்கப்படும் இந்த தொற்று யெர்சினியா பெஸ்டிஸ் எனும் பாக்டீரியாவால் ஏற்படுகிறது. மத்திய ஆசியாவில் உள்ள கொறித்துண்ணிகள் இந்த பாக்டீரியாக்களை சுமப்பதாக கூறப்படுகிறது.
Bubonic Plague
Bubonic PlagueCanva
Published on

கோவிட் 19 தொற்று இந்தியாவில் பரவிய போது அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்தது. பொது முடக்கம், சமூக விலகல், கட்டாய முகக்கவசம் போன்றவை அவற்றில் முதன்மையானவை. ஆனால் இந்த கட்டுப்பாட்டு முறைகள் இப்போது கண்டுபிடித்த ஒன்றல்ல.

1897ஆம் ஆண்டு தொற்று நோய்ச் சட்டம்

கோவிட் 19 தொற்று பரவிய போது இந்திய அரசு எடுத்த நடவடிக்கைகளின் மூலம் 1897ஆம் ஆண்டு தொற்று நோய்ச் சட்டத்தில் இருக்கிறது. இந்தச் சட்டம் ஒரு மாநில அரசு தொற்று நோயால் அச்சுறுத்தப் படும் போது அசாதாரண நடவடிக்கைகளை எடுக்க அனுமதிக்கிறது. மக்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளையும் எடுத்துக் கூறுகிறது.

நூற்றாண்டுக்கு முந்தைய ஒரு சட்டத்தில் இன்று நாம் கடைபிடிக்கும் சமூக விலகலை முதன்மைப்படுத்தி சரத்துக்கள் உள்ளன. அன்று அந்தச் சட்டம் கடுமையான முறையில் இந்தியாவில் அமல்படுத்தப்ட்டது. 1896ஆம் ஆண்டு மும்பை மாகாணத்தில் பேரழிவை ஏற்படுத்திய பிளேக் நோய் அதிவேகத்தில் பரவியதே அந்தச் சட்டம் உருவானதற்கும் அமல்படுத்தப்பட்டதற்கும் காரணம்.

அன்று இந்தியாவின் முதல் பிளேக் நோய் மும்பையில் கண்டறியப்பட்டாலும் விரைவிலேயே வங்காளம், பஞ்சாப், ஐக்கிய மாகாணங்கள் துவங்கி பர்மா வரை பரவியது. வட இந்தியாவில் பிளேக் நோயின் தாக்கம் மிக அதிகமாகவும், தெற்கு மற்றும் கிழக்கு இந்தியாவில் ஒப்பீட்டளவில் குறைவாகவும் இருந்தது. பிளேக் நோயால் 1901இல் 4 இலட்சம் இந்தியர்களும் 1905இல் 10 இலட்சம் பேரும் இறந்தனர்.

மருத்துவ ரீதியாக புபோனிக் பிளேக் என்று அழைக்கப்படும் இந்த தொற்று யெர்சினியா பெஸ்டிஸ் எனும் பாக்டீரியாவால் ஏற்படுகிறது. மத்திய ஆசியாவில் உள்ள கொறித்துண்ணிகள் இந்த பாக்டீரியாக்களை சுமப்பதாக கூறப்படுகிறது. பிறகு கொறித்துண்ணிகள் மூலம் மனிதர்களுக்கும், பாதிக்கப்பட்ட மனிதர்களிடமிருந்து மற்றவர்களுக்கும் பரவுகிறது.

19ஆம் நூற்றாண்டில் பிளேக்கின் மையமாக சீனாவின் மேற்கு யுனான் இருந்தது. அங்கிருந்து சீனாவின் பிற பகுதிகளுக்கும் பரவத் தொடங்கியது. இதன் மூலம் சீனாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் இறந்து போயினர். பிறகு ஹாங்காங் துறைமுகத்திலிருந்து கப்பல் வழியாக இந்த நோய் இந்தியாவின் வாயில் என்று அழைக்கப்படும் மும்பை நகரின் துறைமுகத்தில் வந்திறங்கியது. முதல் பிளேக் தொற்று மும்பை துறைமுகத்திற்கு அருகிலுள்ள மாண்ட்வியில் கண்டறியப்பட்டது.

பிளேக் நோய் வந்தால் நோயாளி அதிக காய்ச்சல் மற்றும் உடலில் வீங்கிய பெரிய கட்டிகளால் சிரமப்படுவார். மேலும் அவரது நீணநீர் சுரப்பிகள் வீங்கி இருக்கும். சிகிச்சை இல்லை என்றால் நோயாளி சில நாட்களுக்குள் இறக்க நேரிடும்.

Bubonic Plague
Zombie -ஆக மாறும் மான்கள், மனிதர்களுக்கும் பரவும் நோய் - அச்சத்தில் மக்கள்

பிளேக் தொற்று நோயை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுத்த ஆங்கிலேயர்கள்

இந்தியாவில் பிளேக் நோயின் ஆரம்ப கட்டத்தில் ஆங்கிலேயர்கள் அலட்சியமாக இருந்தனர். தமது உலகளாவிய வர்த்தகத்தை தடுக்க விரும்பாத ஆங்கிலேயர்கள் நோய் பரவலைத் தடுக்காமல் வணிக நடவடிக்கைகளை அனுமதித்தனர். இதன் மூலம் பிளேக் நோய் இந்தியா முழுவதும் பரவத் துவங்கியது.

பிறகு நிலைமை கட்டுக்கடங்காமல் போனதால் ஆங்கிலேயர்கள் அவசரமாக 1897ஆம் ஆண்டு தொற்றுநோய் சட்டத்தை உருவாக்கி அமல்படுத்த தொடங்கினர். இந்தச் சட்டம் உள்ளூர் அதிகாரிகளுக்கு எந்த நடவடிக்கைகளையும் எடுப்பதற்கு அதிகாரம் அளிக்கிறது. பூனே நகரின் உதவி கமிஷ்னர் டபிள்யூ சி ராண்ட் இச்சட்டத்தை அமல்படுத்தும் பணியில் ஈடுபட்டார். நிலைமை மோசமடைந்ததால் அவர் கொடூரமான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

அவரது ஆட்கள் பிளேக் நோய் அறிகுறிகளுக்காக மக்களின் ஆடைகளை பகிரங்கமாக கழற்றுவது, பாதிக்கப்பட்ட மக்களை கட்டாயமாக தனிமைப்படுத்துவது, கிருமி நீக்கம் செய்வதற்காக அவர்களது உடைமைகளை அழிப்பது போன்றவற்றை செய்தனர்.

புனேவைப் போன்று மும்பையும் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டது. மாண்ட்வி பகுதியில் வாழும் மக்களில் ஜெயின் சமூகத்தவர், பாட்டியா மற்றும் பனியா பிரிவு மக்கள் அதிகம் இருந்தனர். அவர்கள் தமது மத நம்பிக்கையின் படி பிளேக் நோயைப் பரப்பும் எலிகளைக் கொல்ல மறுத்தனர். அதே போன்று தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களுக்கு செல்வதற்கும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அப்போதைய பதிவு ஒன்றின் படி ஒரு பார்சி குடும்பப் பெண்கள் பாதிக்கப்பட்ட சிறுவனை கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவித்தனர். அதற்காக கத்திகளை எடுத்துக் கொண்டு தாம் தற்கொலை செய்வதாக மிரட்டினர். போலீசும் இல்லை, அதிகாரிகளும் வேறு ஏதும் செய்ய முடியவில்லை என்பதால் அந்த பார்சி சிறுவன் அடுத்த நாள் இறந்து போனான்.

மும்பையை விட்டு வெளியேறிய மக்கள்

பிரிட்டீஷ் நிர்வாகம் எடுத்த கடுமையான நடவடிக்கைகள் உள்ளூர் மக்களிடம் எதிர்ப்புணர்வை ஏற்படுத்தியது. அடுத்து பிளேக் தொற்று பீதி காரணமாக ஆயிரக்கணக்கானோர் தொற்றோடு மும்பையை விட்டு வெளியேறத் துவங்கினர். இந்தியர்களின் மத நம்பிக்கையை கணக்கில் கொள்ளாமல் நிலைமையை திறம்பட சமாளிக்க முடியாது என்று பிரிட்டிஷ் அரசாங்கம் தாமதமாகத்தான் புரிந்து கொண்டது. மேலும் பிளேக் தொற்றைக் கட்டுப்படுத்தும் சட்டத்தால் மக்கள் வேலையிழந்து அவதிப்பட்டனர். நோயின் பாதிப்போடு வறுமையும் சேர்ந்து கோரதாண்டவம் ஆடியது.

அன்றைக்கு திலகர் போன்ற தலைவர்கள் அரசின் கடுமையான நடவடிக்கைகளை எதிர்த்தனர். இவர்களின் எழுத்துக்களால் ஈர்க்கப்பட்ட மூன்று இளைஞர்கள் புனேவில் இரண்டு ஆங்கிலேயர்களை சுட்டுக் கொன்றனர். பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்டனர். திலகருக்கு 18 மாதங்கள் கடுங்காவல் தண்டனை கிடைத்தது.

பிளேக் தொற்று நோயைக் கட்டுப்படுத்துதல்

இந்தியா முழுவதும் பிளேக் நோய் அதிக எண்ணிக்கையிலான உயிர்களை பறித்ததால், பிரிட்டீஷ் அரசாங்கம் பிரபல ரஷ்ய நுண்ணுயிரியல் நிபுணர் வால்டெமர் ஹாஃப்கைனிடம் தடுப்பூசியை உருவாக்குமாறு கேட்டுக் கொண்டது. மூன்று மாதங்களுக்கு பிறகு அவர் 1897 ஜனவரியில் தடுப்பூசியை பரிசோதித்தார். பைகுல்லா சிறையில் இருந்த தன்னார்வலர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. அவர்கள் நோயில் இருந்து தப்பியதால் மக்களுக்கு தடுப்பூசி கிடைத்தது.

20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் 40 இலட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. அதன் பிறகு 1920 வரை பிளேக் நோய் ஆங்காங்கே தோன்றியிருந்தாலும் ஒரு தொற்றுநோயை எப்படி கையாள்வது என்ற அனுபவத்தை அரசுக்கு அளித்தது. இந்த அனுபவங்களின் படியே இந்தியாவின் நவீன பொது சுகாதரத்துறை சேவைகளுக்கான அடித்தளம் அமைக்கப்பட்டது.

ஆங்கிலேயர்கள் ஆரம்பத்தில் உலகளாவிய வர்த்தகத்தை காப்பாற்றுவதற்காக பிளேக் நோய் பரவலை தடுக்க தவறி விட்டனர். அது கட்டுப்பாட்டை மீறிச் சென்ற பின்னரே கடுமையான நடவடிக்கைகளை எடுத்தனர். தவிர, அவசரமாக உருவாக்கப்பட்ட 1897 ஆம் ஆண்டின் தொற்றுநோய்ச் சட்டம், உள்ளூர் அதிகாரிகளுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்கியது. ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உண்மையான நிவாரணம் வழங்கப்படவில்லை.இப்போது அதே சட்டம், நவீன சூழ்நிலைக்கு ஏற்றவாறு எந்த திருத்தங்களும் இல்லாமல், மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தியாவில் இப்போதும் மக்களுக்கு கோவிட் 19க்கான நிவாரணம் கிடைக்கவில்லை. மேலும் திடீரென்று அமல்படுத்தப்பட்ட பொது முடக்கம் காரணமாக புலம் பெயர்ந்த தொழிலாளிகள் கடும் அவதிக்குள்ளானார்கள். 2020 ஆம் ஆண்டு முதல், கோவிட் 19 தொற்றுநோயின் பிடியில் நாம் இருப்பதைக் காணும்போது, ஒருவர் வரலாற்றைத் திரும்பிப் பார்த்து, பாடங்கள் கற்றுக் கொள்வது அவசியம்.

Bubonic Plague
நடனமாடி செத்த 100 பேர் : 500 ஆண்டுகளாக விடை தெரியாமல் திணறும் ஆராய்ச்சியாளர்கள் - எங்கே?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com